மனிதன் சேர்த்து வைக்கும் செல்வத்தை விட மேன்மையான விஷயங்கள்
”இன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும். அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், ரஹ்மத்தும் அவர்கள் சேர்த்து வைப்பதைவிட மிக்க மேன்மையுடையதாக இருக்கும்.” (அல்-குர்ஆன் 3:157)
நிராகரிப்பாளர்களை விட மறுமையில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள்
”நிராகரிப்போருக்கு (காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது; இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களை விட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்; இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்” (அல்-குர்ஆன் 2:212)
அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். அவனே மரிக்கச் செய்கிறான்.
”முஃமின்களே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள். பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி (அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்; “அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்” என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான். மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். அவனே மரிக்கச் செய்கிறான். இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.” (அல்குர்ஆன்: 3:156)
அல்லாஹ்விடத்தில் கண்ணியமானவர் இறையச்சமுடையவரே!
”மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன்” (அல்-குர்ஆன் 49:13)
அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்தால் கிடைக்ககூடிய நேர்வழி
”ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்” (அல்-குர்ஆன் 8:29)
நிராகரிப்போரின் சூழ்ச்சியை விட்டும் பாதுகாவல் பெற தேவையான செயல்கள்
”ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.” (அல்-குர்ஆன் 3:120)
நிராகரிப்போரின் உள்ளத்தில் உள்ளவைகளை அறிந்தவன் அல்லாஹ்
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை நேசிப்போராய் இருக்கின்றீர்கள் – ஆனால் அவர்கள் உங்களை நேசிக்கவில்லை. நீங்கள் வேதத்தை முழுமையாக நம்புகிறீர்கள். ஆனால் அவர்களோ உங்களைச் சந்திக்கும் போது “நாங்களும் நம்புகிறோம்” என்று கூறுகிறார்கள். எனினும் அவர்கள் (உங்களை விட்டு விலகித்) தனியாக இருக்கும் போது, அவர்கள் உங்கள் மேலுள்ள ஆத்திரத்தினால் (தம்) விரல் நுனிகளைக் கடித்துக் கொள்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்; “நீங்கள் உங்கள் ஆத்திரத்தில் இறந்து விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்”. (அல்-குர்ஆன் 3:119)
சிறந்ததும், நிலையானதுமான மறுமை வாழ்க்கை
”இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவையெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும்.” (அல்குர்ஆன்: 20:131)
உலகில் கண்ணிருந்தும், மறுமையில் குருடனான மனிதன்
“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான். (அப்போது அவன்) “என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான். (அதற்கு இறைவன்,) “இவ்விதம்தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்” என்று கூறுவான்.” (அல்குர்ஆன்: 20:124, 125, 126)
மனிதனை எச்சரிக்கும் இறைவேதம்
”மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்”. (அல்குர்ஆன்: 20:113)
”Jazaakallaahu khairan” Posted by Jafar Safamarva