ஹிந்தி தேசிய மொழி அல்ல,
இந்தியாவில் ‘தேசிய மொழி‘ கிடையாது!
–குஜராத் உயர்நீதிமன்றம்
அகமதாபாத்: இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஹிந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள், படிக்கிறார்கள். ஆனால் ஹிந்தி, இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்று மட்டுமே. அது தேசிய மொழி அல்ல. இந்தியாவுக்கென ‘தேசிய மொழி‘ என்று எதுவும் கிடையாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.ஹிந்தி என்பது இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்று மட்டுமே. அது தேசிய மொழி அல்ல. இதுவரை இந்தியை தேசிய மொழியாக அறிவித்து எந்த உத்தரவையும் யாரும் பிறப்பிக்கவில்லை.நமது அரசியலமைப்புச் சட்டமும் இந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக மட்டுமே அங்கீகரித்துள்ளதே தவிர தேசிய மொழியாக கூறவில்லை. எனவே ஹிந்தி அல்லது தேவநாகரி மொழிகளில் பொருட்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆங்கிலத்தை பயன்படுத்துவது அவரவர் உரிமை என்று தீர்ப்பளித்தனர்.
சீன வைரஸ் பரவல்–தடுக்க மைக்ரோசாஃப்ட்டின் ‘பாதுகாப்பு கவசம்‘
சியாட்டில்: கடந்த வாரம் சீனாவில் கூகுள் நிறுவன செயல்பாடுகளை பெருமளவில் பாதித்த வைரஸைப் போல, தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரரை குறி வைத்து பரவி வரும் வைரஸ் தாக்குதலிலிருந்து தனது வாடிக்கையாளர்களைக் காக்க புதிய வகை சாப்ட்வேரை களம் இறக்கியுள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறுகையில், கூகுள் உள்பட சீனாவில் இயங்கி வரும் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் குறி வைத்து கடந்த வாரம் வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் மூலமாக இந்த வைரஸ் பரப்பப்பட்டது.
இதையடுத்து எக்ஸ்புளோரர் பிரவுசரை பயன்படுத்துவோரைக் காக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு புதிய சாஃப்ட்வேரை வெளியிட்டுள்ளது. இதை நிறுவிக் கொண்டால் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியுமாம்.
இதுகுறித்து உலகின் முன்னணி பாதுகாப்பு சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான சிமென்டெக்கின் பாதுகாப்பு ஆய்வாளர் ஜான் ஹாரிசன் கூறுகையில், மைக்ரோசாஃப்ட்டின் பலவீனமான பிரவுசர்களின் ஓட்டைகளைப் பயன்படுத்தி அவற்றை செயலிழக்க வைக்கக் கூடிய வைரஸ்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.
இப்போது இந்த வைரஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரரை அதிகமாக தாகுவதாகத் தெரிகிறது. 7 மற்றும் 8வது வெர்சனை தாக்கக் கூடிய வகையில் அந்த வைரஸ்களை வலுவாக்கும் முயற்சிகளிலும் ‘ஹேக்கர்கள்‘ ஈடுபட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 100 முன்னணி இணையத் தளங்களில் இதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இவை மிகவும் அபாயகரமானவை. பிரவுசர் வழியாக நுழைந்தவுடனேயே இது கம்ப்யூட்டரைத் தாக்கி விடும் என்றார்.
தற்போதைய புதிய சாஃப்ட்வேரால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் வைரஸ் தாக்குவதைத் தடுக்க முடியும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
மேலும், ”சில வகை வைரஸ்கள் மூலம் நமது கம்ப்யூட்டரில் உள்ள டேட்டாக்கள் போன்றவற்றை தொலை தூரத்திலிருந்தபடி உளவு பார்க்கும் வேலைகளையும் சிலர் செய்ய ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது” என்கிறார் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பாமர்.
சீனாவில் கூகுள் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பெரும் வைரஸ்–உளவு சாஃப்ட்வேர் தாக்குதலால், அங்கிருந்து தனது அலுவலகங்களை இடம் மாற்றப் போவதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ள அதேசமயம், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னிடம் அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
வைரஸ் தடுப்பு சாப்ஃட்வேரை நிறுவிக் கொள்ள தனது இணையதளத்திற்குச் செல்லுமாறு வாடிக்கையாளர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது
துபாயில் 10.32 பில்லியன் டாலர் மோசடி செய்ய முயன்ற கும்பல் கைது!
துபாய்: போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி சென்ட்ரல் வங்கியிலிருந்து ரூ 10.3 பில்லியன் டாலர் பணம் மோசடி செய்ய முயன்ற 7 பேரை ஐக்கிய அரபு எமிரேட் அரசு கைது செய்தது. அவர்களில் 4 பேர் ஆசியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் 7 பேரும் அபுதாபி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஏழுபேரும் மோசடியான ஆவணங்கள் மூலம், 10.3 பில்லியன் டாலர்களை சென்டிரல் வங்கியிலிருந்து எடுக்க முயன்றுள்ளனர். காரணம் கேட்டபோது, அந்தப் பணம் தங்கள் குடும்ப முதலீட்டுப் பணம் என கூறியுள்ளனர்
உலகமகா ஸ்வைன்ஃபுளூ ஊழலுக்கு WHO உடந்தையா?
[ உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையின் படி, வழக்கமான பருவகால காய்ச்சல் மூலம் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 5 லட்சம்.
ஆனால், ஏ/எச்1என்1 தாக்கியதால் கடந்த ஜுலை மாத வாக்கில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கூட தாண்டவில்லை.
இந்நிலையில், ‘ஸ்வைன் ஃபுளுவுக்கு மட்டும் எப்படி உலக சுகாதார நிறுவனம் இவ்வளவு முக்கியத்துவம் அளித்தது? ]
ஜெனிவா: ”சர்வதேச மருந்து கம்பெனிகளின் ஆதாயத்துக்காகவே, ஸ்வைன்ஃபுளூ–பன்றிக்காய்ச்சல் குறித்த அபாய எச்சரிக்கை செயற்கையாக உருவாக்கப்பட்டது” என்ற குற்றச்சாட்டு குறித்து உலக சுகாதார நிறுவனம் விளக்கமளிக்க வேண்டும் என்று இந்தியா கோரியுள்ளது.
சென்ற ஆண்டில் மட்டும் சுமார் 10 பில்லியன் யூரோ வரை பன்றிக்காய்ச்சலுக்கான A/H1N1 தடுப்பு மருந்துகள் விற்பனை மூலம் மருந்து கம்பெனிகள் வருவாய் ஈட்டியுள்ளன.
ஜெர்மனி மற்றும் ஏராளமான ஐரோப்பிய நாடுகள், குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகைக்கு தேவையான அளவு தடுப்பு மருந்து பெற்றுள்ளன. ஆர்டரை சமாளிக்க முடியாமல் மருந்து தொழிற்சாலைகள் 24 மணிநேரமும் இயங்கி தயாரிப்பு பணிகளை மேற்கொண்டன. சில தனி நபர்களும், குறிப்பிட்ட மருந்து கம்பெனிகளும் இணைந்து நடத்திய ஊழலுக்கான நாடகம் என கடந்த ஆண்டிலேயே டென்மார்க்கில் பரவலாக பேசப்பட்டது.
உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையின் படி, வழக்கமான பருவகால காய்ச்சல் மூலம் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 5 லட்சம்.
ஆனால், ஏ/எச்1என்1 தாக்கியதால் கடந்த ஜுலை மாத வாக்கில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கூட தாண்டவில்லை.
இந்நிலையில், ”ஸ்வைன் ஃபுளுவுக்கு மட்டும் எப்படி உலக சுகாதார நிறுவனம் இவ்வளவு முக்கியத்துவம் அளித்தது? கடந்த ஜூலை மாதம், அபாய அறிக்கை வெளியிடும் அளவுக்கு நிலைமை இல்லை” என விமர்சிக்கப்பட்டது.
மேலும், அந்த அபாய அறிக்கையில் முகத்தில் மாஸ்க் அணிதல், கைகளை சுத்தமாக கழுவுதல் போன்ற பரிந்துரைகள் இரண்டே இடத்தில் தான் வந்தன. ஆனால், குறிப்பிட்ட மருந்தை உபயோகிக்குமாறு 42 இடங்களில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
உலக சுகாதார நிறுவன அறிக்கை வெளியான சமயத்தில் எல்லாம் குறிப்பிட்ட மருந்துகளின் சர்வதேச விற்பனை வெகுவாக உயர்ந்திருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தில் உள்ள விஞ்ஞானிகளை ‘கைக்குள் போட்டுக்கொண்டு‘ குறிப்பிட்ட சில மருந்து கம்பெனிகள் இந்த உலகமகா ஸ்வைன்ஃபுளூ ஊழலை நடத்துவதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதற்கிடையே, ஸ்மித் கிலைன் பீச்சம் கிளாக்சோ வெல்கம், ஆர் டபுள்யூ ஜான்சன், ரோக் போன்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஆலோசகர்களாக பணிபுரியும் விஞ்ஞானிகள் உலக சுகாதார நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் செயற்குழு கூட்டத்தில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மத்திய சுகாதாரத் துறை செயலாளர் சுஜாதா ராவ் ”இந்த குற்றச்சாட்டுகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் தனது விளக்கத்தை கூறி தெளிவுபடுத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.
”இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுகிறது. நோய் தொடர்பான சமாச்சாரங்களில் உலக சுகாதார நிறுவனத்தின் கருத்தை தான் சர்வதேச மக்கள் நம்புகிறார்கள். மருந்து தயாரிப்பாளர்கள் எந்த விதிமுறைகளின் கீழ் சர்வதேச நாடுகளுக்கு சப்ளை செய்கிறார்கள் என்பது போன்ற விவரங்களை மிகவும் வெளிப்படையானதாக ஆக்கவேண்டும்”, என சுஜாதா குறிப்பிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட உலக சுகாதார நிறுவனம் இவ்விவகாரம் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் விரைவில் பதில் அளிக்கப்படும் எனக் கூறியுள்ளது.
இந்தியாவில் கடந்த 18ம் தேதி வரையிலான நிலவரப்படி பன்றிக்காய்ச்சலுக்கு ஆயிரத்து 136 பேர் பலியானார்கள். 9 ஆயிரத்து 600 பேருக்கு நோய் அறிகுறிகள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் 2009 ஏப்ரல் மாதம் முதல் கடந்த 18ம் தேதி வரை மொத்தம் 14 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்ததாக ஐரோப்பிய நோய் தடுப்பு நிறுவனம் கணித்துள்ளது.
sources: thatstamil.com