லா இலாஹ இல்லல்லாஹ்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது. அவனின் சலாத், சலாம், பரக்கத் நம் உயிர்களைவிட உயர்ந்த மதிப்புள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீதும், அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது ஏற்படட்டும்.
இந்த இஸ்லாமிய செய்திக் குழு மூலமாக உங்களுக்கு அன்போடு ஒரு கோரிக்கை வைக்கின்றோம்.
நம்முடைய ஒவ்வொரு தொழுகையிலும் உலக முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக அல்லாஹ்விடம் மண்டாடுவோம்.
மற்றும் நம் பகுதி இஸ்லாமிய இயக்கங்களான சுன்னத் ஜமாஅத், ஜமாஅதுல்முஸ்லிமீன், ஜாக், ததஜ, தமுமுக, கிலாஃபத், ஜிஹாத், இதஜ மற்றும் இதுபோன்ற இயக்க சகோதரர்களின் உள்ளங்களுக்கு மத்தியில் உண்மையான ”லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வார்த்தையின் மூலம் நேசத்தை ஏற்படுத்துவோம்.
அல்லாஹ் கூறுகின்றான்…
إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
”நிச்சயமாக முஃமின்கள் (அனைவரும்) சகோதரர்களே.ஆகையால் உங்களுடைய சகோதரர்களுக்கு மத்தியில் சமாதானத்தை உண்டாக்குங்கள்.மேலும் உங்கள் மீது ரஹ்மத் (கருணை) செய்யப்பட வேண்டுமானால் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். (சூரா ஹுஜுராத் 49:10)
மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு மத்தியில் சீர்திருத்தத்தை ஏற்படுத்துவது,முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரச்சினைகள் இல்லாமல் வாழ்வது நம் கடமை என்பதை உணரலாம்.
அல்லாஹ் கூறுகின்றான்…
مَّن يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُن لَّهُ نَصِيبٌ مِّنْهَا
”(உங்களில்) எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அந்த (நன்மையில்) ஒரு பாகம் அவருக்கு உண்டு.(சூரா நிஸா 4:85)
மேலுள்ள வசனத்தின் அடிப்படையில், நீங்கள் ஒற்றுமை ஏற்படுத்தும் சிந்தனையை முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்படுத்துவோம் .உங்களின் ஒவ்வொரு முயற்சியின் மூலம் உங்களுக்கும் அவருக்கும் அல்லாஹ் நன்மையை ஏற்படுத்தலாம்.
அல்லாஹ் கூறுகின்றான்…
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ حَقَّ تُقَاتِهِ وَلاَ تَمُوتُنَّ إِلاَّ وَأَنتُم مُّسْلِمُونَ. وَاعْتَصِمُواْ بِحَبْلِ اللّهِ جَمِيعًا وَلاَ تَفَرَّقُواْ
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்ச வேண்டியமுறைப்படி அஞ்சுங்கள்.முஸ்லிம்களாகவே அன்றி மரணித்துவிடாதீர்கள்.மேலும் நீங்கள் ஒன்றாக சேர்ந்து (இஸ்லாம் என்னும்) அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப்பிடியுங்கள்.இதில் நீங்கள் பிரிந்துவிடாதீர்கள். (சூரா ஆல இம்ரான் 3:102,103)
அன்பான முஸ்லிம் சகோதரர்களே, மேற்கண்ட வசனம் உண்மையிலேயே அல்லாஹ்விடமிருந்து வந்ததுதான் என்று நாம் நம்பினால், கண்டிப்பாக இந்த வசனத்தை பின்பற்றுவோம்.இயக்கம் பார்க்காமல் அனைத்து முஸ்லிம்களையும் ஒற்றுமைப் படுத்துவோம்.அல்லாஹ் அதற்கு தவ்ஃபீக் – நல் உதவி செய்வானாக! ஆமீன்!
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُم فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ
مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي
لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَن كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُوْلَئِكَ هُمُ الْفَاسِقُونَ
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்.’அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள். இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.. (24:55)
யா அல்லாஹ்! நாங்கள் இழந்த ஃகிலாஃபத்தை மீண்டும் எங்களுக்கு கொடுப்பயாக!
மேலும் உனக்கு எந்நேரமும் நன்றி செலுத்தக்கூடிய மக்களாக எங்களை ஆக்குவாயாக!
இக்கட்டுரையாசிரியருக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக.