அபூ ரிள்வான்
சிலர் கேட்கலாம், ”நான் நடுத்தர வர்க்கத்தில் (middle class) உள்ளவன்- நான் எப்படி அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று.
சிந்தித்துப் பாருங்கள்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுடன் வாழ்ந்த நபித்தோழர்களும், தோழியர்களும் பெரும் வசதியிலா வாழ்ந்தார்கள்? சாப்பிட மூன்று வேளை உணவுக்கே பெரிய திண்டாட்டம்! உடுத்த மாற்று உடைகள் இல்லை!! தங்கியிருப்பதற்கு ஈச்ச ஓலையினாலான கொட்டகைத்தான் வீடுகள்! இப்படித்தான் அவர்களின் முழு வாழ்க்கையும் இருந்தது. ஆனால் அவர்களெல்லாம் அதிகமாக குழந்தைப் பெற்றுக்கொள்ளவில்லையா?
அதிகமாய் குழந்தைப் பெற்றுக்கொள்வதற்கு பெண்களுக்குத் தேவை மனவுறுதியும், ஆரொக்கியமும், தியாக மனப்பான்மையும், குழந்தைகளை இறைவன் அளிக்கும் மிகப்பெரும் செல்வம் என்று கருதும் மன நிலையும் தான். பணங்காசுகளோ, வசதிவாய்ப்புகளோ அல்ல!
ஒரு முஸ்லிம் தம்பதிகளுக்கு குழந்தைப் பிறக்காமல் இருந்தால், அவர்கள் திருமணம் முடிந்து 10 வருடங்கள் வரை குழந்தைக்காக முயற்சி செய்யலாம். 10 வருடங்களுக்குப் பின்னும் குழந்தைப் பிறக்கவில்லையெனில், அல்லாஹ் தங்களுக்கு விதித்த விதியை (destiny) ஏற்றுக்கொண்டு தம்பதிகள் இருவருக்குமோ அல்லது ஆணுக்கு மட்டுமோ எந்த உடற்குறையும் இல்லாத பட்சத்தில் முதல் மனைவியே தன் கணவருக்கு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து வைக்கலாம்.
இவ்வழக்கம் பெரும்பாலான இந்திய முஸ்லிம்களிடம் இல்லையென்றே கூறத்தோன்றுகிறது. பலதாரமணம் (polygyny) இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தும், அதனால் கன்னிப்பெண்களோடு, பல விதவைப் பெண்களும், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களும் மறுவாழ்வு பெறுவார்கள் என்ற நிலை இருந்தும், முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்வது தவறான காரியத்தைப்போல நம்சமூகத்தில் சித்தரிக்கப்படுகிறது. இதனால் முதல் மனைவி மூலம் குழந்தைப் பெறமுடியாதவர்கள் மாற்றாக இருக்கும் வழியினை முற்றும் அடைத்து விடுகிறார்கள்.
நபிமார்களில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் உட்பட பலர் பலதார மணம் செய்தார்கள். நபித்தோழர்களில் பலர் பலதாரமணம் செய்தவர்களே! மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா நகர் சென்ற நபித்தோழர்களுக்கு மதீனா வாழ் அன்சாரிகள் தான் இரண்டு அல்லது அதற்கு மேல் மனைவியரை மணமுடித்தவராக இருந்தால் தன் மனைவிகளில் ஒருவரை விவாகரத்து செய்து மக்காவிலிருந்து குடிபெயர்ந்த தன் சகோதர முஸ்லிமுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.
இந்நற்செயல்களை நோக்கும் போது அவர்களின் எல்லையில்லா தியாக மனப்பான்மையையும், அவர்களின் பலதார வாழ்க்கை முறையையும் நாம் அறியலாம். இவர்கள் எல்லாம் தவறான காரியத்தையா செய்துவிட்டார்கள்? (அப்படிப்பட்ட தீய சிந்தனையிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக)அரேபிய நாடுகளில் பலதாரமணம் சர்வசாதாரணமான விசயம். அந்நாட்டுப் பெண்களும் தன் கணவன் இரண்டாம் திருமணம் செய்வதை தவறாக நினைப்பதில்லை. மாறாக தனது இல்லறக் கடமைகளில் இன்னொரு பெண்ணும் பங்குப் போட்டுக்கொண்டால் தனது பளு சற்றுக் குறையுமே என்று தான் நினைக்கிறார்கள்.
மேலும் இஸ்லாம் அனுமதித்த ஒரு செயலை தடுப்பது மிகப்பெரிய பாவம் என்றும் உணர்ந்திருக்கிறார்கள். இத்தோடு இரண்டாம் திருமணம் செய்ய முதல் மனைவியின் அனுமதி தேவையில்லை என்பதும் அவர்களுக்குத் தெரிந்து இருக்கிறது. அரேபியாவில் ஆண்கள் தமது நண்பர்களை வாழ்த்தும் போது ”அல்லாஹ் உங்களுக்கு இன்னொரு அழகிய பெண்ணை மனைவியாகத் தருவானாக!” என்று கூறுகின்றனர்.
குழந்தைப் பெறும் பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை இங்கே பார்ப்போம். மருத்துவபரிசோதனைகளுக்கும், கருவுறு சிகிச்சைகளுக்குப் பின்னும் ஆணுக்கு குறையிருப்பது தெரியவந்தாலும், அல்லது தம்பதிகள் இருவருக்கும் குறையிருப்பது தெரிய வந்தாலும், அத்தம்பதிகள் அனாதை குழந்தைகளையோ, தமது உறவினர்களிடமிருந்தோ மூன்றுக்கு குறையாமல் தத்து எடுத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளை தத்து எடுத்துக் கொள்வதற்கு இஸ்லாத்தில் பூரண அனுமதியுண்டு. அக்குழந்தைகளை மகனே என்றும் மகளே என்றும் அழைப்பதற்கும், அவர்களுக்கு சொத்தில் பெற்ற மகன் மகளுடைய பங்குகளைப்போல் பிரித்துக்கொடுப்பதற்கும் தான் அனுமதியில்லை. மேலும் தமது வளர்ப்பு குழந்தைகளுக்கு தனது சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை (1/3) வஸீய்யத் என்னும் உயில் எழுதிவைப்பதில் எந்த தவறும் இல்லை. அவ்வளர்ப்பு பெற்றோர் உயிருடன் இருக்கும் நாட்களில் தம் வளர்ப்பு குழந்தைகளுக்கு பரிசாக எதையும் கொடுப்பதற்கும் இஸ்லாம் அனுமதிக்கிறது.
பலதாரமணம் இந்தியாவைப் பொறுத்தவரை, முக்கியமாக பெண்களால், ஒரு வெறுக்கத்தக்க காரியமாகவே கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பல ஊர் ஜமாஅத்துகள், முதல் மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், இரண்டாம் திருமணத்திற்கு அனுமதி கொடுக்க மறுக்கின்றனர். காரணம் என்னவெனில் முதல் மனைவியின் குடும்பத்தினர் ஜமாஅத்தார்கள் மீது கோபம் அடைவார்கள் என்பதும், ஊரில் இருக்கும் இளைஞர்கள், கட்டுப்பாடற்ற முறையில் இரண்டு அல்லது மூன்று திருமணங்கள் செய்யதலைப்படுவார்கள் என்பதுதான். அப்படி ஒரு நிலைமை உருவானால் அதற்கு அடிப்படைக் காரணங்களை (root causes) ஆராயவேண்டுமேயல்லாது விளைவுகளைக் குறைக்கூறக்கூடாது. அல்லாஹ் (சுப்) அனுமதித்த பலதாரமணத்தை தடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.
இஸ்லாமிய திருமணங்களில் பெண்ணுக்கு மஹர் (மணக்கொடை) கொடுத்து திருமணம் செய்ய வேண்டுமென்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. அந்த மஹரை பெண்ணே தனது தகுதிக்கும், அழகுக்கும், படிப்பிற்கும் தகுந்தவாறு பணமாகவோ அல்லது பொன்னாகவோ கேட்க அனுமதியளித்துள்ளது. ”உங்கள் மனைவியருக்கு ஒரு பொற்குவியலே மஹராகக் கொடுத்திருப்பினும் அவற்றைத் திரும்ப பெறக்கூடாது” என்ற திருமறைவசனம் மூலம் ஒரு பொற்குவியலே திருமணத்திற்கு மஹராக ஒரு பெண்ணுக்கு அளிக்கலாம் என்று இறைவன் அனுமதித்துள்ளான்.
நிலைமை அவ்வாறிருக்க, நம் ஊர் ஜமாத்தார்கள் பெண்களின் மஹர் தொகையாக ரூபாய் 501 ம், அல்லது ரூபாய் 1001 ம் நிர்ணயம் செய்வது எவ்வகையில் நியாயம்? மஹர் நிர்ணயம் செய்யும் காரியத்தை பெண் வீட்டாரிடமும் மாப்பிள்ளை வீட்டாரிடமும் விட்டுவிடுவதும், அவர்கள் கலந்தாலோசித்து எந்தத்தொகையை மஹராக ஏற்றுக்கொள்கிறார்களோ அதையே ஜமாத்தார்களும் ஏற்றுக்கொள்ளுதல் அல்லாஹ் காட்டிய வழியில் செல்வதாக இருக்கும் அல்லவா?
இன்னொரு சமூகக்கொடுமை நமது முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடிய புற்றுநோய் போல் காணப்படுவது பெண்வீட்டாரிடத்தில் மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் வரதட்சனை தான். இவ்வரதட்சனை பணமாக மட்டும் கேட்கப்படுவதில்லை. பணமும், அதோடு சேர்த்து தங்க நகைகளும், வீட்டுச் சாமான்களும், நூற்றுக்கணக்கான நபர்களுக்கு விருந்தும், மேலும் திண்பண்டப் பொருள்களும் இவற்றில் அடங்கும். இக்கொடுமை மாற்றுமதத்தார்களிடமிருந்து முஸ்லிம்கள் இறக்குமதி செய்தது.
இஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டிருந்தும், வரதட்சனை கொடுமையால் பெண்ணைப் பெற்றவர்கள் படும்பாடு சொல்லிமாளாது. படிக்காத பெண்களுக்கு திருமணம் செய்வதற்குதான் வரதட்சனை கொடுக்கவேண்டும் என்றிருந்த காலம்போய், மேல்படிப்பு படித்து நல்ல உத்யோகத்தில் கைநிறைய சம்பளம் வாங்கும் பெண்ணிடமே வரதட்சனை கேட்கின்ற கொடுமையை என்னவென்று கூறுவது! வரதட்சனை முஸ்லிம் சமுதாயத்தில் முற்றாக ஒழிந்தால் பெண்களுக்கு விரைவிலேயே திருமணம் ஆகி அதிக குழந்தைகள் பெற வழி ஏற்படும்.
பொதுவாக திருமணத்தின் மிகமுக்கிய அம்சம் கணவன் மனைவி இருவரும் பிரியாமல் வாழ்வது தான். இன்று தமிழக மற்றும் கேரள முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் திருமணமான பெரும்பாண்மையினர் மனைவியை தன் ஊரிலேயே விட்டுவிட்டு வெளிநாடுகளில் – வளைகுடா நாடுகளில் – பணியாற்ற செல்வது ஒரு அடிப்படை தேவையாக மாறிவிட்டது. திருமணம் ஆகி தன் மனைவியுடன் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தங்கிவிட்டு அவளை பிரிந்து வெளிநாடு செல்லும் கணவன், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை திரும்பிவருவதில்லை.
இதற்கிடையில் மனைவி கருவுற்றிருந்தால், பிள்ளை பிறந்து ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்து தான் மனைவியையும், தான் பெற்ற குழந்தையையும் நேரில் பார்க்கும் அவல நிலை நிலவுகிறது. இது இஸ்லாம் அனுமதிக்காத ஒரு வாழ்க்கை நிலைதான். இளமைக்காலங்களில் மனைவியை பிரிந்து வாழ்வதற்கு ஒரு வரம்பு உண்டு. அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் மனைவியோடு சேர்ந்து வாழுதல் இன்றியமையாதது.
இதுவரையில் குடும்பங்களில் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள எவ்வித வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்றும், அவ்வழிமுறைகளுக்கு தடைக்கல்லாய் இருக்கும் சமூகக்கொடுமைகளை களைவது பற்றியும் பார்த்தோம். இனி ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடையில் எவ்வளவு கால இடைவெளி இருக்கவேண்டுமென்பதை ஆராய்வோம்.
முதல் குழந்தை பிறந்த பிறகு அதன் பால்குடிக்கும் காலம் 24 மாதங்கள். ஆக அடுத்த குழந்தை கருவுறுவது 24 மாதங்களுக்கு தாமதப்படுத்த வேண்டும். இதுவே குர்ஆன் கூறும் வழிகாட்டுதல். ஆக ஒரு குழந்தையின் பிறப்பிற்கும், அடுத்த குழந்தையின் பிறப்பிற்கும் இடையே 2 வருடம் 9 மாதம் இடைவெளி ( அதாவது 3 வருடங்கள் முழு எண்ணாக) இருப்பது நலம்.
இக்கணக்குப்படி, ஒரு பெண் அதிகபட்சம், 8 முதல் 9 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள முடியும், அவளுடைய திருமண வயது 18 ஆகவும், மூன்றாண்டுக்கு ஒருமுறை ஒரு குழந்தை பெற்றுக்கொள்பவளாகவும் இருக்கும் பட்சத்தில்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
”இஸ்லாம் மயமாகும் ஐரோப்பா கண்டம்” கட்டுரையிலிருந்து
”Jazaakallaahu khairan” http://suvanathendral.com/portal/?paged=2