இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”சொர்க்கம் என்பது, உங்களில் ஒருவருக்கு அவரது செருப்பின் வாரை விட மிக நெருக்கமாக இருக்கும். நரகமும் இதுபோல் தான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி)
இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ” …நீங்கள் சுபச்செய்தி கேளுங்கள். உங்களை மகிழ்வுறச் செய்யும் செய்தியைப் பெறுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, ஏழ்மை உங்களிடம் ஏற்படுவதை நான் பயப்படவில்லை. எனினும், உங்களுக்கு முன் இருந்தோருக்கு வசதியாக ஆக்கப்பட்டது போல் உங்களுக்கும் இந்த உலகம் வசதியாக்கப்படுவதையே நான் பயப்படுகிறேன். மேலும் அதில் அவர்கள் பெருமை கொண்டது போல், நீங்களும் அதில் பெருமை கொண்டு இருப்பதையும், அவர்களை அது அழித்தது போல் உங்களை அது அழித்து விடும் என்பதையுமே (நான் பயப்படுகிறேன்)” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அபூஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேடையில் (மிம்பரில்) உட்கார்ந்தார்கள். அவர்களைச் சுற்றி நாங்களும் உட்கார்ந்தோம். அப்போது அவர்கள், ”எனக்குப் பின் உங்களிடையே உலக வசதி அதிகமாக்கப்படுவதைக் கண்டு நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்கள்.(புகாரி, முஸ்லிம்)
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”இறைவா! மறுமையின் வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை (நிரந்தரம்) இல்லை என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பிரார்த்தனைச் செய்யும்போது) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”இறந்தவரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை அவனது குடும்பம், அவனது சொத்து, அவனது செயல்கள் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டும் தங்கி விடுகிறது. அவனது குடும்பமும், அவனது சொத்தும் திரும்பி விடுகின்றன. அவனது செயல் தங்கி விடுகிறது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” (புகாரி , முஸ்லிம்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”அல்லாஹ்வின் அச்சம் காரணமாக அழுகின்ற மனிதர், கறந்தபால் மடுவுக்குள் மீண்டும் நுழைந்தாலும் நரகில் நுழைய மாட்டார். அல்லாஹ்வின் வழியில் படிந்த புழுதியும், நரகப் புகையும், இணைந்திடாது” என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (திர்மிதீ)
இர்பாழ் இப்னு ஸாரியா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”உள்ளங்கள் நடுங்கி கண்கள் கண்ணீரைச் சிந்தும் அளவுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்தார்கள்.”(அபூதாவூது, திர்மிதி)