அக்பர் பாட்சா
[ முஸ்லீம் மன்னர்கள் எவரும் மதத்தின் பெயர் சொல்லி ஆட்சி நடத்தவில்லை. முகலாய மன்னர்கள் காலத்தில் இந்தியாவில் இஸ்லாம் ஒருபோதும் அரசியல் மதமாக இருந்ததில்லை. எந்த முஸ்லீம் மன்னனும் முஸ்லீம்களின் மக்கட்தொகையை கணக்கில் கொள்ளவில்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பற்றி முஸ்லீம் மன்னர்கள் யாரும் கவலைப் பட்டதில்லை.
மராட்டிய மன்னன் சிவாஜியை எதிர்த்து போரிட்ட ஓளரங்கசீப்பின் படையில் அதிகமான போர் வீரர்கள் மாரட்டாக்கள்தான். வெள்ளையனுக்கு எதிராக 1857ல் படை திரட்டி போர் தொடுத்த பகதூர் ஷா ஜாபரின் பேரப்பிள்ளைகளின் தலைகளை வெட்டி பரிசளித்த அந்த வெள்ளைப் படையின் வீரர்கள் சீக்கியர்களும் மராட்டக்களுமே. அப்போது வாழ்ந்த அந்த மக்களெல்லாம் என்ன மத நம்பிக்கையோ அல்லது இறை நம்பிக்கையோ இல்லாத மக்காளாகவா வாழ்ந்தார்கள்?
யாருடைய கையில் அதிகாரம் இருக்கிறதோ அவர்கள் சொல்வதே வேதம் என்கிற நிலைக்கு இந்த உலகம் அதிகார வர்க்கத்தின் காலடியில் அடிமைப்பட்டு கிடக்கிறது. அதிகார வர்க்கத்தின் அகங்கார கூக்குரல்கள்தான் எங்கு நோக்கினாலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.]
ஆட்சி யாரிடம் இருக்கிறதோ அல்லது இருக்கப் போகிறதோ அவர்கள் பக்கம் சாய்வதும் அவர்களுக்கு துதி பாடுவதும் இந்த அரசியல் தரகர்களுக்கும், வியாபரிகளுக்கும் வெட்கமில்லாத விஷயங்கள்.
முகலாய மன்னர்களின் பலம் குறையத் தொடங்கியதும், இந்த அரசியல் தரகர்கள், மாற்றார்கள், தங்களின் நிலையை மாற்றிக் கொண்டு, வெள்ளை அரசிற்கு சிரம் தாழ்த்தி நின்றது வரலாற்று உண்மைகள். வெள்ளையர்களை முஸ்லீம் மன்னர்களும், ஏனைய குறுநில ஆட்சியாளர்களும் எதிர்த்த போது அரசியல் மாற்றார்கள் ஆங்கிலேய பிரபுக்களுடன் கைகோர்த்து செயல்பட ஆரம்பித்தனர். ஆங்கிலேய அரசின் நிர்வாக அமைப்புகளில் முழுமையாக இணைத்துக் கொண்டு தங்களை வெள்ளை ராஜ்யத்திற்கு வெண்சாமரம் வீசுபவர்களாக மாற்றிக் கொண்டார்கள்.
முடி இழந்த முஸ்லீம் மன்னர்கள் மற்றும் மதத் தலைவர்களின் கட்டளைக்கிணங்க முஸ்லீம்கள் வெள்ளையர்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் வேளையில், மறு பக்கத்தில் அரசியல் மாற்றார்கள், வெள்ளையர்களின் விசுவாசிகளாக மாறி நிர்வாக அமைப்புகளில் தங்களை உயர்த்திக் கொண்டார்கள்.
முடி இழந்த முஸ்லீம் மன்னர்கள், அவர்களை பின்பற்றும் முஸ்லீம் கூட்டம் ஒரு பக்கமும், இனி எதிர்காலம் வெள்ளை அரசிடம்தான் என்று அவர்கள் பக்கம் சாய்ந்த அரசியல் தரகர்கள் இன்னொரு பக்கமுமாக புதிய அரசியல் கூட்டனி அங்கே உருவாகியது. வெள்ளை சாம்ராஜ்யத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அங்கே வித்திடப் பட்டது.
மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஈரோப்பிய நாடுகளில் முஸ்லீம்களின் எதிர்ப்பை சந்தித்து வந்த ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்கு இந்தியாவில் முஸ்லீம்களின் எதிர்ப்பை சமாளிப்பதற்கு இந்த மாற்றார்களின் அரசியல் நிலைப்பாடு மிகவும் உதவியாக அமைந்தது.
முதன் முறையாக இந்துக்களும், முஸ்லீம்களும் மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் பிரிய ஆரம்பித்தார்கள்.
அதற்கு வெள்ளை அரசாங்கம் எல்லாவிதமான வழி முறைகளையும் இரண்டு பிரிவினர்களுக்கும் அமைத்துக் கொடுத்தது. ஆயிரம் வருட காலங்கள் ஒன்றாக இருந்து, ஏழைகளின் இரத்தங்களில் மாளிகைகள் எழுப்பி அதில் இறுமாந்து வாழ்ந்து வந்த இந்து மற்றும் முஸ்லீம் அரசியல் வியாபாரிகள் வெள்ளையனின் பிடிக்குள் சிக்கியதும் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கத் தொடங்கினார்கள்.
அதுவரை ஒதுங்கியிருந்த மத உணர்வுகள் தட்டி எழுப்பப் பட்டன. ஆட்சி அதிகாரத்தை இழக்கும் போதுதான் வெறுப்புகளும், வேற்றுமைகளும் தலை தூக்க ஆரம்பிக்கும். கஷ்டம் வரும்போதுதான் கடவுள் நம்பிக்கை வலுப்பெறும். அரசியல் லாபங்களுக்காக முஸ்லீம் மன்னர்களுக்கு மதம் தேவைப்பட ஆரம்பித்தது. இதுநாள் வரை தனி மனித வாழ்வில் மட்டும் செயல் படுத்தப்பட்ட மதம், முடியிழந்த மன்னர்களால் பொதுப் பிரச்சனைகளுக்காகவும், சுதந்திர போராட்டத்திர்க்காகவும் பயன் படுத்தப்பட்டது. ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்து முஸ்லீம் மத அறிஞர்கள் “புனிதப் போர்” (ஜிஹாத்) அறிவித்து மதத்தை சுதந்திரப் போராட்டத்திற்கு பயன்படுத்தினார்கள்.
இறைவனின் பெயராலும் மதத்தின் பெயராலும் மக்களை ஒன்று சேர்ப்பது இந்திய மண்ணில் முஸ்லீம்கள் மத்தியில் அரங்கேர ஆரம்பித்தன. முஸ்லீம்களுடைய ஆட்சியிலும், அதற்கு முன்பு ஆண்டு வந்த இந்து மன்னர்களின் ஆட்சியிலும் ஒதுக்கி வைக்கப்பட்ட இந்திய வம்சாவளியினர், தாழ்த்தப் பட்டவர்கள், பிற்படுத்தப் பட்டவர்கள், அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எல்லோரும் இப்போது அரசியல் தரகர்களுக்கும், வியாபரிகளுக்கும் தேவைப்பட ஆரம்பித்தார்கள்.
பணபலமும் அதிகார பலமும் இருந்த போது தேவைப்படாத ஆள் பலம் தற்போது அரசியல் தரகர்களுக்கு அவசியமானது. வாழும்போது வேண்டாத மக்கள் கூட்டம், வீழும்போது தேவைப்பட்டது. அரசியல் வியாபாரிகளின் சுய விருப்ப வெறுப்புகளை பொது விருப்பு வெறுப்புகளாக மாற்றி பொதுமக்களிடத்தில் விற்கத் தொடங்கினர். அன்றைக்கு வாங்கத் தொடங்கிய நாம் இன்றுவரை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறோம்.
647 வருட காலங்கள் (1211 – 1858 AD) முஸ்லீம் மன்னர்களின் தலைநகராக இருந்த டெல்லி மாநகரத்தில் இன்று வரை முஸ்லீம்கள் சிறுபான்மையாக வாழக் கூடிய மக்கள் கூட்டம் தானே தவிர்த்து, ஆட்சி கையில் இருக்கிறதென்று எந்த மன்னனும் தன் ஆட்சியின் கீழ் இருந்த எந்த மக்களையும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மதம் மாற்றியதில்லை. காரணம் முஸ்லீம் மன்னர்கள் எவரும் மதத்தின் பெயர் சொல்லி ஆட்சி நடத்தவில்லை.
முகலாய மன்னர்கள் காலத்தில் இந்தியாவில் இஸ்லாம் ஒருபோதும் அரசியல் மதமாக இருந்ததில்லை. எந்த முஸ்லீம் மன்னனும் முஸ்லீம்களின் மக்கட்தொகையை கணக்கில் கொள்ளவில்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பற்றி முஸ்லீம் மன்னர்கள் யாரும் கவலைப் பட்டதில்லை. மாற்றர்கள் கடவுள் பெயர் சொல்லி மக்களை பல சாதிகளாகவும் வர்க்கங்களாகவும் கூறுபோட்டு சீரழித்தப் போது இந்த முகலாய மன்னர்கள் உல்லாச வாழ்க்கையில் உலகத்தை மறந்து சொகுசாக வாழ்ந்து வந்தார்கள்.
வெள்ளையர்கள் இந்தியாவை ஆளத்தொடங்கும் வரை இந்துக்களும், முஸ்லீம்களும் மதத்தின் பெயரால் ஒருவரோடு ஒருவர் அடித்துக் கொண்டு சாகவில்லை. வெள்ளையர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னால் இந்தியர்களின் இரத்தத்தை இந்தியர்களே சிந்த வைத்தபோதும் இந்த அரசியல் வியாபரிகளுக்கு அது இந்தியாவாகவும் தெரியவில்லை. அதிகாரமும், பொருளாசையும்தான் காரணமாக இருந்தது. இன்றைக்கும் அதே நிலைதான். ஆனால் காரணம்தான் வேறு. மதத்தையும் இனத்தையும் காரணம் காட்டி, முஸ்லீம்களை அன்னியர்கள் என்று சித்தரிக்கப்பட்டு இந்தியர்களின் இரத்தங்கள் இந்தியர்களால் சிந்தப்படுகிறது.
“அந்நியன்” என்ற சொல் கேட்பதற்கும் படிப்பதற்கும் ஒரு சாதாரண சொல்லாகவும், மிகச் சாதாரண அர்த்தம் தரக்கூடியதாகத்தான் தெரியும். ஆனால் அதை முஸ்லீம்களுக்கு எதிராக பயன் படுத்தும் போது அதன் அர்த்தம் சாமானிய இந்துக்களை, குறிப்பாக பொருளாதாரத்தில் பிற்படுத்தப் பட்டவர்களை மூளைச்சலவை செய்வதற்கு மாற்றார்கள் செய்த மற்றுமொரு சாதுர்யமான முயற்சி.
இந்திய முஸ்லீம்கள் ஒன்றும், பாபருக்கும், லோடிக்கும் பிறந்த மக்கள் கூட்டமல்ல. முஸ்லீம்களில் பெரும்போலோர் ஏதோ ஒரு காலத்தில் இந்துக்களாகவும், ஆதிவாசிகளாகவும் இன்னும் தாழ்த்தப்பட்ட மக்களாக இருந்து மதம் மாறியவர்கள்தான். ஆனால் அவர்களை அந்நியர்கள் என்று அடையாளப் படுத்தினால்தான் குஜராத்தில் நடத்தியதைப் போன்ற இனப் படுகொலைகள் செய்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும். அசோக் சிங்கால் போன்றோர்கள் இதை ஒரு “வெற்றிகரமான சோதனை” என்று பெருமைபட்டுக் கொள்ளமுடியும்.
மராட்டிய மன்னன் சிவாஜியை எதிர்த்து போரிட்ட ஓளரங்கசீப்பின் படையில் அதிகமான போர் வீரர்கள் மாரட்டாக்கள்தான். வெள்ளையனுக்கு எதிராக 1857ல் படை திரட்டி போர் தொடுத்த பகதூர் ஷா ஜாபரின் பேரப்பிள்ளைகளின் தலைகளை வெட்டி பரிசளித்த அந்த வெள்ளைப் படையின் வீரர்கள் சீக்கியர்களும் மராட்டக்களுமே. அப்போது வாழ்ந்த அந்த மக்களெல்லாம் என்ன மத நம்பிக்கையோ அல்லது இறை நம்பிக்கையோ இல்லாத மக்காளாகவா வாழ்ந்தார்கள்? அவர்களில் பெரும்பாலோர் இன்றைய மக்களைவிட அதிகமான கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகத்தான் இருந்தார்கள்.
முஸ்லீம்களுடன் சேர்ந்து போரிடும்போது அந்த மாற்றார்களுக்கு முஸ்லீம்கள் அந்நியர்களாக தெரியாமல் போனது எப்படி? மதத்தின் பெயர் சொல்லி அவர்கள் ஏன் பிரியவில்லை? அல்லது ஆங்கிலேயப் படையுடன் சேர்ந்து இந்தியர்களை இந்தியர்களே கொன்று குவித்த போது அந்த ஆங்கிலேயர்கள் அந்நியர்களாக தெரியாமல் போனது எப்படி?
யாருடைய கையில் அதிகாரம் இருக்கிறதோ அவர்கள் சொல்வதே வேதம் என்கிற நிலைக்கு இந்த உலகம் அதிகார வர்க்கத்தின் காலடியில் அடிமைப்பட்டு கிடக்கிறது. அதிகார வர்க்கத்தின் அகங்கார கூக்குரல்கள்தான் எங்கு நோக்கினாலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உலக அரங்கில் அதிகாரமும் ஆதிக்கமும் கையை விட்டு போகாமல் இருக்க வேண்டுமென்றால், மக்கள் பிளவுபட்டு கிடக்க வேண்டியது அவசியமாகிறது.
சூழ்நிலையை தனக்கேற்றவாறு மாற்றும் திறமை இருந்தால்தான் இந்த உலகில் காரியம் சாதிக்க முடியும் என்பது இன்றைய அரசியல் தொடங்கி வியாபரம் வரை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் Political power can be achieved by political hate only என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்க்கூடிய இந்த இந்திய அரசியல் வியாபாரிகள், மாற்றார்கள் இருக்கும் வரை மதம் மற்றும் பல இனங்கள் கூட அடையாளப் படுத்தப்பட்டு சின்னா பின்னாமாக்கப்படும்.
இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்…
”jazaakallaahu khairan” : http://suvatukal.blogspot.com & www.nouralislam.org