‘இறைவனுக்கு இணைவைக்கும் பெண்ணை – அவர்கள் ஈமான் கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்! இறை நம்பிக்கையுடைய அடிமைப் பெண் (அடிமையல்லாத) இணைவைக்கும் பெண்ணை விடச் சிறந்தவள். அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே!
உங்கள் பெண்களை இணைவைக்கும் ஆண்களுக்கு – அவர்கள் ஈமான் கொள்ளும் வரை – மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இறைநம்பிக்கையுடைய அடிமையான ஆண் (அடிமையில்லாத) இணைவைக்கக் கூடிய ஆணைவிடச் சிறந்தவன். அவன் உங்களைக் கவர்ந்தாலும் சரியே!
(இணை வைக்கும்) அவர்கள் நரகத்தின் பால் உங்களை அழைக்கின்றனர். அல்லாஹ்வோ தனது உத்தரவின் மூலம் மன்னிப்பின்பாலும் சொர்க்கத்தின் பாலும் அழைக்கிறான். அல்லாஹ் தனது வசனங்களை மக்கள் படிப்பினை பெறுவதற்காக தெளிவுபடுத்துகிறான்”. (அல்குர்ஆன் 2:221)
மனித வாழ்க்கையில் திருமணம் இருபாலாருக்கும் அவசியமான ஒன்றாகும். திருமணத்தின் மூலம் தான் வாழ்க்கையே நிறைவடைகிறது எனலாம்.
வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதில் எத்தனையோ அம்சங்களைக் கவனிக்க வேண்டும் என்றாலும் பருவ வயதையடைந்தவர்கள் வெறும் புறக்கவர்ச்சியில் மயங்கி எதிர்கால மகிழ்ச்சியைத் தொலைத்து விடுகின்றனர்.
மோகம் முற்றியிருக்கும் சந்தர்ப்பங்களில் தனது துணையின் கோபமும் கூட கவர்ச்சிகரமானதாகத் தோற்றமளிக்கும். சில மாதங்களில் எதார்த்த நிலைக்கு வந்த பிறகு தான் எத்தனை விஷயங்களை கவனிக்கத் தவறிவிட்டோம் என்ற உண்மை உறைக்கும் வாழ்க்கை முழுவதும் நரகமாகி விட்டதை அப்போது தான் உணர்வார்கள். இவ்வாறு மகிழ்ச்சியைத் தொலைத்த பலரை நாம் அன்றாடம் சந்திக்கிறோம்.
குறிப்பாக பெண்கள் இத்தகைய இனக்கவர்ச்சிக்கு வசப்பட்டுவிட்டால் ஆண்களால் ஏமாற்றப்பட்டு கைவிடப்படுகின்றனர். சிவப்பு விளக்குப் பகுதியில் கூட விற்கப்படுகின்றனர்.
இந்த இனக்கவர்ச்சியில் மயங்காமல் எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு நடப்பது எப்படி? இதை வென்றெடுக்கும் வழி என்ன?
இதைத் தான் இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது.
இந்த உலக வாழ்க்கையோடு எல்லாம் முடிந்து விடுகிறது என்ற எண்ணம்தான் எப்படியாவது இந்த உலகத்தை அனுபவித்துவிடத் தூண்டுகிறது. சிந்தனைக்குத் திரை போடுகிறது.
இந்த உலக வாழ்க்கை ஒரு நாள் முடிவுக்கு வரும். ஒரு கட்டத்தில் இந்த உலகம் அழியும். அழிந்த பின் அனைவரும் இறைவன் முன்பாக நிறுத்தப்படுவோம். அவரவர் செய்த நன்மை தீமைகளின் அடிப்படையில் சொர்க்கமோ நரகமோ பெறுவார்கள் என்பதை யார் உறுதியுடன் நம்புகிறார்களோ அவர்கள் மட்டுமே இந்த இனக்கவர்ச்சியை வெல்ல முடியும்.
இந்த நம்பிக்கையையூட்டி நமது சந்ததிகளை வளர்ப்பதால் மட்டுமே இந்த விபரீத முடிவிலிருந்து அவர்களைத் தடுக்க முடியும்.
குறிப்பாக முஸ்லிம்கள் எந்த சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்களைத் தமது வாழ்க்கைத் துணையாகத் தேர்வு செய்யக் கூடாது. அவர்கள் எவ்வளவு தான் கவர்ச்சி மிக்கவர்களாக இருந்தாலும் சரியே என்று இவ்வசனம் வலியுறுத்துகிறது.
மேலும் இறைநம்பிக்கையுள்ளவன் அடிமையாக இருந்தாலும் கூட பல தெய்வ நம்பிக்கையுடையவனைவிட – அவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் உள்ளவனாக இருந்தாலும் சிறந்தவனாவான் எனவும் இவ்வசனம் கூறுகிறது.
அழகுக்காக, பாரம்பர்யத்துக்காக, செல்வத்துக்காக, மார்க்கத்துக்காக பெண்கள் மணமுடிக்கப்படுகின்றனர். நீ மார்க்கப்பற்றை முன்வைத்து மணந்து வெற்றி பெறு! என்ற நபிமொழி கூட இதற்கு விளக்கமாகத் தான் அமைந்துள்ளது.
வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் போது ஏகத்துவக் கொள்கையில் நம்பிக்கை உள்ளதா என்பது மட்டுமே நம் கவனத்துக்கு வர வேண்டும்.
இது எப்போது சாத்தியமாகும்? எப்படிச் சாத்தியமாகும்? பணத்தை விடவும் அழகைவிடவும் மார்க்கத்தை முதலிடத்தில் வைத்துப் பார்க்கும் தன்மை நம்மிடம் எப்போது ஏற்படும்.
அதைத் தான் இவ்வசனம் விளக்குகிறது.
”அவர்கள் நரகத்தின் பால் உங்களை அழைக்கின்றனர். அல்லாஹ்வோ சொர்க்கத்தின் பாலும் மன்னிப்பின்பாலும் உங்களை அழைக்கிறான்” என இவ்வசனம் கூறுகிறது.
பல தெய்வ நம்பிக்கையுடையவர்களை முஸ்லிமல்லாதவர்களை – மணக்க விருப்பம் ஏற்பட்டால் அவர்கள் நம்மை நரகத்தின் பால் அழைக்கிறார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
அவர்களை மணப்பதின் மூலமும், பிரச்சனைகள் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் மார்க்கத்தையே விட்டுக் கொடுப்பதன் மூலமும் நாமும் நரகத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதை உணரக் கூடியவர்கள் இத்தகைய விபரீதமான முடிவுக்கு வரமாட்டார்கள்.
மறுமை வாழ்வைப் பற்றிய அச்சம் தான் யூசுப் நபியைக் காப்பாற்றியது. எந்தக் கவர்ச்சியும் அவரை மயக்க முடியவில்லை. எனவே மறுமை வாழ்க்கையின் மீது இளம் தலைமுறைக்கு நம்பிக்கையை ஊட்டி அவர்கள் இரு உலக வாழ்க்கையையும் பாதுகாப்போம்.
”Jazaakallaahu khairan” www.islamthalam.wordpress.com