கேள்வி: தொழுகையின் குறுக்கே செல்லக் கூடாது என்பது எந்த இடத்தை குறிக்கிறது.? ஸஜ்தா செய்யும் இடம் வரையிலா..? அல்லது அவருக்கு முன்னால் உள்ள பகுதி அனைத்துமா..?
”உங்களுக்கு முன் தடுப்பு வைத்துக் கொண்டு தொழும் போது யாராவது குறுக்கே செல்ல முயன்றால் அவரை தடுக்க வேண்டும். அதை அவர் தடுத்தால் அவருடன் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவர் ஷைத்தானாவார்” என்பது நபிமொழி. (அபூஸயீத் அல் குத்ரிரளியல்லாஹு அன்ஹு, புகாரி 509)
”தொழுபவருக்கு குறுக்கே செல்பவர் அதனால் தமக்கு ஏற்படும் கெடுதியை பாவத்தை அறிந்தால் அவருக்கு குறுக்கே செல்வதற்கு பதில் நாற்பது நாட்கள் நின்றுக் கொண்டிருப்பது அவருக்கு நல்லதாக தோன்றும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.” (ஜுஹைம் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 510)
இந்த ஹதீஸ்களை மேலோட்டமாகப் பார்த்து தொழுபவருக்கு குறுக்கே எந்தப் பகுதியிலும் செல்லக் கூடாது என்று சிலர் விளங்கிக் கொண்டு பள்ளியில் தடுமாறி நிற்பதை காண்கிறோம். முதல் ஹதீஸின் வாசகத்தையும் இது பற்றி வந்துள்ள இதர ஹதீஸ்களையும் பார்த்தால் குறுக்கே செல்லக் கூடாத பகுதி எது என்று தெளிவாகி விடும்.
முதல் ஹதீஸில் ”தொழுபவர் தடுப்பு வைத்துக் கொண்டு தொழும் போது” என்ற வாசகம் வந்துள்ளது. இதிலிருந்து தடுப்பு வைக்கப்பட்டிருந்தால் அந்த தடுப்பிற்கு உள்ளேதான் செல்லக் கூடாது என்பதை விளங்கலாம். அவர் தொழுவதற்கு முன்னாலுள்ள எந்த பகுதியிலும் செல்லக் கூடாது என்பது சட்டமானால் தடுப்பு வைத்துக் கொள்ளட்டும் என்பது அர்த்தமில்லாமல் போய்விடும். தடுப்பு வைக்காமல் தொழும் போது எந்த பகுதியிலும் கடந்து செல்லலாம் என்பதையும் இந்த செய்தியிலிருந்து புரியலாம்.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமக்கு முன்னால் தடுப்பு வைக்காமல் தொழுததில்லை. தடுப்பு வைத்துக் கொள்வதில் மிக கவனமாக இருந்துள்ளார்கள்.
”நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் ஒட்டகத்தை குறுக்கே தடுப்பாக நிறுத்தி அதை நோக்கி தொழுவார்கள் என்றும் ஒட்டகம் மிரண்டு நகர்ந்தால் அதன் மீதுள்ள சேனத்தை தடுப்பாக்கிக் கொள்வார்கள்” என்றும் இப்னு உமர்ரளியல்லாஹு அன்ஹுஅறிவிக்கிறார்கள். (புகாரி 507)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் கைத்தடியை தடுப்பாக வைத்து பத்ஹா என்ற இடத்தில் தொழுதார்கள் என்று அபூ ஜுஹைஃபாரளியல்லாஹு அன்ஹு, அறிவிக்கிறார்கள். (புகாரி 501)
பள்ளியில் உள்ள தூண்களை தடுப்பாக்கிக் கொண்டு தொழுத விபரம் (புகாரி 502) கிடைக்கிறது.
சுவரை தடுப்பாக்கிக் கொண்டு தொழுத விபரம், ஈட்டியை நட்டி அதை தடுப்பாக்கி தொழுத விபரம் கிடைக்கின்றன. (புகாரி 495,496,498,499)
”நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கைத்தடியை தடுப்பாக்கி பத்ஹாவில் தொழுதார்கள். அதற்கு முன் பெண்கள் நடந்து செல்லுவார்கள், கழுதைகள் கூட நடந்து செல்லும்” என்று அபூ ஜூஹ்பாரளியல்லாஹு அன்ஹுஅறிவிக்கிறார்கள். (புகாரி 495, 499)
”தொழும் திடலுக்கு வந்து ஈட்டியை முன்னால் நட்டி வைத்து பெருநாள் தொழுகையை நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழவைத்துள்ளார்கள்”. (இப்னு உமர்ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 494)
இந்த ஹதீஸ்களிலிருந்து தடுப்பு வைப்பதன் அவசியத்தை உணரலாம். பள்ளிகளில் தடுப்பு இல்லாமல் தொழும் போது குறுக்கே செல்பவருடன் சண்டையிடுவது ஹதீஸுக்கு மாற்றமாகும்.
தடுப்பையும் கூட நாம் நினைத்த இடத்தில் வைத்துக் கொண்டு பிறருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது.
முதல் ஹதீஸில் தடுப்பு வைத்துக் கொண்டு தொழுபவருக்கு குறுக்கே சென்றால் தடுங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து நம்மால் தடுக்க முடியும் என்ற எல்லையில் தான் தடுப்பு வைக்க வேண்டும் என்பதை விளங்கலாம். நம்மால் தடுக்க முடியும் என்ற எல்லை கையை நீட்டி தடுக்கும் எல்லைதான். தெளிவாக சொல்லப் போனால் நாம் ‘ஸஜ்தா” செய்யும் இடம்தான்.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழும் (அதாவது ஸஜ்தா செய்யும்) இடத்திற்கும் சுவற்றிற்கும் இடையே ஒரு ஆடு நடந்து செல்லும் இடமிருக்கும் என்று ஸஃது பின் ஸஹ்ல்ரளியல்லாஹு அன்ஹுஅறிவிக்கிறார்கள். (புகாரி 496)
பள்ளிகள் இல்லாமல் மற்ற இடங்களில் தொழ நேர்ந்தால் ஸஜ்தா செய்யும் இடத்திற்கு சற்று அருகில் தடுப்பு வைத்துக் கொண்டுதான் தொழ வேண்டும்
உங்களில் ஒருவர் தமக்கு முன்னால் எதையாவது தடுப்பு வைத்துக் கொண்டு தொழட்டும். அதற்கப்பால் நடந்து செல்பவர் பற்றி அவர் பொருட்படுத்த வேண்டாம் என்பது நபிமொழி (தல்ஹாரளியல்லாஹு அன்ஹு, திர்மிதி 334)
எனவே குறுக்கே செல்லக் கூடாது என்பது ஸஜ்தா செய்யும் இடத்திற்குள் செல்வதைதான் குறிக்கிறதே தவிர அதற்கப்பால் செல்வதையல்ல.
இதுவும் கூட முன்னால் தடுப்பு இருக்கும் பொது தான் பொருந்தும். தடுப்பு இல்லாமல் இருக்கும் போது எவராவது இந்த எல்லையை கடந்து சென்றால் செல்பவர் மீது குற்றமில்லை.
”Jazaakallaahu khairan”