”வனத்திலிருந்து பூமிவரையிலுமுள்ள காரியத்தை அவனே நிர்வகிக்கின்றான். நான் அவனிடமே மேலேறிச் செல்லும் அதன் அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்” (அல் குர்ஆன்- 32:5).
இந்த உலகில் மனிதன் வாழும் காலகட்டங்கள் இன்று கணக்கிட்டு அனுபவிக்கக் கூடிய கணக்குப்படி இருக்கிறது. அதாவது பூமி தன்னைத் தானே சுற்றி வருவதை ஒரு நாள் என்று மனிதன் கணக்கிட்டுக் கொண்டான். பூமியின் இந்த இயக்கம் மனிதனின் பலவீனத்திற்கேற்ப இறைவனால் தீர்மானிக்கப்பட்டதாகும். அவனது உழைப்பிற்கும், ஓய்விற்கும் ஏற்ற இயக்கமாகும் இது.
மனிதன் உழைப்பதற்காகப் பகலையும், அவன் ஓய்வு பெறுவதற்காக இரவையும் ஏற்படுத்தியுள்ளதாக இறைவன் தன் திருமறையில் (குர்ஆனில்) பல இடங்களில் குறிப்பிடுகிறான்.
பூமியின் இந்த இயக்கம் மொத்த பிரபஞ்சத்துடைய இயக்கமல்ல. பூமியை தவிர்த்து இதர கோள்கள் மற்றும் பிரபஞ்சத்துடைய நகர்வு எதுவும் பூமி இயங்கும் வேகத்தில் இயங்கக் கூடியதல்ல. இதைவிட வேகமாகவோ மெதுவாகவோதான் சுழல்கின்றன. மனிதன் வகுத்துள்ள நாள், மாதம், வருடம் என்பது இந்த பூமிக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகும்.
பூமியின் இந்த சுழற்சி, வருடங்களோடு மனிதனின் வயதையும் தீர்மானிக்கிறது. ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பதை உணர்த்துவது பூமியின் இயக்கம்தான்.
இந்தப் பூமியில் வாழத்துவங்கிய மனிதன், ஆரம்பகாலத்தில் நீண்ட காலம் வாழத்துவங்கி பல்வேறு காரணங்களால் மனிதனின் வயது சுருங்கி இன்று சராசரியாக அறுபது, எழுபது ஆண்டுகள் வாழ்ந்தாலும்; அவனது ஆணவமும், திமிர்தனமும் மட்டும் குறையவேயில்லை. இதற்குக் காரணம் வாழ்வின்மீது அவனுக்குள்ள போராசைதான்.
இந்தப் பேராசையை இடித்துரைக்கும் விதமாகப் பேசும் வசனங்களில் ஒன்று மேற்குறிப்பிட்ட வசனத்தை ஒத்தே அமைந்துள்ளது. ”வேதனையை அவர்கள் அவசரமாகத் தேடுகிறார்கள். அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. மேலும் உம்முடைய இறைவனிடம் ஒருநாள் என்பது நீங்கள் கணக்கிடுகின்றன ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.” (அல் குர்ஆன்- ஸூரா; அல்ஹஜ் – 22:47)
இறைவனின் வேதனையைப் பற்றி மனிதனிடம் எச்சரிக்கப்படும் போது நான் இவ்வளவு காலம் வாழ்கிறேன், ஏன் இறைவனின் தண்டனை வரவில்லை என்று அவன் கேட்கிறான். மனிதனைப் பொறுத்தவரை அவனுக்கு இந்த வாழ்க்கை நீண்டதாகத் தெரியலாம். இறைவனின் பார்வையில் இது ஒன்றுமே இல்லாதது. அதிகபட்சமாக நீங்கள் ஆயிரம் ஆண்டுகளைக் கணக்கிட்டால் அல்லது வாழ்ந்தால் அதையே இறைவன் ஒரு நாள் என்றுதான் எடுத்துக் கொள்கிறான். ஆயிரம் ஆண்டு வாழ்க்கையையே ஒருநாள் வாழ்க்கை என்று தீர்மாணிக்கப்பட்டால் அறுபது, எழுபது வருட வாழ்வின் நிலை என்ன, ஒரு சிலமணி நேர வாழ்க்கையே ஆகும்.
”பூமியின் இயக்கத்தால் கணக்கிடப்படக்கூடிய ஆண்டுகளை மனிதன் கருத்தில் எடுத்துக் கொண்டு இருமாப்பு கொள்வதால், நீ பூமியில் ஒரு சில மணி நேரம்தான் வாழ்ந்தாய் என்று மனிதனிடம் கூறினால், இவனால் ஏற்றக்கொள்ள முடியவில்லை. மரணத்திற்குப் பிறகுள்ள மறுமை நாள் விசாரணையில் இந்த பூமியின் சுழற்சி இருக்கிறது, இந்த கணக்கீடு அன்றைய தினம் செல்லாக்காசாகி விடும். அன்றைக்கு மனிதனால் இந்த பூமி வாழ்க்கையைக் கணக்கிட்டுக்கொள்ள முடியும். ‘அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில் தாங்கள் பகலில் சொர்ப்ப காலமே அவ்வுலகில் தங்கி இருந்ததாக (விளங்கிக்கொள்வார்கள்)” (அல் குர்ஆன்- ஸூரா; யூனுஸ் – 10:45).
மறுமையில் மனிதர்கள் அனுபவிக்கும் பகல் பொழுதோ அல்லது இரவுப் பொழுதோ அல்லது இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஒரு பொழுதோ இந்த பூமியுடைய பொழுதுகளோடு கொஞ்சம்கூட ஒத்திருக்காது. அங்கு நடக்கும் நிகழ்வுகளும், விசாரனைகளும் மிக நீண்ட நெடிய பொழுதுகளைக் கொண்டதாக இருக்கும். அங்கு நடக்கும், அதாவது இறைவனை நோக்கிச் செல்லும் விசாரனை ஒரு நாளைக் கடப்பது பூமி இயக்கத்தின் ஆயிரம் வருடங்களுக்கு ஒப்பானதாகும். அல் குர்ஆன் 32:5 வது வசனத்தில் இடம்பெறும் ”அவனிடம் மேலேறிச் செல்லும் கால அளவு” என்பது மறுமைப் பொழுதைக் குறிப்பதாகவே விளங்க முடிகிறது. (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)
இக்கட்டுரையாசிரியருக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக.