Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தத்ரூப வியாபாரிகள்

Posted on January 8, 2010 by admin

  எம்.ரிஷான் ஷெரீப் 

ஒரு பெரிய கடைக்குள் யாருமறியாமல் திருடவென நுழைகிறீர்கள். உள்ளே இரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதையும், அவை இயங்கிக் கொண்டிருப்பதையும் அவதானிக்கிறீர்கள். பூட்டப்பட்டிருக்கும் சாதாரண வீடொன்றுக்குள் பூட்டை உடைத்துச் சாமான்களை அள்ளிப் போவதைப்போல வெகு இயல்பாக அக் கடையிலும் பொருட்களை அள்ளியெடுப்பீர்களா? மாட்டீர்கள்.

காரணம் உங்களை உற்றுக் கவனிக்க ஆளிருக்கும்போது நீங்கள் எப்பொழுதும் இயல்பாக இருக்கமாட்டீர்கள். ஏதோ ஒன்று உங்களை உற்று நோக்கும்போது உங்கள் இயல்பு தொலைந்துவிடுகிறது. அவ்வாறு இயல்பு தொலைந்து, போலியாக யதார்த்த வண்ணம் பூசப்பட்ட ஆனால் இயல்பானதெனச் சொல்லிக் கொள்பவைதான் இன்றைய காலத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனேகமான ‘ரியாலிட்டி ஷோ’க்கள்.

அண்மையில் இவ்வாறான ரியாலிட்டி ஷோ மூலம் தனது வாழ்க்கைத் துணையைக் கண்டுகொண்டார் ‘ராக்கி சாவந்த்’. பதினாறு இளைஞர்கள், ராக்கியை மணக்கவென முன்வந்திருந்தார்கள். அவர்களுக்குப் பல போட்டிகள், பரீட்சைகள் வைத்து, ராக்கி இறுதியில் அதிலொருவரைத் தேர்ந்தெடுத்தார்.

ராக்கி சொல்லும் அனைத்தையும் செய்யக் காத்திருந்த இளைஞர்களைச் சூழவும் எப்பொழுதும் கேமராக்கள் மின்னிக் கொண்டிருக்கையில் இதனை ரியாலிட்டி ஷோ எனச் சொல்வது சரியில்லை. ஆனால் அப்படித்தான் சொல்கிறது NDTV. அதுதான் இந்த நிகழ்ச்சியைத் தயாரித்து, தொடர்ந்தும் ஒளிபரப்பி, நிறைய பணத்தையும் கண்டு, ராக்கிக்கு ஒரு துணையையும் தேடிக் கொடுத்து புண்ணியம் கட்டிக்கொண்ட தொலைக்காட்சி சேவை.

எப்பொழுதும் கேமராவுக்காக, அலங்காரம் மின்னும் முகங்களுக்குள் இயல்பான மனித வெளிப்பாடுகள் ஒளிந்துகொள்கின்றன. அதிலும் இது போன்றதொரு நிகழ்ச்சிக்காக, சுற்றிவர கேமராக்கள் சுழல, எப்படியும் சில நாட்களில் பல்லாயிரம் மக்கள் நம்மைப் பார்ப்பார்கள் என்ற உணர்வோடு ராக்கியைக் கவர்ந்திடத் தயாராகிய இளைஞர்கள் எல்லோரும் தங்களுக்குள் இருக்கும் குறைகளை, பாசாங்குகளை மறைத்து, கேமராவுக்குத் தங்கள் தரத்தை உயர்த்திக் காட்டும்படி, மிகவும் நல்லவர்களாக, திறமைசாலிகளாக வளையவந்தனர். இதில் எங்கிருக்கிறது யதார்த்தம்?

இது முழுக்க முழுக்க நாடகம். கதை, வசனம் இல்லாமல் ஒவ்வொருவரும் நடிக்கவைக்கப்படுகிறார்கள். அவ்வளவே. அவர்களில் பலரும் தங்களைச் சூழ எந்தக் கேமராவும் இல்லாத அன்றாட சாதாரண வாழ்க்கையின் போது இயல்பானதொரு வேற்றுமுகத்தைக் காட்டக் கூடும். எனவே பொதுவாகவே இவ்வாறான நிகழ்ச்சியின் மூலம் நல்ல துணையைக் கண்டடைவது என்பது சாத்தியமற்ற ஒன்று.

”நாங்கள் இவ்வாறான ரியாலிட்டி ஷோக்களில் யதார்த்தத்தைக் காண்கிறோம்’ என அந் நிகழ்ச்சிகளின் ரசிகர்கள் பலரும் சொல்லக் கூடும். இந் நிகழ்ச்சிகள் எல்லாமே கேமரா கவர்ந்துகொண்ட எல்லாக் காட்சிகளையுமே உலகுக்குக் காட்டிவிடுவதில்லை. இத்தனை வாரங்களுக்கென அவை செதுக்கப்படுகின்றன. அப்படிச் செதுக்கப்பட்டு ஒளிபரப்பப்படும் அங்கங்களில் கூட சம்பந்தப்பட்டவர்களின் அழுகைகளுக்கும், உணர்ச்சி வெளிப்பாடுகளுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

பார்வையாளர்களின் உணர்ச்சிகளைத் தொடுவதன் மூலமே இந்த ‘ஷோ’க்களின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்பதனை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நன்கு உணர்ந்திருக்கின்றனர். எனவே பார்வையாளர்கள் எப்படி உணர்ச்சிவசப்பட வேண்டுமென நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்களோ, அதற்கேற்றபடி காட்சிகளும், அதில் சம்பந்தப்பட்டவர்களும் தயாரிக்கப்படுகின்றனர். இதில் ரியாலிட்டி, யதார்த்தம், தத்ரூபம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

எனவே உருக்கமான காட்சிகளால் உருவாக்கப்படும் இந் நிகழ்ச்சிகள் பலவும் ரியாலிட்டி என்ற பெயரில் இடம்பெறும் போலி நாடகங்கள். இவற்றுக்காக பார்வையாளர்கள் தங்கள் நேரத்தைச் செலவழித்து விலைபோகிறார்கள். ஒரே ஒரு ரியாலிட்டி ஷோ மூலம் நடிகை ராக்கி சாவந்தினதும், பொது மக்களில் ஒரு இளைஞரினதும் முழு வாழ்க்கையையுமே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தீர்மானித்ததைப் போல பொதுமக்களையும், அவர்கள் அறிந்த பிரபலங்களையும் பலிகடாக்களாக்கி, உணர்வுபூர்வமான காட்சிகளமைத்து, பணம் ஈட்டி, இலாபம் பார்க்கும் இந்தத் தொலைக்காட்சிச் சேவைகளனைத்துமே தத்ரூப வியாபாரிகளன்றி வேறென்ன?

courtesy: http://www.rishan.tk/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

17 − = 8

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb