Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

1947 (2)

Posted on January 20, 2010 by admin

[ லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டது தீவிரவாதிகளால் அல்ல. சாதாரணமாக இணக்கமாக இயல்பாக வாழ்ந்து கொண்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் பரஸ்பரம் கொலையாளிகளாகவும் பெண்களை கடத்துபவர்களாகவும் கற்பழிக்கிறவர்களாகவும் மாறியது எப்படி?

சமாதான காலங்களில் தூவப்படும் வகுப்புவாத விதைகள் கொழுந்து விட்டெரிய சந்தர்ப்பங்கள்தான் தேவைப்படுகின்றன. நாம் சமாதானமான நேரங்களில் சும்மா இருந்துவிட்டு கலவரம் முடிந்த பிறகு மட்டும் தீவிரமாக வகுப்புவாத எதிர்ப்பு இயக்கம் நடத்துவதால் என்ன பயன் விளையும்?]

இது போன்ற சம்பவங்கள் நடக்க நடக்க நாளுக்கு நாள் பீதி அதிகரித்தது. பல கிராமங்கள் ஊரைக் காலி செய்துவிட்டு கால்நடைகளுடனும் தட்டுமுட்டுச் சாமான்களுடனும் இந்தியாவை (அல்லது பாகிஸ்தானை) நோக்கி நடக்க ஆரம்பித்தனர். வழியில் உள்ள கிராம மக்களும் சேர்ந்து கொள்வார்கள். சாலைப் பயணம் நீள நீள நடக்கின்ற கூட்டமும் பத்தாயிரம் பேர் இருபதாயிரம் பேர் எனப் பெருகும். இந்த ஊர்ந்து போகும் மக்கள் திரளை “கஃபிலா‘ (Kafila) என்று அழைத்தனர். மிகப் பெரிய கஃபிலாவில் ஒரு சமயம் 4 லட்சம் பேர் நடந்து வந்தனர்.

இந்த அனாதரவான கஃபிலா ஒரு இடத்தைக் கடக்க எட்டு நாள் ஆனது.இடையில் மதவெறியர்களின் தாக்குதலுக்கு இந்த கஃபிலா ஆளாகும். பெண்கள் கடத்திச் செல்லப்படுவார்கள்… ஒன்றும் செய்ய முடியாது. கதறி அழுதபடி ‘கஃபிலா‘வின் பயணம் தொடரும். எதிரெதிர் திசைகளில் கஃபிலாக்களின் நகர்தல் குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி, செத்துச் செத்து விழுந்த மக்கள் ஏராளம்.

பின்னர் பல கிராமங்களில் “”தாக்குதலுக்குப் படைவருகிறது” என்ற வதந்தி பரவியதுமே கற்பழிக்கப்படலாம் என்ற அச்சத்தின் விளைவாக படை எதுவும் வருவதற்கு முன்னே பெண்கள் தீக்குளித்தும் வீட்டுக் கிணறுகளில் விழுந்தும் தற்கொலை செய்து தங்கள் மானம் காத்துக் கொண்டனர். அல்லது தங்கள் வீட்டு ஆண்களால் முன்கூட்டியே கொல்லப்பட்டனர். இந்த (தற்)கொலைகள் முடிந்த பிறகு எந்த தாக்குதலும் நடக்காமலே வீண் வதந்தியாகப் போன சம்பவங்களும் உண்டு.

குறைந்தது 10 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பஞ்சாபில் மட்டும் ஒரு கோடிப் பேருக்கு மேல் எல்லையை கடந்தனர். 75000 பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகினர்.

கடத்தப்பட்ட தங்கள் பெண்கள், குழந்தைகள் பற்றி முறையாக புகார் தந்தவர்கள் பலர். விபரம் தெரியாமல் கண்ணீருடன் காலத்தில் புதைந்து போனவர்கள் பலர். புகார்களின் எண்ணிக்கை பெருகப் பெருக 1949ல் இந்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. “கடத்தப் பட்டவர்களின் மீட்பு மற்றும் மறு வாழ்வுக்கான சட்டம் 1949” கடத்தப்பட்டவர் யார் என்பதை அந்தச் சட்டம் விளக்கியது.

“1. 3.1947க்குப் பிறகும் 1.1.1949-க்கு முன்பும் தங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்ட 16 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண் மற்றும் எல்லா வயது பெண்களும் இந்த தேதிகளுக்கு இடையே பிறந்த குழந்தைகளும் கடத்தப்பட்டவராக கருதப்படுவர்.

இந்திய மற்றும் பாகிஸ்தானியர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு புகார்களின் அடிப்படையில் இரு நாடுகளிலும் தேடும்பணி நடைபெற்றது. பலர் மீட்கப்பட்டு அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

1957 வரை தேடும்பணி தொடர்ந்தது. 1957 உடன் இச்சட்டம் காலாவதியானது. அதற்கு மேல் தேடுவதற்கு இரு நாடுகளிலும் அனுமதி இல்லை.

தொலைந்தவர்கள் தொலைந்து போனவர்கள்தான். ஆகஸ்டு 1956ல் கராச்சியிலிருந்து வெளிவந்த (Dawn) டான் என்ற பத்திரிகை ஒரு தந்தையின் சோகத்தை எழுதியிருந்தது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு துரத்தப்பட்ட குவா மருத்தீன் அகமத் என்பவர் வழியில் தன் பெண் குழந்தை கடத்தப்பட்டதை பற்றி பாகிஸ்தான் அரசுக்கு புகார் செய்தார். அரசு எதுவுமே செய்யாததால் அவரே தன் மகளைத் தேடி இந்தியாவுக்கு தன்சொந்த நகருக்கு வந்தார்.

அவர் பல சில்லறைக் காரணங்களைக் காட்டி கைது செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு திருப்பப்பட்டார். மீண்டும் மகளைத் தேடி இந்தியா வந்த அவர் “பாகிஸ்தான் உளவாளி” என குற்றம் சாட்டப்பட்டு 1951ல் சிறையிலடைக்கப்பட்டார். விடுதலையான பிறகு பாகிஸ்தான் சென்று மீண்டும் அரசுக்கு விண்ணப்பித்தார். இந்திய அரசு அவருக்கு உதவாதது பற்றிகூட அவர் வருத்தப்படவில்லை. பாகிஸ்தான் அரசு எதுவுமே செய்யவில்லையே என வருந்தி கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தார்.

அதற்குள் 1957 வந்துவிட்டது. கடத்தப்பட்டவர்களை மீட்கும் சட்டமும் காலாவதி ஆனது. இரு நாடுகளிலும் வாழ்ந்த எத்தனையோ தந்தையரைப்போல அவரும் அவரது மகளை நிரந்தரமாக இழந்த சோகத்துடன் உறைந்து போயிருப்பார். இதுபோல கற்பழிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறந்து அனாதையான குழந்தைகளை என்ன செய்வது என்பது இரு நாடுகளிலும் பிரச்சினை ஆனது. ஒரு இந்து தகப்பனுக்கும் முஸ்லீம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை எந்த மதத்தை சேரும்? அல்லது முஸ்லீம் தகப்பனுக்கும் இந்து தாய்க்கும் பிறந்த குழந்தையை எங்கே வைத்திருப்பது? இந்தியாவிலா? பாகிஸ்தானிலா? அது எந்த நாட்டுப் பிரஜையாக இருக்கும்?

நாடாளுமன்ற அவைகளில் அமைச்சர் பெருமக்கள் அறிஞர்கள் விவாதித்தனர். தகப்பனின் மதம் தான் குழந்தைக்கும் பொருந்தும் என பெரும்பாலோனோர் பேசினர். ஆனால் இந்த குழந்தைகளைப் பொறுத்தவரை பாலியல் பலாத்காரம் செய்த கயவர்களல்லவா தகப்பன்கள்? தகப்பன் என்ற வார்த்தை அவர்களுக்குப் பொருந்துமா?

அதிர்ச்சியூட்டும் கருத்துக்களை அறிஞர்கள் அவைகளில் அள்ளி வீசிக் கொண்டிருக்க அனாதைக் குழந்தைகள் இந்திய பாகிஸ்தான் தெருக்களில் குழந்தை உழைப்பாளிகளாக பிச்சைக்காரர்களாக சில்லறைத் திருடர்களாக தங்கள் பால்ய காலத்தை கரைக்கத் துவங்கி விட்டிருந்தனர். ஆசிரமங்களில் இருந்த அனாதைக் குழந்தைகளை தத்து எடுத்துச் சென்றவர்களும் ஆண் குழந்தைகளையே எடுத்துச் சென்றனர். பெண் குழந்தைகளை வேறு நோக்கங்களுக்காக தத்து எடுத்துச் சென்றனர். பலர் தத்து எடுத்துச் சென்ற பெண் குழந்தைகளை ரொம்ப சேட்டை செய்வதாகக் கூறி மீண்டும் ஆசிரமத்திலேயே கொண்டுவிட்டனர்.

நாங்கள் யார்?:

இதற்கிடையே 50,000 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் பாகிஸ்தானிலிருந்து தப்பி இந்தியா வந்து சேர்ந்திருந்தனர். நிவாரண முகாம்களில் அவர்களுக்கு அடைக்கலம் தராமல் அதிகாரிகள் தட்டிக் கழித்தனர். எல்லைப்பகுதியில் இரண்டு வகையான நிவாரண முகாம்கள் அப்போது இயங்கின. பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்துக்கள் சீக்கியர்களுக்கான முகாம் ஒன்று. பாகிஸ்தான் செல்வதற்காக காத்திருக்கும் முஸ்லீம்களுக்கான முகாம் ஒன்று. சாதி இந்துக்களை முகாம்களில் சேர்க்க முழு முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எதிலும் சேர்க்க மறுத்தனர். முகாம்களில் இருப்பவர்களுக்குத்தான் ரேஷன் கிடைக்கும்.

1947 டிசம்பர் வாக்கில் டாக்டர் அம்பேத்கார் இது குறித்து நேருவுக்கு கடிதம் எழுதினார். ஒன்றும் நடக்கவில்லை. பாகிஸ்தானில் நிலபுலன் வைத்திருந்தவர்கள் அதற்கான சான்றுகளை இந்திய அதிகாரிகளிடம் காட்டினால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக இங்கு முஸ்லீம்கள் விட்டுச் சென்ற நிலபுலன்கள் ஈடாகத் தரப்பட்டன. இதே நடைமுறை பாகிஸ்தானிலும் இருந்தது.

ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலங்களில் காலம் காலமாய் பாடுபட்டார்களே ஒழிய உடமையாளர்களாக இருக்கவில்லை. எனவே சட்டப்படி இந்திய அதிகாரிகளிடம் விவசாயிகள் என்று நிரூபிக்க அவர்களிடம் எந்த சான்றும் இருக்கவில்லை. ஈடாகப்பெற நிலமும் கிட்டவில்லை. நிவாரண முகாம்களில் ரேஷனும் கிட்டவில்லை.

பொறுப்புக்கு வந்ததும் முதல் காரியமாக பாகிஸ்தான் அரசு தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாத மக்கள் இந்தியாவுக்கு புலம் பெயர்வதை உடனடியாக தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. எல்லா தாழ்த்தப்பட்டோரும் இந்தியா சென்று விட்டால் கக்கூஸ் அள்ளுவது யார்? சாக்கடை அள்ளுவது யார்? அத்தியாவசியப் பணி பராமரிப்பு சட்டத்தின் (ESMA) கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு கக்கூஸ்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்தியாவிலும் இது தான் நடந்தது.

தாழ்த்தப்பட்ட மக்கள் முஸ்லீம்களும் அல்லர். இந்துக்களும் அல்லர் என்றால் நாங்கள் யார்? நாங்கள் தீண்டத்தகாதவர்கள் உங்கள் பார்வையில் அசுத்தமானவர்கள் எங்களுக்கு “அசுத்தஸ்தான்” என்று தனி நாடு கொடுங்கள் என்றெல்லாம் குரல்களும் இயக்கங்களும் கிளம்பின.

திரு. பியாலால் (Mr. Beah Lall) 1946 நவம்பரில் “அகில இந்திய அசுத்தஸ்தான் இயக்கத்தை” நிறுவினார். “இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வதற்காக இப்போது தீண்டத்தகாத எங்களை தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். ஆனால் இந்துஸ்தான், பாகிஸ்தான், இங்கிலீஸ்தான் ஆகிய இந்த மூன்று ஸ்தான வாதிகளும் எங்களை காலம் காலமாக கசக்கிப் பிழிந்ததை நாங்கள் மறக்க முடியுமா? நாங்கள் இந்தியாவில்தான் பிறந்தோம் எனவே இந்தியாவின் ஒரு பகுதியை “அசுத்தஸ்தான்” ஆக்கித்தாருங்கள் எங்கள் வழியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்ற திரு பியாலால் பிரகடனம் செய்தார். (ஆதாரம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆவணங்கள் கோப்பு எண் G19(KW-1) ஹரிஜன் சேவக் சங் – 1946 – 48)

1947 மார்ச் 6 இல் நடைபெற்ற உத்திரபிரதேச தாழ்த்தப்பட்டோர் சம்மேளன மாநாட்டில் பேசிய இடைக்கால அரசின் சட்ட உறுப்பினர் ஜே. என். மண்டல், “எனக்கு காந்திஜியின் மீது பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஹரிஜனங்களுக்கு கோயில் கதவுகளை திறந்து விட்டு சமபந்தி போஜனம் செய்தால் போதுமா? எனவே நான் லீகுடன் கை கோர்க்க தயாராகி விட்டேன். முஸ்லீம்கள் நம்மைப்போல ஏழைகள். பின்தங்கியவர்கள். தீண்டத்தகாதவர்கள்” என முழங்கினார். (மேற்படி AICC ஆவணம்.)

இன்னும் சிலர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதிய வசதிகளும் சலுகைகளும் செய்து தராவிட்டால் அவர்கள் முஸ்லீம்களாக மதம் மாறிவிடுவார்கள். அது பிறகு காங்கிரசுக்கும் இந்துக்களுக்கும் பெரிய இடைஞ்சலாக வந்து சேரும் என்று நயந்தும் மிரட்டியும் பேசிப்பார்த்தனர்.

எவ்வாறாயினும் தாழ்த்தப்பட்டவரின் குரல்களை எந்த நாடும் (விசேஷமாக கவனிப்பது இருக்கட்டும்) கண்டு கொள்ளவே இல்லை. தலைவர்கள் உடனடியாக கவனிக்க வேறு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தன.

ஆனால் தேசப்பிரிவினையை ஒட்டி கலவரங்களின் போது தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படவில்லை. துன்புறுத்தப்படவில்லை. 1947 மார்ச் மாதத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ராவல்பிண்டி பகுதியில் சுற்றுப்பயணம் செய்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளன பொதுச் செயலாளர் பி.என். ராஜ்போஜ” எழுதினார். “நான் சுற்றுப்பயணம் செய்த எந்தப்பகுதியிலும் தாழ்த்தப்பட்டவர் எவரும் கலவரத்தால் பாதிக்கப்படவில்லை என்பதை கண்டேன். இந்துக்களை போல தோற்றமளித்த தாழ்த்தப்பட்டவர் சிலர் ஒரு சில இடங்களில் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளனர். மற்றபடி வேறு எங்கும் இல்லை.

ஆனால் தாழ்த்தப்பட்ட பெண்களும் மற்ற இந்து, முஸ்லீம் பெண்களைப் போல கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு.

பெண்ணின் உடம்பின் மீது எழுதப்படும் சரித்திரம் :

வகுப்புவாதம் தலைவிரித்தாடிய அந்த நாட்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதங்களை வகைப்படுத்திப் பார்ப்பது அவசியம்.

“அவர்களு”டைய பெண்களை இழிவுபடுத்துவது அவர்களுடைய மதத்தை நம்பிக்கைகளை அவர்களுடைய தன்மானத்தை ஆழமாக, கிழிக்கும் செயல் என்பதாக பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லீம்களும் புரிந்து கொண்டிருந்தனர்.

மாற்று மதத்தவரின் இளம் பெண்களை கடத்திச் சென்றனர். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கினர். அவர்களை கெடுத்ததன் மூலம் தங்கள் மதத்துக் குழந்தை அவர்களின் வயிற்றில் வளர வித்திட்டனர். பெண்ணின் உடம்பின் மீது செய்யும் ஆக்கிரமிப்பு பிற மதத்தவர் மீது நாட்டிய வெற்றிக் கொடியானது.

“அவர்களது” பெண்களை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓடச்செய்வது.

பெண்களை நிர்வாணமாக்கி அவர்களது மார்பகங்களை அறுத்து எறிவது (இதனால் இறந்தவர்கள் ஏராளம்).

பெண் உறுப்பு மற்றும் மார்பகங்களில் பிறைச்சந்திரன் திரிசூலம் சின்னத்தை சூட்டுகோலால் வரைவது என்றும் அழியாத கேவலமாக பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மாற்று மதத்தின் சின்னம்.

“அவர்கள்” தாக்க வருகிறார்கள் என்று அறிந்தும் தாங்கள் வீட்டுப் பெண்களை கொன்று விட்டு தப்பிச் செல்வது அல்லது தம் வீட்டுப் பெண்களை தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டுவது நிர்ப்பந்திப்பது வழிகாட்டுவது.

தங்கள் உயிரை பலியாகக் கொடுத்த தம் வீட்டுப் பெண்களை குல தெய்வமாக்கி இன்றும் வணங்கி வருவது தற்கொலை செய்ய மறுத்து இன்றும் உயிர்வாழும் தம்வீட்டுப் பெண்களை மாற்றுக் குறைவாக மதிப்பது.

முடிவற்று நீண்டு செல்லும் துயர்மிக்க கதைகளை தேசப்பிரிவினை நமக்குப்பரிசாகத் தந்துவிட்டது.

தேசப்பிரிவினையில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து உயிர் தப்பி “நம்ம தேசம்” இந்தியாவுக்கு வந்து நிம்மதியாக பெருமூச்சு விட்ட ஆயிரக்கணக்கான சீக்கியக் குடும்பங்கள் 1984ல் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட போது மீண்டும் அதே 1947ஐ அனுபவித்தனர். டெல்லியிலும் மீரட்டிலும் கான்பூரிலும் என காங்கிரஸ் குண்டர்களும் இந்து வெறியர்களும் சீக்கிய மக்கள் மீது தொடுத்த தாக்குதல் அதிர்ச்சி மிக்க பல கேள்விகளை எழுப்புகின்றது.

1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து பம்பாயில் முஸ்லீம் மக்கள் மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்களை அகதிகளாக்கி பம்பாயை விட்டு ஓடவைத்தது.

தமிழக தென்மாவட்ட சாதிக்கலவரங்களின் போது பல கிராமங்களில் மக்கள் ஊரைக்காலி செய்து விட்டு மறைந்து திரிந்தார்கள், அகதிகளாக.

ஒரு வார்த்தையில் சொல்வதானால் “1947” திரும்பத் திரும்ப நம் நாட்டில் நடந்து கொண்டே இருக்கிறது.

1947 ஐ மீண்டும் மறுவாசிப்பு செய்வதும் கட்டுடைத்துப் பார்ப்பதும் இன்றைய வகுப்புவாதத்தின் வேர்களை அடையாளம் காண உதவக்கூடும்.

ஒரு நூற்றாண்டு விடைபெறும் புள்ளியில் 1947 நமக்கு முன் வைக்கும் கேள்விகள் பல.

லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டது தீவிரவாதிகளால் அல்ல. சாதாரணமாக இணக்கமாக இயல்பாக வாழ்ந்து கொண்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் பரஸ்பரம் கொலையாளிகளாகவும் பெண்களை கடத்துபவர்களாகவும் கற்பழிக்கிறவர்களாகவும் மாறியது எப்படி? சமாதான காலங்களில் தூவப்படும் வகுப்புவாத விதைகள் கொழுந்து விட்டெரிய சந்தர்ப்பங்கள்தான் தேவைப்படுகின்றன. நாம் சமாதானமான நேரங்களில் சும்மா இருந்துவிட்டு கலவரம் முடிந்த பிறகு மட்டும் தீவிரமாக வகுப்புவாத எதிர்ப்பு இயக்கம் நடத்துவதால் என்ன பயன் விளையும்?

கலவர நேரங்களில் மனிதர்கள் தங்கள் எல்லா அடையாளங்களும் மறக்கடிக்கப்பட்டு இந்து, முஸ்லீம் அல்லது தம் சாதி என்ற ஒற்றை அடையாளத்துடன் மோதுகிறார்கள். எப்போதும் தங்கள் பன்முக அடையாளங்களை இழக்காதிருக்க இடைவிடாத கருத்துலக இயக்கம் தேவை அல்லவா? பெண்ணின் உடம்பு இலகுவான ஆக்கிரமிப்புக்கான நிலப்பரப்பாக தொடர்வதை எந்த நூற்றாண்டில் நாம் முடிவுக்குக் கொண்டு வரப்போகிறோம்?

குடும்ப மானம் என்பது என்ன? மதத்தின் மானம் தேசத்தின் மானம் என்பதெல்லாம் என்ன? பாலியல் பலாத்காரத்தை வெறும் உடல் மீதான வன்முறையைப் போல பாவிக்க நமது புரையோடிப்போன கலாச்சாரத்தை எப்படி ஒழிக்கப் போகிறோம்? வக்கிரங்கள் ஒழியும் நாள் எது? பெண்ணுக்கு நாம் சொல்லப்போகும் பதில் என்ன?

கலவரங்களின்போது அனாதையாக்கப்படுகிற குழந்தைகளின் பால்யம் அதிர்ச்சியில் கன்றிப்போவதை நாம் எப்படி சரி செய்யப்போகிறோம்?

1947 என்பது ஒரு ஆண்டு அல்ல. 1947 என்பது இந்திய விடுதலை மட்டுமல்ல. மேலே நீளமாக பேசப்பட்டுள்ள அத்தனை துயரங்கள் அவலங்கள் மனிதக் கேவலங்கள் இவற்றின் ஒட்டு மொத்தமான குறியீடுதான் 1947.

Thanks regards: (mettutamil_selvan@yahoo.co.in

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

25 + = 30

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb