[ சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்பு பெருமை பாராட்டாமல், கர்வம் கொள்ளாமல் உடனே இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். மிகப்பெரும் வில்வித்தை வீரர்; அதே சமயம் மிகவும் அமைதியானவர். எங்காவது முஸ்லிம்களின் படை கிளம்பிச் சென்றால் ஜிஹாத் செய்ய உஸைதும் கிளம்பிச் செல்வார்; இல்லையென்றால் வீட்டில் தனியாக உட்காந்து குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பார்.]
மினாராக்களைப் பார்த்திருக்கிறீர்களா? பள்ளிவாசல்களில் இருக்குமே மினாராக்கள். அவை எவ்வளவு உயரமாக இருக்கின்றன! காலை நேரத்தில் சூரியன் உதிக்கும்போது சூரியனுடைய ஒளிக்கதிர்கள் உயரமான மினாராக்களின் மீதும் தான் முதலில் படுகின்றன. சாதாரண கட்டிடங்களின் மீதும் வீடுகளின் மீதும் அதற்கு அப்புறம் தான் கதிர்கள் விழுகின்றன. இந்த உலகத்தில் ஓரிறைவனைப் பற்றிய உண்மையை மக்களிடம் சொல்ல ஆரம்பிக்கும் போது உயர்ந்த சிந்தனையைக் கொண்டவர்கள் தாம் முதன்முதலில் ஏற்றுக் கொள்கிறார்கள்.
மதீனா நகரில் இஸ்லாமிய ஒளியை ஏற்றுவதற்காக முஸ்அப் ரளியல்லாஹு அன்ஹு முன்னதாகவே சென்றுவிட்டார். அஸ்அத் என்பவர் வீட்டில் முஸ்அப் ரளியல்லாஹு அன்ஹு தங்கி இருந்தார். முஸ்அப் ரளியல்லாஹு அன்ஹு வெகு அழகாக குர்ஆனை ஓதுவார். மிகவும் இனிமையாகப் பேசுவார். மக்களுக்கு எளிதில் புரியும் விதத்தில் இஸ்லாமிய கருத்துகளை எடுத்து வைப்பார். அல்குர்ஆனை அழகாக விளக்குவார். மெய்மறந்து மக்கள் கேட்பார்கள்.
பக்கத்தில் ஒரு முஹல்லா இருக்கின்றது வாருங்கள் அங்கே சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களுக்கும் இஸ்லாமைப பற்றி சொல்லிவரலாம் என்று ஒருநாள் அஸ்அத் அழைத்தார். இருவரும் கிளம்பிச் சென்றார்கள். அங்கே ஒருதோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் போய் உட்கார்ந்து கொண்டார்கள். அவர்கள் இருவரைச் சுற்றியும் மக்கள் கூடிவிட்டார்கள். கூடியிருந்த அந்த மக்களுக்கு நல்லமுறையில் அழகாக இஸ்லாமை முஸ்அப் விளக்கிக் கொண்டிருந்தார்.
”இந்த உலகை படைத்தது ஓரே இறைவன் தான்! இந்த ஒரே இறைவனை மட்டும் தான் வணங்கவேண்டும்!அவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது!கற்சிலைகளையோ, மரங்களையோ, இறந்த மனிதர்களையோ வணங்குவது பெரும்பாவம்!” என்றெல்லாம் முஸ்அப் விளக்கினார். இறைவனின் வேதத்தை ஓதிக்காட்டினார்.
ஒரு மனிதருக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. அவர் நேராக மதீனா மக்களின் தலைவர்களான ஸஅத் மற்றும் உஸைதிடம் சென்று இதைத் தடுத்து நிறுத்துமாறு கூறினார். அதைக் கேட்ட ஸஅத், உஸைதிடம், ”என்ன நடக்கின்றது? என்று விசாரித்து வாருங்கள்! ஒருவேளை வெளியூர்க்காரரான அந்த மனிதர் நம்முடைய தெய்வங்களைப் பற்றி கேவலமாகப் பேசினால் அவரை எச்சரித்துவிட்டு வாருங்கள்”! என்று சொல்லி அனுப்பினார். மதீனாவின் தலைவர்களுள் உஸைத் முக்கியமானவர்! உஸைத் என்றால் இளஞ்சிங்கம் என்று அர்த்தம்!!
நிதாமான அடிமேல் அடிவைத்து வந்து கொண்டிருந்த உஸைதை தூரத்திலேயே அஸ்அத் பார்த்துவிட்டார். உஸைதை சுட்டிக்காட்டி முஸ்அப்பிடம் அவர் கூறினார். ”இதோ வருகிறாரே, இவர்தான் உஸைத் பெருந்தன்மையதனவர்; கண்ணியமானவர்! இவர் மட்டும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் இவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அதாவது மதீனாவில் பாதிப்பேர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம்! ஆகையால் எப்படியாவது இவருக்கு இஸ்லாமைப் புரியவைத்து விடுங்கள்” நேராக வந்த உஸைத் முஸ்அபுக்கு முன்னால் நின்றுகொண்டார்.
”எங்களுடைய அனுமதி இல்லாமல் எங்கள் முஹல்லாவில் என்ன பிரச்சாரம் செய்கிறீர்கள்? எதற்காக எங்களுடைய தெய்வங்களை எல்லாம் குறை கூறுகிறீர்கள்? எங்கள் மக்களில் பலவீனமான மக்களை ஏன் மதம் மாற்றுகிறீர்கள்?” என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போனார்.
மெதுவாக முஸ்அப் தம்முடைய தலையை தூக்கிப் பார்த்தார். ஒரே இறைவனை மட்டும் வணங்கபவர்களுடைய முகங்கள் எப்போதும் ஜொலித்துக் கொண்டே இருக்கும் அல்லவா? முஸ்அப்புடைய முகம் தகதகவென்று ஜொலித்துக் கொண்டிருந்தது.
”எங்களுடைய தலைவரே! தயவுசெய்து நான் சொல்லும் நல்ல வார்த்தையைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும்”
”அது என்ன நல்ல வார்த்தை? என்று கேட்டார் உஸைத்.
”கொஞ்ச நேரம் உட்காந்து கேட்டுப் பாருங்கள்! உங்களுக்கு சரி என்று தோன்றினால் மேற்கொண்டு கேளுங்கள்! பிடிக்கவில்லை என்றால் நாங்கள் இந்த இடத்தை விட்டே சென்று விடுகிறோம்” என்று அமைதியாகக் கூறினார் முஸ்அப்.
”அப்படியா! நீங்கள் சொல்வதும் நியாயமாகத் தான் படுகின்றது” என்று சொல்லிவிட்டு தன்னுடைய ஈட்டியை நிலத்தில் ஊன்றிவிட்டு கீழே உட்கார்ந்து கொண்டார்.
இஸ்லாம் என்றால் என்ன? ஒரே இறைவனை மட்டும் ஏன் வணங்கவேண்டும்? இறைவனின் வேதம் அல்குர்ஆன் என்றால் என்ன? என்பதைப் பற்றி எல்லாம் முஸ்அப் விளக்கினார். அல்குர்ஆன் வசனங்களையும் ஓதிக்காட்டினார். தூய்மையான உள்ளங்கள் சத்தியத்தை வெகுவிரைவில் அடையாளம் கண்டுகொள்கின்றன.
”அப்படியா! நீங்கள் சொல்வதுதான் உண்மை என்று எனக்குத் தோன்றுகின்றது. ஒரே இறைவனை வணங்க வேண்டும் என்றால் நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார் உஸைத்.
”நீங்கள் உங்கள் உடலைத் தூய்மை செய்துகொண்டு ஒரே இறைவனை மட்டும் வணங்குவேன்: முஹம்மதை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இறைவனின் தூதராக ஏற்றுக் கொண்டு பின்பற்றுவேன் என்ற உறுதிமொழியை வாய்வார்த்தைகளாகக் கூறவேண்டும்” முஸ்அப், உடனே எழுந்து பக்கத்தில் உள்ள கிணற்றுக்குச் சென்றார். நன்றாக உடம்பைத் தேய்த்து கழுவினார். ”அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ” என்று கூறி ஒரே இறைவனை மட்டும் வணங்கும் தூய முஸ்லிம்களின் கூட்டத்தோடு தன்னையும் இணைத்துக் கொண்டார். மதீனாவின் தானைத்தலைவர்,
சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்பு பெருமை பாராட்டாமல், கர்வம் கொள்ளாமல் உடனே இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். மிகப்பெரும் வில்வித்தை வீரர்; அதே சமயம் மிகவும் அமைதியானவர். எங்காவது முஸ்லிம்களின் படை கிளம்பிச் சென்றால் ஜிஹாத் செய்ய உஸைதும் கிளம்பிச் செல்வார்; இல்லையென்றால் வீட்டில் தனியாக உட்காந்து குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பார்.
உஸைத் ரளியல்லாஹு அன்ஹு. அவர் மக்களின் தலைவராக இருந்தும் அல்லாஹ்வுக்காக எல்லாவற்றையும் உதறித்தள்ளினார். இறைவனுக்குப் பிரியமானவராக மாறினார். இறைவனும் அவரை மிகவும் நேசித்தான். நாமும் அவரை நேசிப்போம்: அவரைப் போல மாற ஆசைப்படுகிறோம்.
”Jazaakallaahu khairan”
http://islamiyappaarvai.blogspot.com/2008_07_01_archive.html