பாலியல்-ஓர் இஸ்லாமிய பார்வை (1)
[ மேற்குலகம் சுதந்திரமான, கட்டுப்பாடற்ற ஆண், பெண் உறவை விரும்புகின்றது. எனவே, உலகமயமாக்கல் மூலம் உலகின் ஏனைய நாடுகளிலும் இந்நிலையை அது உருவாக்க விரும்புகின்றது.
இஸ்லாமிய உலகிலோ கட்டுக்கோப்பான குடும்ப சமூக அமைப்பு காணப்படுகின்றது. எனவே, மேற்குலகு இவ்விறுக்கமான அமைப்பை தகர்ப்பதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது.
ஆண், பெண் பால் வேறுபட்டை (Gender perspective) மறுக்கும் இவர்கள் கணவன், மனைவி என்ற புனிதமான உறவையும் கொச்சைப்படுத்துகின்றனர். கணவனை வாழ்க்கைத்துணைவர் (Life Partner)என்ற அளவில் மாத்திரமே இவர்கள் அங்கீகரிக்கின்றனர்.
சட்டரீதியற்ற முறையில் பிறக்கும் குழந்தைகளைக் கூடNatural Baby என அழைத்து அங்கீகாரம் வழங்குகின்றனர். தற்போது அதனை Love Babyஎன அழைக்க முற்பட்டுள்ளனர்.
இவ்வாறு கிழக்குலகில் பொதுவாகவும், இஸ்லாமிய உலகில் குறிப்பாகவும் பேணப்படுகின்ற இறுக்கமான குடும்ப அமைப்பை சீர்குலைக்க பல உத்திகள் கையாளப்படுகின்றன.]
இன்றைய உலகு இருவகையான படையெடுப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது
1. இராணுவ ரீதியான படையெடுப்பு
2. சிந்தனாரீதியான கலாசாரப் படையெடுப்பு
முதல்வகைப் படையெடுப்பைப் போலவே இரண்டாம் படையெடுப்பும் உலகில் பயங்கரவிளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது.
‘உலகமயமாக்கல்’ எனும் பெயரில் இன்றைய உலகில் திணிக்கப்பட்டுவரும் நவீன காலனித்துவம் அரசியல், பொருளாதார ரீதியான அமெரிக்க தலைமையிலான மேற்குலகின் மேலாதிக்கத்தை உலகில் வலுவடையச் செய்வதை மாத்திரமன்றி சிந்தனா ரீதயாகவும், கலாசார ரீதியாகவும் உலகை அடிமைப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டிருக்கிறது.
இந்த வகையில் மேற்குலகின் உலகாயத, சடவாத சிந்தனைகளும், கலாசாரமும் மூன்றாம் மண்டல நாடுகளில் பொதுவாகவும் இஸ்லாமிய உலகில் குறிப்பாகவும் திட்டமிட்ட அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. உணவுவகைகள், குடிபானங்கள், உடைகள், நகைச்சுவை, காட்டூண்கள், மொழி, இசை, விளையாட்டுக்கள் முதலான சாதாரண அம்சங்கள் முதல் அனைத்தும் மேற்குலக கலாசாரத்தை பிரதிபலிப்பனவாகவே அமைந்துள்ளன.
உலகமமயமாதலும் பாலியல் சீர்கேடுகளும்
மேற்குலகம் சுதந்திரமான, கட்டுப்பாடற்ற ஆண், பெண் உறவை விரும்புகின்றது. எனவே, உலகமயமாக்கல் மூலம் உலகின் ஏனைய நாடுகளிலும் இந்நிலையை அது உருவாக்க விரும்புகின்றது. இஸ்லாமிய உலகிலோ கட்டுக்கோப்பான குடும்ப சமூக அமைப்பு காணப்படுகின்றது. எனவே, மேற்குலகு இவ்விறுக்கமான அமைப்பை தகர்ப்பதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. தனது சுதந்திரமான, எத்தகைய தார்மீக, ஆன்மீக கட்டுப்பாடுகளுமற்ற கலாசாரத்தை உலகமயப்படுத்துவதற்காக அவ்வப்போது சர்வதேச மாநாடுகளையும் நடாத்தி வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கெய்ரோவிலும், பீஜினிலும் நடைபெற்ற சனத்தொகை மாநாடுகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இம்மாநாடுகளில் பெறப்பட்ட தீர்மானங்களுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:
1. திருமணத்தின் மூலமோ, திருமணமின்றியோ ஒர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உருவாகும் உறவு அங்கீகரிக்கப்படத்தக்கதாகும்.
2. ஆணும் பெண்ணும் மணமுடிப்பது போலவே ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் மணமுடிக்க முடியும்
ஆண், பெண் பால் வேறுபட்டை (Gender perspective) மறுக்கும் இவர்கள் கணவன், மனைவி என்ற புனிதமான உறவையும் கொச்சைப்படுத்துகின்றனர். கணவனை வாழ்க்கைத்துணைவர் (Life Partner)என்ற அளவில் மாத்திரமே இவர்கள் அங்கீகரிக்கின்றனர். சட்டரீதியற்ற முறையில் பிறக்கும் குழந்தைகளைக் கூடNatural Baby என அழைத்து அங்கீகாரம் வழங்குகின்றனர். தற்போது அதனை Love Babyஎன அழைக்க முற்பட்டுள்ளனர். இவ்வாறு கிழக்குலகில் பொதுவாகவும், இஸ்லாமிய உலகில் குறிப்பாகவும் பேணப்படுகின்ற இறுக்கமான குடும்ப அமைப்பை சீர்குலைக்க கையாளப்படும் உத்திகளுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்.
1. சினிமா
2. தொலைக்காட்சி
3. வானொலி
4. இன்டர்நெட்
5. பொப் பாடல்கள்
6. சஞ்சிகைகள்
7.
8. நவீன மோஸ்த்தர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் (Fashion show)
9. அழகுசாதனப் பொருட்கள் (Cosmetics)
இவ்வாறு தொடர்பாடல் ஊடகங்கள், பல்தேசிய கம்பனிகள் முதலானவற்றுக்கூடாக மேற்குலகு தனது கலாசார திணிப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது.
Holly Wood திரைப்படங்களின் செல்வாக்கின் விளைவாக Bolly Wood திரைப்படங்களும் வன்முறையையும், ஆபாசத்தையும் மிகக்கேவலமாக அரங்கேற்ற ஆரம்பித்துள்ளன. இலங்கையில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் கூட ஒவ்வொரு நான்கிலும் மூன்று ஆபாசத் திரைப்படங்களாக அமைந்துள்ளன. இன்றைய சினிமாக்களில் கதையில்லை. பாடங்களோ படிப்பினைகளோ இல்லை. குறைந்தது மொழியையாவது காண முடியாது. தமிழ், ஹிந்தி சினிமாக்களில் இப்போது வன்முறையையும் ஆபாசத்தையும் தவிர வேறெதையும் பார்க்க முடியாது. குறிப்பாக தமிழ் சினிமாப்பாடல்கள் ஒரு கட்டுரையில் உதாரணத்திற்காகவேணும் மேற்கோள் காட்ட முடியாதளவிற்கு அருவெறுக்கத்தக்க ஆபாச வர்ணனைகளாக அமைந்துள்ளன. பெண்களை போகப்பொருளாகவும், போதைப்பொருளாகவும் காட்டும் வகையிலேயே பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளன. விரகம் விரசமாகி, காதல் பாலுறவாகி, காதலர்கள் காமுகர்களாக சித்தரிக்கப்படும் அவலத்தைத்தான் இன்றைய தமிழ்ச்சினிமாவில் காணமுடிகின்றது.
ஆபாசத் திரைப்படங்கள், வெப்தளங்கள், வீடியோக்கள், நூல்கள், சஞ்சிகைகள் முதலானவை மேற்குலகிற்கு அதன் கலாசாரத்தை பரப்புவதற்கான ஊடகங்களாக மட்டுமன்றி உலகநாடுகளின் பொருளாதாரத்தை சுரண்டுவதற்கான மிகச் சிறந்த வழியாகவும் அமைந்துள்ளன. இன்றைய உலகின் மிகவும் இலாபகரமான வியாபாரமாக ஆபாசத்தை சந்தைப்படுத்துவது காணப்படுகின்றது.
மேற்கண்ட கட்டுப்பாடற்ற சுதந்திர ஆண், பெண் உறவு கலாசாரம் உலகமயப்படுத்தப்பட்டதன் விளைவை இன்றைய உலகம் மிக மோசமாக அனுபவிக்கத் துவங்கியுள்ளது. இன்று இக்கலாசாரத்தின் பரவல் மனித சமூகத்தின் இருப்பையே அச்சுறுத்திவருகின்றது. இக்கலாசாரத்தின் முக்கிய விளைவுகள் பின்வருமாறு:
1. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்
2. சட்டபூர்வமற்ற கருத்தரிப்பு
3. கருக்கலைப்பு
4. கற்பழிப்பு
5. தன்னினச்சேர்க்கை
6. தாயோ அல்லது தந்தையோ இல்லாத (Single Parents) குழந்தைகள்
7. ஆட்கொல்லி எய்ட்ஸ் நோய்
8. விவாகரத்து
9. தற்கொலை
10. போதைவஸ்துப் பாவனை
இன்றைய உலகில் பற்றி எரிகின்ற பிரச்சினையாக மாறியுள்ள பாலியல் சீர்கேடுகள் தொடர்பான பிரச்சினைக்கு இஸ்லாம் கூறும் தீர்வுகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இஸ்லாமிய நோக்கில் பாலியல்
ஆண், பெண் இருபாலாருக்குமிடையே இறைவன் ஒரு வகை ஈர்ப்பை இயல்பாகவே வைத்திருக்கின்றான். இதனை இனக்கவர்ச்சி (Sex Appeal) என்பர். பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும். உலகவாழ்வு நிலைப்பதற்கும் இனப்பெருக்கத்திற்கும், மனிதகுலம் உட்பட அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண், பெண் உறவைத்தான்.
அணு முதல் அனைத்தையும் அல்லாஹ் ஆண், பெண் என சோடி சோடியாகவே அமைத்திருக்கின்றான். மனித உலகில் மாத்திரமன்றி மிருக உலகிலும் தாவர உலகிலும் அனைத்திலும் இச்சோடி நிலையைக் காணலாம். இப்பேருண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.
”மேலும் (நாம்) நீங்கள் படிப்பினைப் பெறுவதற்காக ஒவ்வொன்றிலும் சோடிகளைப் படைத்துள்ளோம்.” (51:49)
”அல்லாஹ் தூய்மையானவன். அவன் பூமி முளைக்கச் செய்பவையிலிருந்தும் அவர்களிலிருந்தும் அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் சோடிகளைப் படைத்தான்.” (36:36)
திருமணம், துறவறம், விபசாரம்
மிருக உலகம், தாவர உலகம் உட்பட ஏனைய உயிரினங்களைப் பொறுத்தவரையில் அவை இயல்பான இனக்கவர்ச்சியால் உந்தப்பட்டு இனப்பெருக்கத்தில் சுதந்திரமாக ஈடுபடுகின்றன. அந்த சுதந்திரத்தை அல்லாஹ் அவற்றிற்கு வழங்கியுள்ளான். மனிதனைப் பொறுத்தவரையில் அவன் தனது பால் உணர்ச்சியை எவ்வாறு தீர்த்துக்கொள்ளலாம் என்ற கேள்வி இங்கு பிறக்கின்றது.
இன்றைய சமயசார்பற்ற – சடவாத மேற்குலக கலாசாரம், மனிதன் தனது பாலுணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ள எத்தகைய கட்டுப்பாடுகளோ, வரையறைகளோ, ஆன்மீக, தார்மீக ஒழுங்குகளோ அவசியமில்லை எனக் கருதுகின்றது. திருமணம், வீடு, குடும்பம் என்பனவெல்லாம் பெண்களை நிரந்தரமாக அடிமைத்தனத்தில் வைத்திருக்கும் ஒரு சாபமே அன்றி வேறில்லை என்பது இந்தக் கலாசாரத்தின் நிலைப்பாடாகும். இக்கருத்தியலின் பயங்கர விளைவுகளை இன்றைய உலகம் எவ்வாறு அனுபவிக்கின்றது என்பதை மேலே கண்டோம்.
மறுபக்கத்தில், மனிதன் உடல் இச்சையை முழுமையாக கட்டுப்படுத்தல் வேண்டும். அது மிருக உணர்வாகும். அது ஆன்மீக விமோசனத்திற்குத் தடையானது என்று கூறும் துறவறக் கொள்கையையும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. ஒருவகையில் துறவறப்போக்கைக் கைக்கொள்ள முயற்சி செய்த உஸ்மான் இப்னு மழ்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் போன்ற நபித்தோழர்களை நபியவர்கள் எவ்வாறு நெறிப்படுத்தினார்கள் என்பதை வரலாற்றில் பார்க்கின்றோம்.
இஸ்லாம் பாலுணர்வை சுதந்திரமாக, எத்தகைய கட்டுப்பாடுகளுமின்றித் தீர்த்துக் கொள்வதை தடைசெய்வது போலவே சம்சார வாழ்க்கையை துறக்கும் துறவறத்தையும் பிரமச்சாரியத்தையும் விலக்கி, இரண்டிற்கும் இடையே திருமணம் என்ற ஒரு நெறியை அமைத்திருக்கின்றது. மனிதன் கௌரவமானவன். அவனது எல்லா நடவடிக்கைகளும் கௌரவமானதாகவும் நாகரிகமானதாகவும் அமைய வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இந்த வகையில் ஆண், பெண் உறவு திருமணம் என்ற உடன்படிக்கைக் கூடாக புனிதமான ஒன்றாக அமைதல் வேண்டும் என்று அது வலியுறுத்துகின்றது.
திருமண உடன்படிக்கையின்றி ஏற்படும் ஆண் – பெண் உறவை முறைகேடானது எனக் கருதும் இஸ்லாம் அதனை ‘ஸினா’ (விபசாரம்) என அழைக்கின்றது. ஸினா இஸ்லாத்தின் பார்வையில் மிகப் பெரிய பாவமாகும். அதற்கு மறுமைக்கு முன்னால் உலகிலேயே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமியக் கொள்கையாகும்.
விபசாரத்தைத் தடைசெய்யும் இஸ்லாம் அத்துடன் நின்றுவிடாமல் அதற்கான வழிகளையும் தடைசெய்கின்றது.
”நீங்கள் விபசாரத்தை நெருங்கவும் வேண்டாம். அது மானக்கேடானதாகவும், மோசமான வழிமுறையாகவும் இருக்கின்றது.” (17:32)
(கட்டுரையின் தொடர்ச்சிக்கு ‘Next’ ஐ’கிளிக்’செய்யவும்)