உறுப்புகளை வளர்க்கும் உயிரினங்கள்
கடல் நண்டு போன்ற எத்தனையோ பிராணிகள், அவற்றின் கால்கள் அல்லது கொடுக்குகளில் ஒன்றை இழந்து விட்டால் தனது உடலில் ஓர் உறுப்பு குறைந்து போய் விட்டதைத் தெரிந்து கொண்டு உடலிலுள்ள உயிரணுக்களையும், மரபு வழிக் காரணிகளையும் தூண்டுகின்றன. இழந்த உறுப்புக்குப் பதிலாக வேறொரு காலையோ அல்லது கொடுக்கையோ வளரச் செய்து இழப்பை ஈடு செய்து கொள்கின்றன.
எப்போது அந்த உயிரணுக்கள் சேர்ந்து காலாக, கொடுக்காக மாறுகின்றனவோ அப்போது அவை தமது செயல்பாட்டை, அதாவது வளர்ச்சியை நிறுத்திக் கொள்கின்றன. இழந்த உறுப்பு வளர்ச்சியடைந்த உடன் தமது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும் நேரம் வந்து விட்டது என்பதை அந்த உயிரணுக்கள் எப்படியோ ஒரு முறையில் தெரிந்து கொள்கின்றன.ஆக்டோபஸ் என்ற பல கால்களையுடைய ஒரு கடல்வாழ் உயிரி இரண்டாகப் பிளந்து விட்டாலும், அந்த இரண்டு துண்டங்களில் ஒரு துண்டத்தின் வழியாகத் தன்னைச் சீர் செய்து கொள்ளும் ஆற்றல் மிக்கதாகத் திகழ்கின்றது. உணவுப் பண்டங்களில் காணப்படும் ஒரு வகைப் புழுக்களின் தலையை நாம் கொய்து விட்டால் விரைந்து இன்னொரு தலையை உருவாக்கிக் கொள்ள அதனால் முடியும்.
நமது உடலில் ஏற்படும் வெட்டுக் காயங்களின் உயிரணுக்களைத் தூண்டி முன்பிருந்தபடியே அவை இணைந்து கொள்ளும்படிச் செய்வதற்கு நம்மாலும் முடிகின்றது. என்றாலும் ஒரு புதிய கையையோ, அல்லது சதைப் பகுதியையோ, எலும்பு, நகம், நரம்புகளையோ இழந்து விடும் போது அவற்றை மீண்டும் உருவாக்க உயிரணுக்களை எவ்வாறு தூண்ட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது எப்போது சாத்தியமாகும்? அந்நிலையை மனிதன் அடைவது சாத்தியம் தானா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
உடலில் இழந்த அல்லது சேதமுற்ற பகுதி புதிதாக உருவாவது எவ்வாறு? எனும் புதிருக்கு விளக்கமளிக்கக் கூடிய வியத்தகு உண்மை ஒன்று இங்கே இருக்கின்றது. உயிரணுக்கள் தமது முதல் கட்டங்களின் போது பல கூறுகளாகப் பிரிகின்றன. அவ்வாறு அவை பிரியும் போது அவற்றில் ஒவ்வொரு அணுவும் முழுமையான வேறொரு உயிரைப் படைக்க ஆற்றல் மிக்கதாய் மாறி விடுகின்றது. முதல் உயிரணு இரண்டாகி, பின்னர் அவ்விரண்டும் பிரிந்து நான்காகி இப்படியே பிரிந்து கொண்டு போனாலும் ஒன்று போல் தோற்றமளிக்கக் கூடிய இரண்டிற்குள்ளும் அவற்றைப் பற்றிய எல்லா விபரங்களும் அடங்கியிருக்கின்றன. இன்னும் எத்தனையோ செய்திகள் அவை ஒவ்வொன்றின் உள்ளும் பதிவாகியிருப்பதை நாம் நுண்ணோக்காடியில் காணலாம்.
மொத்தத்தில் தனித்தனியான ஒவ்வொரு அணுவுக்குள்ளும் அந்தப் படைப்பின் முழுமையான தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த அடிப்படையில் நமது உடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுக்குள்ளும் நம்மைப் பற்றிய எல்லா தகவல்களும் அடங்கியிருப்பதால் அந்த உயிரணுக்கள் ஒவ்வொன்றிற்குள்ளும் அதன் ஒவ்வொரு இழைகளிலும் நாம் இருக்கிறோம் என்பதில் மட்டும் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.
விதையில் ஒரு சாஃப்ட்வேர்
அந்தப் புத்தகத்தின் அடுத்த பாடத்தில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
கருவாலி மரத்தின் கொட்டை ஒன்று நிலத்தில் விழுகின்றது. காற்றடித்து, பூமியின் ஏதோ ஒரு பள்ளத்தில் உருண்டு போய் விழுந்து கிடக்கும் அந்தக் கொட்டையைக் கனமான பழுப்பு நிறத்தையுடைய அதன் ஓடு பாதுகாக்கின்றது. வசந்த காலம் வந்ததும் அந்தக் கொட்டையின் மேல் ஓட்டை உடைத்துக் கொண்டு முளை விட ஆரம்பிக்கின்றது. ஒரு முட்டைக்குள் எப்படி அந்த முட்டையின் மரபு வழிக் காரணிகள் பல அடங்கியிருக்கின்றனவோ அதே போல அந்தக் கொட்டைக்குள் இருக்கும் அதன் பருப்பு, அதன் பாரம்பரியத்தைப் பற்றிய எல்லாச் செய்திகளும் அடங்கிய மென்பொருளாக, சாப்ட்வேராக அமைந்துள்ளது. அந்தப் பருப்பின் வழியாக அது உணவு உட்கொள்ள ஆரம்பிக்கின்றது. தனது வேர்களை மண்ணுக்குள் பதிக்கின்றது. இப்போது அங்கே ஒரு சிறு கன்றும் பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு கருவாலி மரமும் உருவாகி நிற்பதை நாம் பார்க்கிறோம்.
அந்தக் கருவாலி மரக் கொட்டைக்குள்ளிருந்து வெளி வரும் முளைக்குள் பல மில்லியன் மரபு வழிக் காரணிகள் அமைந்திருக்கின்றன. அவை இலை, கிளை, பழம், கொட்டை, கொட்டையின் ஓடு அனைத்தையும் உருவாக்குகின்றன. அது உருவாக்கும் ஒவ்வொன்றும் அந்தக் கொட்டை எந்தக் கருவாலி மரத்தினுடைய கொட்டையோ அதே மரத்தின் பாகங்களுக்கு அப்படியே ஒத்திருக்கின்றன. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த உலகில் தோன்றிய முதல் கருவாலி மரத்தினுடைய கொட்டையும், பழமும், இலையும், கிளையும் எப்படி இருந்தனவோ அப்படியே தான் இத்தனை மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரும் இருக்கின்றன. கொஞ்சமும் மாறுபடவில்லை.
வழிகாட்டப்படும் உயிரணுக்கள்
எந்த உயிருள்ள படைப்பில் இருக்கின்ற உயிரணுக்களாக இருந்தாலும் அவை தம்மை அந்தப் படைப்பினுடைய தசையின் ஒரு கூறாகப் புனைந்து கொள்ள வேண்டிய அவசியமுடையவையாக இருக்கின்றன. அன்றாடம் உராய்வினாலும் தேய்மானத்தினாலும் சிதைந்து கொண்டிருக்கின்ற உடலின் மேல் தோலின் ஒரு கூறாகத் தம்மைத் தியாகம் செய்து கொள்ள வேண்டிய அவசியத்திற்கு உயிரணுக்கள் ஆளாகின்றன.
பற்களுக்குப் பளபளப்பைத் தரும் இனாமல் பூச்சாகவோ, கண்களுக்குத் தெளிவையும் பளபளப்பையும் தரும் திரவமாகவோ அல்லது மூக்கு, காது போன்ற அங்கங்களை உருவாக்குவதில் பங்கேற்க வேண்டிய அவசியம் உடையவையாகவோ இருக்கின்றன.
மேலும் ஒவ்வொரு செல்லும் தன்னை அந்தந்த வடிவங்களுக்கு ஏற்பப் புனைந்து கொள்வதுடன் அதனதன் முக்கியமான பணியை நிறைவேற்றுவதற்குரிய தனித் தன்மைகள் பெற்றுத் திகழ்வதும் அவசியமாகும்.
ஆனால் எந்தெந்த உயிரணு வலது கையாக மாறக் கூடியவை, எவை இடது கையாக மாறக் கூடியவை என்பதையெல்லாம் யூகித்து அறிவது சிரமம். ஆயினும் ஏதோ ஓர் உயிரணு இடது காதின் ஒரு கூறாக மாறிக் கொண்டிருக்கும் வேளையில் மற்றொன்று வலது காதின் கூறாக மாறிக் கொண்டிருக்கின்றது.
இநத உயிரணுக்களின் செயல்பாட்டினை ஆராயும் போது பல்லாயிரக்கணக்கான உயிரணுக்களிடம், மிகச் சரியான ஒன்றை மிகச் சரியான தருணத்திலும் மிகச் சரியான இடத்திலும் செய்ய வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப் பட்டுள்ளதைப் போல் தெரிகின்றது.
குளவிகளின் இனப் பெருக்கம்
இந்த உலகில் எத்தனையோ வித விதமான படைப்புகள் காணப்படுகின்றன. அந்தப் படைப்புகள் பல்வேறு வடிவங்களில் சிறந்த உள்ளுணர்வையும், அறிவுத் திறத்தையும் அல்லது நமக்கே புரியாத ஒரு தகுதியையும் புலப்படுத்துபவையாகத் திகழ்கின்றன. உதாரணமாக குளவிகளுக்கு இனப் பெருக்கக் காலம் வந்ததும் ஆண் குளவி ஒரு வெட்டுக்கிளியைப் பிடித்து, அதில் எந்த இடத்தில் குத்தினால் அது உணர்விழந்து விடும் என்பதைத் தெரிந்து, அந்தப் பொருத்தமான இடத்தில் ஒரு குத்து குத்தி அதை உணர்விழக்கச் செய்கின்றது. உணர்விழந்த அந்த வெட்டுக்கிளி பாதுகாப்பாக வைக்கப்பட்ட மாமிசத்தைப் போல் உயிருடன் பத்திரமாக இருக்கின்றது. பிறகு ஒரு குழி தோண்டி அதில் அந்த வெட்டுக்கிளியைப் போட்டு விடுகின்றது.
இப்போது பெண் குளவி வந்து மிக நுட்பமாக அந்த வெட்டுக் கிளியின் உடலில் எங்கே துளையிடப்பட்டுள்ளதோ அந்தப் பொருத்தமான இடத்தில் முட்டையிட்டுப் பின்னர் குழியை மூடிவிட்டுப் பறந்து போய் விடுகின்றது.
புழு, பூச்சியினங்களை உணவாக உட்கொண்டு தான் குளவிகள் உயிர் வாழ்கின்றன. ஆனால் முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் புழு, பூச்சிகளைக் கொன்று அதைத் தின்று தான் உயிர் வாழ வேண்டும் என்றால் அதன் பாடு ஆபத்தாக முடிந்து விடும். அதற்கு அவசியமில்லாமல் தனது குஞ்சுகள் இந்த வெட்டுக்கிளியின் மாமிசத்தையே உணவாக உட்கொள்ளட்டும் என்றெல்லாம் சிந்திக்காமல் தன்னிச்சையாகக் கூட அந்தக் குளவி இந்தக் காரியத்தைச் செய்திருக்கலாம். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை தனது குஞ்சு உயிர் வாழ்வதற்காக இம்முறையைத் தான் குளவிகள் பின்பற்றி வருகின்றன. அவ்வாறு அந்தக் குஞ்சுகளின் உணவுக்கான முன்னேற்பாடுகளை அது செய்து வைக்கவில்லை என்றால் இம்மண்ணில் குளவி இனமே இல்லாது அழிந்து போயிருக்கும். மேலோட்டமாகத் தெரியும் இந்த ரகசியத்திற்கு இது வரை எந்த விளக்கமும் தெரியவில்லை. ஆயினும் இதை ஒரு தற்செயலான செயல் என்று நம்மால் ஒதுக்கிவிட முடியவில்லை.
முட்டையிட்டு முடிந்ததும் பெண் குளவி குழியை மூடி விட்டு மகிழ்ச்சியாகப் பறந்து போய், பிறகு மடிந்து விடுகின்றது. அதுவோ அதன் முன்னோர்களோ இந்தச் செயலைப் பற்றி ஒரு நாளும் சிந்தித்ததில்லை. தமது குஞ்சுகளுக்கு அடுத்து என்ன நேரிடப் போகின்றது என்ற அறிவும் அவற்றுக்கு இல்லை. அந்தக் குழிக்குள் குஞ்சு என்கின்ற ஒன்று வரப் போகின்றது என்பதோ அதுவும் நம்மைப் போன்றே வாழ்ந்து நம்மைப் போன்றே தனது இனத்தின் விருத்திக்காகப் பாடுபட்டுப் பிறகு மடியும் என்பதோ அவற்றுக்குத் தெரியாது.
எறும்புகளின் அறிவாற்றல்
ஒரு வகை எறும்பு இனத்தில் தொழிலாளி எறும்புகள் குளிர் காலங்களில் பிற எறும்புகளின் உணவுக்காகச் சின்னச் சின்ன வித்துக்களை இழுத்து வந்து புற்றுக்களில் சேர்க்கின்றன. புற்றுக்குள் தானியங்கள், வித்துக்கள் போன்றவற்றை அரைப்பதற்கென்றே ஒரு கிடங்கை அந்த எறும்புகள் உருவாக்குகின்றன.
அங்கே குடியிருக்கும் எறும்புகளுக்கு தானியங்களை அரைத்து உண்ணுவதற்கேற்ற வகையில் முன்னேற்பாடுகள் செய்து தருவதற்கான பொறுப்பை, பெரிய தாடைகளையுடைய சில எறும்புகள் ஏற்றுக் கொள்கின்றன. அது ஒன்று தான் அந்த எறும்புகளின் வேலை. இலையுதிர் காலம் வரும் போது அந்தக் கிடங்கிலுள்ள எல்லா தானியங்களும் அரைத்து முடிக்கப்பட்டு விடுகின்றன. இப்போது பெரிய எண்ணிக்கையுடைய அந்த எறும்புகளின் தலை சிறந்த பணி முன்னேற்பாடாக ஒதுக்கப்பட்டுள்ள அந்த உணவைப் பாதுகாப்பது ஒன்று தான்.
இன்னும் சில வகை எறும்புகளை அவற்றின் உள்ளுணர்வோ அல்லது அறிவுத் திறமோ எதுவோ ஒன்று அவற்றின் உணவுக்காகவும் வசிப்பதற்காகவும் புல் வீடுகளை வளர்க்கச் சொல்லித் தூண்டுகின்றது. புல்லால் ஆன அந்தக் குடில்களே அவற்றிற்கு உணவாகவும் பயன்படுவதால் அவற்றைத் தோட்ட வீடுகள் என்றும் சொல்லலாம். அவை தேன் கூடுகளுக்கு இடர் விளைவிக்கும் சில குறிப்பிட்ட கம்பளிப் புழுக்களையும் பூச்சிகளையும் வேட்டையாடி உண்ணுகின்றன. அந்தப் புழுக்களும் பூச்சிகளும் தான் அவற்றுக்கு மாமிசம் வழங்கும் ஆடு மாடுகளாகும். அந்தப் புழுக்களிலிருந்து தேனைப் போல் வடியும் ஒரு திரவத்தையும் அந்த எறும்புகள் உணவாகக் கொள்ளுகின்றன.
சில எறும்புகள் அவற்றிலேயே சிலவற்றைப் பிடித்துத் தமக்கு அடிமைகளாக்கிக் கொள்கின்றன. வேறு சில எறும்புகள் தமக்குக் குடில் அமைத்துக் கொள்ளும் போது இலை தழைகளை தமக்குத் தேவையான பருமனுக்கு ஏற்ப வெட்டிக் கொள்கின்றன. சில தொழிலாளி எறும்புகள் ஓய்வாகத் தமது கை, கால்களை ஓரிடத்தில் கிடத்திக் கொண்டு படுத்து விடும் போது, பட்டுப் புழுக்களைப் போல் பட்டு நூல் நூற்கவும் அவற்றால் நெய்யவும் தெரிந்த கூடுகளில் வாழும் ஒரு வகைச் சிற்றெறும்புகளை வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றன. சில குட்டி எறும்புகளுக்கு அவற்றுக்கான கூடுகளை உருவாக்கிக் கொள்ளத் தெரியாத போது அதன் சமுதாயம் பாடுபட்டு அதற்காக ஒரு கூட்டை உருவாக்கித் தருகின்றது.
வழிகாட்டியவன் யார்?
எந்த உயிரணுக்களிலிருந்து எறும்புகள் உருவாகின்றனவோ அவற்றிடம் இந்தச் சிக்கல் நிறைந்த பணிகள் எல்லாம் எவ்வாறு ஒப்படைக்கப்படுகின்றன?
நிச்சயம் அங்கே அவற்றிற்கெல்லாம் இந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்குரிய வழிகாட்டும் படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இத்துடன் பேராசிரியர் மஹ்மூது ஸாலிஹ் அவர்களின் அறிவு, இறை நம்பிக்கையைத் தூண்டுகிறது’ என்ற நூலிலிருந்து எடுத்தாளப்பட்ட கருத்துக்கள் முடிகின்றன.
ஆம்! நிச்சயம் அந்த எறும்புகளுக்கும் அவைகளல்லாத சிறிய, பெரிய பிற படைப்புகளுக்கும் ஒரு படைப்பாளன் இருக்கிறான்; அவன் தான் அவற்றைப் படைத்து அவற்றிற்குச் சரியான வழியையும் காட்டுகின்றான்.
அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான். (அல்குர்ஆன் 87:2,3)
அந்தப் பேராசிரியரின் நூலிலிருந்து நாம் அளித்த எடுத்துக் காட்டுக்கள் உயிரினங்கள், பறவைகள், புழு பூச்சிகள், தாவரங்கள் ஆகியவற்றின் உலகங்களைப் பற்றி மனிதன் பதிவு செய்து வைத்திருக்கின்ற ஆய்வுகளின் ஒரு சிறிய பகுதி தான். இவையல்லாமல் இவை போன்ற இன்னும் ஏராளமான எடுத்துக்காட்டுகளின் தொகுப்புகள் இருக்கின்றன.
நம் கண்களுக்குத் தெரிகின்ற இந்த மிகப் பெரும் பிரபஞ்சத்தைப் பற்றி மிகக் குறைவிலும் குறைவாகத் தான் நாம் தெரிந்திருக்கிறோம்.
அதனையும் தாண்டி இன்னும் எத்தனையோ உலகங்களும் இருக்கின்றன. சாமானியமான நமது மனிதப் படைப்பு புரிந்து கொள்ள முடியுமான அளவுக்கு மட்டுமே இறைவன் அவற்றைப் பற்றி நமக்கு அறிவிக்கின்றான்.
(மறைந்த அறிஞர் பி.எஸ். அலாவுதீன் அவர்களின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களிலிருந்து இக் கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.)
”Jazaakallaahu khairan” http://www.tntj.net/?p=7265