MUST READ
நவீனகால சிக்கல்களுக்கு தீர்வு
ஸைய்யத் அப்துர் ரஹ்மான் உமரி
[ மனிதர்கள் யாவரும் சரிசமமானவர்கள். மனித உரிமைகளும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் உறவுமுறைகளும் யாவருக்கும் பொதுவானவை.
ஒரே குடும்பத்தின் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் என்பதால் சமூகம் பொருளாதாரம் என்று எல்லாவற்றிலும் பொதுவான உரிமையைப் பெற்றவர்கள்.எண்ணிக்கை பெருகிவிட்டதால் இந்த ஓர்மைச் சிந்தனை குறுகிவிட்டது.
ஓரிறைவனை மட்டும் வழிபட்டாக வேண்டும் என்ற சிந்தனையை மனதில்கொண்டு அவ்வழியே உலகைப் பார்த்தால் உண்மை சொரூபம் அப்பட்டமாகத் தெரியும்.
நிறம் இனம் மொழி என்று எதுவுமே இல்லாமல் மனிதர் அனைவரும் ஒரே பெற்றோருக்குப் பிறந்த ஒரு குடும்பத்துப் பிள்ளைகளாகத் தெரிவர்!
குர்ஆனும் நபிமொழிகளும் முன்னிலைப் படுத்துகின்ற ஒரே குலம் எனும் இந்தச் சித்தாந்தத்தில் இன நிற மொழி சிக்கல்கள் அனைத்திற்கு நிவாரணம் இருக்கின்றது. ]
இந்நவீன உலகில் நாம் சந்திக்கும் சிக்கல்கள் துன்பங்களுக்கெல்லாம் தீர்வு இறுதித்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய போதனைகளில் மறைந்துள்ளது. மனிதர்களுக்கு வழிகாட்டுவதை இறைவன் தன்மீது விதியாக்கிக் கொண்டுள்ளான். அதன் காரணமாகவே அவன் பல்வேறு நிலப்பகுதிகளுக்கும் பல்வேறு காலக்கட்டங்களிலும் தன்னுடையத் தூதர்களை ஒருவர் பின் ஒருவராக அனுப்பிக்கொண்டே வந்துள்ளான்.
உலகில் உள்ள எல்லா ஊர்களுக்கும் எல்லா நிலப் பரப்புகளுக்கும் இறைத்தூதர்கள் வந்துள்ளார்கள். அவ்வகையில் தன்னுடைய கடைசித் தூதராக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை அனுப்பிவைத்தான். அவர்தாம் இறுதித்தூதர்: அவருக்குப்பின் யாரும் இனி தூதராக வரமாட்டார் என்றும் தெளிவுபட அறிவித்தும் விட்டான். அப்படியென்றால் என்ன பொருள்?
வழிகாட்டுவதற்கு இனி எந்தத் தேவையும் இல்லை: எல்லாவகையான வழிகாட்டுதலும் வழங்கப்பட்டுவிட்டன. எனில், இன்று இவ்வுலகம் சந்திக்கும் எல்லாவகைப்பட்ட பிரச்சனைகளுக்கும் சிக்கல்களுக்கும் இறுதித்தூதரின் வாழ்க்கையிலும் போதனைகளிலும் தெளிவான வழிகாட்டுதல் கண்டிப்பாக உண்டு என்பது சரிதானே!மனிதக் கண்டுபிடிப்புகளின் விளைவாக உலகமெங்கும் வியாபித்துள்ள கருவிகளால் இல்லை பிரச்சனை! அவனுடைய சிந்தனையில் பரவியுள்ள கருத்துகளாலும் கோட்பாடுகளாலும் தான் பிரச்சனைகள் எழுகின்றன.
உலக நாடுகள் அனைத்துமே இக்கொள்கை, கோட்பாடுகளைப் பின்பற்றிவரத்தானே செய் கின்றன. ஆகையால் அவற்றின் பிரச்சனைகள் அனைத்திற்கும் இவையே மூலகாரணமாக அமைகின்றன.தன்னலமும் பொருட்சார்பும் தான் பிரச்சனைகள் அனைத்திலும் முதலிடத்தில் இருக்கின்றன. நிம்மதியை சீர்குலைப்பதில் இவை தலையாய இடத்தை வகிக்கின்றன. மதச்சார்பின்மையும் கடவுள் மறுப்புக் கொள்கையும் மனிதனுக்கு வழங்கிய ”கட்டற்ற அதிகாரம்” பிறமனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி சுகம் காண்பவனாக அவனை ஆக்கியது கொடுங்கோன்மை புரிவதிலும் அராஜகம் செய்வதிலும் முன்னணி யில் இன்று அவன் திகழுவதற்கும் இவையே காரணம்!
மதச்சார்பின்மையாலும் கடவுள் மறுப்புக் கொள்கையாலும் உருவான மிகப்பெரிய பிரச்சனைகளுள் இதுவும் ஒன்று! இக்கருத்துகள் கண்டுப்பிடித்து வழங்கிய வற்றில் ஷசெல்வப்புழக்கம் வர்க்கப் பிரிவினையை ஏற்படுத்தி கொடுமைகளுக்கும் மோதல்களுக்கும் வழி வகுக்கின்றது. அட்டூழியம் புரியும் நேர்மையற்ற ஆட்சியாளர்களையும் கோஷங்களால் குளிர்ந்து கிடக்கும் நெறிகெட்ட, பண்புகெட்ட தலைமையையும் இவையே உருவாக்குகின்றன. வாழ்க்கையின் இலக்கு குறித்த அறியாமையும் வாழும் வழிமுறை தெரியாமையும் தான் இவற்றால் விளையும் துன்பங்களுக்கு காரணம்.
மனிதர்கள் தமது துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று வெளியேற வகைசெய்யும் நிலையான அறிவையும் தீர்க்கமான சிந்தனையும் ஒழுக்க விழுமியங்களையும் இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் வழங்கியுள்ளார்கள். அல்குர் ஆனிலும் நபிமொழிகளிலும் அவை பரவிக்கிடக்கின்றன. மனிதப் பிரச்சனை களுக்காக தீர்வு அவற்றில் தான் பொதிந்து கிடக்கின்றது. இறுதித்தூதரின் போதனைகளின் ஒட்டுமொத்த சாறாக அவ்விழுமியங்களையே நாம் கருதுறோம்.
ஓரே அகிலம், அல்குர்ஆனையும் நபிமொழிகளையும் வாசித்துப்பார்க்கும் போது இவ்விழுமியங்கள் ஒன்றொன்றாக நம் கண்களில் படுகின்றன. அவற்றில் முதலாவதாக நாம் காண்பது ஒரே அகிலம் எனும் கருத்தாக்கம். நம்மைச் சுற்றி நாற்திசைகளிலும் பரவிக் காணப்படும் பல்வேறு வகைப்பட்ட பொருட்கள் படைப்பினங்கள் யாவற்றிலும் ஓர் ஒற்றுமை தென்படவே செய்கின்றது.
திட்டமிட்ட சிந்தனையொன்றில்,சீரான நியதியொன்றுக்கு உட்பட்டதாக, தமக்கிடையே முரணற்ற இணக்கத்தைப் பெற்றனவாக அவை இலங்கு கின்றன. சிதறிய சிந்தனையின் வெளிப்பாடாக அவையில்லை. ஒரே சிந்தனையில் பிறந்த தோற்றத்தை அவை பிரதிபலிக்கின்றனவே அன்றி ஒன்றுக்கு மேற்பட்ட சிந்தனையில் உதித்த வேறுபட்ட வடிவங்கள் அல்ல!அகிலத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் உருவம் அருவம் அனைத்தும் ஒரு திசை நோக்கியே நகருகின்றன. ஒரே நியதியில் இயங்குகின்றன. சிறப்பாக திட்டமிடப்பட்ட மிகப்பெரிய செயல் ஒன்றின் சிறுசிறு அங்கங்களாகவே இவை திகழுகின்றன.
அகிலத்தையும் அவற்றில் உள்ள அனைத்துப் பொருட்களையும் துகள்களையும் சக்தியையும் படைத்தவன் ஒரே ஒருவன்தான் எனும் முடிவிற்கு நாம்வர இவையே காரணமாக அமைகின்றன. மணற்துகள் களிலிருந்து மலைச்சிகரங்கள் வரை காற்று வெளியிலிருந்து கடலாழம் வரை கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிர்கள் முதற்கொண்டு பிரமாண்டமான பெருவெடிப்புவரை அனைத்திலும் ஒரே வர்ணத்தைப் பூசி படைப்பாற்றலின் அற்புதத் திறமையை அழகாக அவன் வெளிப்படுத்திக் கொண்டுள்ளான்.உலகப் படைப்பில் காணப்படும் இவ்வற்புத நேர்த்தியை குர்ஆனும் ஸூன்னத்தும் படம் பிடித்துக் காட்டுகின்றன.
விசாரணைக்குரிய இறுதித் தீர்ப்புநாள் வரும்வரை சத்தியத்தை இவை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். சத்தியத்தை இனங்கண்டுகொண்டால் மனிதச் சிக்கல்கள் மெதுமெதுவாக விடுபட ஆரம்பிக்கின்றன.ஒரே இறைவன்: அடுத்தபடியாக ஒரே இறைவன் எனும் சித்தாந்தத்தை, ஓரிறைக்கொள்கையை இறுதித்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்முதன்மைப் படுத்தினார்கள். ஓரிறைவனை ஏற்றுக்கொள்வது எனும் மூலக்கல் மீதாகத்தான் இஸ்லாம் எனும் கட்டிடமே நிலை கொண்டுள்ளது. இஸ்லாம் அறிமுகப்படுத்துகின்ற மற்ற எல்லா நம்பிக்கைகளும் இவ்வாதார ஊற்றிலிருந்தே பிறப்பெடுக்கின்றன.
இஸ்லாமின் சட்டங்கள், கோட்பாடுகள், புலனறிவிற்கு அப்பாற்பட்ட சித்தாந்தங்கள் எல்லாவற்றுக்கும் இதுவே மையப்புள்ளியாக விளங்குகின்றது.இறைவனின் தூதர்கள் என்பதால் இறைத்தூதர்களை நாம் நம்புகிறோம்: இறைவனின் தூதர்கள் என்பதால் இறைவனின் வானவர்கள் என்பதால் மலக்குகளை நாம் நம்புறோம். இறைவனின் புறத்திலிருந்து செய்தி கொண்டு வந்துள்ளதால் இறை வேதங்களை நாம் நம்புகிறோம்.
இறைவனுடைய திருப்தியின், கோபத்தின் வெளிப்பாடு என்பதால் சொர்க்கத்தையும் நரகத்தையும் நாம் நம்புகிறோம்: இறைவன் நம்மை விசாரிக்கும் நாள் என்பதால் இறுதித்தீர்ப்பு நாளை நாம் நம்புகிறோம். இறைவன் விதித்திருக்கிறான் என்பதால் கடமைகளை (ஃபர்ளுகளை) நாம் பேணுகிறோம். உரிமைகளை நிறைவேற்றுமாறு இறைவன் ஆணையிட்டிருப்பதால் அவற்றை நாம் வழங்குகிறோம்.இப்படியாக இஸ்லாமுடைய எல்லா அம்சங்களும் ஓரிறைக் கொள்கையோடு பிரிக்க முடியா வண்ணம் பிணைந்துள்ளன.
ஓரிறைவனை நம்பவில்லை என்றால், சொர்க்கத்தை நம்பவேண்டிய அவசியமில்லை. கடமைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. விசாரணை இறுதித்தீர்ப்பு நாள் எதனையும் நம்பவேண்டியதில்லை, மறுவுலக வாழ்க்கையை நம்பவேண்டியதில்லை, உறவுகளைப் பேண வேண்டியதில்லை, உரிமைகளை வழங்க வேண்டியதில்லை. இந்த மையப்புள்ளியை நகர்த்திவிட்டால் இஸ்லாமின் கட்டுக்கோப்பு அனைத்தும் சிதறிப் போய் சின்னாபின்னமாகிவிடும். இஸ்லாம் எனும்பெயரிலும் இறைத்தூதரின் போதனைகள் எனும் வடிவிலும் உலகில் எதுவுமே மிஞ்சியிருக்காது.
இஸ்லாம் வழங்குகின்ற முதற்பாடமே ”அல்லாஹ் என்றென்றும் நிரத்தாமானவன்; சிரஞ்சீவி என்றும் நிலைத்திருப்பவன்: முற்றுமுதல் ஆற்றலாய் சக்தியாய் ஆனவன்: ஒருவன் தனித்தவன்: ஈடு இணை யாருமில்லாதவன்: ஒப்பிட இயலாதவன்; துன்பங்கள், துயரங்கள் அனைத்திற்குமான விடுதலைக் கயிறு அவனிடமே உள்ளது; அந்த அல்லாஹ் ஒருவன். தேவையற்றவன்; அவன் பிறக்கவுமில்லைளூ யாரையும் பெறவுமில்லை; அவனுக்கு ஈடு இணையாருமில்லை!” (அல்குர்ஆன்112).
ஓரிறைவன்தான் என்பதை ஏற்றுக்கொண்டவுடன் இவ்வுலகப் படைப்பினங்கள் அனைத்தும் எதற்காகப் பதைக்கப்பட்டுள்ளன என்ற காரணம் தெளிவாகி விடுகின்றது. ஒழுக்கமாண்புகளும் விழுமியங் களும் புரியத்துவங்குகின்றன. கடமையை நிறைவேற்றவேண்டும் எனும் உணர்வு பீறிட்டு எழுகின்றது. பொறுப்புணர்வு மிகுகின்றது. இவ்வுலகில் உள்ள ஒவ்வொன்றும் அர்த்தம் பொதித்தவையாக அழகு நிரம்பியவையாக மாறிவிடுகின்றன. மனிதன் போகவேண்டிய திசை துலங்கத் தொடங்கிவிடுகின்றது.ஓரே மனிதகுலம்: சிந்தனைப் பாட்டையில் குர்ஆனும் ஸுன்னாவும் எடுத்துவைக்கின்ற மூன்றாவது விஷயம் ஓரே மனிதகுலம் என்பதாகும்!
நிறம், இனம், தோற்றம், மொழி என்று நாம் பார்க்கும் வேறுபாடுகள் அனைத்தும் அடையாளப் படுத்துவதற்கே என்று இஸ்லாம் முன்வைக்கின்றது. இனவாதமோ அல்லது இவ்வேறுபாடுகள் காரணமாக எழுகின்ற பிரிவினைகளோ பொருளற்றவை. ஒரே பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகளே மனிதர்கள் யாவரும்! ஒரே ஜோடியின் சந்ததியினரே யாவரும்! ஆதம் ஹவ்வா என்ற முதல் ஜோடியிலிருந்து பிறந்த ஓர் அகிலக்குடும்பமே இது! மனிதனுக்காக தற்காலிகத் தங்குமிடமாக இந்த பூமியை இறைவன் ஆக்கியுள்ளான்.
அவனுடைய தந்தை ஆதம் காலத்திலிருந்து இந்தப் பூமியெங்கும் தங்கும் உரிமை படைத்தவனாக அவன் உள்ளான். நாடுகளையும் தேசங்களையும் பிரிக்கும் கோடுகள் யாவும் தற்காலிகமானவை; நிரந்தரமானவையல்ல.எல்லா மனிதர்களும் சதோரர்களே. நிறம், வர்ணம்,மொழி, உடை போன்றவற்றில் காணப்படும் வேறுபாடுகள் அனைத்தும் புவியியல் காரணங்களாலும் வரலாற்றுக் காரணங்களாலும் விளைந்த தோற்றங்களே! வேறுபட்டுத் தெரியும் இத்தோற்றங்களுக்குள் உண்மையான ஆதமுடைய மகன் இருக்கிறான். அவன் செய்தாக வேண்டிய பணியொன்றும் காத்திருக்கின்றது. இவ்வேறுபாடுகளில் எதுவொன்றும் அவனுக்கு எந்தச் சிறப்பையும் அளித்துவிடாது.
சிறப்பு என்று ஓன்று உண்டென்றால் அதற்கான காரணமாக வேறொன்றை குர்ஆன் முன்வைக்கின்றது. ”இறையச்சம் உள்ளவரே உங்களில் உண்மையிலேயே சிறப்புக்குரியவர்” (அல்குர்ஆன் 49:13)அதாவது தன்னுடைய வாழ்க்கைப் பாதை எது என்பதை அடையாளம் காட்டும் ஒளிவிளக்காக அவன் இறையச்சத்தை ஆக்கிக் கொண்டுள்ளான். கொடுக்கல்- வாங்கல், வணிகம், பழக்கவழக்கங்கள், நடவடிக்கைகள், சமயநெறி, பொருளாதாரம், அரசியல், இல்லறம், கூட்டுவாழ்க்கை என்று எல்லாவற்றிலும் இறைவனுக்குப் பயந்து இறையச்சத்தை முன்னிறுத்தியே தன்னுடைய வாழ்க்கைப் பாதையை அவன் வகுத்துக் கொள்கிறான். மற்றபடி மனிதர்கள் யாவரும் சரிசமமானவர்கள். மனித உரிமைகளும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் உறவுமுறைகளும் யாவருக்கும் பொதுவானவை. ஒரே குடும்பத்தின் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் என்பதால் சமூகம் பொருளாதாரம் என்று எல்லாவற்றிலும் பொதுவான உரிமையைப் பெற்றவர்கள்.
எண்ணிக்கை பெருகிவிட்டதால் இந்த ஓர்மைச் சிந்தனை குறுகிவிட்டது.ஓரிறைவனை மட்டும் வழிபட்டாக வேண்டும் என்ற சிந்தனையை மனதில்கொண்டு அவ்வழியே உலகைப் பார்த்தால் உண்மை சொரூபம் அப்பட்டமாகத் தெரியும். நிறம் இனம் மொழி என்று எதுவுமே இல்லாமல் மனிதர் அனைவரும் ஒரே பெற்றோருக்குப் பிறந்த ஒரு குடும்பத்துப் பிள்ளைகளாகத் தெரிவர்! குர்ஆனும் நபிமொழிகளும் முன்னிலைப் படுத்துகின்ற ஒரே குலம் எனும் இந்தச் சித்தாந்தத்தில் இன நிற மொழி சிக்கல்கள் அனைத்திற்கு நிவாரணம் இருக்கின்றது.
”Jazaakallaahu kairan”
Courtesy: Islamiyappaarvai.blogspot.com