பழி சுமத்தும் இழி செயல்!
[ அவரவர் தத்தமது குறைகளைத் தேடித் திருத்தி கொள்பவரே அறிவாளி; அடுத்தவர் குறை தேடி பழி சுமத்துபவர் அறிவிலி.
எவனாவது எவனுடைய குறையையேனும் தோண்டித் துருவி அலசி ஆராய்ந்து தக்க ஆதராமின்றி அவதூறு கூறுவானோ, வீண் பழி சுமத்துவானோ அவனது அந்தரங்க குறைகளை அல்லாஹ் அவனுடைய வீட்டிலேயே வைத்தே வெளிப்படுத்தி விடுவான்.]
மனித சமுதயாத்தினர் சிலர் எதையும் தீர்க்க அறிய முடியாதவர்கள் அரைகுறைத் தகவல்களை வைத்துக் கொண்டு வெகு விரைவாக எவர் மீதாவது பழி சுமத்திவிடுகின்றனர். பழி சுமத்துவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஆதிக்க உணர்வும் காரணமாகி விடுகின்றது. சிலர் சிலர்மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த ஆதிக்கம் பலனளிக்காமல் போனால் இதுவே பழி சுமத்துவதற்கு காரணமாகி விடுகின்றது.
ஆதிக்கம் செலுத்துபவர்கள் அன்பு காட்டி பார்க்கின்றனர். அதற்கு அடிபணிய வில்லையானால் ஆசை காட்டி பார்க்கின்றனர். அதற்கும் மசியவில்லையானால் குற்றம் குறை ஏதும் இருக்கின்றதா? என்று பார்க்கின்றனர். இருந்து விட்டால் அதற்கு கண், காது, மூக்கு எல்லாம் வைத்து அரட்டி மிரட்டி அடி பணிய வைக்கின்றர். இதிலும் தோல்வி அடைந்துவிட்டால் பழி சுமத்தும் இழி செயலில் ஈடுபட்டு அடக்க முயல்கின்றனர்.
இது குறித்து அல்லாஹ் தன் திருமறையில் மூஃமினான ஆண்களையும், மூஃமினான பெண்களையும் செய்யாததை (செய்ததாக) கூறி எவர்கள் நோவினை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக அவதூறையும் வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள். (அல்குர்ஆன் 33:58)
ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஏழை மனிதர்கள் யார்? என வினவினார்கள் (அதற்கு தோழர்கள்) எங்களில் பொருள் வசதி இல்லாதவர்தான் ஏழை மனிதர் என பதிலளித்தார்கள்; அது சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கியாமத் என்னும் இறுதி நாளில் (நீங்கள் கூறிய நபர் அல்ல) அந்நாளில் ஏழை மனிதர் உலகிலிருந்து தொழுகை, நோன்பு, ஜகாத், போன்ற எல்லா வகையான வணக்க வழிபாடுகளையும் கொண்டு வருவார். அத்துடன் அவர் எவரையாவது திட்டியிருப்பார். எவர் மீதாவது பழி சுமத்தியிருப்பார். எவருடைய பொருளையாவது சாப்பிட்டிருப்பார். எவரையாவது அநியாயமாக கொன்றிருப்பார். எவரையாவது அநியாயமாக அடித்திருப்பார்.
ஆக இத்தகு குற்றங்களையும் கொண்டு வருவார். பின்பு இவருடைய நன்மைகளிலிருந்து (இவரால்) அநீதம் இழைக்கப்பட்டவருக்கு (நன்மை) வழங்கப்படும்; (இவரால்) மற்றொரு அநீதம் இழைக்கப்பட்டவருக்கும் இவருடைய நன்மைகளிலிருந்து வழங்கப்படும். (இப்படியே) இவருடைய நன்மைகள் எல்லாம் முடிந்துவிடும். (ஆனால்) மக்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகள் மீதமிருக்கும்; (ஆகவே) அம்மக்களின் குற்றங்களை அவர் மீது சுமத்தப்படும்; பின்பு அவரை நரகில் போடப்படும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
தப்பெண்ணம் கொண்டு பழி சுமத்தும் இழி செயல் தான் நபித்தோழர்களையும், நபி உறவினர்களையும் ஷஹீதாக்கப்பட தூண்டுகோலாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
எவனாவது எவனுடைய குறையையேனும் தோண்டித் துருவி அலசி ஆராய்ந்து தக்க ஆதராமின்றி அவதூறு கூறுவானோ, வீண் பழி சுமத்துவானோ அவனது அந்தரங்க குறைகளை அல்லாஹ் அவனுடைய வீட்டிலேயே வைத்தே வெளிப்படுத்தி விடுவான்.
அவரவர் தத்தமது குறைகளைத் தேடித் திருத்தி கொள்பவரே அறிவாளி; அடுத்தவர் குறை தேடி பழி சுமத்துபவர் அறிவிலி.
வல்ல நாயன் பிறர் மீது பழி சுமத்தும் இழி செயலை விட்டும் மனித சமுதாயத்தைப் பாதுகாப்பானாக!
”Jazaakallaahu khairan”