அபூ ரிள்வான்
திருமணம் செய்து அதிகமாக குழந்தைகள் பெற்றுக் கொள்வது ஒன்றே மனிதவளத்தை அதிகரிக்க வழி. அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் வல்ல அல்லாஹ் கொடுக்கின்ற அருட்கொடைகளில் மிகச்சிறந்த அருட்கொடையாகிய குழந்தைகளை அதிகமாகப் பெற்றுக்கொள்ளுதலே இறைவனின் உவப்பிற்கு உகந்தவழியாகும். அல்லாஹ், தனது திருமறையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
”பெண்கள், ஆண்மக்கள், பெருவாரியான தங்கம் மற்றும் வெள்ளிக்குவியல்கள், கண்கவர் குதிரைகள், கால்நடைகள், வேளான் நிலங்கள் உள்ளிட்ட ஆசைப்பொருள்களை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. இவை(யாவும்) இவ்வுலக வாழ்வின் (அற்பமான) வசதிகளே. (ஆனால்), அழகிய உறைவிடம் அல்லாஹ்விடமே உள்ளது” (அல்-குர்ஆன் 3:14)
இவ்வசனத்தில் முதன்முதலில் பெண்மக்களையே வாழ்க்கையில் மனிதர்களுக்கு கவர்ச்சியாக, அழகாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறான். அதிலும் பெண்கள் என்று பன்மையில் கூறுகிறான். அடுத்து ஆண்மக்களைப் பெறுவதும் மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறான். ஆண்மக்கள் மூலம் தன் சந்ததிகளை உலகில் பெருக்குவதற்கு ஒவ்வொரு மனிதனும் விரும்புகின்றான்.
ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ”நான் அழகும் குடும்பப்பாரம்பரியமும் உள்ள ஒரு பெண்ணைக் கண்டேன். ஆனால் அவளுக்கு குழந்தைப் பேறு இல்லை. அவளை நான் மணந்து கொள்ளலாமா?” என்று கேட்டார். இவ்வாறு அவர் பலமுறை கேட்டும் நபியவர்கள் வேண்டாம் என்று தடுத்தார்கள். பின்பு கூறினார்கள்: ”குழந்தைப்பேறு அதிகமுள்ள பாசமிக்க பெண்ணை நீங்கள் மணந்து கொள்ளுங்கள். ஏனெனில் மறுமை நாளில் எல்லாச்சமுதாயத்தாரிலும் நீங்களே அதிக எண்ணிக்கை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்”. (அறிவிப்பாளர்: மஅதில் பின் யசார் ரளியல்லாஹு அன்ஹு, நூல் அபூதாவுத், நஸயீ)
இந்நபிமொழியிலிருந்து குழந்தை பேறுள்ள விதவைப்பெண்ணையோ அல்லது விவாகரத்து பெற்ற பெண்ணையோ அல்லது குழந்தைப் பேறு அதிகம் உள்ள தாயின் மகளான கன்னிப்பெண்ணையோ மணந்து கொள்ளுதல் சிறந்ததாகும்.
நபிமார்கள் பலரும் பலதாரமணம் செய்தவர்களாகவும, அதிகமாக குழந்தைகள் பெற்றவர்களாகவும் இருந்தார்கள்.
அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கு சில பயனுள்ள குறிப்புகள்
ஆண்களுக்கு:
1) திருமணத்தை தள்ளிப்போடாதீர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தமது 25 வது வயதில் கதீஜா ரளியல்லாஹு அன்ஹாஅவர்களை முதல் திருமணம் செய்தது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆக இளமையில் திருமணம் செய்வது குழந்தைகள் அதிகமாய் பெற வழிவகுக்கும்.
2) திருமணத்திற்கு பின்பு குழந்தைப் பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடாதீர்கள். எவ்வளவு வருடங்கள் தள்ளிப்போடுகறீர்களோ அவ்வளவுக்கு குழந்தைகள் குறைவாக பிறக்கக்கூடும். மேலும் இளம் வயதில் குழந்தைப் பேறுவதே அக்குழந்தையை நன்கு வளர்க்க பாடுபடமுடியும்.
3) குடும்பக்கட்டுப்பாடு என்ற ஆண்மை நீக்கம் அறவே செய்து கொள்ளாதீர்கள். இப்படி நிரந்தர ஆண்மை நீக்கம் செய்து கொள்ள இஸ்லாத்தில் அனுமதியில்லை. ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடையே, முன்பு நாம் குறிப்பிட்டபடி குறைந்தபட்சமாக மூன்று ஆண்டுகள் இருந்தாலே போதுமானது. அச்சமயங்களில் தற்காலிக கருத்தடை சாதனங்களை உபயோகிக்கலாம்.
4) நமது இந்திய திருநாட்டில் முன்பு இருந்ததைப்போல குடும்பக்கட்டுப்பாட்டை அரசாங்கம் இப்போது வலியுறுத்தவில்லை. ஏனெனில் மனிதவளம் இந்தியாவில் அதிகம் இருப்பதால் தான் இந்தியாவின் வளர்ச்சி முன்னைவிட அதிகமாய் இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் நன்கு உணர்ந்து கொண்டுவிட்டார்கள். தற்பொழுது எல்லாக் குடும்பங்களுக்கும் அரசாங்கமே மருத்துவக் காப்பீடு (medical insurance ) அளிப்பதன் மூலம் குழந்தைகள் இறப்பு விகிதத்தையும் (infant martality) குறைக்கவும், பொது மக்களின் சுகாதார நல்வாழ்வுக்கு வழிசெய்யவும் முயற்சிக்கிறார்கள்.
5) நீங்கள் இரண்டாம் மனைவியை திருமணம் செய்ய விரும்பினால், முதல் மனைவியின் சம்மதத்தை கேட்க முயற்சிக்காதீர்கள். நூற்றில் ஒருபெண்கூட, தான் முதல் மனைவியாய் இருக்கும் பட்சத்தில் தனது கணவன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய அனுமதிக்க மாட்டாள். இவ்விசயத்தில் நீங்களே தீர்மானித்து நீங்களே தான் முயற்சி செய்யவேண்டும்.
6) இரண்டு மனைவியரோ அதற்கு மேலோ உள்ளவராக இருந்தால், உங்கள் நேரத்தை எல்லா மனைவியரோடும் சமமாக பங்கிடுங்கள்.
7) குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டாதீர்கள். ஆண்குழந்தையாக இருப்பினும் பெண்குழந்தையாக இருப்பினும் குடும்பத்தில் எதை வாங்கினாலும் சமமாக பங்கிட்டுக் கொடுங்கள்.
8.) அதேபோல் உலக கல்வியிலும், மார்க்க கல்வியிலும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ பாரபட்சம் காட்டாதீர்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் நிறைவாக கல்வி அறிவை அளியுங்கள்.
9) இரண்டாம் திருமணம் செய்தவர், திருமணம் செய்த அன்றிலிருந்து தான் முதல் மனைவிக்கு என்ன பொருள் வாங்கினாலும் அதே பொருளை தன் இரண்டாவது மனைவிக்கும் வாங்கி கொடுக்க வேண்டும். இரண்டாவது மனைவியை திருமணம் செய்வதற்கு முன்பு முதல் மனைவிக்கு பல பொருட்களை நீங்கள் கொடுத்திருக்கலாம். அதைப்போன்று இரண்டாம் மனைவிக்கும் வாங்கிக்கொடுக்கவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. ஏனெனில் அச்சமயம் ஒரேஒரு மனைவி மட்டுமே இருந்தாள். ஆகையால் அவளுக்கு மட்டுமே கொடுத்தீர்கள்.
10) முதல் மனைவியின் இரகசியங்களை இரண்டாவது மனைவிக்கும், இரண்டாவது மனைவியின் இரகசியங்களை முதல் மனைவிக்கும் கூறாதீர்கள். இப்படி சொல்வது இஸ்லாத்தில் முழுமையாக தடைசெய்யப்பட்டிருக்கிறது.
11) இரண்டு மனைவிகள் உள்ளவர்கள், கூடியமட்டும் அவர்களை தனித்தனி வீடுகளில் குடியமர்த்துதல் நல்லது. அல்லது ஒரே வீட்டில் கீழ் வீட்டில் ஒருவரையும், மேல் வீட்டில் ஒருவரையும் வசிக்கச்செய்வது சிறந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தங்களது மனைவிமார்களுக்கு தனித்தனி குடில் அமைத்துக்கொடுத்தார்கள் என்பதை ஹதீதுகளின் மூலம் அறியலாம்.
12) உங்கள் மனைவியருக்கும், குழந்தைகளுக்கும் தூய இஸ்லாத்தை குர்ஆன் மற்றும் நபிவழி வாழ்க்கை முறையை துவக்கத்திலிருந்தே போதனை செய்யுங்கள். முதன் முதலில் நீங்களே ஒரு நல்ல எடுத்துக்காட்டாய் (role model) நபிவழியிலே வாழ்ந்து காட்டுங்கள்.
13) மனைவியருக்கு அவர்கள் கேட்கும் எல்லா பொருட்களையும் வாங்கிக் கொடுக்காதீர்கள். அவர்களுக்கு வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்களை மட்டும் வாங்கிக் கொடுங்கள். வாழ்க்கைக்கு தேவையானவை எது, ஆசைப்படுவது எவை என்பதன் வித்தியாசத்தை புரியவையுங்கள். நமது தேவைகளைக் குறைத்துக்கொண்டால் அதிக குழந்தைகளைப் பெற்றாலும் மகிழ்ச்சியாக வாழலாம்.
14) குழந்தைப் பெறுவதில் மாற்றுமத கலாச்சாரத்தையோ, மேல்நாட்டுக் கலாச்சாரத்தையோ பின்பற்றி ஆசைக்கொரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண் போன்ற மூடத்தத்துவங்களைப் பின்பற்றாதீர்கள். உங்களால் முடிந்த அளவு அதிகமாய் குழந்தைகளைப் பெறமுயற்சி செய்யுங்கள். முயற்சி செய்பவர்களுக்கு இறைவன் பயன் அளிப்பதாகக் கூறுகிறான்.
15) இறுதியாக, ஒரு முஸ்லிமின் மரணத்திற்குப்பின் அவனுக்கு பயனளிக்கும் மூன்று செயல்களில் ஒன்றாக இறந்த தன் தந்தையருக்காக நல்லொழுக்கமுள்ள மகன் செய்யும் பிரார்த்தனை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் நவின்றார்கள். நீங்கள் அதிகமாய் குழந்தைகளைப் பெற்றால், அவர்களில் ஒரு குழந்தையாவது உங்கள் மரணத்திற்குப் பின் உங்களுக்காக பிரார்த்தனை செய்தால் அதன் பொருட்டு அல்லாஹ் (சுப்) உங்கள் பாவங்களை மன்னித்து சுவன வாழ்க்கையை அளிக்கலாம்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்.