தேனீக்களின் கூட்டு வாழ்க்கை
தேனீக்களில் பாட்டாளித் தேனீ, ஆண் தேனீ, ராணித் தேனீ என்று மூன்று வகைகள் இருக்கின்றன. பெண் தேனீக்களில் கருவுறாதவை பாட்டாளித் தேனீக்களாகவும், கருவுற்றவை ராணித் தேனீக்களாகவும் கருதப்படுகின்றன.
அந்தப் பாட்டாளித் தேனீக்கள் இனப் பெருக்கத்திற்காகப் பலதரப்பட்ட பருமன்களிலும், அளவுகளிலும் தேன் கூட்டில் பல அறைகளை உருவாக்குகின்றன. அவற்றில் அளவில் சிறியதான அறைகளைத் தொழிலாளித் தேனீக்களுக்கும், அவற்றை விடப் பெரிய அறைகளை ஆண் தேனீக்களுக்கும், கருவுற்றிருக்கும் ராணித் தேனீக்களுக்கு ஒரு பிரத்தியேகமான அறையும் ஆயத்தப்படுத்துகின்றன.
ராணித்தேனீ கருவுறாத முட்டைகளை ஆண் தேனீக்களின் அறைகளிலும், சினைப்படுத்தப்பட்ட முட்டைகளை பெண் தேனீக்களின் அறைகளிலும் எதிர்கால ராணித் தேனீக்களின் அறைகளிலும் இடுகின்றது. உழைக்கும் தேனீக்களான அந்தப் பெண் தேனீக்கள் அந்த முட்டையிலிருந்து புது இனப்பெருக்கம் ஏற்படும் வரை நீண்ட காலம் அவற்றைக் கவனத்துடன் காக்கின்றன.முட்டைகளிலிருந்து வெளிப்படும் சின்னஞ்சிறு தேனீக்களுக்குத் தேனுடன் மகரந்தத் தூளைச் சேர்த்து மென்று எளிதில் செரிப்பதற்கேற்ற உணவாக்கி அவற்றுக்கு ஊட்டுகின்றன. அவை ஆண், பெண் என இனம் மாறும் அந்தக் குறிப்பிட்ட காலம் வரை தேனையும் மகரந்தத் தூளையுமே உணவாக்கி வளர்க்கின்றன. அவ்வாறு இன மலர்ச்சி ஏற்பட்டதும் அந்தப் பணியை நிறுத்திக் கொள்கின்றன. அவற்றில் பெண் தேனீக்களாக மாறுபவை இப்போது உழைக்கும் பாட்டாளித் தேனீக்களாக மாறி விடுகின்றன.
ராணித் தேனீயின் பிரத்தியேக அறையில் இருக்கின்ற பெண் தேனீக்களுக்கு மட்டும் தான் மெல்லப்பட்டு செரிப்பதற்கேற்றவாறு பக்குவப்படுத்தப்பட்ட உணவு ஊட்டப்படுகின்றது. இவ்வாறு பிரத்தியேகமாகக் கவனிக்கப்படும் அந்தப் பெண் தேனீக்கள் மட்டும் தான் ராணித் தேனீக்களாக மாறும் வாய்ப்பைப் பெறுகின்றன. அவை மட்டும் தான் சினையூட்டப்பட்ட முட்டைகளையும் ஈனுகின்றன. அவ்வாறு தொடர்ந்து சினையூட்டப்பட்ட முட்டைகளை ஈனும் பணி சில குறிப்பிட்ட அறைகளில் மாத்திரம் தான் நிகழ்கின்றன.
எப்படி செரிப்பதற்கேற்றவாறு உணவை மாற்றித் தரும் அந்த ஆச்சரியமான பணியைச் சில குறிப்பிட்ட தேனீக்களே ஏற்றிருக்கின்றனவோ அதே போல சில குறிப்பிட்ட முட்டைகளிலிருந்து மட்டும் தான் இனப் பெருக்கமும் நிகழ்கின்றது. உண்மையில் இது நமது ஆராய்ச்சிக்கும் தனிச் சிறப்பியல்பைப் பற்றிய ஆய்வுக்கும் உரிய ஒன்றாகத் திகழ்கின்றது.
அந்த உணவின் விளைவுகளில் எப்படி இந்த அதிசயம் நிகழ்கின்றது என்பதைக் கண்டுபிடித்து அதை நமது ஆராய்ச்சியுடன் பொருந்த வைத்துப் பார்ப்பதும் அவசியமாகப் படுகின்றது.
இந்த மாற்றங்கள் ஒரு பிரத்தியேகமான முறையில் தேனீக்களின் கூட்டு வாழ்க்கையைச் சுற்றி வியாபித்துக் கொண்டிருக்கின்றன. தேனீ என்ற ஒன்று உருவாவதற்கோ, உருவான பின் அது உயிர் வாழ்வதற்கோ இந்தச் சாமர்த்தியமும், அறிவும் அவசியமில்லை என்றாலும் அவற்றின் கூட்டு வாழ்க்கைக்கு அவை அவசியமாகப்படுகின்றன.
இதன்படிப் பார்த்தால், சில குறிப்பிட்ட பாத்திரங்களில் மட்டும் சினைப் பெருக்கத்திற்கு ஏற்றவாறு உணவை நிலை மாற்றும் அந்தக் கலையில் தேனீ, மனிதனை வென்று விடுகின்றது என்றே தோன்றுகின்றது.
நாயின் மோப்ப சக்தி
நாய் அதற்கு வழங்கப் பட்டிருக்கும் ஒழுகும் மூக்கினால், உயிர்ப் பிராணிகளை மோப்பம் பிடித்து அறியும் ஆற்றல் பெற்றிருக்கின்றது. அதனுடைய குறைந்த அளவிலான மோப்ப சக்தியை வலிமைப்படுத்திக் கொள்வதற்கு மனிதனிடமிருப்பது போன்ற புதுமைக் கருவிகள் எதுவும் அதனிடம் இல்லை. இருப்பினும் நம்முடைய சாதாரண நுகரும் சக்தியால் அறிய முடியாத, மைக்ரோஸ்கோப் மூலமே காண முடியுமளவுக்கு நுண்ணிய அணுக்களையும் நாயினால் உணர முடிகின்றது.
நம்மைத் தவிர எல்லாப் பிராணிகளாலும் நமது அதிர்வு மண்டலங்களுக்கு அப்பாலிருந்து வரும் பெரும்பாலான ஒலிகளைச் செவியுற முடிகின்றது. நமது கேட்கும் சக்தியை வென்று விடத்தக்க அவ்வளவு நுண்ணிய செவிப்புலன்கள் அவற்றுக்கு இருக்கின்றன. ஆயினும் இன்று மனிதனால் கண்டுபிடிப்புச் சாதனங்கள் மூலம் பல மைல்களுக்கு அப்பால் பறந்து போகும் ஒரு கொசுவின் ஒலியைக் கூடக் கேட்க முடிகின்றது. மேலும் அவனால் தனது கருவிகள் மூலம் சூரியனின் ஊதாக் கதிர்களின் வீழ்ச்சி ஒலியைக் கூட பதிவு செய்து விட முடிகின்றது.
ஒரு வகை நீர்ச்சிலந்தி தனது சிலந்தி வலை நூலால் பலூன் போன்ற வடிவத்தில் ஒரு கூடு கட்டுகின்றது. அதைத் தண்ணீருக்கு அடியிலுள்ள ஏதேனும் ஒரு பொருளில் மாட்டி வைத்து விட்டுப் பிறகு வெளியே வந்து தனது சாமர்த்தியத்தால் காற்றுக் குமிழிகளை உண்டாக்கி அவற்றைத் தனது உடலிலுள்ள ரோமங்களில் திரட்டிக் கொண்டு தண்ணீருக்குள் எடுத்துச் சென்று அவற்றை அந்தக் கூட்டுக்குள் அவிழ்த்து விடுகின்றது.
இப்படியே பலமுறை முயன்று அந்தக் குமிழிகளால் அந்தக் கூட்டை ஊத வைக்கின்றது. ஊதிய பலூனைப் போன்று அது மாறியதும் அதனுள் குஞ்சு பொறித்து அவற்றை வளர்க்கின்றது. இங்கே அதனுடைய வலை நெய்யும் திறமையையும் அதனுடைய பொறியியல் திறமை மற்றும் வானியல் ஆய்வு ஆகியவற்றையும் கண்டு வியக்கின்றோம்.
பிறந்த இடம் நோக்கி…
வஞ்சிர மீன்
ஆற்றிலே பிறக்கின்ற சின்னஞ்சிறு வஞ்சிர மீன், ஆற்றை விட்டு வெளியேறி கடலில் பல ஆண்டு காலம் நீந்தித் திரிந்து விட்டுப் பிறகு அது பிறந்த அந்தக் குறிப்பிட்ட ஆற்றுப் பகுதிக்குத் திரும்பி வந்து விடுகின்றது. அவற்றில் பெரும்பான்மையானவை ஆற்றுப் பெருக்கு ஏராளமாக இருக்கும் ஆற்றுப் பகுதி வழியாக எதிர் நீச்சல் போட்டு தமது பிறப்பிடத்தை வந்தடைகின்றன. இப்படிப்பட்ட எல்லைகளை வகுத்துக் கொண்டு, தான் பிறந்த இடத்தை வந்து சேர்ந்து விடுகின்ற திறமையை அதற்கு அளித்தது எது?
அவ்வாறு கடலை விட்டு வெளியேறி அது நீச்சல் போட்டு வந்து கொண்டிருக்கும் போது நீரின் வேகத்தால் வேறொரு சிற்றோடைக்கு அடித்துச் செல்லப்பட்டு விட்டால் உடனடியாக, இது தான் பிறந்த இடமல்ல–என்பதைக் கண்டு கொண்டு ஆற்றைக் குறுக்கே கிழித்துக் கொண்டு வேறு பக்கத்திற்கு வந்து, பிறகு அங்கிருந்து நீரோட்டத்திற்கு எதிராக நீந்தி முடிவில் எப்படியோ தனது பிறப்பிடத்தை வந்து அடைந்து விடுகின்றது.
விலாங்கு என்பது ஈல் வகையைச் சேர்ந்தது. அது பாம்பல்ல; ஒரு வகை மீன் தான்! பாம்பு போல ஷேப் கொண்டு நழுவும் மீன். முதுகெலும்பு உண்டு. எப்போதும் தண்ணீரில் வாழும். நதிக் கரையில் மிகச் சில நேரம் வாழ்ந்தாலும் தன் வாழ்நாட்களில் ஒரு பகுதியையாவது கடலில் கழிக்கும். ஏனெனில் முட்டையிடுவதற்கு அவற்றுக்கு உப்புத் தண்ணீர் வேண்டும். எனவே நதிவாழ் ஈல் மீன்களால் கடலுக்குப் போவதற்கென்றே சில சமயம் தரையில் ஊர்ந்து செல்ல முடிகின்றது. அப்படிக் கடல் நோக்கித் தரையில் ஊர்ந்து செல்கையில் அவற்றுக்கு மூச்சு வாங்குவதற்காக அவற்றின் சருமத்தின் மேலிருக்கும் ஒரு விதமான ஜவ்வு பயன்படுகின்றது.
இந்த மாதிரி அல்லல் படுவதெல்லாம் பெண் ஈல்கள் தான். முட்டையிடுவதற்காக நாடு கடந்து கூட கடலுக்கு வந்து சேரும். பெண் ஈல்களைக் கடலோர ஆண் ஈல்கள் (அளவில் சற்று சிறியவை) ”வா நாமெல்லாம் ஜாலியாக நீந்தலாம்” என்று அழைத்துச் செல்ல, பெண்கள் இந்தப் பேச்சைக் கேட்டு ஆண்களுடன் நூறு மைல் கணக்கில் நீந்தி கடலுக்குள் சந்தோஷப்பட்டு முட்டையிட்டு விட்டுச் செத்துப் போகும்.ஐரோப்பிய மீன்கள் இம்மாதிரி முட்டையிட பெர்முடா வரை வருவதும் உண்டு. அங்கே இட்ட முட்டைகள் லார்வா பருவத்தில் நீரோட்டத்தில் மறுபடி ஐரோப்பிய நதிகளின் முகவாய் வரை சென்று அங்கே ஒரு முழு மீனாக மாறுகின்றன. (ஏன்? எதற்கு? எப்படி? – சுஜாதா ஜூனியர் விகடன், 18.07.1984)
விலாங்கு மீன்
விலாங்கு மீன் என்ற இந்த ஆச்சரியமான படைப்பு நன்கு முழுமையாக வளர்ந்து பருவம் அடைந்ததும் அவை வாழும் பலதரப்பட்ட குட்டைகளையும், ஆறுகளையும் விட்டு வலசை புறப்பட்டு விடுகின்றன. அவை ஐரோப்பாவைச் சேர்ந்தவையாக இருந்தால் ஐரோப்பியப் பெருங்கடலில் பல ஆயிரம் மைல்களைக் கடந்து நெடுந்தொலைவிலுள்ள ஆழமான பகுதிகளுக்குச் சென்று அங்கே முட்டையிட்டு விட்டு இறந்து விடுகின்றன.
கொந்தளிப்பான தண்ணீரைத் தவிர வேறு எதனையும் அறிந்திருக்க முடியாத, அந்த முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் அவற்றின் தாயைப் போலவே அந்தப் பெருங்கடலில் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து, எங்கிருந்து அவற்றின் தாய் தனது பயணத்தைத் துவங்கியதோ அதே இடத்திற்கு வந்து சேர்ந்து விடுகின்றன. பின்னர் அங்கிருந்து பல்வேறு குட்டைகள், குளங்கள், ஆறுகள், சிறு கடல்கள் இவற்றை நோக்கிச் சென்று விடுகின்றன.
எனவே தான் எந்த வகைத் தண்ணீரும் இந்தக் கடல் விலாங்கு மீன்களுக்கு ஏற்புடையதாக அமைந்து விடுகின்றது. அவற்றின் நெடும் பயணத்தின் போது மிகப் பெரும் கடல் கொந்தளிப்பு, வெள்ளம், புயற்காற்று ஆகியவற்றை அவை எதிர்கொண்ட போதும் உறுதியாய் அவற்றைச் சமாளிக்கின்றன. இடைவிடாது அடித்துக் கொண்டிருக்கும் கடல் அலைகளுக்கு ஈடு கொடுத்து, தமது தாயின் இருப்பிடத்தை வந்து சேர்ந்து விடுகின்றன.
இப்போது அவை வளரத் தலைப்படுகின்றன. முழுமையாக வளர்ந்து பருவம் அடைந்ததும் கண்ணுக்குத் தெரியாத ஒரு விதி அவற்றை, அவை எங்கு பிறந்தனவோ அதே இடத்திற்கு மீண்டும் வலசை புறப்படச் செய்கின்றது. இவ்வாறு அவற்றை அவற்றின் பிறப்பிடத்தை நோக்கி உந்தித் தள்ளும் அந்த உந்து விசை எங்கிருந்து பிறக்கின்றது?
இது வரை அமெரிக்க நாட்டு விலாங்கு மீன் வகைகள் ஐரோப்பியக் கடல்களில் வேட்டையாடப்பட்ட சம்பவம் நிகழ்ந்ததில்லை. அது போன்றே ஐரோப்பிய நாட்டு விலாங்கு மீன் வகைகள் அமெரிக்க நீர் நிலைகளிலும் வேட்டையாடப் பட்டதில்லை. அது தனது நெடும் பயணத்தின் போது கடந்து வந்த தூரத்தை ஈடு செய்வதற்காக ஒரு இயற்கையான சக்தி, அந்த ஐரோப்பிய நாட்டு மீனை வளர்ப்பதில் ஒன்றோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்டுகளோ தாமதிக்க வைக்கின்றது. ஏனெனில் ஒரு அமெரிக்க விலாங்கு மீன் கடந்து வந்த தூரத்தை விட ஐரோப்பிய விலாங்கு மீன் அதிக தூரத்தைக் கடந்து வர வேண்டியிருக்கின்றது.
பொதுவாக எல்லா வகை விலாங்கு மீன்களிலும் இருக்கின்ற அணுக்கள் எல்லாம் ஒன்றாகவே இருந்தால் அவை அனைத்திற்கும் வழிகாட்டுதலும், அதைச் செயல்படுத்துவற்கு அவசியமான எண்ணங்களும் ஒன்றாகவே இருக்க வேண்டுல்லவா? இது எப்படி ஐரோப்பிய விலாங்குகளுக்கும், அமெரிக்க விலாங்குகளுக்கும் வேறுபட்டது? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சேட்டிலைட் இல்லாத செய்திப் பரிமாற்றம்
டோசி டோசி என்று ஒருவகை வண்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? ஆண் வண்டுக்கு மோகம் ஏறும் போது, பக்கத்தில் உள்ள கல்லைத் தட்டுமாம். சாதாரண மைக்கினால் கூட வாங்கிக் கொள்ள முடியாதபடி அவ்வளவு மென்மையாகத் தட்டுமாம். ஐந்து மைலுக்கு அப்பால் இருக்கும் பெண் வண்டுக்கு அது எட்டி, அது புரிந்து கொண்டு பறந்து வருமாம். (ஆதாரம்: இயான் மெஸ்ஸிடர் எழுதிய நூல் – குமுதம், 28.061984, அரசு பதில்கள், பக்கம்: 16)
பால்கனி வழியாக நம் வீட்டு மாடத்தில் ஒரு பெண் வண்ணத்துப் பூச்சியைக் காற்று கொண்டு வந்து சேர்த்து விட்டால், கண்டு கொள்ள முடியாத ஒரு சமிக்ஞையை அது உடனே அனுப்புகின்றது. அதன் துணையான ஆண் வண்ணத்துப் பூச்சி எங்கோ தொலை தூரத்தில் பறந்து கொண்டிருந்த போதும் அதன் சமிக்ஞையைப் புரிந்து கொண்டு உடனடியாக அதற்கு மறுமொழியும் தந்து விடுகின்றது.
அந்தக் காதலர் இருவரையும் தடுமாறச் செய்வதற்காக நமது முயற்சியால் புதுப்புது வாசனைகளை உண்டாக்கினாலும் அந்த வண்ணத்துப் பூச்சிகளின் இந்தச் செய்திப் பரிமாற்றத்தை நம்மால் குலைக்கவே முடியாது. அறிவுத் திறன் குறைந்த இந்தச் சாதாரண படைப்புக்கு ஏதாவது வானொலி நிலையம் இருக்கின்றதா? அல்லது அந்த ஆண் வண்ணத்துப் பூச்சியிடம் அதன் துணை அனுப்பும் செய்திகளைப் பெறுவதற்கான ஏரியல் எதுவும் இருக்கின்றதா? அல்லது அவை ஒலி அலைகளை அதிர்வுறச் செய்த அந்த அதிர்வுகளின் மூலம் பதில்களைப் பெறுகின்றனவா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
தொலைபேசி, வானொலி ஆகியவை நமது அதிசயமான கண்டுபிடிப்புகள் தான். மிக விரைவான செய்திப் பரிமாற்றத்திற்கு அவை நமக்கு வழிகோலுவது உண்மை தான். ஆயினும் அந்தச் செய்திப் பரிமாற்றங்களுக்கு உரிய சாதனங்களும், குறிப்பிட்ட இடங்களும் நமக்குத் தேவைப் படுகின்றனவே! எனவே இந்த வகையில் அவையெல்லாம் தேவைப்படாமல் தமது செய்திப் பரிமாற்றங்களை நடத்திக் கொண்டிருக்கும் வண்ணத்துப் பூச்சிகள் நம்மை வென்று விட்டதாகவே சொல்ல வேண்டும்.
தாவரங்களின் வேலையாட்கள்
தாவரங்கள், தாம் இவ்வுலகில் நீடித்திருப்பதற்காகச் சிலரை, அவர்கள் விரும்பாவிட்டாலும் பணியாளர்களாக நியமித்து அவர்களிடமிருந்து தந்திரமாக வேலை வாங்கிக் கொள்கின்றன. ஒரு மலரிலிருந்து இன்னொரு மலருக்கு மகரந்தப் பொடிகளை எடுத்துச் செல்லும் வண்டுகள், காற்று மற்றும் நடமாடும், பறக்கும் எல்லாப் பொருட்களும் தங்களை அறியாமலேயே தாவரங்களுக்காக இந்தப் பணியை மேற்கொள்கின்றன. அவற்றின் மூலம் தாவர இனங்கள் விருத்தியடைந்து கொண்டும் அதன் வித்துக்கள் பரப்பப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன.
அவ்வளவு தூரம் போவானேன்? தலை சிறந்த மனிதனைக் கூட அந்தத் தாவர இனங்கள் இந்தப் பொறியில் சிக்க வைத்து விடுகின்றன. மனிதனும் அவற்றைப் பெருக்குவதற்கு அருமுயற்சிகள் செய்பவனாகவே திகழ்கின்றான். கலப்பையும் கையுமாகவே காட்சியளிக்கின்றான். விதைக்க, நாற்று நட, நீர் பாய்ச்ச, அறுவடை செய்ய என்பன போன்ற பல கடமைகளுக்கு அவன் ஆளாகி விடுகின்றான். அவன் மாத்திரம் இந்தக் கடமைகளில் கவனம் செலுத்தவில்லை என்றால் பட்டினி அவனது தலைவிதியாகி விடும். காலம் காலமாக மனிதன் உருவாக்கியிருக்கின்ற நாகரீகங்கள் சிதைந்து, பூமி அதன் பழைய இயற்கை நிலைக்கு மாறி விடும்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்.