தஸ்கியா (உளத்தூய்மை) என்றால் என்ன?
ஸைய்யத் அப்துர் ரஹ்மான் உமரி
[ தீமையைவிட்டுத் தூரவிலகி இருப்பவரே – தூய்மை’யைப்பெற்றுக் கொள்ள முடியும்! ஆதலால், ‘தஸ்கியா’ அடைவதற்கான மூலகாரணமாக இறையச்சமே அதாவது ‘தக்வா’வே உள்ளது. ‘தக்வா’வைப் பெற்றவர்தாம் ‘தஸ்கியா’ வைப்பெற்றுக்கொள்ள முடியும்.
தஸ்கியா’வின் செயல்வடிவ வெளிப்பாடாக உள்ளது தொழுகை ஆகும். ஈமான் பில்லாஹ் என்பதன் முதல் வெளிப்பாடே தொழுகைதான்! ஷரீ அத்தின் துவக்கப் புள்ளியாகவும், ஷரீஅத்தைச் சூழ்ந்து வரையறையாகவும் தொழுகையாகவும் தொழுகையே உள்ளது.]
‘தஸ்கியத்துந் நப்ஸ்’ என்றால் ‘உள்ளத்தூய்மை’ எனப்பொருள்! உள்ளத்தைத் தூய்மைப் படுத்துகின்ற பயிற்சிகளை ‘தஸ்கியா’ எனுஞ்சொல்லால் குறிப்பிடுவார்கள்.இஸ்லாமிய சன்மார்க்கப் பணியில் ஈடுபடுபவர்களும் தூய மூமின்களாக வாழும்வேட்கை கொண்டோரும் தத்தமது உள்ளத்தை அவ்வப்போது தூய்மைப் படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.
‘தஸ்கியா’ என்றால் தூய்மைப்படுத்துவது, வளர்ந்தோங்குவது எனப்பொருள்! இவ்விரண்டு பொருள்களுக்குமிடையே அபார ஒற்றுமை உள்ளது. எந்தப்பொருள் சீர்குலைவிலிருந்தும் முறைகேட்டிலிருந்தும் ‘தூய்மை’யாய் உள்ளதோ அதுவே வளர்ச்சி அடைகின்றது. ‘களை’களை நீக்கி தூய்மைப்படுத்தினால்தான் பயிர் செழிப்படைகின்றது. முறைகெடான வழிகளில் செல்வதை தடுத்து நிறுத்தினால்தான் முறையான வழியில் முன்னேறுவது சாத்தியமாகும்.
ஒரு பொருளின் இயல்பான முன்னேற்றத்தைத் தடை செய்யும் முட்டுக்கட்டைகள், இடையுறுகளை அகற்றினால்தான் அது தனக்கான வளர்ச்சிப் பாதையில் நிற்காது முன்னேறும்!. வளர்ச்சியின் இவ்விரண்டு கோணங்களையும் தன்னுள் கொண்டதாக ‘தஸ்கியா’ என்ற சொல் திகழ்கின்றது.
வானவர்களால் ஸஜ்தா செய்து சிறப்பிக்கப்பட்ட உயரிடத்துக்குச் சொந்தக்காரனான மனிதன் (1) அதற்குத் தகுதியானவனாகத் திகழ வேண்டும் (2) அச்சிறப்பிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும்! என்றால்; அவன் என்ன செய்யவேண்டும்? அவ்வுயரிடத்திலிருந்து தன்னைக் கீழே தள்ள காத்திருக்கின்ற முறையற்ற நடத்தைகள், தீயகுணங்கள், வழிகேடான கொள்கைகள் போன்றவற்றிலிருந்து ‘தூய்மை’ பெற்றாகவேண்டும். ஷிர்க், குப்ரு போன்ற கொள்கைத் தீமைகள், பொறாமை, புறம் என்று இன்னபிற நடத்தைத் தீமைகளும் இதில் அடங்கும்.
இறைத்தூதர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டதற்கான முதற்காரணம் முதன்மைக் காரணம் மக்களை தஸ்கியா செய்வதுதான் என்று திருக்குர்ஆன் விரிவுரையாளர் மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி குறிப்பிடுகிறார். கீழே கொடுக்கப்பட்டுள்ள அத்தியாயம் அல்பகறாவின் 129, 151 வசனங்களுக்கு விளக்கம் அளிக்கையில் அவர் இங்ஙனம் குறிப்பிடுகிறார்.
رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولاً مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنتَ العَزِيزُ الحَكِيمُ
كَمَا أَرْسَلْنَا فِيكُمْ رَسُولاً مِّنكُمْ يَتْلُو عَلَيْكُمْ آيَاتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُواْ تَعْلَمُونَ
குறிப்பிட்ட நோக்கம் ஒன்றை மனதிற்கொண்டு செயலாற்றக் கிளம்புகையில் செயலைத் துவங்கும் போதும் தொடரும்போதும் முடிவெல்லையிலும் எல்லா நிலைகளிலும் அந்நோக்கம் ஒன்றே மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கவேண்டும் என்பதையே வான்மறை கர்ஆன் தன் அதிஅற்புத சொல்லாற்றல் திறமை யினைக் கொண்டு இவ்வசனங்களில் விளக்கிவிடுகின்றது.மக்கள், இறைத்தூதர் ஒருவரிடமிருந்து பெற்றுக்கொண்டாகவேண்டிய முக்கிய விஷயமே ‘தஸ்கியா’ தான் என்று வான்மறை குர்ஆன் குறிப்பிடுகின்றது. அதேபோல தஸ்கியா பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னை நாடிவரும் ஒரு மனிதரை எக்காரணம் கொண்டும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடக் கூடாது என்று இறைத்தூதரையும் வான்மறை எச்சரிக்கின்றது.
عَبَسَ وَتَوَلَّى أَن جَاءهُ الْأَعْمَى وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّى أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَى முகம் சுளித்தார், புறக்கணித்தார், அந்தப் பார்வையற்றவர் அவரிடம் வந்ததற்காக! உமக்கு என்ன தெரியும்? அவர் தஸ்கியா அடைந்துகொள்ளலாம் அல்லவா?’ (அல்குர்ஆன் 80:1-3). இறைத்தூதர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டதன் நோக்கமே மனித உள்ளங்களை தஸ்கியா செய்வதுதான்!அண்ணலாரைப் பற்றி கூறும்போது மட்டுமல்லாது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றிக் கூறும்போது கூட வருகைக்கான நோக்கமாக இதையே வான்மறை குர்ஆன் முன்வைக்கின்றது.
اذْهَبْ إِلَى فِرْعَوْنَ إِنَّهُ طَغَى فَقُلْ هَل لَّكَ إِلَى أَن تَزَكَّى
‘பிர்அவ்னிடம் சொல்வீராக! அவனோ வரம்பு மீறிவிட்டான். தஸ்கியா அடையவேண்டும் என்ற எண்ணம் உன்னிடம் இருக்கின்றதா? என்ன? என்று அவனிடம் கேளும்!’ (அல்குர்ஆன் 79:16-18).மனிதன் இம்மையிலும் வெற்றி அடையவேண்டும்ளூ மறுமையில் ஈடேற்றத்தைப் பெறவேண்டும் என்றால் அவன் தஸ்கியா பெற்றே தீரவேண்டும் என வான்மறை குர்ஆன் வலியுறுத்துகின்றது
.قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا وَقَدْ خَابَ مَن دَسَّاهَا
‘வெற்றி பெற்றுவிட்டான் மனதைத் (தஸ்கியா செய்து) தூய்மைப் படுத்தியவன். தோற்றுவிட்டான் அதனை நசுக்கியவன்!’ (அல்குர்ஆன் 91:9,10).قَدْ أَفْلَحَ مَن تَزَكَّى
‘தஸ்கியா செய்தவன் வெற்றி பெற்றேவிட்டான்’ (அல்குர்ஆன் 87:14). ‘தஸ்கியா’ பெற்றக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு சில நிபந்தனைகளும் இருக்கத்தான் செய்கின்றன.1.இறைவனைப் பற்றிய முழுமையான அறிவை தேடிப்பெற வேண்டும்;2.இறைவனுக்கு மட்டுமே பயப்பட வேண்டும்.3.அப்பயத்தை சரியான வடிவில் அமல்களாக வெளிப்படுத்த வேண்டும்.இவற்றைச் சுட்டிக் காட்டும் வான்மறை வசனங்களைக் காண்போம்.
اذْهَبْ إِلَى فِرْعَوْنَ إِنَّهُ طَغَى فَقُلْ هَل لَّكَ إِلَى أَن تَزَكَّى وَأَهْدِيَكَ إِلَى رَبِّكَ فَتَخْشَى
”ஃபிர்அவனிடம் செல்வீராக! அவனோ வரம்பு மீறி விட்டான். ‘தஸ்கியா’ அடைய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கின்றதா? உன் இறைவனின் மீது உனக்கு அச்சம் ஏற்படும் அளவு அவனைப் பற்றி கூறட்டுமா? என்று அவனிடம் கேளும்! (அல்குர் ஆன் 79:17,18,19)இவ்வசனத்திலிருந்து மூன்று விஷயங்களை நாம் புரிந்து கொள்கின்றோம். ‘தஸ்கியா’ அடைய வேண்டும் என்றால், அல்லாஹ்வைப் பற்றிய பயம் நம்மிடம் இருந்தாக வேண்டும். யார் அல்லாஹ்வுக்கு உண்மையிலேயே பயப்படுகின்றாரோ, அவர் அல்லாஹ்வுக்குப் பிடிக்காதக் காரியங்களை ஒருபோதும் செய்யமாட்டார். அவற்றைவிட்டும் வெகுதூரம் விலகி இருப்பார்: விலகி இருக்கவே முயற்சி செய்வார்.
தீமையைவிட்டுத் தூரவிலகி இருப்பவரே – தூய்மை’யைப்பெற்றுக் கொள்ள முடியும்! ஆதலால், ‘தஸ்கியா’ அடைவதற்கான மூலகாரணமாக இறையச்சமே அதாவது ‘தக்வா’வே உள்ளது. ‘தக்வா’வைப் பெற்றவர்தாம் ‘தஸ்கியா’ வைப்பெற்றுக்கொள்ள முடியும். அடுத்து, இந்த இறையச்சம் எப்படி ஏற்படும்? அதற்கான வழிமுறை என்ன? என்பதற்கான விடையையும் இறைவசனம் தந்து விடுகிறது. இறைவனைப்பற்றிய முறையான அறிவு யாரிடம் இருக்கிறதோ. அவர்தாம் இறைவனுக்கு பயப்படுவார். அல்லாஹ்வைப்பற்றி ஒரளவுக்காவது தெளிவான ஞானத்தை நாம் பெற்றிருந்தால் மட்டுமே, அவன் மீது நமக்கு உண்மையான பயம் ஏற்படும்!
,قَدْ أَفْلَحَ مَن تَزَكَّى وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى
தஸ்கியா’ செய்து கொண்டவன்; தன் இறைவனின் திருநாமங்களை நினைவுகூர்ந்து தொழுது வந்தவன் வெற்றி பெற்றுவிட்டார்!’ (அல்குர்ஆன் 87: 14,15).
”தன் இறைவனின் திருநாமங்களை நினைவ கூர்வது” என்பது தான் ‘தஸ்கியா’வின் முதல் வெளிப்பாடாகவும் அதனுடைய உண்மையான வழிமுறையாகவும் உள்ளது. இறைவனின் திருநாமங்களை-அஸ்மாஉல்ஹுஸ்னா- தாம் முழுமையான அறிவிற்கு மூலமாகவும் அடிப்படையாகவும் உள்ளன. நம்முடைய இறைவனின் பண்புகள், குணங்கள் என்னென்ன என்பதை அவையே விளக்குகின்றன. அப்பண்புகளைப் பற்றியெல்லாம் தெரிந்த கொண்டால்தான் தம்முடைய அடிப்படைக் கொள்கைகள் (அகாயித) எவையெவை? என்பதை விளங்கிக் கொள்ள முடியும்!
அக்கொள்கைகளின் அடிப்படையில் தாம் நமக்கும், நம்முடைய இறைவனுககும் இடையிலான தொடர்பு என்ன? என்பதைப் பற்றியும், நமக்கும், பிறஅடியார்களுக்கும் இடையிலான உரிமைகள், கடமைகள் என்னென்ன? என்பதைப் பற்றியும் புரிந்து கொள்ள முடியும்!அடுத்து ‘தஸ்கியா’வின் செயல்வடிவ வெளிப்பாடாக உள்ளது தொழுகை ஆகும். ஈமான் பில்லாஹ் என்பதன் முதல் வெளிப்பாடே தொழுகைதான்! ஷரீ அத்தின் துவக்கப் புள்ளியாகவும், ஷரீஅத்தைச் சூழ்ந்து வரையறையாகவும் தொழுகையாகவும் தொழுகையே உள்ளது.
வீடொன்றில் விளக்கை ஏற்றி வைத்தால் வெளிச்சம் நாற்புறமும் பரவும்: இருளும் அகலும் அல்லவா? அது போன்றே, மனம் ஒன்று, அனைத்து வகையான தீமைகள், கோடுகளை விட்டும் விpலகி தூய்மையானதாக, பரிசுத்தமானதாக ஆகிவிட்டால் அத்தூய்மை அதன் அமல்களில் எல்லாம் ஜொலிக்கும். தஸ்கியா அடைய வேண்டும்: தன் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேணடும் என்று ஆசைப்படுபவர் அக்கறையோடு தேடல் முயற்சிகளை மேற்கொள்வார்.
இறைவனைப்பற்றிய அறிவு பெருகப்பெருக இறைவனின் மீதான பயமும் அதிகரித்துக் கொண்டே போகும். அதன் விளைவாக அவர் தீய பண்புகள், தீய நடத்தைகளை விட்டும் விலகிச் செல்வதில், விட்டுவிடுவதில் முனைந்து நிற்பார்: அதே சமயம் அவருடைய இபாதத்களும் அமல்களும் பொலிவு அடைந்து கொண்டே செல்லும்! இம்மையிலும், மறுமையிலும் இத்தகையவர் வெற்றி பெறாமல் இருப்பாரா? என்ன? நோக்கத்தை நிறைவேற்றுவதில் வல்ல இறைவனே போதுமானவன்.