நெல்லை இப்னு கலாம் ரசூல்
அவ்வாறே மக்களும் மூஸாஅலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று “மூஸாவே நீங்கள் இறைத்தூதர் ஆவீர்கள். தன்னுடைய தூதுவத்தினை வழங்கியும் உங்களிடம் உரையாடியும் மக்கள் அனைவரையும் விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளான். (எனவே,) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கூறுவார்கள்.
அதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “இன்று என் இறைவன் (என் மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப்போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பின்பும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்பாடாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது! (எனவே) வேறு யாவரிடமாவது நீங்கள் சொல்லுங்கள். (இறைத்தூதர்) ஈசாவிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.
அவ்வாறே மக்கள் ஈசா(அலை) அவர்களிடம் சென்று, “ஈசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனுடைய வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டிலில் சிறுவராய் இருந்தபோதே மனிதர்களிடம் பேசினீர்கள். (எனவே,) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கேட்பார்கள்.
அதற்கு ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், “என் இறைவன் இன்று (என் மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை – (தாம் புரிந்துவிட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல் – நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! (எனவே,) நீங்கள் வேறெவரிடமாவது (வேறு யாவரிடமாவது) சொல்லுங்கள். நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள” என்று கூறுவார்கள்.
அப்போது மக்கள் என்னிடம் வந்து “முஹம்மதே! நீங்கள் இறைத்தூதர். இறைத் தூதர்களில் இறுதியானவர். உங்களின் முன் பின் பாவங்களை இறைவன் மன்னித்துவிட்டான். எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கூறுவர். அப்போது நான் நடந்து இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) ஸஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான்.
பிறகு “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்! அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்! உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி “இறைவா! என் சமுதாயம். இறைவா! என் சமுதாயம்” என்பேன். அதற்கு “முஹம்மதே! சொர்க்கத்தின் வாசல்களில் வலப்பக்க வாசல் வழியாக எந்த விதக் கேள்வி கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்,
அவர்கள் மற்ற வாசல்களிலும் மக்களுடன் இணைந்து நுழைந்து கொள்ளலாம்” என்று கூறப்படும். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசலின் இரண்டு பக்கங்களுக்கிடையேயான தூரம் “மக்காவிற்கும் (யமனிலுள்ள) “ஹிகியர்” எனும் ஊருக்கும் இடையிலுள்ள அல்லது “மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள தூரமாகும்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஹதீஸ் எண் 4712)
மேலும் தம் உம்மத்தார்களிடம் உத்தம திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கொண்ட பரிவையும் பாசத்தையும் உணர்த்தும் நபிமொழியைப் பாருங்கள்.
“ஒவ்வொரு இறைத்தூதருக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட (அங்கீகரிக்கப்பட்ட) துஆ உள்ளது. அதனை அத்தூதர்கள் இப்புவியிலேயே துரிதப்படுத்தி கேட்டு விட்டார்கள். நான் எனக்குரிய அப்பிரார்த்தனையைப் பிற்படுத்தி வைத்துள்ளேன். மறுமையில் என் உம்மத்தாருக்குச் செய்வதற்காக அங்கீகரிக்கப்படவுள்ள அப்பிரார்த்தனையை வைத்துள்ளேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரையின் மகத்துவத்தை உணர்த்தும் மற்றொரு நபிமொழியைப் பாருங்கள்.
“எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் தூரம் (அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம்) நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத்தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுது கொள்ளட்டும்! போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை. (மறுமையில்) சிபாரிசு செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுஅறிவித்தார்கள். (ஸஹீஹ் புகாரி ஹதீஸ் எண் 335)
இத்தனை மகத்துவமும் மாண்பும் மிக்க உத்தம திருநபிகளாரின் மறுமை பரிந்துரை ஒருபுறமிருக்க நம் சமுதாயத்தாரிடம் நடப்பிலுள்ள பரிந்துரை எனும் பெயரால் நடக்கும் அலங்கோலங்களோ எழுத்தில் வடிக்கமுடியாத அளவில் ஏராளமுள்ளன, அவற்றில் சிலவற்றை ஆய்வுக்கு எடுத்து அலசி நேர்வழியின் சிறப்பை எடுத்துக்கூறுவதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கமாகும்.
ஒரு தனியார் அல்லது பொது நிறுவனங்களில் பணிபுரியும் ஒருவரின் அலுவலகத்தில் ஏதேனும் பணிக்கு காலியிடமிருந்தால் அவ்விடத்தை நிரப்ப விரும்புபவர் அவ்வலுவலகத்தில் பணிபுரிபவரை அணுகி எனது இன்னவரை உங்கள் அலுவலகத்திற்க்குத் தேவைப்படும் இப்பணியில் அமர்த்த உங்களின் பரிந்துரையும், ஒத்துழைப்பும் நல்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வார். அவ்வாறே பரிந்துரை செய்பவர் செய்யப்படுபவரை மிகவும் நம்பகமானவர் இப்பணிக்கு மிக உகந்த பணியாளர் நான் இவரை நன்றாக அறிந்தவன் என்றெல்லாம் கூறி நிறுவனத்தாரிடம் தேவைக்குரிய நபரைத் தேர்வு செய்ய வழிவகை செய்வார்.
இப்பரிந்துரை போன்றே நாளை மறுமையில் “இந்த இமாம், இந்த அவுலியா, இந்த பெரியார் எனக்குப் பரிந்துரை செய்வார்கள், என்னை சுவனத்திற்கு கையைப் பிடித்து அழைத்துச்செல்வார்கள்” என்ற வாதம் மிகப் பிரபலமாக நம் சமுதாயத்தாரிடம் நிலவி வருகிறது. இதனடிப்படையில் நம்மில் பெரும்பாலோர் இக்கூற்று சரியெனக்கருதி வழிகேட்டில் வீழ்ந்து விட்டனர். தரீக்காக்களில் தக்லீது எனும் கண்மூடிப் பின்பற்றுதல் ஆகியவற்றில் சிக்கித் தவிக்கின்றனர். சீரழிவை நோக்கி முன்னேறுகின்றனர்.
கண்மூடிப் பின்பற்றும் அவ்லியாவின் அருள்கடாட்சம் என்றென்றும் தட்டாமல் கிட்ட மறுமையில் அவ்லியாவின் பரிந்துரை பரோபகாரம் பக்குவமாக கிடைக்க அவ்லியாவின் சன்னதியில் சென்று அவரின் அடக்கஸ்தலத்தில் சந்தனம் வார்த்து, சாம்பிராணி போட்டு, அகர்பத்தி கொளுத்தி ஆராதனை செய்யும் அவ்லியா பக்தர்கள் ஒருவகை. கேட்கின்ற பிரார்த்தனைகளை செவி மடுத்து எனது விருப்பங்கனை நிறைவேற்றினால் அவ்லியாவே உங்களின் உருஸ் தினத்தில் உங்களின் சன்னதிக்கு வந்து ஒரு ஆட்டை அறுத்து அன்னதானம் செய்வேன் என்று நேர்ச்சை நேர்வோர் இன்னொரு வகை. அவ்லியாக்களின் உருஸ் வைபவங்களில் ஏற்பாடு செய்யப்படுகின்ற இன்னிசைக் கச்சேரிகள், நாட்டியங்கள் இவைகளில் பங்கெடுத்து அங்கு விநியோகிக்கப்படும் தபருக்குகளில் அருள் நிரம்பி வழிகிறது என்று அங்கலாய்ப்பவர்கள் மற்றொரு வகை. இவற்றிற்கெல்லாம் மேலாக உருஸ்களில் கூடும் கூட்டத்தில் ஆண்-பெண் பாகுபாடின்றி ஒட்டி உரசி நின்று குளிர்காய நினைப்பவர்கள் வேறொரு வகை.
இப்படி அலங்கோலங்கள் பல நிறைந்து காணப்பட்டாலும் நம் நெஞ்சை நெகிழச்செய்யும் சில நிகழ்ச்சிகளும் நடந்தேறுகின்றன. அவ்லியாக்களின் தர்காக்களை அடுத்திருக்கும் அல்லாஹ்வின் ஆலயங்களில் தொழுகைக்கு அழைக்கும் பாங்கோசை கேட்டாலோ அவ்லியாக்களின் பக்தகோடிகளுக்கு விழலுக்கு இறைத்த நீராகப் போய்விடுகின்றன. சமீபத்தில் அவ்லியாவின் சன்னதி ஒன்றில் அவ்லியாவைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்த கவ்வாலிப் பாடகரை பாங்கோசை கேட்ட ஒருவர் எழுந்து பள்ளிக்குச் சென்று அல்லாஹ்வைத் தொழுது விட்டுவந்து பின்னர் உங்கள் பாடல்களைப் பாடுங்கள் என்று கூற, பாடகரோ உணர்ச்சிவசப்பட்டு உரக்கக் கத்தினார். அவ்லியாவின் சன்னதியில் சேவகம் செய்யும் என்னைப் போய் இந்த மடையன் தொழச் சொல்கிறான் என்று கொட்டித் தீர்த்தார்.
இப்படி அவ்லியாக்களின் மீது கொண்ட அளவு கடந்த அன்பால் அடிப்படைக் கடமையைக்கூட அம்பேலாகக்கூடிய அறிவு ஜீவிகள் பிரிதொரு வகை, இப்படி பல வகைகளில் அல்லாஹ்வின் அடியார்கள் அவ்லியாக்களின் பரிந்துரை என்ற பெயரால் படுபாதகமாக வழிகேட்டின்பால் செலுத்தப்படுகின்றனர். இந்த அவ்லியாக்கள் பரிந்து பேசுவார்கள், அதுவும் மார்க்கத்திற்கு முரணான வழிகேட்டிலுள்ளவர்களுக்கு மகான்கள், பெரியார்கள், அவ்லியாக்கள், நாதாக்கள் பரிந்து பேசி சுவனத்திற்கு அழைத்துச் செல்வர் என்று இந்த மக்கள் கூறுவதற்கு ஏதேனும் அத்தாட்சிகள் ஆதாரங்கள் பெற்றுள்ளனரா? என்று பார்த்தால் அடிப்படையற்ற ஆதாரமில்லாத கூற்றையே இவர்கள் பின்பற்றுகின்றனர் என்பது தெளிவாகத் தெரியும். வல்ல அல்லாஹ் அருள்மறையில் கூறுகிறான்,
அவனுடைய அனுமதியின்றி அவனிடம் பரிந்து பேசுபவர் யார்? (அல்குர்ஆன் 2:255).
தனக்கு இணை வைக்கக்கூடிய தனது ஸிஃபத்துக்களை (தன்மைகளை) பிறருக்குப் பங்குபோட்டுக் கொடுக்கும் இத்தகையவர்களுக்கு பரிந்துரை செய்ய நல்லடியார்களாகிய இமாம்கள், அவ்லியாக்கள், மகான்கள், நாதாக்கள், பெரியார்கள் முன்வருவார்களா? அல்லது பரிந்துரைக்கு அல்லாஹ் அனுமதி வழங்குவானா? நிச்சயமாக இது நடக்கப்போவதில்லை. ஏனென்றால் திருமறைக்குர்ஆனின் மற்றொரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்,
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான் இதனைத்தவிர பிற பாவங்களைத் தான் நாடியோர்க்கு மன்னிப்பான். (அல்குர்ஆன் 4:48)
ஆக அல்லாஹ் மன்னிப்பளிக்காத மக்களுக்குப் பரிந்துரையால் என்ன பயன்? அதனை யார் பரிந்துரைத்தால்தான் என்ன?
பயனற்ற பரிந்துரைகளில் சில,
அல்லாஹ்வின் நல்லடியார்களின் பின்னால் பரிந்துரைக்கும் அருள் கடாட்சத்துக்கும் வேண்டி அல்லாடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஒரு சில ஆதாரங்களை முன் வைப்போம். இந்த நல்லடியார்களைக் காட்டிலும் பன்மடங்கு சிறந்தவர்களும் அல்லாஹ்வின் அடிமைகளும் தூதர்களுமாகிய நபிமார்களின் வாழ்க்கை நமக்கு நல்லதோர் முன்னுதாரணம் ஆகும்.
பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சுமந்து கொண்டு செல்லலாயிற்று (அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள் காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே! என்று நூஹ் அழைத்தார்,
அதற்கு அவன் “என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக்கூடிய ஒரு மலையின்மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்” எனக் கூறினான். “இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத்தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று கூறினார்”.
அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகி விட்டான். பின்னர்; பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள் என்று சொல்லப்பட்டது நீரும் குறைக்கப்பட்டது (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது – அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது. இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது. நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய் எனக் கூறினார்.
அ(தற்கு இறை)வன் கூறினான்: “நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன் நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான். ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்.