மவ்லானாM.அப்துல் வஹ்ஹாப் M.A.,B.Th.
[”எவர்கள் வட்டியைத் தின்கிறார்களோ அத்தகையோர் (கியாமத்துநாளில் கப்ருகளிலிருந்து) ஷைத்தான் அவனை அறைந்து பைத்தியம் பிடித்து எழுந்திருப்பவன் போலல்லாமல் (வேறு விதமாக) எழுந்திருக்க மாட்டார்கள்; ; ஏனெனில் அ(ந்த நிலையான)து ”வியாபாரமெல்லாம் வட்டியைப் போன்றுதான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறியதின் காரணத்தினலாகும்; (ஆனால்) அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கியும், வட்டியை ஹாரமாக்கியும் வைத்துள்ளான்…
அல்லாஹ் வட்டியை (பரக்கத்தில்லாமல்) அழித்து, தருமங்களை வளரச் செய்கிறான்.. ” (2:275-6)]
அகண்ட உலகையும், விரிந்த வானையும் மனிதனுக்கு வசப்படுத்தி, அவற்றிலிருந்து பெறப்படும் பயன்களைக் கொண்டு செம்மையான ஒரு வாழ்வை மனிதன் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று உயர்மறை ஓதுகிறது.
இந்தப் பரந்த, விரிந்த அடிப்படையில் தான் இஸ்லாமியப் பொருளாதாரமே அமைந்திருக்கிறது. இவ்வளவு வளமான சம்பத்துகளை வைத்துக் கொண்டு, படைப்புகளில் சிறந்தவனான மனிதன், சுதந்தரமான, ஆண்மையுள்ள, நல்வாழ்வு வாழ வேண்டும் என்றுதான் திருமறை அறிவுறுத்துகிறது.
தனி மனிதன் ஒவ்வொருவனுடைய உழைப்பின் குதியையும், மிகுதியையும் வைத்துத்தான் சமுதாய் வளமும், நாட்டின் நலமும் கணக்கிடப்படும். சோம்பியிருக்கவோ, பிறர் உழைப்பின் மூலம் உல்லாச வாழ்வு நடத்தவோ, தன் உயர்வையும், ஆண்மையையும் மறந்து மனிதன் கையேந்தி வயிறு வளர்க்கவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
ஆனால் தன் உய்ர்ப்பின் மூலம் பிறருக்கு உதவி செய்வதை இஸ்லாம் போற்றுகிறது. பொதுநலத்துக்காப் பொருள் கேட்ட பெருமானாரிடம் தம் உடைமைகள். அனைத்தையும் கொண்டு இருப்போர்க்கு என்ன வைத்திருக்கிறீர்கள்?” என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அபூபக்கர்ரளியல்லாஹு அன்ஹுஅவர்களிடம் வினவிய போது, ”இறைவனின் அருளையும், அவன் திருத்தூதரின் அன்பையும் வீட்டிலிருப்போருக் காக வைத்திருக்கின்றேன்” என்று பதிலளித்தார்கள் அந்த தியாகச் செல்வர். இந்தத் தன்னல மறுப்பை பெரிதும் பாராட்டினார்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஆனால் எல்லோரிடத்திலும் இருந்து இத்தகைய தியாகத்தை எம்பெருமானார் எதிர்பார்க்கவும் இல்லை; ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
ஒரு தடவை நாயகத்தின் நல்லறத் தோழர்களில் ஒருவர் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தார்; அவரைக் காணச் நபி பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்சென்றிருந்தார்கள் .
”இறைவனின் திருத்தூதே! என்னிடம் செல்வம் நிறைந்திருக்கிறது. இது அனைத்தையும் ஏழைகள் நலனுக்காகக் கொடுத்துவிடப் போகிறேன்,” என்று அத்தோழர் சொன்னார்.
”முதலில் உங்கள் செல்வத்திலிருந்து உங்களுடைய உறவினர்கள் சுதந்திரமாக வாழ்க்கை நடத்துவதற்கு வழி செய்வது, அவர்கள் பிறர் தயவில் வாழ்க்கை நடத்தவும், இரந்து உண்ணவுமான நிலைக்கு வருவதை விடச் சிறந்தது” என்று கூறினார்கள் நபி பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
மேற்கண்ட நிகழ்ச்சியில் ஒரு சீரிய உண்மை புலப்படும். அதாவது பிறர்தயவிலோ, உழைப்பிலோ ஒரு மனிதன் வாழ்வதை இஸ்லாம் வெறுக்கிறது. பிறர் தயவில் வாழ்வதில் ஆண்மையில்லை, பிறர் உழைப்பில் வாழ்வதில் ஆண்மையில்லை, பிறர் உழைப்பில் வாழ்வதில் ஆண்மையில்லை, பிறர் உழைப்பில் வாழ்வதில் மனிதத் தன்மையில்லை. எனவே ஒவ்வொரு மனிதனும் உழைத்தே ஆக வேண்டும். பாடுபட்டே தீர வேண்டும். இது இஸ்லாம் கண்ட பொருளாதாரத்தின் அடிப்படை, மனிதகுலத்தின் பொருளாதார வாழ்வுக்கு இதைவிடச் சிறந்த அடிப்படை அமையுமா? எத்தனை நூற்றாண்டுகளானாலும் இந்த அடிப்படை மாற முடியுமா?
பரம்பரைச் சொத்தாக ஒரு மனிதனுக்கு ஏராளமான பொருள் கிடைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம். அம்மனிதன் அந்தச் சொத்தைப் பணமாக்கி, அந்த பணத்தை மற்ற மனிதர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுக்கிறான். எவ்வளவோ சட்டங்கள் இயற்றப்பட்டும், இப்பொழுதும் அநியாய வட்டிக்குக் கடன் கொடுக்கும் பழக்கம் இந்நாட்டில் அகலவில்லை.
தான் பெறும் அநியாய வட்டியின் மூலம் பரம்பரைச் சொத்தையடைந்த மனிதன் உல்லாசமாக வாழ்கிறான். ஆனால் இதற்காக அவன் முன்னோர்கள் உழைத்தார்கள்; அவர்களும் முறையாகச் சமயமும், சமுதாயமும், சர்க்காரும் விதிக்கும் தர்மங்களையும், ஊர்க் கட்டணங்களையும், வரிகளையும் ஒழுங்காகக் கொடுத்து வந்திருந்தால் தேவைக்கதிகமான சொத்துக்கூட வைத்துச் சென்றிருக்க முடியாது!
ஏதோ பணம் வந்துவிட்டது; வட்டிக்குக் கொடுக்கிறான். தொழில் செய்யப் பணமில்லாமல் திண்டாடித் தவிக்கும் ஏழை மக்கள் இவன் பணத்தைக் கடன் வாங்குகிறார்கள் முதல் முழுவதும் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் வட்டியாக கொடுத்து வருகிறார்கள். உடலை ஓடாக்கி உழைத்து, உழைத்து இந்த உலுத்தனின் உல்லாச வாழ்வுக்காக அவர்கள் வட்டிப் பணம் கட்டுகிறார்கள்.
இன்றைய சமுதாயங்களுக்கு இது கொடிய அநீதியாகத் தெரியலாம்; ஆனால் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சமுதாயங்கள் இதைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஒரு மனிதன் உழைத்து உழைத்து மடிகிறானா? அது அவனவன் விதிவசம் ; இன்னொருவன் அந்த உழைப்பிலே உல்லாசமாக வாழ்கிறானா? ”அவன் கொடுத்து வைத்தவன்” என்ற ரீதியில் வேதாந்தம் பேசி அன்றையச் சமயங்களும், சமுதாயங்களும் தங்கள் காலத்தைக் கடத்தி வந்தன.
அப்பொழுது தான் இறைமறை முழங்கிற்று:
”எவர்கள் வட்டியைத் தின்கிறார்களோ அத்தகையோர் (கியாமத்துநாளில் கப்ருகளிலிருந்து) ஷைத்தான் அவனை அறைந்து பைத்தியம் பிடித்து எழுந்திருப்பவன் போலல்லாமல் (வேறு விதமாக) எழுந்திருக்க மாட்டார்கள்; ; ஏனெனில் அ(ந்த நிலையான)து ”வியாபாரமெல்லாம் வட்டியைப் போன்றுதான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறியதின் காரணத்தினலாகும்; (ஆனால்) அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கியும், வட்டியை ஹாரமாக்கியும் வைத்துள்ளான்… அல்லாஹ் வட்டியை (பரக்கத்தில்லாமல்) அழித்து, தருமங்களை வளரச் செய்கிறான்.. ” (2:275-6)
தாம் வட்டியால் ஏழை மக்கள் கசக்கிப் பிழியப்படுவது பற்றிப் பராமுகமாக இருந்தன: ஆனால் ஆன்றோர்கள் சிலர் இக்கொடிய பழக்கத்தை அவ்வப்பொழுது கண்டித்து வந்திருக்கின்றனர்.
”ஒரு நாணயத்தைக் கொண்டு பிறிகொரு நாணயம் உற்பத்தி செய்வதை (அதாவது வட்டியை) ஆதரிக்கலாகாது,” என்று அரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க ஞானி தம் மக்களிடம் எடுத்துக் கூறினார். மக்களுக்குத் தேவைப்படும் பொருள்களை உண்டாக்குவதற்குப் பதிலாக வட்டிக்காகக் கொடுக்கப்படும் பணம் முட்டையிடாத ஒரு மலட்டுக் கோழியைப் போன்றது” என்றும் அவர் வர்ணித்தார்.
ஆனால் இந்த ஒரு சிலரின் கண்டங்கள் கவனிக்கப்படவில்லை! வட்டியைப் பற்றி ஆழ்ந்த கருத்துகளைத் தூர நோக்குடன் வெளியிட்ட இஸ்லாம் தான் உலகப் பொருள் துறையையே மாற்றியமைத்தது. வட்டியும், பொருள் துறையும் பற்றி பேரறிஞர்களை தபரீ, குர்துபீ, ஸமக்ஷரீ, ஸியூதி, பைலாவீ, இமாம் ராஸீ ரஹ்மதுல்லாஹி அலைஹி முதலியோர் சிந்தித்துத் தம் ”திருமறை விளக்கவுரைகளில்,” எழுதியிருக்கின்றனர்.
வட்டி வாங்கி வயிறு கழுவுவது நேர்மையான பிழைப்பல்ல ; அதோடு பணத்தைத் தேக்கி வைத்துக் கொண்டு அதனை வாணிபத்துக்கும், பொருள் உற்பத்திக்கும் பயன்படுத்தாமல், அப்பணத்திலிருந்தே வாழ்க்கையை நடத்துவதும் நற்பண்பல்ல என்று இஸ்லாம் போதிக்கிறது.
”(பொருளையே குறியாக வைத்து அதனைச்) சேமித்து வைத்திருப்பவனையும்ஸ (நரக இருப்பு) அழைத்துக் கொள்ளும்.” (70:18) ” …. எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அதனை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யவில்லையோ அவர்களுக்கு நோவினை தரும் வேதனையைக் கொண்டு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!”(9:34). என்று பொருளைப் புதையலாக வைத்துக் கொண்டு அதனை பூதம் போல் காத்து நிற்கும் ”கேடுகெட்ட மானிடரை” திருக்குர்ஆன் எச்சரிக்கிறது.
ஆனால் உள்ள பொருளைக் கொண்டு உண்மையான, நேர்மையான வாணிபம் செய்வது அல்லாஹ்வுக்கு விருப்பமான வழியேயாகும்.
எம்பெருமானாரின் வழித்தோன்றல்களான எண்ணற்ற பெரியோர்கள் வணிகர்களாகவேதாம் இந்நாட்டுக்கு வந்து, தங்களுடைய நேர்மையான வாணிபத்தாலும், ஒழுங்கான தொழில் முறைகளாலும் இஸ்லாமிய நெறியைப் பரப்பினர் என்பதற்கு இன்றும் வரலாறு விளக்கம் தருகிறது.
அதிலும் சிறப்பாக தென்னகத்தில் இஸ்லாமிய வாணிபர்கள் தாம் திருமறையின் பிரச்சாரகர்களாக விளங்கினார்கள். பண்டை நாளிலிருந்தே தமிழ் மக்களும் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்:
”நீரில் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலில் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும், பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும், அகிலும்
தென்கடல் முத்தும், குணகுடல் துகிரும்
கங்கை வாரியும், காவிரிப் பயனும்
ஈழத்துணவும், காழகத்(து) ஆக்கமும்
. . . . . . . . . ”
என்று சோழர் துறையாகிய காவிரிப்பூம்பட்டினத்தில் பல்வேறு பண்டங்கள் வந்த குவிவதைப் பத்துப் பாட்டிலுள்ள பட்டினப்பாலை வர்ணிக்கிறது.
அரபுக் குதிரைகளும், மணியும், பொன்னும், அகிலும், சந்தனமும், முத்தும், பவளமும் (துகிரும்), ஈர்த்திருநாட்டின் நற்பொருள்களும், பர்மிய (காழகத்தின்) பொருள்கள் பலவும் அத்துறைமுகத்தில் வந்து நிறைந்தனவாம்.
இத்தகைய வாணிபத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் நேர்மையும், நல்லொழுக்கமும் கொண்டு திருமறையைக் கையிலேந்தி வந்த அரபு நாட்டு இஸ்லாமிய வர்த்தகர்களை நேசித்ததில் வியப்பேது?
நூல்: ”தித்திக்கும் திருமறை”
மவ்லானாM. அப்துல் வஹ்ஹாப் M.A.,B.Th. ரஹ்மதுல்லாஹி அலைஹி
”Jazaakallaahu kairan” : மாஹின் வெளியீடு
courtesy: www.nidurseasons.com