[ இன்ஷா அல்லாஹ், முழு ஆண்டுத்தேர்வை மாணவர்கள் எதிர்நோக்கியிருக்கும் இந்நேரத்தில் அவர்களை வெற்றிகரமாக வழிநடத்திச் செல்ல– அவர்களின் பொறுப்புதாரிகளுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருக்கும்.]
குழந்தை வளர்ப்பு என்பதே குழந்தைகளை படிக்க வைத்து நல்ல மதிப்பெண் பெறவைப்பது என்றாகிவிட்டது. குழந்தைகளை படிக்க வைப்பதற்கு பெற்றோர்கள் படாதபாடுபடுகிறார்கள் என்பதுதான் உண்மை.
என்னதான் பிரம்ம பிரயத்தனம் எடுத்தாலும் படிக்க வைப்பது என்பது அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை.
உங்கள் குழந்தைகள் தானாகப் படிக்காததற்கு அல்லது மதிப்பெண் எடுக்காததற்கு படிக்கப் பிடிக்காதது மட்டும் காரணமில்லை.
”ஏன் மாணவர்கள் படிக்க மறுக்கிறார்கள்?”
”எதனால் எல்லாம் படிக்கப் பிடிக்கவில்லை?”
இதையெல்லாம் முதலில் புரிந்து கொண்டால்தான் படிப்பின் மேல் அவர்களுக்கு உள்ள வெறுப்பை அகற்றி விருப்பை ஏற்படுத்த முடியும்.
மாணவர்கள் படிப்பை தவிர்க்க காரணங்கள்:
1. தேர்வு பயம்
2. பாடங்கள் புரியவில்லை என்றால் படிப்பு வராது என்று எண்ணி குற்ற உணர்ச்சி அடைவது.
3. எவ்வளவு படித்தாலும் மனதில் பதிவதில்லை என்பதால் நினைவாற்றல் இல்லை என்று எண்ணுவது.
4. பாடங்கள் அதிகம் என்றும் அதிக வேலைப்பளு என்றும் எண்ணுவது.
5. போரடிப்பதாக நினைப்பது.
6. ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம் பிடிக்கவில்லை. அல்லது தன்னை நடத்தும் விதம் பிடிக்கவில்லை.
7. பெற்றோர்கள் நடத்தும் விதம் அதாவது எப்போது பார்த்தாலும் படி படி என்று சொல்வது.
8. தள்ளிப்போடும் மனப்பான்மை.
9. அலட்சியம் ….. என பல காரணங்கள் இருக்கலாம். இது தவிரவும் கூட ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம்.
சரி காரணங்களை தெரிந்து கொண்டாகிவிட்டது. இனி அவர்களிடம் படிப்பில் ஆர்வத்தை கொண்டு வருவது எப்படி என்று பார்ப்போம். முதலில் தேர்வு பயத்தை அகற்றுவது எப்படி என்பதை விரிவாகப் பார்ப்போம்.
தேர்வு பயம்:
புத்தகத்தின் முதல் பக்கத்தில் உள்ள ”தீண்டாமை ஒரு பாவச் செயல்; தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்; தீண்டாமை ஒரு பெருங்குற்றம்;” என்பதை ஒரு மாணவன் தீண்டாமை என்பதை அடித்து அதற்குப் பதில் இப்படி மாற்றியிருந்தான். ”காலாண்டு என்பது ஒரு பாவச்செயல். அரையாண்டு என்பது மனிதத் தன்மையற்ற செயல். முழு ஆண்டு என்பது ஒரு பெருங்குற்றம்.”
இதிலிருந்தே உங்களுக்கு புரிந்திருக்கும். பெரும்பாலான மாணவர்கள் கற்பதை வெறுக்கவில்லை. தேர்வுகளைத்தான் வெறுக்கிறார்கள்.
நம் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்கிறபோது எந்த விதமான போட்டியும் சரி, தேர்வும் சரி நமக்கு கலந்து கொள்ளும் ஆர்வத்தையே தரும். ஆனால் பள்ளியில் நடத்தும் தேர்வுகள் மட்டும் நன்றாகப் படிக்கும் நம் குழந்தைகளுக்குக் கூட பயத்தை ஏற்படுத்துவது ஏன்?
தேர்வு பயம் என்பது நம்மால் மதிப்பெண் பெறமுடியாது என்ற எண்ணத்தால் வருகிறது. அதாவது பாடங்களை முழுமையாகப் படிக்காதபோதுதான் நம்மால் சிறப்பாக எழுத முடியுமா? என்ற சந்தேகம் வருகிறது.
பாடங்களை முழுமையாகப் படிக்காததற்கான காரணங்களுள் ஒன்று தள்ளிப்போடும் மனப்பான்மை. அன்றைய பாடங்களை அன்றே படித்திருந்தால் தேர்வு நேரத்தில் படிப்பதற்கு ஒன்றும் இருக்காது.
தேர்வுக்கான தேதி அறிவித்ததும் செய்ய வேண்டியது பாடங்களை திருப்புதல் அதாவது ரிவிஷன் மட்டுமே. ஆனால் பல மாணவர்கள் தேர்வு தேதி அறிவித்தால்தான் படிக்கவே தொடங்குகிறார்கள். அதனால் குறுகிய காலத்திற்குள் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதனால்தான் பதட்டம், பயம் போன்றவை ஏற்பட்டு படிப்பது பிடிக்காத விஷயமாகி விடுகிறது.
பாடங்களை முழுமையாகப் படிக்காததற்கு மற்றொரு காரணம் மாணவர்கள் பலரும் இன்று அறிவை வளர்த்துக்கொள்வதற்காக அல்லஸ மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே படிக்கிறார்கள்.
இதனால் பாடங்களை தேர்வுக்கு வருவது, தேர்வுக்கு வராதது என இரண்டாகப் பகுத்து தேர்வுக்கு வருவதை மட்டும் படிக்கிறார்கள். இதனால் நன்றாக படித்திருக்கிறோம் என்ற நிறைவே வராது. இப்படி அரைகுறையாக தேர்வுக்கு செல்வதால்தான் மாணவர்களுக்கு தேர்வை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை வருவதில்லை.
ஒன்றாவது படிக்கும் சிறுவனுக்கு அவன் வளர்க்கும் செல்ல நாயே உலகமாக இருந்தது. ஒரு நாள் பள்ளிவிட்டு வந்தபோது அது அசைவில்லாமல் கிடக்க அதிர்ச்சியானான். அது இறந்து விட்டதாக எல்லோரும் சொல்ல, அவன் அழுத அழுகைக்கு அளவேயில்லை. அவனை சமாதானப்படுத்த அந்த நாய்க்கு இறுதி ஊர்வலம் நடத்த ஏற்பாடாயிற்று. பக்கத்து வீடுகளில் இருந்த நண்பர்கள் எல்லோரும் ஒன்று கூடினர். மெல்ல மெல்ல அழுகை குறைந்து இறுதி ஊர்வலம் பற்றிய உற்சாகம் அவனிடம் அதிகமாகியது. குட்டி பல்லக்கு ஒன்று வரவழைத்து நாய் ஏற்றப் பட்டபோது இறந்ததாக கருதப்பட்ட அது லேசாக அசைந்தது. உடனே சிறுவன் குரல் கொடுத்தான், “அந்த நாயைக் கொல்லுங்கள்” என்று.
மாணவர்களின் இம்மனநிலையை விளக்க ஒரு குட்டிக்கதை. பல நோக்கங்கள் இப்படித்தான் திசை மாறிவிடுகின்றது. தேர்வு என்பது ஒரு மாணவன் எந்த அளவிற்கு பாடங்களை புரிந்து வைத்திருக்கிறான் என்பதை சோதிப்பதற்கான ஒரு முறை. ஆனால் பாடங்களை புரிந்து கொள்வதற்கான முக்கியத்துவம் குறைந்து வெறும் மதிப்பெண் எடுத்தால் மட்டும் போதும் என்றாகிவிட்டது, மேலே சொன்ன கதையைவிட சோகமான விஷயம்.
ஒரு மாணவன் வாங்கும் மதிப்பெண்ணுக்கும் அவன் உண்மையான கல்வியறிவிற்கும் எந்த சம்மந்தமுமில்லை என்பதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம். சரி. இதையெல்லாம் எப்படி மாற்றுவதுஸ தேர்வு பயத்தை எப்படி போக்குவது? என்று பார்ப்போம்.
மாணவர்களுக்கு தேர்வு பயமே நல்ல மதிப்பெண் வாங்கி பெற்றோரை திருப்திப்படுத்த முடியவில்லை என்பதால்தான் வருகிறது. மதிப்பெண்ணைவிட அறிவிற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதை பெற்றோர்கள் உணர்த்திப் பாருங்கள். தேர்வு பயம் தன்னால் நீங்கிவிடும்.
அறிவுக்கே முதலிடம்:
மதிப்பெண்ணுக்கு பதில் அறிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் தருவதால்தான் காப்பியடித்தல் பிட் அடித்தல் போன்ற தேர்வறைத் தவறுகள் அதிகமாகின்றன.
அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் யாருக்கும் இப்படிப்பட்ட தவறுகள் செய்ய வேண்டும் என்று தோன்றவே தோன்றாது. தகுதியடைய ஆசைப் படாமல் தகுதி இருப்பதாக காட்டிக்கொள்ள மட்டும் ஆசைப்படும் இந்த அசிங்கத்தை பெற்றோர்கள்தான் மாற்றவேண்டும்.
மதிப்பெண் பட்டியலுக்கு பதில் ஒவ்வொரு நாளும் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
பதில் எழுத அல்ல கேள்வி கேட்க பழகுங்கள்:
பதில் எழுதுவதல்ல, கேள்வி கேட்பதே கல்வி. தவளை நீரிலும் நிலத்திலும் வாழும் என்ற பாடத்தை படிக்கும்போது அந்த பதிலை மனப்பாடம் செய்வதல்ல கல்வி. ஏன் தவளை நீர் நிலம் இரண்டிலும் வாழ்கிறது? என்று கேள்வி கேட்பதுதான் கல்வி.
நம் குழந்தைகளுக்கு, கேள்வி கேட்கிற பழக்கம்தான் அறிவை வளர்க்கிற பழக்கமாக மாறும். எனவே படித்த பாடத்தில் பதிலை தேடாமல் புதிய கேள்விகளை கேட்டு அதற்கான பதிலை பாடம் தாண்டிய புத்தகங்களிலும் தேடி பதிலை கண்டறியச் சொல்லுங்கள்.
பயத்தைப் போக்க உற்சாகப்படுத்துங்கள்:
ஒருவன் எப்படி இருக்கிறானோ அப்படி நடத்தினால் அவன் அப்படியேதான் இருப்பான். ஒருவன் எவ்வாறு இருக்க வேண்டுமோ அவனை அவ்வாறு நடத்தினால் அவன் அவ்வாறு உயர்கிறான். என்ன தலைசுற்றுகிறதா? இதைப் புரிந்து கொள்ள எளிய ஓர் உதாரணம் பார்ப்போம்.
35 மதிப்பெண் வாங்கும் மாணவனை 35 மதிப்பெண் எடுத்தவனைப் போல நடத்தினால் அவன் 35 மதிப்பெண் எடுப்பவனாக மட்டுமே இருப்பான். 35 மதிப்பெண் வாங்கும் உங்கள் குழந்தை 50 மதிப்பெண் வாங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் 50 மதிப்பெண் எடுத்தவனைப்போல அவர்களை நடத்துங்கள். அப்போது அவர்கள் உற்சாகம் பெற்று 50 மதிப்பெண் பெறுவார்கள். 50 மதிப்பெண் எடுப்பவர்கள் 75 மதிப்பெண் வாங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் 75 மதிப்பெண் எடுத்தவனைப்போல் அவர்களை பாராட்டுங்கள். நிச்சயம் 75 மதிப்பெண் பெறுவார்கள்.
ஆனால் உண்மையில் நாம் அவர்களை எப்படி நடத்துகிறோம். யோசித்துப் பாருங்கள். 50 மார்க் எடுத்திருந்தால்கூட அவர்களை ஃபெயிலான மாணவர்கள் போலத்தான் நடத்துகிறோம். 50ஐ விடுங்கள் 80 எடுத்தால் கூட ஃபெயிலானவர்கள் போல நடத்தும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். இதனால் ”என்ன படித்து என்ன, நிச்சயம் இவர்கள் பாராட்டப் போவதில்லை” என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது.
எனவே, எதற்கும் திட்டாதீர்கள். திட்டும்போது மனம் சோர்வடைகிறது. செயலற்ற நிலைக்கு சென்றுவிடுகிறது. இதுவே பாராட்டும்போது மனம் உற்சாகமடைகிறது. சுறுசுறுப்புடன் செயலாற்ற தயாராகிறது.
உங்கள் குழந்தை தேர்விலேயே தோல்வியடைந்திருந்தால்கூட நீங்கள் அவர்களுக்கு புரியவைக்க வேண்டும். நீ ஒன்றும் முட்டாள் அல்லஸ உன் மதிப்பெண்கள் உன் முயற்சியைத்தான் குறிக்கிறதே தவிர. உன் அறிவை அல்லஸ உன் முயற்சிகூடக் கூட உன் மதிப்பெண்ணும் கூடும் என்று பேசுங்கள்.
நாம் செய்த முயற்சி தான் மதிப்பெண்ணாக வருகிறது. எனவே மதிப்பெண் குறைந்தால் முயற்சியை கூட்ட வேண்டும் என்பதை உங்கள் குழந்தைக்கு உணர்த்த வேண்டும்.
40% உழைப்பு – 40% மதிப்பெண்
60% உழைப்பு – 60% மதிப்பெண்
80% உழைப்பு – 80% மதிப்பெண்
90% உழைப்பு – 90% மதிப்பெண்
100% உழைப்பு – 100% மதிப்பெண்
இதையே ஒரு பேப்பரில் எழுதி குழந்தைகள் அறையில் அவர்கள் கண்ணில் படுகிறமாதிரி ஒட்டச் செய்யுங்கள்.
இந்த வகை முயற்சி உழைப்பை அதிகரிக்கச் செய்வதோடு ஏன் செய்யவேண்டும் என்கிற அறிவை ஏற்படுத்தி அவர்களை கண்டிப்பாக மாற்றமடையச் செய்யும்.
தள்ளிப்போடும் மனப்பான்மையை மாற்ற:
நன்றாக படிக்கும் மாணவர்களுக்கே கூட உள்ள பிரச்னை இது. நாளைக்கு செய்துகொள்ளலாம் என்று தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு பிறகு தள்ளிப்போடுவது என்பதே பழக்கமாகிவிடுகிறது.
பிறகு நாய் போர்வை வாங்கிய கதை போலத்தான் ஆகிவிடும். நாய் ஒன்று இரவில் குளிரும்போது முடிவெடுக்கும். நாளை காலை, முதல் வேலையாக போர்வை வாங்கிவிட வேண்டும் என்று.
மறுநாள் காலை வெயிலில், இரவில் குளிரடித்ததோ போர்வை வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்ததோகூட ஞாபகம் இருக்காது. அன்று இரவு மறுபடி குளிரடிக்கும்போது மறுபடியும் நாளை கண்டிப்பாக போர்வை வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுக்கும். ஆனால் மறுநாள் மறுபடி வெயிலில் எல்லாவற்றையும் மறந்துவிடும்.
நம் மாணவர்கள் கதையும்கூட இதுதான். ஒவ்வொரு முறை ஆண்டுத் தேர்வின் போதும் அளவுக்கதிகமான டென்ஷனால் அடுத்த வருடத்திலிருந்து வருட ஆரம்பத்திலிருந்தே படிக்க வேண்டும் என்று முடிவெடுப்பார்கள். ஆனால் பள்ளி துவங்கியதும் ‘இப்பத்தானே லீவு முடிஞ்சிருக்குஸ. இப்பத்தானே ஸ்கூல் ஆரம்பிச்சிருக்கு’ என்று ஒவ்வொரு நாளும் படிப்பதை தள்ளிப்போட்டுக்கொண்டே போவார்கள்.
இதை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் எழுந்திருக்கும் பழக்கம் தொடங்கி எந்த ஒரு வேலையையும் தள்ளிப்போடக்கூடாது என்று அறிவுறுத்துங்கள். உதாரணத்திற்கு காலையில் எழுவதை ஐந்து நிமிடம் தள்ளிப்போடுவதிலிருந்து அன்றைய தோல்விகள் ஆரம்பமாகின்றன என்ற வரிகளை அவர்கள் எழும் அறையில் ஒட்டிவைத்து உற்சாகப்படுத்தலாம்.
பெற்றோர்கள் செய்ய வேண்டியது.
வேலைகளை தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு கடைசி நேர வேலைக்கு எல்லோரும் பழக்கப்பட்டு விட்டோம்.
தேர்வு பயத்தைப் பற்றி எழுதுவதைக்கூட, ”இப்போது என்ன அவசரம் இன்னும்தான் தேர்வுகள் வரவில்லையே” என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கும் எல்லாவற்றையும் கடைசி நேரத்தில் செய்து பழக்கமாகிவிட்டது என்று அர்த்தம்.
ஒரு செயலை செய்வதற்கு தேவைப்படும் நேரம் செயலை செய்வதற்கு கையிலிருக்கும் நேரம் ஆகும் என்பது போல ஒரு பாடத்தை படிப்பதற்கான நேரம் தேர்வுக்கான தேதி அறிவிக்கும் வரை என்ற எண்ணத்தை முதலில் உங்கள் குழந்தைகளிடமிருந்து எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு மாத தேர்வையும் ஆண்டுத்தேர்வு போல நினைத்து அக்கறையாக எழுதச் சொல்லி உற்சாகப்படுத்துங்கள்.
தேர்வை நினைத்து மட்டுமல்லஸ தேர்வு நாளாகவே இருந்தால்கூட நீங்கள் முதலில் பதட்டமடையாமல் இருங்கள். ஏனெனில் உங்கள் பதட்டம் உங்கள் குழந்தைகளையும் அதிகம் பதட்டமடையச்செய்யும்.
தேர்வுக்கு முதல் நாள்கூட தாராளமாக விளையாட அனுமதியுங்கள். குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது. விளையாடும்போது மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு அதிகமாகிறது. இதன் மூலம் உற்சாகமாகவும் பதட்டமின்றியும் அவர்களால் இருக்க முடியும்.
நம்பிக்கையான வார்த்தைகளை மட்டும் சொல்லுங்கள். நிச்சயம் நீ நன்றாக தேர்வெழுதுவாய்ஸ உன்னைத் தவிர வேறு யாரால் நன்றாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுங்கள்.
பிறகு பாருங்கள், உங்கள் குழந்தைகள் ஜாலியாக படிப்பார்கள். ஈஸியாக ஜெயிப்பார்கள்.
Thanks regards: www.namadhunambikkai.com