MUST READ
பி.எஸ்.அலாவுதீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி
இஸ்லாம்
மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!
அவனே படைத்தான். ஒழுங்குற அமைத்தான்.
அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான். (அல்குர்ஆன் 87:1,2,3)
இந்த வசனங்களில் படைப்பினங்களைப் பற்றிய ஒரு நியதியை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
அனைத்துப் பொருட்களையும் படைத்தான்; பின்னர் அவற்றை ஒழுங்குபடுத்தினான்; அவற்றின் தொழில்நுட்பத்தை முழுமைப்படுத்தினான். அதற்குப் பொருத்தமான, நிறைவான எல்லையை அவை அடையும்படிச் செய்தான்.
ஒவ்வொரு படைப்புக்கும் அதனதன் வழியையும் அவற்றின் பணியையும் அவற்றின் இலக்கையும் நிர்ணயித்தான். பின்னர் அவற்றை எதற்காகப் படைத்தானோ அந்தக் குறிக்கோளை அவை அடைவதற்கான வழியை அவற்றிற்குக் காட்டினான். அவை உருவானதற்கான நோக்கத்தை அவை உணரும்படிச் செய்தான். அவை வாழும் காலம் வரை அவற்றுக்கு பொருத்தமானவற்றையும் தேவையானவற்றையும் நிர்ணயம் செய்து அவற்றை அடையும் வழியைக் காட்டினான்.
இந்த நியதி இப்பிரபஞ்சத்தின் எல்லாப் பொருட்களிலும் காணப்படுகின்றது. அவை எவ்வளவு பெரிய பொருளாயினும் சரி! மிகச் சிறிய ஒன்றாயினும் சரி! அற்பமான பொருளானாலும் சரி! பிரமாண்டமான பொருளானாலும் சரி! இப்பேரண்டத்தின் ஒவ்வொரு பொருளுமே மிகுந்த தொழில் நுட்பத்துடன் சீராக அமைக்கப்பட்டு முழுமையாக வடிவமைக்கப் பட்டுள்ளன.
அதனதன் தொழிலை நிறைவேற்றுவதற்கு ஏற்பவே ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளன. அவை இருப்பதற்கு ஓர் எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த எல்லையை அவை சென்றடைவதற்கு மிக எளிதான வழியும் மார்க்கமும் அவற்றுக்கு இலகுவாக்கப்பட்டுள்ளன. இப்படி இப்பிரபஞ்சத்தின் எல்லாப் பொருட்களுமே முழுமையாக சீர் செய்யப்பட்டுத் தான் திகழ்கின்றன.
அவை இணைக்கப்படுவதற்கு முன்னர், தனிமங்களாக இருந்த போது, தனிமங்களின் பணிகளை நிறைவேற்ற வழிவகைகள் இலகுவாக்கப்பட்டிருந்தது. அதைப் போன்று அவை இணைக்கப்பட்டு, சேர்மங்களாக்கப்பட்ட போதும் அந்தச் சேர்மங்களின் பணிகளையும் செவ்வனே நிறைவேற்றுவதற்குரிய வழிகள் சுலபமாக்கப்பட்டுள்ளன.
மிகப் பெரும் சூரிய மண்டலம் அதன் பிற கோள்களுடன் எப்படிப்பட்ட அமைப்புடனும், சீருடனும் இணைக்கப்பட்டு ஓர் ஒழுங்குடன் பணியாற்றிக் கொண்டிருக்கின்றதோ அதே போன்ற அமைப்பும், சமச் சீரான நிலையும் ஒரு தனித்த அணுவிலும் காணப்படுகின்றது. அந்த அணுவின் மின்னாற்றலுக்கு இடையிலும் புரோட்டான் (நேர் மின்மம்), எலக்ட்ரான் (எதிர் மின்மம்) ஆகியவற்றுக்கிடையிலும் காணப்படுகின்றது.
பல உயிரணுக்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டு, முறையாக வடிவமைப்பட்டுள்ள ஓர் உயிருள்ள படைப்பு எப்படிப்பட்ட ஒழுங்குடன் செயல்படுகின்றதோ அதைப் போன்றே ஒரு தன்னந்தனியான உயிரணுவும், முழுமையான வடிவமைப்புடனும் செயல் திறனுடனும் தனது பணியைச் செவ்வனே நிறைவேற்றுவதற்குரிய முன்னேற்பாடுகளுடன் திகழ்கின்றது.
ஒரு தன்னந்தனியான அணுவுக்கும், மிகப் பெரிய சூரிய மண்டலமாக அது உருவாவதற்கும் மத்தியில் எத்தனையோ படித்தரங்கள் இருக்கின்றன. அதே போல் ஒரேயொரு உயிரணுவுக்கும், பல உயிரணுக்கள் இணைந்து உருவாகும் ஓர் உயிர்ப் படைப்புக்கும் மத்தியில் எத்தனையோ படித்தரங்கள் இருக்கின்றன. அத்தனை படித்தரங்களின் போதும் அவை முறையோடும், சீரோடும் அமைக்கப்பட்டிருப்பதையும், தனித்தனியாக அவை இருந்த போது காணப்பட்ட அந்த ஒழுங்கமைவு அத்தனை படித்தரங்களிலும் இருப்பதையும் நாம் காணலாம்.
அதைப் போன்றே அவற்றின் அமைப்பு, இயக்கம், விதி ஆகிய அனைத்திலுமே இதே நியதியை நாம் கடைசி வரை காணலாம். இந்த ஆழமான பேருண்மைக்கு இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே நிதர்சனமான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.
இந்தப் பிரபஞ்சத்தின் தாளம் தவறாத சுருதி லயத்தைச் செவிமடுக்கும் ஒவ்வொரு மனிதனின் மனதிற்கும் இந்த உண்மைகள் ஒட்டு மொத்தமாகப் புலப்படும். திறந்த மனதுடன் இந்தப் பிரபஞ்சத்தின் முற்ற வெளிகளில் நடமாடும் ஒவ்வொரு பொருட்களையும் நாம் ஆராயும் போது இந்தப் பேருண்மைகள் பளிச்சென்று புலப்படும். இந்த உள்ளுணர்வு எல்லாக் கால கட்டத்தின் போதும் வாழ்கின்ற மனிதனுக்கும், முயன்று அறிவு பெற நினைக்கும் மனிதர்கள் அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று தான்.
எப்போது ஒரு மனிதன் தனது இதய வாசல்கள் அனைத்தையும் திறந்து வைத்துக் கொண்டு. அவனது நரம்புகளை எல்லாம் விழிப்புடன் வைத்துக் கொண்டு இப்பிரபஞ்சத்தின் இயக்கத்தைச் செவிமடுக்க முயல்கிறானோ அப்போது அவன், அதன் தாளம் தவறாத சுருதியைக் கேட்கவே செய்வான்.
மனிதன் இப்பிரபஞ்சத்தை நோக்கும் முதல் நோக்கில் அவனுக்கு ஏற்படும் அந்த உள்ளுணர்வை, தனித்தனி உதாரணங்கள் மூலம் அவன் அறிய முயலும் போதும், நுட்பமாக ஆராய முற்படும் போதும் தெளிவாக அவனால் புரிந்து கொள்ள முடியும்.
அறிவு இறை நம்பிக்கையைத் தூண்டுகின்றது
நியூயார்க் கல்விச் சங்கத்தின் தலைவர் கிரேஸி மோரிஸன் என்பார், ”மனிதன் தனித்து இயங்க முடியாது” என்று ஒரு நூல் எழுதியிருக்கின்றார். அந்நூலுக்கு விண்ணியல் ஆய்வாளர் பேராசிரியர் மஹ்மூது ஸாலிஹ் என்பார், ”அறிவு இறை நம்பிக்கையைத் தூண்டுகின்றது” என்ற தலைப்பில் ஒரு விரிவுரை எழுதியிருக்கின்றார். அந்த நூலில் அவர் எழுதியுள்ள கருத்துக்களைப் பார்ப்போம்.
வழிதவறாத பறவைகள்
ஆர்க்டிக் பிரதேசத்தில் டெர்ன் என்றழைக்கப்படும் நீள மூக்குடைய கடற்பறவை ஒன்று உள்ளது. இந்தப் பறவை, கோடை காலத்தில் ஆர்க்டிக் பிரதேசத்திலும், குளிர் காலத்தில் அண்டார்டிகா பகுதிக்கும் செல்கின்றது. இதற்காக இந்தப் பறவை பறந்து செல்லும் தூரம் 22,000 மைல்கள் ஆகும். (முத்தாரம் 01.07.1984, பக்கம் 7)
பறவைகளுக்கு, அவை தமது இருப்பிடங்களை விட்டு எவ்வளவு தூரத்துக்குப் பறந்து சென்றாலும் மீண்டும் அவற்றின் இருப்பிடங்களுக்கே திரும்பி வந்து விடுகின்ற இயல்புணர்ச்சி உண்டு. நம் வீட்டு வாசலில் கூடு கட்டி வாழும் தொண்டைப் பகுதி புடைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு வகைச் சிட்டுக்குருவி இலையுதிர் காலத்தில் தென்திசை நோக்கி புறப்பட்டுச் செல்கின்றது. அவை எத்தனை ஆயிரம் மைல்கள் தூரம் சென்றாலும் அடுத்து வரும் வசந்த காலத்தில் தமது கூடுகளுக்குத் திரும்பி விடுகின்றன.
அதே போன்று அமெரிக்க நாட்டுப் பறவைகளில் பெரும்பாலானவை செப்டம்பர் மாதத்தில் தென் திசை நோக்கி, கூட்டம் கூட்டமாகப் பறந்து போய் விடுகின்றன. கடல் கடந்து, பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அவை பறந்து போய் விடுகின்றன. ஆயினும் அவை தமது இருப்பிடங்களுக்குத் திரும்பி வரும் போது வழியைத் தவற விடுவதில்லை. திரும்பி வருவதற்குப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன.
செய்தி கொண்டு செல்லும் புறாக்கள் அவற்றுக்குப் பரிச்சயமில்லாத புதிய சப்தங்களைக் கேட்டு மிரண்டு தடுமாறிப் போனாலும், பயம் தெளிந்ததும் தமது இருப்பிடங்களை நோக்கி மறக்காமல் வந்து விடுகின்றன. காற்று வீசும் போது மரங்களிலும், கூடுகளிலும் பட்டு வரும் வாசனைகளை வைத்துக் கொண்டு தனது கூட்டுக்குத் திரும்பி விடும் தேனீயானது, காற்று வீசாமல் சலனமற்று இருக்கும் போதும் தனது கூட்டைத் தேடிக் கண்டுபிடித்து வந்து சேர்ந்து விடுகின்றது.
எவ்வளவு நெடுந்தூரம் சென்றாலும் தனது இருப்பிடத்திற்குத் திரும்பி விடும் இந்த இயல்புணர்ச்சி மனிதனுக்குள் மிகப் பலவீனமாகவே காணப்படுகின்றது. ஆயினும் அவன் திசையறி கருவி போன்ற கருவிகளால் தனது குறைவான ஆற்றலை முழுமைப்படுத்திக் கொள்கிறான். பறவைகள், பிராணிகளுக்கு இயற்கையாக அமைந்திருக்கும் அந்த இயல்புணர்ச்சியின் தேவையை மனிதன் தனது பகுத்தறிவின் மூலம் ஈடு செய்து கொள்கின்றான்.
பார்வைப் புலனும் பகுத்தறிவும்
சில நுண்ணிய புழுப் பூச்சியினங்களுக்கு, மைக்ரோஸ்கோப் மூலம் மட்டுமே காணத்தக்க சின்னஞ்சிறிய கண்கள் இருக்கின்றன. அந்தக் கண்களின் ஆற்றலையும் வரம்பையும் நம்மால் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியாது. பருந்து, கழுகு போன்ற பறவைகளுக்கு, தொலைநோக்கி (டெலஸ்கோப்) போன்று ஒரு பொருளை அண்மையிலும், உருப் பெருக்கியும் காட்டும் கண்கள் இருக்கின்றன.
இங்கேயும் தனது இயந்திர சாதனங்களால் மனிதன் அவற்றை மிகைத்து விடுவதைப் பார்க்க முடிகின்றது. அவனுக்கு இருக்கின்ற பார்க்கும் சக்தியைப் போன்று இருபது லட்சம் மடங்கு அதிகமான சக்தி இருந்தால் மட்டுமே பார்க்க முடியும் அளவுக்குத் தொலைவில் இருக்கின்ற நட்சத்திரங்களைக் கூட டெலஸ்கோப் மூலம் அவனால் பார்க்க முடிகின்றது. மேலும் அவன் தனது மின்னியல் நுண்ணோக்காடி மூலம் சாதாரணமாகப் பார்க்க முடியாத நுண்ணிய பாக்டீரியாக்களையும் பார்க்கிறான்.
நமது கிழட்டுக் குதிரையை இருட்டு நேரத்தில் எங்காவது கொண்டு போய் விட்டு விட்டு நாம் மட்டும் திரும்பி வந்து விடுவோமானால், வழியில் எவ்வளவு கும்மிருட்டு நிலவிய போதும் அது வழியை அறிந்து நமது வீட்டுக்கு வந்து சேர்ந்து விடுகின்றது. எவ்வளவு வெளிச்சமற்ற நிலையிலும் அதனால் பார்க்க முடிகின்றது. வெளிச்சமே இல்லாவிட்டாலும் பாதையிலும், அதன் இரு மருங்கிலும் காணப்படும் வெப்ப அளவின் மாற்றத்தை அது அனுமானித்துக் கொள்கின்றது. வழியில் காணப்படும் மிகக் கடினமான வெப்பத்தின் ஒளிக்கதிர்களால் மிகக் குறைந்த அளவுக்கே உணர்ச்சிக்கு ஆளாகும் தனது கண்களால் அது எப்படியோ வழியை அறிந்து, வந்து சேர்ந்து விடுகின்றது.
அது போன்று எவ்வளவு இருட்டாக இருந்தாலும், எங்கோ செடி கொடிகளுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கின்ற எலியின் உடலில் காணப்படும் கதகதப்பான வெப்பத்தை அறிந்து ஆந்தை, எலியை வேட்டையாடி விடுகின்றது. மனிதர்களாகிய நாம் இருட்டில் ஒரு பொருளைக் காண்பதற்கு ஆற்றல் இல்லாதவர்களாக இருந்தாலும் நமது பகுத்தறிவால் கண்டுபிடித்த மின்சார விளக்குகள் மூலம் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சி இரவையே பகலாக்கி விடுகின்றோம்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு ”Next” ஐ ‘‘கிளிக்” செய்யவும்.