லறீனா அப்துல் ஹக்
அதுமட்டுமன்றி, இத்தகைய வளர்ப்புப் பிள்ளைகளின் மனைவியரை அவர்கள் விவாக விலக்குச் செய்துவிடும் பட்சத்தில், அந்த வளர்ப்புத் தந்தையர் அப்பெண்களை மணப்பது பிழையாகக் கருதப்பட்டுவந்த அறியாமைக்கால நடைமுறையை மாற்றியமைத்து, அவ்வாறு வளர்ப்பு மகனிடமிருந்து விவாகவிலக்குப் பெற்ற பெண்ணை வளர்ப்புத் தந்தை மறுமணம் புரிவது ஆகுமானதாகும் என்ற சட்டத்தை விளக்கும் வசனங்களும் மேற்படி வளர்ப்புமகன் பற்றிய வசனங்களோடு தொடர்புடையவையே. அவை வருமாறு:
“(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள்புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: ‘அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாகவிலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்‘ என்றுசொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடையமனத்தில் மறைத்து வைத்திருந்தீர். ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன். ஆகவே, ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம்செய்வித்தோம். ஏனென்றால், முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்துகொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.” (அல் குர்ஆன் 33:37)
“நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை. இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும்– இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.’ (அல் குர்ஆன் 33:38)
“‘(இறை தூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள். அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள். அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள். ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.” (அல் குர்ஆன் 33:39)
“முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார். மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.” (அல் குர்ஆன் 33:40)
இனி, ஒரு பெண் கட்டாயமாகத் தன் தந்தையின் பெயரை இணைத்துத்தான் அழைக்கப்படவேண்டுமா? அப்படி இல்லாமல் தன் கணவரின் பெயரை இணைப்பது இஸ்லாத்தின் பார்வையில் குற்றமாகுமா?
இந்தக் கேள்விகளுக்கு உரிய பதிலை அல்குர்ஆனில் தேடிப்பார்த்தபோது, பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் என் பார்வையில் பட்டன:
3. ஸூரத்துல்ஆல இம்ரான்;(இம்ரானின் சந்ததிகள்)
“இம்ரானின் மனைவி ‘என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்‘ என்று கூறியதையும்– ” (அல் குர்ஆன் 3:35)
28. ஸூரத்துல் கஸஸ் (வரலாறுகள்)
“இன்னும்: (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (‘இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது – இதை நீங்கள் கொன்று விடாதீர்கள். நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும். அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்‘ என்று சொன்னார். இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.” (அல் குர்ஆன் 28:9)
66. ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்)
“நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான். இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர். எனினும், இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர். எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரை விட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை. இன்னும், ‘நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்‘ என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.” (அல் குர்ஆன் 66:10)
“மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். அவர் ‘இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித்தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக‘ என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.’ (அல் குர்ஆன் 66:11)
“மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார். நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் – (ஏற்றுக் கொண்டார்). இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.” (அல் குர்ஆன் 66:12).
எனவே, மேற்படி வசனங்களை வைத்துப் பார்க்கும்போது, அல்லாஹ் தஆலா ஒரு பெண்ணை இன்னாருடைய மகள் என்றும் அழைக்கக்கற்றுத் தந்துள்ள அதேவேளை, இன்னாருடைய மனைவி என்று அழைப்பதையும் எமக்குக் கற்றுத் தந்துள்ளான். எனவே, ஆராய்ந்து பார்க்கும்போது, இந்த இரண்டு முறைகளில் எதைக் கைக்கொண்டாலும் அல்லாஹ்வின் பார்வையில் குற்றமாகாது என்றே என் சிற்றறிவுக்கு எட்டுகின்றது. (அல்லாஹ்வே ஞானமிக்கவன்.) அதேவேளை, கட்டாயம் பெண்ணொருத்தி இன்னாரின் மகள் என்றல்லாமல் இன்னாரின் மனைவி என வழங்கப்படுவது மார்க்க அடிப்படையில் பிழையானது என்ற கருத்துக்கு ஆதாரமாக ஏதேனும் அல்குர், அல் ஹதீஸ் ஆதாரங்கள் இருக்குமாயின் தயைகூர்ந்து அவற்றைப் பகிர்ந்துகொண்டு எமக்குத் தெளிவு ஏற்பட உதவுமாறு கண்ணியத்துக்குரிய குழும சகோதரர்களிடம் பணிவன்போடு வேண்டுகின்றேன்.
அல்லாஹ் எமக்குத் தந்த அறிவு அதிகமதிகம் விசாலமாகி, இருமைக்கும் பயன்தருமாறு அதனைப் பயன்படுத்துவதற்கு அருளாளன் அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக! ஆமீன்.
பிற்குறிப்பு: அப்துல் ஹக் என்பது என்னுடைய தந்தையின் பெயராகும்.
அன்புடன்,
இஸ்லாமிய சகோதரி,
லறீனா அப்துல் ஹக்.