விடுபட்டுள்ளார் என்பது சரியா?
நுழைக்கப்பட்டார் என்பது சரியா?
இந்நபிமொழி யஹ்யா என்பவரின் மூலம்தான் அபூ தாவூத் உட்பட எல்லா நூற்களிலும் பதிவாகி உள்ளது. யஹ்யாவைத் தவிர வேறுயாரும் இச்செய்தியை அறிவிக்கவும் இல்லை. யஹ்யாவிடமிருந்து அவரின் ஏழு மாணவர்கள் இதனை அறிவிக்கிறார்கள்.
1. உஸ்மான் பின் அபீ ஷைபா. (அபூ தாவூத்)
2. அலி பின் அப்தில்லாஹ் அல் மதீனியி. (ஹாகிம்)
3. முஹம்மது பின் யூனுஸ். (ஃபழாயிலுஸ் ஸஹாபா)
4. இப்ராஹீம் பின் இஸ்ஹாக் அஜ்ஜுஹ்ரி. (ஹாகிம், பைஹகி, ஷுஃபல் ஈமான்)
5. அப்பாஸ் பின் அப்தில்லாஹ் அத்தர்ஃபகியி. (பைஹகி)
6. ஹமீது பின் மாலிக். (இப்னு கதீர்)
7. அபூ பக்கர். (அபீ யஃலா)
யஹ்யாவின் மூலம் அறிவிக்கும் அவரது ஏழு மாணவர்களில் முதல் மூவரின் அறிவிப்பில் ‘உஸ்மான்’ இடம் பெறவில்லை. அடுத்துள்ள நால்வரின் அறிவிப்பிலும் ‘உஸ்மான்’ இடம் பெறுகிறார். இவர்களின் அறிவிப்புகளில் எது சரியானது?
முந்திய மூவரின் அறிவிப்பில் உஸ்மான் விடுபட்டுள்ளார் என்பது சரியா? அல்லது மற்றுள்ள நால்வரின் அறிவிப்பில் உஸ்மான் நுழைக்கப்பட்டுள்ளார் என்பது சரியா? இதற்கான சரியான விடையை நாம் தெரிந்து கொண்டால், இந்த நபிமொழியில் ஏற்பட்ட குழப்பம் நீங்கிவிடும்.
விடுபட்டுள்ளார் என்பதே சரியானது
‘இந்நபிமொழியின் அறிவிப்பாளர் வரிசையில் உஸ்மான் என்பவரை சிலர் விட்டுட்டு சுருக்கமாக அறிவிக்கிறார்கள்’ என ஹதீஸ் மற்றும் அறிவிப்பாளர்கள் ஆய்வில் சிறந்து விளங்குபவரும், இந்த ஹதீஸை தனது நூலில் பதிவு செய்தவருமான மாபெரும் இமாம் பைஹகி அவர்கள் இந்த ஹதீஸின் கீழ் தெளிவான குறிப்புரை ஒன்றை எழுதியுள்ளார். இமாம் பைஹகியின் இந்த விளக்கம், முதல் மூவரின் அறிவிப்பிலும் உஸ்மான் விடுபட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்துவதோடு, ‘நுழைக்கப்பட்டார்’ என்ற கருத்து தவறானது என்பதையும் உணர்த்துகிறது.
அறிவிப்பளார் விடுபட்டுள்ளார் என்பதை அழ்ழியாவுல் மக்தஸி என்பரும் தனது நூலில் உறுதிப் படுத்தி உள்ளார்.
இந்நபி மொழியை தனது நூலில் பதிவு செய்த இமாம் பைஹகி அவர்கள், உஸ்மான் விடுபட்டுள்ளார் என்பதை உறுதி செய்யும் போது, மாற்றுக் கருத்துடையோர் தவறான கருத்து கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
‘சமகாலத்தில் அடுத்தடுத்த ஊரில் வாழ்ந்துள்ள ஜாஃபர் மற்றும், கைலான் இருவரும் சந்தித்துக் கொள்ள அதிக வாய்ப்பிருப்பதால், அதுவே இந்த ஹதீஸ் ஸஹீஹ் என்பதற்கு போதுமான சான்றாகும். ஹாகிமில் இடம் பெற்ற பலவீனமான அறிவிப்பின் இடையில் ஒருவர் நுழைக்கப்பட்டதால் அபூ தாவூதின் ஆதாரப்பூர்வமான அறிவிப்பில் அவர் விடுபட்டுள்ளார் என்று கூறுவது அர்த்தமற்ற வாதமாகும்’ என்று கூறி அபூ தாவூத்தில் இடம் பெற்ற ஹதீஸை நியாயப்படுத்த முனைகிறார்கள்.
இவ்வாறு கூறுவதுதான் அர்த்தமற்றதாகும். சமகாலத்தில் வாழ்ந்த இருவர் சந்தித்திருக்க சாத்தியம் இருப்பது போலவே, சந்தித்துக் கொள்ளாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு. ‘இருவருக்கும் சந்திப்பு இல்லை.’ என்பதை இந்த நபி மொழியைப் பதிவு செய்துள்ள மாபெரும் இமாம் பைஹகி அவர்களால் உறுதி செய்யப்பட்ட நிலையில், ‘சந்திப்பு உண்டு’ என்போர் தமது கருத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க போதுமான சான்றுகள் தரவேண்டும்.
மேலும், ஜாஃபர் என்பவரின் மாணவர் உஸ்மான், இவரின் மாணவர்தான் கைலான் என்பதை தஹ்தீபுல் கமால் என்ற நூலின் ஆசிரியர் உறுதிப்படுத்துகிறார். இவ்வரலாற்றுச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போதும், கைலான் என்பவர் உஸ்மானிடம் இருந்துதான் இந்த செய்தியை அறிவித்துள்ளார், ஜஃபரிடம் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்பது மேலும் உறுதியாகின்றது.
சமகாலத்தில் வாழ்ந்த இருவர் சந்தித்துக் கொள்ளாமல் இருப்பதற்கும் சாத்தியம் இருப்பதால்தான் இமாம் புஹாரி அவர்கள் இந்த நிபந்தனையை ஏற்கவில்லை. மாறாக இருவரும் ஒரு முறையாவது சந்தித்துள்ளார்கள் என்பது நிரூபணமாகி இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
மேலும், இந்த அறிவிப்பில் உள்ள கோளாறு, கைலான் என்பவரின் மூலம் ஏற்படவில்லை. மாறாக யஹ்யாவின் மாணவர்களின் மூலம் தான் ஏற்பட்டுள்ளது. அதாவது, கைலான் என்பவர் ‘ஜாஃபர்’ என்று கூறினாரா? அல்லது ‘உஸ்மான்’ என்று கூறினாரா? என்பதுதான் இங்கே ஏற்பட்ட குழப்பம். இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்த, யஹ்யா அல்லாத வேறொருவரின் மூலம் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டிருந்து, அத்தொடரில் ‘உஸ்மான்’ இடம் பெறாமல், ஜாஃபரிடமிருந்து கைலான் நேரிடையாக கேட்டுள்ளார் என்பதை சுட்டிக் காட்டி சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தால், அப்போது அபூ தாவூதின் அறிவிப்பில் எந்த ஒரு அறிவிப்பாளர் விடுபடவில்லை என்பதை ஏற்கலாம். அவ்வாறு நிரூபிக்காத வரை அபூ தாவூதின் அறிவிப்பில் ஒருவர் விடுபட்டுள்ளார் என்ற நம் கருத்து உறுதியானதாகும்.
பைஹகி அவர்கள் தெரிந்து கொண்ட இந்நுட்பமான காரணம் இந்த ஹதீஸை சரியென கூறியவர்களின் கவனத்திற்கு வரவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். இதனால், அபூ தாவூதில் பதிவு செய்யப்பட்டிருப்பதை மட்டும் பார்த்தவர்கள் அதனை ஸஹீஹ் என மேலோட்டமாக கூறிவிட்டனர்.
ஒரு ஹதீஸில் இடம் பெற்ற பலவீனமான அறிவிப்பாளரை நீக்கி விட்டு அறிவித்தால் அது ஸஹீஹான ஹதீஸாக மாறிவிடுமா?
உஸ்மான் பற்றிய விமர்சனங்கள்:
உஸ்மான் பின் உமைர் அபில் யக்ழான் அல் பஜலி, அல் கூஃபி என்பதே முழுப் பெயராகும்.
அல் மஜ்ரூஹீன் என்ற நூலில்:
‘தான் அறிவிப்பது என்ன?’ என அறியாமல் குழப்பம் அடைந்தவர்களில் ‘உஸ்மான்’ என்பவரும் ஒருவர். ஒரு நபி மொழியை மற்றொன்றோடு கலந்து, மாற்றி மாற்றி அறிவிப்பதால், இவர் அறிவிக்கும் எதையும் ஆதாரமாக ஏற்ககூடாது.
யஹ்யா பின் முயீன், அப்துர்ரஹ்மான் அல்மஹ்தி ஆகியோர் இவரின் மூலம் எந்த ஒரு செய்தியையும் அறிவிக்க மாட்டார்கள்.
ஷுஃபா என்பவர் கூறுகிறார்:
‘நான் ஒரு முறை உஸ்மானிடம் வந்தேன். ஒரு செய்தியை மற்றொன்றோடு மாற்றி கலந்து அறிவிப்பதைக் கண்டேன். அதனால், எதையும் எழுதிக் கொள்ளாமல் திரும்பி விட்டேன்.’
தக்ரீப் தஹ்தீப் எனும் நூலில்:
”…அவர் பலவீனமானவர், குழப்பம் அடைந்தவர், ஷியாக் கொள்கையில் மூழ்கிப்போனவர், அவர் ஒரு முதல்லிஸாகும். (ஹதீஸை கேட்காத ஒருவரிடமிருந்து கேட்டது போல் அறிவிப்பவர்.)
‘பலவீனமானவர்’ (தார குத்னி)
இமாம் புகாரி அவர்கள்:
மறுக்கப்படும் ஹதீஸை அறிவிப்பவர்
அறிவிப்பாளர் வரிசையில் உள்ள மற்றொரு கோளாறு
இதன் அறிவிப்பாளர் வரிசையில் மற்றொரு கோளாறும் உண்டு. அதாவது, ஜாஃபர் பின் இயாஸ் என்பவர் முஜாஹித்தின் மூலம் இதனை அறிவிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாஃபர் பின் இயாஸ் நம்பகமானவர், குறிப்பாக சயீத் பின் ஜுபைர் மூலம் அறிவிப்பவர்களில் மிக உறுதியானவர் என்பதில் எச்சந்தேகமும் இல்லை. எனினும், முஜாஹித் மூலம் அவர் அறிவிக்கும் செய்தி பலவீனமானதாகும். ஏனெனில், “ஜாஃபர் என்பவர் முஜாஹித் மற்றும் ஹபீப் பின் ஸாலிம் மூலம் அறிவிக்கும் செய்தி பலவீனமானதாகும். அவ்விருவரிடம் எதையும் கேட்கவில்லை” என (அறிவிப்பாளர்கள் ஆய்வில் சிறந்து விளங்கும்) ஷுஃபா அவர்கள் கூறியதாக யஹ்யா பின் சயீத் அறிவித்த செய்தியை, இமாம் அஹ்மத் பின் ஹன்பல் உறுதி செய்கிறார்.
“முஜாஹித்திடம் தஃப்ஸீர் குறித்த எச்செய்தியையும் ஜாஃபர் கேட்கவில்லை” என இமாம் ஷுஃபா கூறி யதாக யஹ்யா பின் முயீன் கூறுகிறார். (அபூதாவுதில் இடம் பெற்ற செய்தி தஃப்ஸீர் குறித்ததாகும் என்பது இங்கே கவனிக்கத் தக்கது.)
முஜாஹிதின் மூலம் ஜாஃபர் அறிவிக்கும் ஹதீஸ் பலவீனம் என்ற காரணத்தினால்தான் இமாம் முஸ்லிம் அவர்கள் தனது நூலில், ஒரு செய்தியைக் கூட பதிவு செய்யவில்லை என இப்னு ஹஜ்ர் அவர்கள் ஃபத்ஹுல் பாரியின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். (இமாம் புகாரி அவர்களும் இவரை குறை கூறியுள்ளார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.)
முஜாஹித்திடம் கேட்கவில்லை என்ற இமாம் ஷுஃபா அவர்களின் கருத்தை யஹ்யா பின் சயீத், யஹ்யா பின் முயீன், அஹ்மத் பின் ஹன்பல், இப்னு ஹஜர் இன்னும் பல அறிஞர்களும் உறுதிபடுத்துகின்றனர். (தஹ்தீபுத் தஹ்தீப், தஹதீபுல் கமால், அல்ஜர்ஹ் வத் தஃதீல், அல்காமில் ஃபில் ளுஃபா, மிஜானுல் இஃதிதால், அல் முக்னீ, அல் மராஸீல் ஆகிய நூற்களிலும், ஃபத்ஹுல் பாரியின் முன்னுரையிலும் இதனைக் காணலாம்.)
ஷுஃபாவின் ஆசிரியர்தான் ஜாஃபர் என்பவர். ஒரு மாணவர் தன் ஆசிரியரைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பார் என்ற அடிப்படையிலும், நிறையை விட குறையை முற்படுத்த வேண்டும் என்ற அடிப்படை யிலும், ஷுஃபா கூறியதை புறக்கணிக்க முடியாது.
இதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, முஜாஹித் அவர்களிடம் ஜாஃபர் கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டு வலுவாகிறது. எனவே, முஜாஹித் மூலம் ஜாஃபர் அறிவிப்பதாக அபூ தாவூதில் பதிவான நபி மொழி பலவீனம் என்ற வாதம் மேலும் வலுப்பெறுகிறது.
ஆக, இந்நபிமொழியின் அறிவிப்பாளர் வரிசையில் உஸ்மான் என்ற பலவீனமானவர் விடுபட்டுள்ளதாலும், முஜாஹித் மூலம் ஜாஃபர் அறிவிப்பது பலவீனமாகும் என்ற காரணத்தினாலும் அபூ தாவூதில் இடம் பெற்ற நபிமொழி பலவீனமானதாகும். பல்வேறு வகையில் பலவீனமாகவும், அர்த்தத்திலும் தங்களது கருத்திற்கு மாற்றமாக இருக்கும் இந்த ஹதீஸைத்தான் இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமையான ஜகாத்தைப் பற்றி தீர்மானிக்க சான்றாக இவர்கள் கூறிவருகிறார்கள்.
ஜாஃபர் பின் இயாஸ் பற்றிய சில நூற்களில் இடம் பெற்ற விமர்சனங்களின் அரபு மூலம் கீழே தரப்பட்டுள்ளது.
[930] جعفر بن إياس أبو بشر بن أبي وحشية بفتح الواو وسكون المهملة وكسر المعجمة وتثقيل التحتانية ثقة من أثبت الناس في سعيد بن جبير وضعفه شعبة في حبيب بن سالم وفي مجاهد من الخامسة مات سنة خمس وقيل ست وعشرين ع تقريب التهذيب ج1/ص139
1491 2524ت جعفر بن إياس ع أبو بشر الواسطي أحد الثقات أورده ابن عدي في كامله فأساء وهو بصري سكن واسط وحدث عن سعيد بن جبير ومجاهد وطبقتهما وكان من كبار العلماء معدود في التابعين فإنه روى عن عباد بن شرحبيل اليشكري أحد الصحابة حديثا في السنن سمعه وعنه شعبة وهشيم وجماعة وكان شعبة يضعف أحاديث أبي بشر عن حبيب بن سالم وقال أحمد أبو بشر أحب إلينا من المنهال بن عمرو وقال أبو حاتم وغيره ثقة وقال ابن القطان كان شعبة يضعف حديث أبي بشر عن مجاهد وقال لم يسمع منه شيئا وقال أبو طالب سألت أحمد عن حديث لشعبة عن أبي بشر سمع مجاهدا يحدث عن ابن عمر مرفوعا في التحيات فأنكره فقلت يرويه نصر بن علي الجهضمي عن أبيه عنه وقال الأثرم حدثنا أحمد حدثنا يحيى كان شعبة يضعف حديث أبي بشر عن مجاهد في الطير هو حديث للمنهال عن سعيد بن جبير عن ابن عمر قال ابن عدي وأبو بشر له غرائب وأرجو أنه لا بأس به (ميزان الإعتدال)
جعفر بن إياس أبو بشر بن أبي وحشية مشهور بكنيته من صغار التابعين وثقه بن معين والعجلي وأبو زرعة وأبو حاتم والنسائي وكان شعبة يقول إنه لم يسمع من مجاهد ولا من حبيب بن سالم وقال أحمد كان شعبة يضعف أحاديثه عن حبيب بن سالم وقال البرديجي هو من أثبت الناس في سعيد بن جبير وقال بن عدي أرجو أنه لا بأس به فتح الباري
7331 أبو بشر هو جعفر بن أبي وحشية ثقة ضعف (كتاب المغني للإمام الذهبي)
39 جعفر بن أبي وحشية أبو بشر
حدثنا محمد بن حمويه بن الحسن قال سمعت أبا طالب قال قال أحمد بن حنبل قال يحيى بن سعيد كان شعبة يضعف حديث أبي بشر عن مجاهد قال ما سمع منه شيئا ( المراسيل لابن أبي حاتم)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து பாடம் படித்த நபித் தோழர்கள் ஜகாத்தை ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும் என்றுதான் விளங்கி வைத்திருந்தார்கள். எந்த ஒரு நபித்தோழரும் ஒருபொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும் என்று சொல்லவில்லை ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்படி நடைமுறைப்படுத்தவில்லை. எனவே நமது மொத்த சொத்திற்கும் (நமது அத்தியாவசிய தேவைகள் போக) மீதமுள்ளதற்கு ஆண்டுதோறும் கணக்கிட்டு ஜகாத் வழங்குவதுதான் இஸ்லாமிய நடைமுறையாகும்.
”Jazaakallaahu khairan”
Shaik Dhawood
Mobile: +971 50 3017 495