லறீனா அப்துல் ஹக்
ஒரு பெண், தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக் கொள்ளலாமா என்ற பொதுவான கேள்வி பலரிடையே எழுவதுண்டு. பெண்களில் அனேகர் திருமணமான பின்னர் தமது கணவரின் பெயரைத் தம் பெயரோடு இணைத்து திருமதி ‘இன்னார்’ என்று அடையாளப்படுத்திக் கொள்வதை நாம் நடைமுறையில் காண்கின்றோம். ‘அது கூடாது’ என்று சிலரும் ‘இல்லை, கூடும்’ என்று சிலரும் சொல்வதை நாம் செவியுற்றுள்ளோம்.
ஒரு பெண் தனது கணவனின் பெயரை இணைத்து அழைக்கக்கூடாது. மாறாக, தனது தந்தையின் பெயரை இணைத்தே அழைத்தல் வேண்டும் என்று கூறுவோர் தமது கூற்றுக்கு ஆதாரமாக,
”அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் – அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்’ என்றுதான் அல் குர்ஆன் கூறுகின்றது” என்று நிறுவுகின்றனர்.
ஆனால், இந்த அல்குர்ஆன் வசனத்தை முழுமையாகவும், அதற்கு முந்தைய வசனத்தோடு சேர்த்தும் பார்ப்பதோடு மட்டுமின்றி, அந்த இறைவசனங்கள் அருளப்பட்ட பின்னணியை விளக்கும் ஹதீஸ்களையும் பற்றி சற்று விரிவாக ஆராய்ந்து பார்ப்போம்.
“எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை – உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் லிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கிவிடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவீகாரப் பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான். இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.” (அல் குர்ஆன்33:4)
“(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச்சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் – அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும். ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர். (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை. ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்) அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.” (அல் குர்ஆன்33:5)
இந்த வசனங்கள் குறித்து இப்னு கஸீர் குறிப்பிடும் பொழுது, அறியாமைக் காலத்தில் வளர்ப்புப் பிள்ளைகளைத் தமது சொந்தப் பிள்ளையாகவே கருதி வந்ததோடு, வளர்ப்புத் தந்தையின் பெயரோடு இணைத்தே அப்பிள்ளை அழைக்கப்படும் வழக்கமும் இருந்துவந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்கூட தமது வளர்ப்பு மகனான ஸைத் ரளியல்லாஹு அன்ஹுஅவர்களை, ஸைத் பின் ஹாரிதா என்பதற்குப் பதிலாக, ‘ஸைத் பின் முஹம்மத்’ என்றே அழைத்து வந்தார்கள். இந்த நடைமுறையை மாற்றுமுகமாகவே வளர்ப்புப் பிள்ளைகள் தமது உண்மையான தந்தையரின் பெயர்களோடு இணைத்து அழைக்கப்படுவதே நீதமானது என்ற மேற்படி வசனங்கள் அருளப்பட்டன என்கின்றார். பின்வரும் ஹதீஸ்கள் இதற்கு சான்றாக அமைந்துள்ளன:
1.) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் துணைவியாரான ஆயிஷாரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள்..
“இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடன் பத்ருப்போரில் பங்கெடுத்தவர்களில் ஒருவரான அபூ ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹுசாலிமைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கினார்கள். அவருக்குத் தம் சகோதரரின் மகளான ஹிந்த் பின்த் வலீத் இப்னு உத்பாவைத் திருமணமும் செய்து வைத்தார்கள். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஸைதை வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டது போன்று (சாலிமை, அபூ ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் வளர்ப்பு மகனாக்கிக் கொண்டார்கள்.) மேலும், அறியாமைக் காலத்தில் ஒருவரை அவரின் வளர்ப்புத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து மக்கள் அழைப்பதும் அவரின் சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) ஆக்கும் பழக்கமும் இருந்து வந்தது. ‘வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள்’ என்னும் (அல் குர்ஆன்33:05) வசனத்தை அல்லாஹ் அருளும் வரையில் (இந்தப் பழக்கம் நீடித்தது.) “
‘‘பிறகு (அபூ ஹுதைஃபாவின் துணைவியார்) சஹ்லா (பின்த் சுஹைல் ரளியல்லாஹு அன்ஹாஅவர்கள் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடம் வந்தார்கள்…” என்று (தொடங்கும்) ஹதீஸை (அறிவிப்பாளர் அபுல் யமான் ரஹ்மதுல்லாஹி அவர்கள்) முழுமையாகக் கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி ஹதீஸ் எண்: 4000)
2.) அப்துல்லாஹ் இப்னு உமர்ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்.
“வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே, அல்லாஹ்விடம் நீதியாகும்’ எனும் (திருக்குர்ஆன் 33:5 வது) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் இப்னு ஹாரிஸாரளியல்லாஹு அன்ஹு அவர்களை ‘ஸைத் இப்னு முஹம்மத்’ (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம். (ஸஹீஹ் புகாரி ஹதீஸ் எண்: 4782)
3.) ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாஅறிவித்தார்கள்.
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடன் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களில் ஒருவரான அபூஹுதைஃபா இப்னு உத்பாரளியல்லாஹு அன்ஹு, (பாரசீகரான மஅகில் என்பவரின் புதல்வர்) சாலிம் அவர்களைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கினார்கள். மேலும், அவருக்குத் தம் சகோதரர் வலீத் இப்னு உத்பாவின் மகள் ஹிந்த் என்பாரைத் திருமணமும் செய்து வைத்தார்கள். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஸைதைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டது போல் (சாலிமை அபூஹுதாஃபாரளியல்லாஹு அன்ஹு வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டார்கள்.
மேலும், அறியாமைக் காலத்தில் ஒருவரை அவரின் வளர்ப்புத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து மக்கள் அழைக்கும் வழக்கமும், அவரின் சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) நியமிக்கும் வழக்கமும் இருந்தது.
எனவே, ‘நீங்கள் (வளர்த்த) அவர்களை அவர்களின் (உண்மையான) தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள். அதுதான் அல்லாஹ்விடம் மிக நீதியாக இருக்கிறது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால், அவர்கள் உங்களுடைய மார்க்கச் சகோதரர்களாகவும் உங்கள் மார்க்க சிநேகிதர்களாகவும் இருக்கிறார்கள்” எனும் (அல் குர்ஆன் 33:5 வது) வசனத்தை அல்லாஹ் அருளும் வரையில் (இந்த வழக்கம் நீடித்தது.)
பின்னர் வளர்ப்புப் பிள்ளைகள் அவர்களின் சொந்தத் தந்தையாருடன் இணைக்கப்பட்டனர். எவருக்குத் தந்தையருடன் இணைக்கப்பட்டனர். எவருக்குத் தந்தை (இருப்பதாக) அறியப்படவில்லையோ அவர் மார்க்க சிநேகிதராகவும் மார்க்கச் சகோதரராகவும் ஆனார்.
பிறகு, அபூஹுதைஃபா இப்னு உத்பாரளியல்லாஹு அன்ஹு அவர்களின் துணைவியார் சஹ்லா பின்த் சுஹைல்ரளியல்லாஹு அன்ஹு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் சாலிமை (எங்களுடைய) பிள்ளையாகவே கருதிக்கொண்டிருந்தோம். (வளர்ப்பு மகனான) அவர் விஷயத்தில் அல்லாஹ் தாங்கள் அறிந்துள்ள (திருக்குர்ஆன் 33:5 வது) வசனத்தை அருளிவிட்டான்” என்று தொடங்கும் ஹதீஸை (அறிவிப்பாளர் அபுல் யமான் இப்னு ஹகம் ரஹ்மதுல்லாஹி அலைஹிமுழுமையாகக்) கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி ஹதீஸ் எண்: 5088)
கட்டுரையின் தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்.