[ 14 நூற்றாண்டு கால இஸ்லாமிய வரலாற்றில் எந்த அறிஞருக்கும் உதிக்காத புதிய ஞானம் இன்றைய அறிஞர்கள் சிலருக்கு தோன்றியது ஒரு விந்தைதான். “இக்கருத்து எந்தக் காலத்திலும் எடுபடவில்லை, புறக்கணிக்கப்பட்டு விட்டது” என்று அவர்களே ஒப்புக் கொள்கின்றனர். சத்தியத்திற்கு புறம்பான கருத்துகள் எக்காலத்திலும் எடுபடாது என்பது உலகறிந்த விஷயம்தானே. அசத்தியம் அழிந்தே தீரும் என்பது இறைவாக்கல்லவா?
எனினும், தங்களின் கருத்துக்கள் உண்மையானது போல பேசிவருகிறார்கள். முதலில் இவர்கள் என்ன கூறுகிறார்கள், தங்களின் கருத்தை நிலை நிறுத்த எடுத்து வைக்கும் சான்றுகள்தான்(?) என்ன என்பதை அறிந்து விட்டு, பின்பு அதற்கான பதில் என்ன? என்பதை தெரிந்துக் கொண்டு, பிறருக்கும் புரியவைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.]
அடிப்படைத் தூண் ஜகாத்
இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைத் தூண்களில் ஜகாத் ஒரு பலமான தூணாகும். 14 நூற்றாண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த ஜகாத் விஷயத்தில் எந்தக் காலத்திலும் எடுத்து வைக்கப்படாத சில காரசாரமான விவாதங்கள் சமீபகாலமாக தமிழ் இஸ்லாமிய சகோதரர்களிடையே நிலவி வருகிறது. குறிப்பாக
1) ஜகாத் வழங்கிய ஒரு பொருளுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?
2) கடமையான ஜகாத்தை எப்போது வழங்க வேண்டும்? அதற்கான கால வரம்பு என்ன?
3) “ஜகாத்” செல்வத்தை தூய்மைப் படுத்துகிறதா? மனிதனைத் தூய்மைப் படுத்துகிறதா?
4) தொடர்ந்து ஜகாத் வழங்குவது ஒருவனை பிச்சைக்காரனாக ஆக்கிவிடுமா?
இது போன்ற சில விஷயங்களில் நம் சகோதரர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். காரணம் புதிய கோணத்தில் மாறுபட்ட கருத்து தமிழகத்தில் மட்டும் ஒரு சிலரால் சமீப காலமாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
எனவே, ஜகாத்தின் சட்டங்களை உரிய சான்றுகளின் மூலம் தெளிவு படுத்த வேண்டிய அவசரமான அவசியம் ஏற்பட்டுள்ளது. இங்கு தரப்படும் தகவல், குர்ஆன் மற்றும் நபிமொழி ஆகியவற்றிலிருந்து பெறப்படும் ஆதாரத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். யாரின் சொந்தக் கருத்துக்கும் அறவே இடமளிக்க வில்லை. உண்மையை புரிந்து அதனை செயல்படுத்துபவர்களாகவும் தவறை இனம் கண்டு தவிர்ந்து நடப்பவர்களாகவும் நம்மை அல்லாஹ் ஆக்க வேண்டும்!
ஜகாத் என்றால் என்ன?
“ஜகாத்” என்ற வார்த்தைக்கு “வளர்ச்சி அடைதல்”, தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு.
(والزكاة في اللغة النماء يقال زكا الزرع إذا نما وترد أيضاً في المال, وترد بمعنى التطهير. وشرعاً بالإعتبارين معاً: أما بالأول فلأن إخراجها سبب للنماء في المال, أو بمعنى أن الأجر بسببها يكثر, أو بمعنى أن متعلقها الأموال ذات النماء كالتجارة والزراعة. دليل الأول ((مانقص مال من صدقة)) ولأنها يضاعف ثوابها كما جاء ((إن الله يربي الصدقة)) وأما بالثانى فلأنها طهرة للنفس من رذيلة البخل, وتطهير من الذنوب. فتح الباري شرح صحيح البخاري ج3/332)
“ஜகாத்” என்றால் அகராதியில் வளர்ச்சியடைதல் என்பதாகும்.
பயிர் வளர்ச்சியடைந்ததைக் குறிக்க “ஜகா அஜ்ஜரஉ” (பயிர் வளர்ச்சி அடைந்தது) என்று கூறப்படும்.
செல்வத்தில் ஏற்படும் வளர்ச்சியைக் குறிக்கவும் “ஜகா” எனும் வார்த்தை கையாளப்படுகிறது.
“தூய்மைப் படுத்துதல்” என்ற அர்த்தமும் அதற்கு உண்டு.
செல்வத்திலிருந்து குறிப்பிட்ட வகையினருக்கு வழங்கப்பட வேண்டிய குறிப்பிட்டளவு தொகையினை “ஜகாத்” என்று இஸ்லாம் பெயரிட்டிருப்பது இவ்விரு அர்த்தத்தின்படி மிகவும் பொருத்தமாக அமைகிறது. ஏனெனில், “ஜகாத்” வழங்குவது பொருளாதாரம் வளர்ச்சியடைய காரணமாக அமைகிறது. நன்மைகள் வளர காரணமாகிறது..
“தர்மம் செய்வதால் செல்வம் குறைந்து விடாது” (முஸ்லிம், திர்மிதி, அஹ்மத்) என்ற நபி மொழியும், “அல்லாஹ் தர்மங்களை வளர்க்கிறான்” என்று குர்ஆனில் வந்துள்ள செய்தியும் முறையே ஜகாத் வழங்குவதால் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படுகிறது, நன்மைகள் பன்மடங்காக கிடைக்கிறது என்பதை தெளிவு படுத்துகின்றன.
மேலும், ஜகாத் வழங்கும் மனிதன் கஞ்சத்தனம், பேராசை போன்ற இழிந்த துற்குணங்களின் கசடுகளிலிருந்து தூய்மைப்படுத்தப் படுகிறான். ஜகாத் வழங்குவதால் பல பாவங்களிலிருந்தும் அவன் பரிசுத்தமாக்கப்படுகிறான். (ஃபத்ஹுல் பாரி: 3/332)
“ஜகாத்” என்ற வார்த்தைக்கு மேலே குறிப்பிட்ட இரு அர்த்தங்களும் உண்டு என்பதை லிசானுல் அரப், காமுஸுல் முஹீத், அந்நிஹாயா போன்ற எல்லா அகராதி நூற்களிலும், ஜகாத்தைப் பற்றி விவரிக்கும் ஹதீஸ் மற்றும் மார்க்கச் சட்ட விளக்க நூற்களிலும் கூறப்பட்டிருப்பதை காணலாம்.
இவ்வாறு பல அர்த்தங்கள் உள்ள ஒரு வார்த்தைக்கு “தூய்மைப்படுத்துதல்” என்ற அர்த்தம் மட்டுமே இருப்பது போன்ற ஒரு பொய் தோற்றத்தை ஏற்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனவே,
“ஜகாத்” என்ற வார்த்தைக்கு “வளர்ச்சியடைதல்”, “தூய்மைப் படுத்துதல்” போன்ற பல்வேறு அர்த்தங்கள் இருப்பதை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
மீண்டும் “ஜகாத்” இல்லை என்போர் யார்?
“ஜகாத்” வழங்கிய ஒரு பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லை என சிலர் சமீப காலமாக பிரச்சாரம் செய்து வரும் இவர்களின் ஆதாரங்களை ஆய்வு செய்யும் முன் இந்த கருத்துடையவர்கள் யாரெல்லாம் 14 நூற்றாண்டு கால இஸ்லாமிய வரலாற்றில் இருந்து வந்துள்ளனர் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.
ஒரு முறை ஜகாத் வழங்கிவிட்ட எப்பொருளுக்கும் மீண்டும் ஜகாத் வழங்க வேண்டியதில்லை என்ற கருத்தை நாம் மட்டும் கூறிக் கொண்டிருக்கவில்லை. இதற்கு முன்னர் பலரும் கூறியுள்ளனர் என இப்னுஹஸ்மின் “அல் முஹல்லா” எனும் நூலை மேற்கோள் காட்டி தங்களுக்கு வலுச்சேர்க்கின்றனர்.
இக்கருத்தை கூறியவர்கள் அன்றும் இன்றும் சிறுபான்மையோராகத்தான் இருந்தனர். எந்தக் காலத்திலும் இக்கருத்து எடுபடவில்லை. எனினும் நாம் கூறுவதில் சத்தியம் இருக்கிறது” எனக் கூறி வருகிறார்கள்.
இது சரிதானா?
இக்கருத்துடையவர்கள் ஒரு காலத்திலும் இருந்ததில்லை. இவர்கள் மேற்கோள் காட்டிய நூலில் இதற்கு மாற்றமான கருத்தே பதிவு செய்யப்பட்டுள்ளது.
“ஜகாத் வழங்கிய பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லை என நாம் மட்டும் கூறவில்லை. எல்லாக்காலத்திலும் இக்கருத்துடையோர் சிறுபான்மையினராகவே இருந்து வந்தனர். இப்னு ஹஸ்ம் அவர்கள், முஹல்லா என்ற தனது நூலில் அவ்வாறு கூறியோரைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்”
இறைத்தூதர் மீதே பொய்யுரைத்தவர்கள், இப்னு ஹஸ்மின் மீது பொய்யுரைப்பதற்குத் தயங்குவார்களா என்ன? உண்மையில் இப்னு ஹஸ்ம், அப்படியொரு பட்டியல் எதையும் வெளியிடவில்லை என்பது மட்டுமல்ல உலகில் உள்ள எந்த நூலிலும் அவ்வாறு கூறப்படவில்லை. மாறாக, திரும்பத் திரும்ப ஜகாத் வழங்க வேண்டும் என்பதில் யாரும் எந்தக் காலத்திலும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை என்றுதான் கூறியுள்ளார். அவர் கூறிய செய்தியை அவரது நூலிலிருந்து அப்படியே எடுத்துத் தருகிறோம்.
والزكاة تتكرر في كل سنة في الإبل, والبقر, والغنم, والذهب والفضة, بخلاف البر والشعير والتمر فإن هذه الأصناف إذا زكيت فلا زكاة فيها أبداً……..وهذا لا خلاف فيه من أحد…….. (المحلى:ج6/23)
“ஒட்டகம், மாடு, ஆடு, தங்கம், வெள்ளி ஆகியவற்றில் ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் ஜகாத் கடமையாகும். தீட்டிய கோதுமை, தீட்டாத கோதுமை, பேரீச்சம் பழம் ஆகிய விளைபொருளில் ஒரு முறை ஜகாத் வழங்கி விட்டால் பின்பு அவற்றிற்கு எப்போதும் ஜகாத் இல்லை. மேற்கூறிய இக்கருத்தில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.” (அல் முஹல்லா பாகம்: 6/23).
இப்னு ஹஸ்ம் காலம் வரையிலும் மாற்றுக் கருத்துடையோர் யாரும் இருந்ததில்லை. அவர் காலத்திற்குப் பிறகும் அவ்வாறு கூறுவோர் இவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதே உண்மை.
திரித்துக் கூறப்பட்ட இப்னு ஹஸ்மின் கூற்று
“மேய்ந்து திரியாத கால்நடை, அணியும் நகைகள் ஆகிய இரண்டுக்கு மட்டும் ஒரு தடவை ஜகாத் வழங்கி விட்டால், அதற்கு ஜகாத் இல்லை” எனக் கூறும் சிலருக்கு அதனை மறுக்கும் விதமாக இப்னு ஹஸ்ம் பின்வரும் கேள்விக் கணையையும் அவர்களை நோக்கி வீசுகிறார்.
இப்னு ஹஸ்மின் கேள்விக்கணை!
قال أبو محمد( إبن حزم)… قد ثبت أن رسول الله كان يبعث المصدقين في كل عام لزكاة الإبل, والبقر, والغنم. هذا أمر منقول نقل الكافة. . فخروج المصدقين في كل عام موجب أخذ الزكاة في كل عام بيقين. فإذا لاشك في ذلك, فتخصيص بعض ما وجبت فيه الزكاة عاماً بأن لايأخذ المصدق الزكاة عاماً ثانياً تخصيص النص, وقول بلا برهان. (المحلى ج6/28ص)
“ஒட்டகம், மாடு, ஆடு ஆகியவற்றின் ஜகாத்தை வசூலிக்க நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள் என்ற செய்தி போதுமான சான்றுகளோடு கூறப்பட்டு அது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜகாத் வசூலிப்போரை, ஒவ்வொரு வருடமும் அனுப்பி வைப்பது (கடந்த காலங்களில் ஜகாத் வழங்கப்பட்டது உட்பட அனைத்துப் பொருட்களிலும்) ஜகாத் வசூலிப்பது கடமை என்பதையே தெளிவு படுத்துகிறது. இந்நிலையில், முதல் ஆண்டில் ஜகாத் வாங்கியவற்றில் அடுத்த ஆண்டு ஜகாத் வாங்குதல் இல்லை என்பது சான்றில்லாத கூற்றாகும். (இக்கூற்றினை ஏற்க இயலாது.) (அல்முஹல்லா பாகம்:6 பக்கம்:28)
ஒவ்வொரு வருடமும் ஜகாத் வசூலிப்போரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுப்பி வைக்கும் போது, கடந்த ஆண்டு ஜகாத் வாங்கி விட்டதற்கு திரும்ப ஜகாத் வாங்காதீர்கள் எனக் கூறி அனுப்பியதாக எந்தத் தகவலும் இல்லை. எனவே ஒவ்வொரு வருடமும் ஏற்கனவே ஜகாத் வழங்கப்பட்டது, வழங்கப்படாதது எனப் பாகுபாடில்லாமல் எல்லாவற்றுக்கும் ஜகாத் வசூலிக்கப்பட்டுள்ளது என்றே நம்ப வேண்டும். இதற்கு மாற்றமாக யாராவது கூறினால் அதற்கான சான்றினைச் சமர்ப்பிக்க வேண்டும் என இப்னு ஹஸ்ம் கேட்பது அவர்கள் காதில் விழுகிறதோ இல்லையோ, நமக்கு நன்றாகவே கேட்கிறது.
தீனி போட்டு வளர்க்கப்படும் கால் நடை, அணியும் நகைகள் ஆகிய இரண்டு பொருள்களுக்கு மட்டும் ஆயுளில் ஒரு தடவை ஜகாத் வழங்கினால் போதும் என்ற இந்தச் செய்தியைத்தான் திரித்து ஜகாத் வழங்கிய ஒரு பொருளுக்கு திரும்ப ஜகாத் இல்லை என்று கூறுவோர் எல்லாக் காலத்திலும் இருந்து வந்துள்ளனர் என பேசி வருகின்றனர். இவர்கள் கூறுவது போல் அந்நூலில் இருந்தால் அதன் அரபி வாசகத்துடன் எழுதி வெளியிடத் தயாரா?
14 நூற்றாண்டு கால இஸ்லாமிய வரலாற்றில் எந்த அறிஞருக்கும் உதிக்காத புதிய ஞானம் இன்றைய அறிஞர்கள் சிலருக்கு தோன்றியது ஒரு விந்தைதான். “இக்கருத்து எந்தக் காலத்திலும் எடுபடவில்லை, புறக்கணிக்கப்பட்டு விட்டது” என்று அவர்களே ஒப்புக் கொள்கின்றனர். சத்தியத்திற்கு புறம்பான கருத்துகள் எக்காலத்திலும் எடுபடாது என்பது உலகறிந்த விஷயம்தானே. அசத்தியம் அழிந்தே தீரும் என்பது இறைவாக்கல்லவா?
எனினும், தங்களின் கருத்துக்கள் உண்மையானது போல பேசிவருகிறார்கள். முதலில் இவர்கள் என்ன கூறுகிறார்கள், தங்களின் கருத்தை நிலை நிறுத்த எடுத்து வைக்கும் சான்றுகள்தான்(?) என்ன என்பதை அறிந்து விட்டு, பின்பு அதற்கான பதில் என்ன? என்பதை தெரிந்துக் கொண்டு, பிறருக்கும் புரியவைப்போம். சத்தியத்தை நம் அனைவருக்கும் புரிய வைத்து அதனைப் பின்பற்றி நடப்பவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக!
கட்டுரையின் தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்.