தன்னம்பிக்கையோடு வெற்றிநடை போடுவோம்
[ நாம் ஆற்றல் நிறைந்தவர்கள்; நமது மனம் ஆற்றலின் இருப்பிடம் என்ற பலம் மிக்க எண்ணங்கள் நமது மனங்களில் உதயமாகட்டும். அப்போது தொடர்ச்சியாக எண்ணப்படும் இந்த எண்ணங்களின் வலு நம்மைத் தூக்கி நிறுத்தி சாதனையாளர்களாக்கும்.]
இன்றைய தேதியில் உலகம் கொண்டாடும் ஒரு பிரபலம் விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங் தான். ஒருமுறைஹாக்கிங் சிறு சாலை விபத்தில் சிக்கி லேசான காயமடைந்தார். இது நடந்து சுமார் பத்துமணி நேரத்துக்குள் அமெரிக்காவின் அத்தனை டி.வி. சேனல்களும் அந்த நிகழ்ச்சியைப் பற்றி செய்தி சேகரிக்க அவரது வீட்டின் முன் குவிந்துவிட்டன.
இத்தனை புகழ் பெற்றவராக ஸ்டீவன் ஹாக்கிங் மாறிடக்காரணம் என்ன? அவரது “காலத்தின் சுருக்கமான வரலாறு’ (A Brief History of Time) என்ற புத்தகமா, பிரபஞ்சம் அல்லது பேரண்டத்தைப் பற்றிய அவரது ஆராய்ச்சி களா, பிரபஞ்சத்தின் தோற்றம், கருநிறைகள் (Block holes) போன்றவை பற்றிய அவரது கருத்துக்களா?
ஒரு வகையில் பார்க்கப்போனால் இவையெல்லாமே ஸ்டீவன் ஹாக்கிங்கின் புகழுக்குக் காரணம்தான். குறிப்பாக, சிக்கலான விஞ்ஞான உண்மைகளை உள்ளடக்கிய அவரது புத்தகம் ஜெஃப்ரி ஆர்ச்சர், ராபர்ட் லட்லம் போன்ற நாவலாசிரியர்களின் “பெஸ்ட்செல்லர்’களோடு போட்டி போட்டுக் கொண்டு கோடிக்கணக்கில் விற்றுத் தீர்ந்தது; ஸ்டீவன் ஹாக்கிங்கிற்கு கோடி கோடியாய் பணத்தைக் கொட்ட வைத்தது.
ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி சாதித்தது, ஸ்டீவன் ஹாக்கிங்கின் தன்னம்பிக்கை தான் என்பது ஹாக்கிங்கின் மருத்துவர், மனைவி, நண்பர்கள், பதிப்பகத்தார் ஆகிய எல்லோருமே தெரிந்த ஒரு உண்மைதான். ஹாக்கிங்கின் தளராத தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நவீன விஞ்ஞானத்தைக் கூட வாசகர்கள் விரும்பும் வகையில் ஜனரஞ்சகமாகத் தரமுடியும் என்பதில் அவர் கொண்டிருந்த ஆர்வம் மற்றும் உறுதி ஆகியவையே அவரைச் சாதனையாளர் ஆக்கின.
இருபத்தொரு வயதில் ‘Amyotrophic Lateral Sclerosis (ALS)’ என்னும் இயக்க நரம்புசெல் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டார் ஸ்டீவன் ஹாக்கிங். இது மிகவும் கொடுமையான நோய், நாளுக்கு நாள் உடலின் பாகங்கள் படிப் படியாக செயலிழந்துகொண்டே வரும். ஆனாலும், மனம் தளர்ந்துவிடாமல் மிகுந்த மன வலிமையோடு, தன்னம்பிக்கையோடு, விடா முயற்சியுடன் அயராது உழைத்தார். ஸ்டீவன் ஹாக்கிங். இரண்டே வருடங்களில் இறந்து விடுவார் என்று மருத்துவர்கள் கெடு விதித்ததை யும் மீறி இன்றைக்கும் தனது 66 வயதில் விஞ்ஞான உலகின் இரண்டாவது ஐன்ஸ்டீன் என்ற புகழோடு ஸ்டீவன் ஹாக்கிங் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என்றால் இதற்குக் காரணம் அவரது தன்னம்பிக்கையன்றி வேறு என்ன?
உலகில் எல்லா விலங்குகளின் வளர்ச்சியும் கிடைமட்டத்தில்தான் இருக்கிறது. ஆனால், மனிதன் மட்டும் தான் உயரே வளர்கிறான். தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து நிற்பவனும் அவனே. வளர்ச்சி, முன்னேற்றம், சாதனை இவையெல்லாம் மனிதனுக்கு மட்டுமே சாத்தியம். அளப்பரிய ஆற்றல் நம்மிடம் மட்டுமே இருக்கிறது.
நம் மனதில் கோடிக்கணக்கான சூரியன் களின் ஆற்றல் அழியாத ஜீவ சைதன்யமாக உறைந்திருக்கிறது. ஆனால் நாமோ நமது ஆற்றலை மறந்துவிட்டு, சக்திகளை ஒதுக்கி விட்டு பலவீனர்களாக நம்மைக் கருதிக்கொண்டு ஒருவகை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறோம்; பிரச்சனைகளால் சூழ்ந்து கிடக்கிறோம்; பயம், கவலை, சந்தேகம், வேதனை, விரக்தி போன்றவற்றால் வீழ்ந்து கிடக்கிறோம்.
ஒரு குட்டிக்கதை
ஒரு கதை உண்டு. பிறந்து கண்கூட விழித்திராத ஒரு சிறிய சிங்கக்குட்டி தன் தாயிடமிருந்து எப்படியோ வழிதவறிவிட்டது. அந்த வழியாக வந்த ஆட்டுமந்தையிடமிருந்து ஒரு ஆடு அந்தச் சிங்கக்குட்டியை எடுத்துவந்து பாலூட்டி வளர்த்தது. நாளடைவில் ஆட்டு மந்தையுடன் வளர்ந்த சிங்கக்குட்டி ஆடு போலவே புல் மேய்ந்து மே! மே! என்று கத்தவும் ஆரம்பித்தது. பெரிய சிங்கமாக அது வளர்ந்து விட்ட போதிலும்கூட, அது அப்படியே தான் ஆட்டு மந்தையோடு மந்தையாக வலம் வந்தது.
சிலகாலம் கழித்து அந்த வழியாக வந்த வேறு ஒரு சிங்கம் தன்னைப் போன்றஒரு சிங்கம் ஆட்டுமந்தையிலுள்ள ஆடுகளுடன் ஒன்றாகப் புல் மேய்வதையும் “மே! மே!’ என்று கத்துவதை யும் பார்த்து அதிசயித்துப் போனது. உடனே அந்த சிங்கத்துடன் பேச விரும்பியது. ஆனால், ஆட்டு மந்தைச் சிங்கமோ இந்த சிங்கத்தைப் பார்த்து ஆடுகளைப் போலவே பயந்து ஓடியது. எனவே இரண்டாவது சிங்கத்தால் ஆட்டு மந்தைச் சிங்கத்துடன் பேசமுடியாமல் போனது.
ஒருநாள் இரண்டாவது சிங்கத்துக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த சிங்கம் ஆட்டுமந்தைச் சிங்கத்தைப் பார்த்து, “நீ ஒரு சிங்கம். ஆட்டு மந்தையுடன் ஏன் சுற்றித் திரிகிறாய்?’ என்று கேட்டது. ஆனால், முதல் சிங்கமோ, “இல்லை, நான் ஆடு தான்’ என்ற படியே “மே! மே!’ என்று கத்தியது. உடனே இரண்டாவது சிங்கம் “அப்படியா என்னுடன் வா’ என்று கூறியபடியே முதல் சிங்கத்தை இழுத்துச் சென்று சற்றுத் தொலைவிலிருந்த ஒரு நீர்நிலைக்கு அழைத்துச் சென்று தத்தம் உருவப் பிரதிபலிப்புகளைக் காட்டி “என்னுடைய உருவம், உன்னுடைய உருவம் இரண்டையும் தண்ணீருக்குள் பார்’ என்றது. ஆட்டுமந்தைச் சிங்கமும் தண்ணீருக்குள் பார்த்தபோது தானும் ஒரு சிங்கம் தான் என்று உணர்ந்தது. அத்துடன் அந்த சிங்கத்தின் கத்தல் அகன்றதோடு கம்பீரமான முழக்கம் அதன் வாயிலிருந்து வெளிப்பட்டது.
மனிதர்களும் இப்படித்தான்
மனிதர்களும் இப்படித்தான்! தத்தம் சிறுவயதிலிருந்தே தவறான கருத்துக்கள் திணிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள். நாம் பலவீனர்கள், ஆற்றல் குறைந்தவர்கள் என்றெல்லாம் நம்மை நாமே நினைத்திடும் நிலைக்கு ஆளாகிக் கொள்கிறோம். வழிதவறிய சிங்கம் போலவே நமது ஆற்றலை நாமே குறைத்து மதிப்பிட்டு ஆடுகளைப் போல் கதறிப் பதறித் தவிக்கிறோம்.
நம்மிடம் பலவீனம் இருப்பதாக நாம் ஏன் நினைக்க வேண்டும்? நாம் எப்படிப் பார்க்கிறோமோ அப்படித்தான் இந்த உலகமும் தோற்றமளிக்கும். இருட்டில் ஒரு வெட்டப்பட்ட மரம் நிற்கிறது. அதைப் பார்க்கும் திருடன் அதைப் போலீஸ்காரர் என்று நினைத்து பயப்படுகிறான். காதலியைத் தேடிவரும் காதலனோ அவள்தான் அங்கு நிற்கிறாள் என்று எண்ணி ஆசையுடன் அதை நோக்கி விரைகிறான். பேய்க்கதைகள் கேட்ட ஒரு சிறுவனோ அதை ஆவி என்று கருதி ஓடி ஒளிகிறான். ஆனால், இத்தனைக்கும் அந்த மரம் மரமாகவே தான் இருக்கிறது.
நாம் ஆற்றல் நிறைந்தவர்கள்
நாம் ஆற்றல் நிறைந்தவர்கள்; நமது மனம் ஆற்றலின் இருப்பிடம் , ஆற்றலின் உறைவிடம், என்றபலம் மிக்க எண்ணங்கள் நமது மனங்களில் உதயமாகட்டும். அப்போது தொடர்ச்சியாக எண்ணப்படும் இந்த எண்ணங்களின் வலு நம்மைத் தூக்கி நிறுத்தி சாதனையாளர்களாக்கும்.
இப்போது நாம் எழவேண்டிய நேரம் வந்துவிட்டது. மனதின் மகத்தான ஆற்றலை மானிட குலம் புரிந்து கொள்ளும் தருணம் வாய்த்துவிட்டது. “எழுமின்! விழிமின்!’ என்ற விவேகானந்தரின் வீரவார்த்தைகள் காற்றில் பறக்கும் பஞ்சுக்கே, விடுபட்ட துப்பாக்கிக் குண்டின் வேகத்தைத் தரும்போது நமக்குத் தராதா என்ன? எனவே இனியும் வேண்டாம் உறக்கம். அறியாமையும், சோம்பலும், கவன மின்மையும் நமது தேசிய சொத்துக்களாக இருந்தது போதும். இனி விழித்திடுவோம்; எழுந்திடுவோம்; வெற்றிப்பாதையில் வீரநடை போட்டிடுவோம்!
தளராத தன்னம்பிக்கையோடு வெற்றிநடை போடவேண்டியது நாம் மட்டுமல்ல. நமது அருமைக் குழந்தைகளின் மனதிலும் “நாம் ஆற்றல் வாய்ந்தவர்கள்; சாதிக்கப் பிறந்தவர்கள்’ என்ற நம்பிக்கையூட்டும் நேர்மறை எண்ணங் களையே, வீறுகொண்டு எழவைக்கும் வெற்றிச் சிந்தனைகளையே விதைப்போம்.
உன்னத சிந்தனைகளால் உள்ளங்களை நிரப்புவோம்; உயரங்களைத் தொடும் உரம்வாய்ந்த உறுதிமனிதர்கள் நிறைந்த ஏற்றமிகு எதிர்காலத்தை எளிதாய்ப் படைத்திடுவோம்.
இது ஒரு சாத்தியமான சத்தியம்.
”jazaakallaahu khairan”