பரிந்துரை யாருக்கு..? (1)
நெல்லை இப்னு கலாம் ரசூல்
எல்லாம் வல்ல அல்லாஹ் இப்புவியிலுள்ள படைப்பினங்களில் மனிதர்களையும் படைத்து அவர்கள் சுபிட்சமாக வாழ எல்லா அருட்கொடைகளையும் வழங்கி அவன் இடும் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்குமாறு உத்தரவிட்டான். அவன் படைத்ததன் நோக்கத்தை திருமறை குர்ஆனில் குறிப்பிடுகையில் “மேலும் ஜின்களையும் மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்க வில்லை” (அல்குர்ஆன் : 51:56) என்று அழுத்தம் திருத்தமாக அழகாகக் கூறுகிறான்.
தவறுகளையும், குற்றங்களையும் அறிந்தும் அறியாமலும் செய்யக்கூடிய மனிதர்களைச் சீர்படுத்த நபிமார்களை அனுப்பி அவர்கள் மூலம் நேர்வழி காட்டும் வேதங்களை வழங்கி மனித சமுதாயத்தின் மீது அல்லாஹ் சொரிந்திருக்கும் அருட்கொடைகள் ஏராளம் ஏராளம். அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கீழ்படிவதுடன் அவனின் திருத்தூதரின் வழியைப் பின்பற்ற வேண்டுமென்பதை “நம்முடைய தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை நீங்கள் (மனம் விரும்பி) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (அல்-குர்ஆன் 59:7) என்றும்,
நபிவழி நடந்தால் அல்லாஹ்வின் நேசத்தையும் பாவ மன்னிப்பையும் பெறலாம் என்பதனை “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை நீங்கள் பின்பற்றுங்கள்(அவ்வாறு நீங்கள் செய்தால்)அல்லாஹ் உங்களை நேசிப்பான்.உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்து விடுவான்”என்று மனிதர்களிடம் நபியைக் கூறச் சொன்னதையும் அருள்மறை(3:31)வசனம் நமக்கு வலியுறுத்துகிறது.
மொத்தத்தில் அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் பின்பற்றி நடக்கும் நல்லடியார்களுக்கு சுவனத்தையும், அவனின் தூதரின் கட்டளைகளை வழிமுறைகளைப் புறக்கணிப்போர் வரம்பு மீறுவோர்க்குத் தண்டனையாக நரகத்தையும் அல்லாஹ் மறுமையில் வழங்கயிருக்கிறான் என்பதை அறிவோம். தீர்ப்பு நாளாகிய மறுமை நாளில் அல்லாஹ்வின் அனுமதி பெற்று ஈமான் கொண்ட நல்லடியார்களுக்கு சுவனம் வழங்க உத்தமத் திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் பரிந்துரை செய்யவிருக்கிறார்கள் என்பதை கீழ்காணும் நபிமொழி உணர்த்துகிறது.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடம் (ஒரு விருந்தில்) இறைச்சி கொண்டு வரப்பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) புஜம் (முன்கால் சப்பை) ஒன்றை அவர்களிடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வந்தது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அதை) வாயாலேயே (பற்களால்) பற்றிக்கொண்டு அதிலிருந்து சிறிது உண்டார்கள்.
பிறகு “நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன். (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எதன் மூலம் ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதனை அவர்கள் செவியேற்க முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்துகொண்டிருக்கும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்களிடம், அவர்களால் தாங்கிக்கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்து சேரும்.
அப்போது மனிதர்கள் (சிலர் வேறு சிலரை நோக்கி) “உங்களுக்கு எத்தகையை (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த்தேடிப்) பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்பார்கள்.
அப்போது மனிதர்களில் சிலர் வேறு சிலரிடம், (உங்களுடைய ஆதி பிதா) ஆதம் அலைஹிஸ்ஸலாம்அவர்களை அணுகுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்) என்பர். எனவே மனிதர்கள், ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, “நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான்.
வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும்படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். நீங்கள் உங்களுடைய இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா? என்று கேட்பார்கள்.
அதற்கு “ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (நான் செய்ததவற்றின் காரணத்தால்) என் இறைவன் என் மீது இன்று (கடும்) கோபம் கொண்டிருக்கிறான். இதற்கு முன் இதைப்போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது” என்று கூறிவிட்டு “நீங்கள் வேறு யாரிடமாவது சொல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள்” என்று சொல்வார்கள்.
உடனே மக்களும் நூஹ் அலைஹிஸ்ஸலாம்அவர்களிடம் சென்று “நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான்.
எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு நூஹ் (அலை) அவர்கள் “என் இறைவன் இன்று என் மீது (கடும்) கோபம் கொண்டுள்ளான்.
இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப்போல் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. (எல்லா நபிமார்களுக்கும் இருப்பது போன்று விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தினருக்கு எதிராகப் பிரயோகித்துவிட்டேன். “நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.” (எனவே,) வேறு யாவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத் தூதர்) மூஸாவிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்.
”Jazaakallaahu khairan” www.islamkalvi.com