கேள்வி: 1 நான் கற்பமாக இருந்தேன், பிரசவ நேரத்தில் மருத்துவமனையில் எனது கணவர் என்னருகில் இருந்தார். எங்களது குடும்ப நண்பர் ஒருவர் இது ஹராம், இவ்வாறு கணவர் பிரசவ நேரத்தில் உடனிருப்பது தவறு என்று சொன்னார். எனது கேள்வி.. ஒரு கணவர் தனது மனைவியின் அருகில் பிரசவ நேரத்தில் இருக்கலாமா? கூடாதா?
கணவன் – மனைவிக்கு மத்தியிலுள்ள உறவு என்பது படுக்கையறை உறவு மட்டுமல்ல. கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் அனைத்து வகையிலும் உதவ வேண்டிய உறவே கணவன் மனைவிக்கு மத்தியில் இருக்கும் சிறந்த உறவாகும்.
சமைப்பதற்கு பெண், சாப்பிடுவதற்கு ஆண். துவைப்பதற்கு பெண், உடுத்துவதற்கு ஆண் என்று குடும்பத்தில் பெண்ணை உழைப்பாளியாகவும் ஆணை முதலாளியாகவும் ஆக்கி வைத்துள்ள போக்கு ஆணாதிகத்தின் குறியீடாகும். இதனால் தான் மனைவியின் கஷ்டத்தை அனேக ஆண்களால் புரிந்துக் கொள்ள முடியாமலே போய் விடுகிறது.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்வீட்டில் இருந்தால் எங்களோடு குடும்பப் பணிகளில் ஒத்தாசை செய்வார்கள். பாங்கு சொன்னவுடன் பள்ளிக்கு செல்வார்கள் என்று அன்னை ஆயிஷாரளியல்லாஹு அன்ஹாசொல்கிறார்கள் (புகாரி)
இதுதான் சிறந்த குடும்பத்திற்கு அடையாளம்.
உடலோடு கலந்து விடுவதுதான் இல்லறம் என்று இல்லறத்திற்கு வெறும் பாலியல் சாயம் மட்டும் பூசாமல் அது உள்ளத்தோடும், உணர்வோடும் கலந்துப் போகக்கூடிய ஒரு வாழ்க்கை என்பதை ஆண் மகன் உணர்ந்தால் அந்த கணவன் மனைவிக்கு மத்தியில் ஆயிரம் சந்தோஷங்கள் பூவாய் மலர்ந்துக் கொட்டும். இந்த சந்தோஷம் எப்போது சாத்தியம் என்றால் மனைவியை புரிந்துக் கொண்டு அவளுக்காக வாழ்வதில் தான்.
மாதவிடாய் சந்தர்பங்களில், குழந்தை பெற்றெடுக்கும் சந்தர்பங்களில் பெண் அனேக துன்பத்திற்கு ஆளாகிறாள். இந்த துன்பங்களை கணவன் கண்டு அறிய முடிவதில்லை.
மனைவி குழந்தை பெற்றெடுக்கும் போது கணவன் அருகில் நின்று பார்க்க வேண்டும். அப்படி நடந்தால் அந்த சந்தர்பத்தில் மனைவிக்கு அது ஒரு பெரும் ஆருதலாகவும், அவளை புரிந்துக் கொண்டு கூடுதலாக நேசிப்பதற்கு கணவனுக்கு ஒரு தூண்டுதலாகவும் அது இருக்கும் என்று உளவியல் துறை அறிஞர்களும், டாக்டர்களும் கருதுகிறார்கள்.
அது மட்டுமின்றி ஒரு குழந்தைக்கும் அடுத்து குழந்தைக்கும் போதிய இடைவெளி விட இது வழிவகுக்கும் என்பதும் அவர்களின் முடிவாகும்.
இல்லறத்தில் ஒருவருடன் ஒருவர் கலந்து இரண்டற ஆகிவிட்ட பிறகு ‘பிரசவ நேரத்தில் கணவன் – மனைவியின் பக்கத்தில் இருப்பது ஹராம்’ என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ்.
கேள்வி: 2”விபச்சாரன் விபச்சாரியையோ அல்லது இணைவைப்பவளையோ தவிர (வேறு பத்தினிப்பெண்ணைத்) திருமணம் செய்யமாட்டான், (இவ்வாறே) விபச்சாரியை- விபச்சாரம் செய்பவனையோ அல்லது இணைவைப்பவனோ தவிர (பரிசுத்தமானவேறு யாரும்) திருமணம் செய்ய மாட்டாள் இ(த்தகையோரைத் திருமணம் செய்வ)து இறை நம்பிக்கையாளர்களின் மீது தடுக்கப்பட்டுள்ளது” என்று குர்ஆன் கூறுகிறது. எத்தனையோ குடும்பங்களில் ஒழுக்கமான பெண்களுக்கு குடி விபச்சாரம் போன்ற கெட்ட பழக்கங்கள் உள்ள கணவர்கள் அமைகின்றார்கள். அப்படி என்றால் இவர்களின் மனைவிமார்களும் இவர்களைப் போன்றவர்களா?
ஒழுக்கமான பெண்களுக்கு கெட்ட கணவர்கள் அமைய மாட்டார்கள் என்பதோ விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு விபச்சாரிகள் தான் மனைவியாக அமைவார்கள் என்பதோ இந்த வசனத்தின் பொருளல்ல.
விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்கள் தங்கள் மனைவியை சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டும் என்பதோ அவள் கெட்டுப் போய் இருப்பாளோ என்று மன உளைச்சலுக்கு ஆளாகி அவள் வாழ்வை பாழ்படுத்த வேண்டும் என்பதோ இந்த வசனத்தின் பொருளல்ல.
வேறு என்ன கூறுகிறது அந்த வசனம்!
ஒரு ஆண் எவ்வளவு தான் கெட்டவனாக இருந்தாலும் தனக்கு வரும் மனைவி நல்லவளாக – ஒழுக்கமுள்ளவளாக இருக்க வேண்டும் என்று விரும்புவான். விபச்சார தொழிலில் ஈடுபடும் ஒரு பெண் திருமண வாழ்க்கையில் இணைகிறாள் என்றால் அவளும் கூட தன் கணவன் தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் பிற பெண்களை மனதால் கூட தீண்டாதவனாக இருக்க வேண்டும் என்று விரும்புவாள்.
அவர்கள் அவ்வாறு விரும்பினாலும், அப்படி விரும்புவதற்கு அவர்களுக்கு தார்மீக உரிமையில்லை என்றே அந்த வசனம் கூறுகிறது. ஒருவன் விபச்சாரம் செய்பவனாகவோ கெட்டவனாகவோ இருக்கும் போது அவன் தன்னைப் போன்றுள்ள ஒரு விபச்சாரியையோ அல்லது கெட்டவளையோ தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் அது தான் சரியான அளவுகோல் மனைவி ஒழுக்கமானவளாக அமைய வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் முதலில் அவன் எல்லா ஒழுங்கீனங்களையும் விட்டு தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளட்டும் என்பதே நீங்கள் எடுத்துக் காட்டிய வசனம் சொல்லும் அறிவுரையாகும்.
கணவனின்றி தவறான வழியில் வாழும் ஒரு பெண் திருமணத்தை நாடும் போது தனக்கு கணவனாக வருபவன் யோக்கியனாக இருக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது. ஏனெனில் தவறான வழியில் உழலும் அவளுக்கு இப்படிப்பட்ட கணவன் தகுதியானவனல்ல. அதிகபட்சமாக அவளைப் போன்றே நாற்றமெடுத்த ஒருவனைத் தான் அவள் மணமுடிக்க வேண்டும் என்பதே அந்த வசனம் முன் வைக்கும் வாதமாகும்.
தவறான வழியில் பாழ்பட்டுக் கொண்டிருக்கும் எத்துனையோ ஆண்களுக்கு ஒழுக்கமும் – கண்ணியமும் மிக்க மனைவிகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தன் மனைவியின் ஒழுக்கத்தையும் நன்நடத்தையையும் பார்த்து அத்தகைய கணவர்கள் வெட்கி தலைகுனிந்து தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.
நல்ல கணவர்களுக்கு கெட்ட மனைவி அமைந்து விடுவதும் நடக்காமலில்லை. ஒரு ஆண் கறைப்பட்டால் அது அவனோடு போய்விடும். பெண் கறைப்பட்டால் அது அவளது குடும்பத்தையே பாதிக்கும் என்பதால் நல்ல கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்ட தீய நடத்தையுள்ள பெண்கள் சிந்தித்து தங்கள் தவறுகளிலிருந்து விடுபட்டு இறைவனிடம் பாவமன்னிப்பு தேட வேண்டும். நல்ல கணவர்கள் இத்தகைய மனைவிகள் விஷயத்தில் பொறுமையை மேற் கொள்ள வேண்டும் என்பதற்கு நபிமார்களான நூஹு அலைஹிஸ்ஸலாம்மற்றும் லூத் அலைஹிஸ்ஸலாம்ஆகியோரிடம் பாடம் உள்ளது.