பர்தா(புர்கா) என்றால் என்ன?
சுமஜ்லா
ஒரு முஸ்லிம் சகோதரியின் பேட்டி:
பர்தா என்றால் என்ன?
பர்தா என்பது உடையல்ல, அது உடைக்கு மேல் அணியும் ஒரு அங்கி தான், அதைக் கழட்டினால் உள்ளே உடை இருக்கும்!!!
ஏன் பர்தாவால் மறைத்துக் கொள்கிறீர்கள்?
அழகாக உடை உடுத்தி, நகையெல்லாம் அணிந்து, பிறகு அதை பர்தாவால் மறைத்துக் கொள்கிறீர்களே?!
நாங்கள் திருமணம் போன்ற விஷேசங்களில், ஆண்களுக்கு தனி இடம், பெண்களுக்கு தனி இடம் என்று ஒதுக்கி இருப்போம். இருவரும் கலப்பதில்லை. ஆக, நாங்கள் வெளியே செல்லும் போது பர்தா அணிந்து சென்றாலும், திருமண மண்டபத்தில் பெண்கள் பகுதிக்கு சென்றதும் அதை கழட்டி பையில் வைத்து விடுவோம். பிறகு திரும்பும் போது, மீண்டும் அணிவோம். உறவுகளின் இல்லங்களுக்கு செல்லும் போது இதே போலத்தான்.
பர்தா அணியச் சொல்லி கட்டாயப்படுத்துவது யார்?
எங்கள் பெண்களிடம் ஏன் என்னிடமும் கணவர் உட்பட எந்த ஒரு ஆணும் கட்டாயப்படுத்தியதில்லை. நானே விரும்பித் தான் அதை அணிகிறேன். அதன் சவுகரியங்களை உணர்ந்த எந்த ஒரு பெண்ணும், பர்தா இல்லாமல் வெளியே செல்வதை விரும்புவதில்லை.
பர்தா ஏன் அணிகிறோம்?
எங்களுடைய அழகும் வனப்பும் கணவருக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிறோம். இது ஒரு வித சுயநலம் போலத்தான் தெரியும். ஆயினும், எங்கள் வளர்ப்பு முறை அப்படி! ஆக, வெளி ஆண்கள் யாரும் எங்கள் உடலின் தோற்றத்தைப் பார்ப்பது எங்களுக்கு விருப்பமில்லை! அதற்காகத்தான் பர்தா அணிகிறோம்.
பர்தாவால் என்ன நன்மைகள்?
மதரீதியாக உள்ள விஷயங்கள் தனி! என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட நன்மைகள் என்னவென்றால், நைட்டில் போன்ற எந்த உடை அணிந்திருந்தாலும், தலை வாரி இருந்தாலும் இருக்காவிட்டாலும், உடனே நினைத்தவுடன் வெளியே கிளம்ப முடிகிறது. பொதுவாக பெண்கள் வெளியே கிளம்ப அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், கணவர் கோபித்து சண்டைகள் வருகின்றன. பர்தா காரணத்தால், எங்களிடையே அவ்வித சண்டைகள் வந்ததில்லை.
பர்தாவினால் ஏற்படும் தீமைகள்?
பர்தா என்பது அடுத்தவர் கவனத்தில் இருந்து நம்மை மறைப்பதற்கே ஆகும். ஆனால், நவநாகரிக யுகத்தில், மிகுந்த வேலைப்பாடு மிக்க பர்தா அணிகின்றனர். இது அடுத்தவரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து, பர்தா அணியும் நோக்கத்தையே பாழ்படுத்தி விடுகின்றது. அதோடு, வேலைப்பாட்டுக்காக அதிக பணம் செலவளிக்க நேர்ந்து கணவர்களின் பர்ஸையும் பதம் பார்க்கிறது. கலர்கலராய் வேலைப்பாடு உள்ள பர்தாக்களை நான் ஒரு போதும் அணிவதில்லை!
ஆண்கள் மட்டும் ஏன் பர்தா அணிவதில்லை?
நிச்சயமாக எங்கள் மதத்தில் ஆண்களுக்கும் பர்தா இருக்கிறது. ஆனால் அது வேறு விதம். ஆணும் பெண்ணும் உடல் தோற்றத்தில் வேறு வேறு மாதிரி இருக்கும் போது, எப்படி இருவருக்கும் ஒரே மாதிரி பர்தா அணிய முடியும்?
ஆண்களுக்கு தாடியும் நீளமான அங்கியும் தொப்பியும், தொப்புள் முதல் முட்டுக்கால் வரை மறைப்பதும் அவர்களுடைய பர்தா போலத்தான். அதோடு, பெண்களைப் பார்த்தால், தம்முடைய பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும்படி அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டிருக்கிறது. எப்படி ஒரு சில முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதில்லையோ, அது போல ஒரு சில ஆண்களும் இதை சரிவர பின்பற்றுவதில்லை. இது அவரவர் தனிப்பட்ட விஷயம்.
ஏன் ஒரு சில முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதில்லை?
அதற்குக் காரணம், அவர்களின் வளர்ப்பு தான். நற்குடியில் பிறந்து, இஸ்லாமிய பாரம்பரியப்படி வளர்க்கப்படும் அனைவரும் நிச்சயமாக பர்தாவை விரும்புவார்கள். பொதுவாக ஒரு குடும்பத்தில் பெண் எடுக்கும் போது, அக்குடும்பப் பெண்கள் பர்தா அணிபவராக இருந்தால்,விரும்பி பெண் எடுப்பார்கள்.
பர்தா அணிவது கஷ்டமாக இல்லையா?
உடை அணிவதை நாம் கஷ்டமாக நினைப்பதில்லையே! நாம் நம் கைகளை ஓரளவுக்கும், உடலின் சில பாகங்களையும், உடையினால மறைத்துக்கொள்கிறோம். கையின் பெரும்பகுதியும், கழுத்தும் முதுகும் இடுப்பும் தெரியும்படியாக சேலை கட்டுகிறோம்.
இன்னின்ன இடத்தை மறைக்க வேண்டும், இன்னின்ன இடத்தை மறைக்க வேண்டியதில்லை என்று தீர்மானித்தது யார்? முதன்முறையாக சேலை உடுத்தும் பெண், இடுப்பு வெளியே தெரியும் போது, சற்று சங்கோஷமடைவாளல்லவா? அது போலத்தான், மீதியுள்ள பாகங்களான கழுத்து, கை முதுகு ஆகியவை வெளியே தெரியும் போது, நாங்கள் அவமானப்படுகிறோம். ஆக, பர்தா அணியாமல் இருந்தால் தான் எங்களுக்கு கஷ்டம்.
காலத்துக்கேற்றபடி மாற்றிக்கொள்ளாமல் ஏனின்னும் பர்தா அணிகிறீர்கள்?
பர்தா அணிவதால், எம்மினப் பெண்களின் வளர்ச்சி தடைபடுவதில்லை. மாறாக, படிக்கும் காலத்தில் காதல்வலையில் வீழ்ந்து தம்மை இழந்துவிடாமல், நேரிய வழியில் செல்வதற்கு இது ஏதுவாக இருக்கிறது. பர்தா அணிந்தாலும், நாங்கள் விரும்பியதைப் படிக்கிறோம். விரும்பிய துறையைத் தேர்ந்தெடுத்து முன்னேறுகிறோம்.
சைவ சித்தந்தக் கொள்கையின் பட்டையையும், திருமால் பக்தர்களின் நாமத்தையும், பார்ப்பனீயர்களின் பூணூலையும், பாதிரிகளின் அங்கியையும், கன்னியாஸ்த்திரிகளின் ரோஸரியையும், சீக்கியர்களின் டர்பனையும் புரிந்து கொண்டு அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். அதே போல எம்மையும், எம்’பர்தா’வையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த இடுகை!
”Jazaakallaahu khairan” http://sumazla.blogspot.com