கேள்வி: குத்ப்மார்கள் என்றால் யார்? நபிமார்களில் சிலர் இன்றைய குத்ப்மார்களின் தரத்தை விட குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்று மறை ஞானப் பேழையில் படித்தேன். இது எப்படி சரியாகும்?!
பதில்: இஸ்லாத்தின் உயிரோட்டமான ஏகத்துவத்தில் களங்கம் ஏற்படுத்தி – தனிமனித வழிபாட்டை ஊக்குவித்து – பல தெய்வ கொள்கைக்கு வழி வகுக்கும் அத்வைத கோட்பாடு (இறைவனும் மனிதனும் இரண்டற கலந்துவிட முடியும் என்ற கேடுகெட்ட சித்தாந்தம் தான் அத்வைதம்) தான் நீங்கள் படித்த பைத்தியக்காரத்தனமான உளறல்களை உள்ளடக்கியுள்ளது.
குத்புகள், அவ்லியாக்கள், ஷேக்குகள், மகான்கள், ஞானிகள் என்றெல்லாம் வார்த்தைகளை கண்டுபிடித்து அவற்றை சிலருக்கு சூட்டி மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த அத்வைத தீய கொள்கையுடையோர்.
நபிமார்களின் தகுதியை மனித சமுதாயத்தில் யாருமே அடைய முடியாது என்பது மிகத் தெளிவான விஷயமாகும்.
ஏனெனில் அவர்கள் இறைவனோடு வஹியின் தொடர்பில் இருந்தவர்கள். பாவமான செயல்களோ, எண்ணங்களோ உதித்தால் கூட இறைவனால் அவை சுட்டிக் காட்டப்பட்டு சீர் திருத்தப்பட்டவர்கள். இறைவேத அடிப்படையில் வாழ்ந்தவர்கள். இப்படிப்பட்ட இறைத்தூதர்களையே ஒரு கொள்கை குறைத்து மதிப்பிடுகிறது என்றால் அது எத்தகைய கொள்கை என்பதை நாம் மேலதிகமாக விளக்க வேண்டுமா..?
இறைத்தூதர்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அனைத்துப் புகழுக்கும் உரியவன் இறைவன். (அல் குர்ஆன் 37:181,182)நபிமார்களை விடுங்கள் இந்த தீய கொள்கையுடையோர் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் குத்புகள் – அவ்லியாக்கள் – மகான்கள் – ஷேக்குகள் எல்லாம் குறைந்த பட்சம் நபித் தோழர்களின் இடத்தையாவது பிடிக்க முடியுமா..? நிச்சயம் முடியவே முடியாது.
ஏன் அவ்வளவுக்கு போக வேண்டும்? குர்ஆனையும் நபிமொழிகளையும் தெளிவாக விளங்கி அதில் உள்ளதை மட்டும் கூடுதல் குறைச்சல் இல்லாமல் நீங்களும் நாமும் பின் பற்றினால் நம் இடத்தைக் கூட இவர்களால் (போலி ஷேக்குகளால்) பிடிக்க முடியாது. ஏனெனில் இவர்கள் இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்தில் இல்லாத கொள்கையைப் பின்பற்றுகிறார்கள்.
இத்தகைய கொள்கைக்காரர்களையும், அந்த கொள்கையை பரப்பும் மீடியாக்களையும் பகிரங்கமாக இனம் காட்டும் கடமை நமக்கு உண்டு என்பதை மறந்து விட வேண்டாம்.
”Jazaakallaahu khairan”