”தித்திக்கும் திருமறை” கல்விக்கு உயிர் ஊட்டும் காவியம் (2)
மவ்லானா M.அப்துல் வஹ்ஹாப் M.A., B.Th., ரஹ்மதுல்லாஹி அலைஹி
அறிவு தேடிவந்த அந்தகரை அலட்சியம் செய்ததற்காக, இறைவன் தன் தூதரைக் கடிந்து கொள்கிறான். அந்தகர் இப்னு உம்மி மக்தூம், இஸ்லாமிய வரலாற்றிலே அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம், இஸ்லாமிய வரலாற்றிலே அப்துல்லாஹ் இப்னு ஷுரைஹ் என்ற பெயராலும் குறிக்கப்படுகிறார்கள்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு தடவை அவரிடமிருந்து தம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள் என்னும் காரணத்தாலேயே அன்னார் பெயரும் பிரசித்தமடைந்து விட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் அவர் எப்பொழுது நாயகத்திடம் சென்றாலும், எம்பெருமானார் அவருக்கு முகமன் கூறி, அவரை உபசரித்து, இரு கண்களும் இழந்த அந்தகத் தோழர் அமர்வதற்காகத் தங்கள் மேலாடையையும் விரித்து விடுவார்கள்.
கண்ணிழந்த இப்னு உம்மி மக்தூமைக் காணும் போடிதல்லாம், ”எவருக்காக என்னை என் நாயன் எச்சரித்தானோ, அத்தகைய உமக்குச் சுபசோபனம்” என்றும் நாயகப் பெருந்தகை கூறுவார்கள். தாம் மதீனாவை விட்டு வெளியே செல்ல வேண்டிய சிற்சில சந்தர்ப்பங்களில் தம் பிரதிநிதியாகவும் அவரை நியமித்துச் சென்றிருக்கிறார்கள் நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அறிவு விளக்கம் தேழவந்த அந்தகரைப் புறக்கணித்தார்கள் என்ற காரணத்துக்காகத் தன் தூய திருநபியை எச்சரித்தான் இறைவன். ”ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகள்” (அல் உலமாவு வரதத்துல் அன்பியா,) என்று நாயகம் நவின்றுள்ளார்கள். ஆகவே ஐயத் தெளிவுக்காக வரும் மக்களிடம் கடுகடுத்துப் பேசாமல், அவர்களை மார்க்க அறிவற்றவர்கள் என்று எள்ளி நகையாடாது, அவர்களுக்கு நல்லறிவு புகட்ட வேண்டியது இஸ்லாமிய அறிஞர்களின் கடமையாகும். இதற்கு புறக் கண்ணிழந்து, அகக்கண் ஒளியோடு நாயகத்தின் நல்லறத் தோழராக விளங்கிய அந்தப் பெரியாரின் வரலாறு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.
”கண்ணகல் ஞாலத்தில்” கல்விக்குள்ள பெரும் சிறப்பபை; பற்றிச் சிறதளவு அறிந்தோம். ஞானம் என்பது அறிவு, தன்னறிவு, புலனறிவு, மெய்யறிவு போன்ற பல பகுதிகளுடையது. ஆனால் அறிவையே இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, ”எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.” – கணிதமும், எழுத்தாலாகும் கட்டுரைகள், கவிதைகள், காப்பியங்கள், நவீனங்கள், அறிவு நூற்கள் ஆகியவும் இரு கண்களைப் போன்றவை என ஆன்றோர் கூறியுள்ளனர். ஏண்ணைப் பற்றியும் திருக்குர் ஆனில் வரும் சில ரசமான சேதிகளைத் தெரிந்து கொள்ளலாமே! திருமறையை ஆராய்ச்சி செய்த – செய்துவரும் அறிஞர்கள் அதன் எழுத்திலும், எண்ணிலும் எவ்வளவு கவனம் செலுத்துகிறார்கள் என்பதை அறிவதற்கு இது உதவியாக இருக்கும்.
ஏழு என்னும் எண் மகத்துவமிக்கது என்பது சரித்திர நூல்களிலும், சமய வரலாறுகளிலும் இருந்து எளிதில் புலனாகும். ஏழு வானங்கள் என்று திருமறை அடிக்கடி குறிப்பிடுகிறது. அப்துல்லாஹ் இப்னு உபை என்னும் நயவஞ்சகன், நாயகத்துக்குப் பெரிதும் தொல்லை கொடுத்து வந்தவன். ஆனால் அவன் இறந்ததும், அவனுடைய மகன் வந்து தம் தந்தை ஈடேற்றம் அடைய பெருமானாரின் சட்டையைக் கொடுத்துதவ வேண்டுமென்றும், அதைத் தம் தந்தையின் பிரேதத்தைச் சுற்றும் (கஃபன்) துணியாக அணிவிக்கப் போவதாகவும், அத்துடன் தம் தந்தையின் பிரேத அடக்கத்தை உடனிருந்து நடத்தித் தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பெருமானார் அவர்கள் தம் சட்டையைக் கொடுத்ததோடல்லாது, பிரேத அடக்கத்தின்போது அப்துல்லாஹ் இப்னு உபைக்காக பிரார்த்தனை டிசய்வதற்கும் உடன்பட்டு எழுந்தார்கள்.
அப்பொழுது ஹல்ரத் உமறுப்னுல் கத்தாபு அவர்கள் நாயகத்தின் மேலாடையைப் பிடித்துக் கொண்டு ”யாரஸூலல்லாஹ்! இறைவன் தன் வேதத்தில், (நபியே!) அவர்களுக்காக நீர் பிழை பொறுக்கத் தேடும்; அல்லது பிழை பொறுக்கத் தேடாமலிரும்; அவர்களுக்காக எழுபது தடவை நீர் பிழை பொறுக்க வேண்டினாலும் பிழைபொறுக்கமாட்டான்; ஏனென்றால் அது: அவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வையும், அவன் ரஸூலையும் நிராகரித்தார்கள் என்பதினாலாகும்; அல்லாஹ் பாவிகளின் கூட்டத்தை நேர்வழியில் செலுத்தமாட்டான்” (9:80) என்று டிசால்லவில்லையா? இந்த நயவஞ்சகனுக்காக நீங்கள் துஆச் செய்யலாமா? ஏன்று கேட்டார்கள்.
அப்பொழுது கருணைக் கடலான நபிகள் நாயகம், ”இறைவன், எழுபது தடைவ மன்னிப்புக் கேட்டாலும் கூட மன்னிக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறானல்லவா? நான் எழுபது தடவைக்கும் அதிகமாக அவன் சார்பில் மன்னிப்புக் கேட்கிறேன்,” என்று பதிலிறுத்தார்களாம். ஆனால் இதன் பின்னர் (இப்னு உபை போன்ற) நயவஞ்சகர்களின் சமாதியருகில் நிற்கவோ, அவர்களுக்காக துஆச் செய்யவோ வேண்டாம் என்று ஆண்டவன் அறிவித்து விட்டான்.
இந்த திருவாக்கியத்துக்கு உரையெழுதப் புகுந்த இமாம் பைலாவீ அவர்கள் ”ஏழு, எழுபதுஸ போன்ற எண்கள் பல என்ற பொருளில் அரபஜகளால் உபயாகிக்கப்படுவதுண்டு” என்று கூறினார்கள். பிரசித்தி பெற்ற லிஸானுல் அரபி என்னும் பொருள் களஞ்சியம் ”ஏழு, எழுபது, எழுநூறு போன்ற எண்களைக் குறிக்கும் அரபிச் சொற்கள் குர்ஆனிலும், ஹதீதிலும், அரபிகளின் பேச்சு வழக்கிலும் ”பல” என்ற பொருளில் உபயோகிக்கப்படுகிறது” என்று குறிப்பிடுகிறது.
”கூட்டத்திற்கு எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள்?” என்று ஒருவர் கேட்கிறார். பத்து, ஆயிரம் பேர் வந்திருப்பார்கள் என்று மற்றொருவர் பதிலளிக்கும்போது வந்திருந்த நபர்களின் தொகை பத்துமல்ல, ஆயிரமுமல்ல. நிறையப் பேர் வந்திருந்தார்கள் என்றுதானே பொருள்? இதே மாதிரியாகப் பொருள் கொண்ட இமாம் பக்ருத்தீன் ராஸி யவர்கள், ”இன் தஸ்தக்பிர் லஹீம் ஸப்ஈன மர்ரதன்” (நீர் அவர்களுக்காக எழுபது முறை மன்னிப்புக் கோரினாலும் எத்தனை முறை மன்னிப்புக் கோரினாலும்….” என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்றும், ஆகவே இப்னு உபை ஜனாஸாத் தொழுகையில் பெருமானார் கலந்து கொண்டதாகக் கூறுவது கற்பனையாகவே இருக்கும் என்று தங்களின் சீரிய திருமறை விளக்கமான ”தப்ஸீரிகபீரி”ல் வரைந்திருக்கிறார்கள்.
ஓர் எண் எவ்வளவு ஆராய்ச்சிக்கு இடம் கொடுத்திருக்கிறது என்பதை நாம் காணும்போது ஆச்சரியத்தால் திகைப்போம். அரபி வழக்கில் ”ஒரு ஏழு பேர் வந்திருப்பார்கள்” என்று சொன்னால் பலர் வந்திருப்பார்கள்: அதாவது ஏழுக்கு அதிகமானவர்கள் வந்திருப் பார்கள் என்று பொருள் கொள்ள முடியும். அப்படியானால் ”ஸப்அ, ஸமா வாத்தின்” என்ற திருமறையின் சொற்றொடரை ஏழு வானங்கள் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்பதில்லை: எத்தனையோ வானங்களைப் படைத்த இறைவன் இந்தப் படைப்புகளுக்கெல்லாம் ஆட்சியாளனாக இருக்கும் மனிதனுக்குத் தன் இறுதித் திருமறையை எப்படி அருள் மறையாக வழங்கியுள்ளான்.
”தித்திக்கும் திருமறை” கல்விக்கு உயிர் ஊட்டும் காவியம் – மாஹின் வெளியீடு