முஃமின்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவி ஓர் முன்மாதிரி
[”இஸ்லாமிய வரலாற்றில் எத்தனையோ பெண்கள் இஸ்லாத்திற்காக வாழ்ந்து தங்களது இன்னுயிரை நீக்கிய முன்மாதிரிகள் நிறைந்திருந்தும் ஃபிர்அவ்னின் மனைவி ஏன் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்?]
அல்லாஹுத்தஆலா தனது அருள்மறையில் ”அத்தஹ்ரீமின்” எனும் அத்தியாயத்தின் பதினொறாவது வசனத்தில் இப்படிக்கூறுகின்றான.
”நம்பிக்கை கொண்டவர்களுக்கு அல்லாஹ் பிர்அவ்னின் மனைவியை உதாரணமாகக் கூறுகின்றான்” மேற்குறித்த வசனத்தில் அல்லாஹ் ஸஹாபிப் பெண்களையோ நபிமார்களின் மனைவிமார்களையோ முஃமின்களுக்கு முன்மாதிரியாகக் கூறாமல் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஃபிர்அவ்னின் மனைவியை ஏன் முன்மாதிரியாகக் கூறவேண்டுமென்ற வலுவான சந்தேகம் அதிகமான சகோதர சகோதரிகளிடம் இயல்பாகவே எழும்புவதை உணரமுடிகின்றது.
”அவரவர் சுமையை அவரவரே சுமக்க வேண்டுமென்பது” உறுதியான முறையில் அல்குர்ஆனில் கூறப்பட்ட ஒரு அடிப்படை விதியாகும்.
ஃபிர்அவ்ன் என்பவன் கொடுமைக்காரன் அட்டூளியங்கள் பல புரிந்தவன் ஆணவக்காரண் என்பதெல்லாம் உண்மை. அதேநேரம் அவனது மனைவி அவனின் நடவடிக்கைகள் அனைத்தையும் அங்கீகரித்தாரா என்றால் இல்லை என்று திருமறைக்குர்ஆன் தஹ்ரீமின் எனும் அத்தியாயத்தில் மிகத்தெளிவாக எடுத்தியம்புவதைக் காணலாம்.
”இறைவா ஃபிர்அவ்னுடைய கொடுமையிலிருந்தும் அவனது அடியாட்களின் கொடூரத்திலிருந்தும் என்னைக் காப்பாற்று” என்று அவ்வம்மையார் பிரார்த்திப்பார்கள் என்று திருமறை கூறுகின்றது. பல்வேறு சோதனைகளையும் துன்பங்களையும் சந்தித்தே அப்பெண்மணி தூய முஸ்லிமாக இவ்வுலகில் வாழ்ந்து மரணித்திருக்கின்றார்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் எத்தனையோ பெண்கள் இஸ்லாத்திற்காக வாழ்ந்து தங்களது இன்னுயிரை நீக்கிய முன்மாதிரிகள் நிறைந்திருந்தும் ஃபிர்அவ்னின் மனைவி ஏன் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்?
ஆம்! பிர்அவ்ன் ஒரு ராஜா. அப்படியென்றால் பிர்அவ்னின் மனைவி ராணி. ராஜா நாட்டை நிர்வகித்தாலும் உண்மையில் ஆளுபவள் அவரது மனைவியே! இதுவே யதார்த்தம். மகாராணி எனும் போது அதிகபட்சமாகவே வேலையாட்கள் எடுபிடிப் பனியாளர்கள் இயல்பாகவே காணப்படுவர்.
இன்னும் பெண்களுக்கே உரித்தான ஆடை ஆபரணங்களும் ஒரு ராஜாவின் மனைவி என்ற அந்தஸ்துக்கு வரும் வேளையில் சற்று மிகுதியாகவே இருந்திருக்கும். அனைத்து சுகபோகங்களோடும் வாழும் ஒரு பெண்னையே மகாராணி என நாம் அழைக்கின்றோம்.
இவ்வளவு சீர் சிறப்புக்கள் காலடியில் குவிந்து கிடந்தும் அவையனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு மூஸாஅலைஹிஸ்ஸலாம் போதித்த ஏகத்துவத்தில் தன்ணை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்களே அந்த அம்மையாரையே முன்னுதாரணமாகக் கொள்ளாமல் யாரைக்கொள்வது?
அப்பெண் நினைத்திருந்தால் அந்த சுகபோகங்களில் மூழ்கி இந்த உலகை முழுக்க அனுபவித்திருக்கலாம். ஆனால் அல்லாஹ்வின் கொள்கையை தனது நெஞ்சத்தில் ஆளமாகப் பதித்த போது அப்பெண்னுக்கு இவ்வுலகமோ அற்பமாகவே தோன்றியது. அதன் காரணமாகவே அருள்மறையில் அல்லாஹ் அப்பெண்னை முஃமின்களுக்கு(இறைவிசுவாசிகளுக்கு) முன்னுதாரணமாகக் கூறுகின்றான் .
எனவே நல்லடியார்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் பிர்அவ்னின் மனைவியை நாமும் முன்மாதிரியாகக் கொள்வோமாக!
”Jazaakallaahu khairan” www.dharulathar.com