”ஈமான்” எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன?”
”இஸ்லாம்” (அடிபணிதல்) என்றால் என்ன?”
”இஹ்ஸான்” (நன்மை புரிதல்) என்றால் என்ன?”
”மறுமை (நாள்) எப்போது வரும்?”
இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருநாள் மக்கள் முன்வந்திருந்தார்கள். அப்போது ஒருவர் (வாகனமேதுமின்றி) நடந்துவந்து, ”இறைத்தூதர் அவர்களே! ”ஈமான்” எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன?” என்று கேட்டார்.
அவர்கள், ”ஈமான்” எனும் இறைநம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
”இறைத்தூதர் அவர்களே!””இஸ்லாம்” (அடிபணிதல்) என்றால் என்ன?” என்று அவர் கேட்டார். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான ”ஸக்காத்” தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்” என்றார்கள்.
”இறைத்தூதர் அவர்களே! ”இஹ்ஸான்” (நன்மை புரிதல் என்றால் என்ன?” என்று கேட்டார். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் வணங்குவதாகும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கிறான் (எனும் உணர்வுடன் அவனை வணங்குவதாகும்.)” என்று பதிலளித்தார்கள்.
”இறைத்தூதர் அவர்களே! மறுமை (நாள்) எப்போது வரும்?” என்று கேட்க,
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்,) கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்க மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுகிறேன்:
ஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும்.
காலில் செருப்பணியாத, நிர்வாணமானவர்கள் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும்.
(மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும்.
”நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கிறான். இன்னும், அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகிறான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன்” (எனும் 31:34 வது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.) பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார்.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்து வாருங்கள்!” என்று கூறினார்கள். மக்கள் அம்மனிதரைத் திரும்ப அழைத்து வரச் சென்றார்கள். எங்கேயும் காணவில்லை. பின்னர், நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக அவர் வந்திருந்தார்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) (ரலி), ஆதாரம் :புகாரி)
முஃமின்களே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்வீர்களானால், உங்களுக்கு (நன்மை-தீமையைப்) பகுத்தறியும் தன்மையை அவன் அளித்து, உங்களுடைய தீமைகளை உங்களை விட்டும் அகற்றி, இன்னும் உங்க(ளுடைய பாவங்க)ளை மன்னிப்பான் (ஏனெனில்) அல்லாஹ் மகத்தான கருணை உடையவன். (குர்ஆன் 8:29)
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, ”நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (2:156)