5. பஹ்ரைன் நாட்டு ஆளுநருக்குக் கடிதம்
பஹ்ரைன் நாட்டு ஆளுநர் ‘அல்முன்திர் இப்னு ஸாவி‘ என்பவருக்கு இஸ்லாமின் பக்கம் அழைப்புக் கொடுத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடிதம் எழுதினார்கள். அக்கடிதத்தை அலா இப்னு ஹள்ரமி என்ற தோழர் மூலம் அனுப்பினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடிதத்தைப் படித்துப் பார்த்த பின்பு அவர் நபியவர்களுக்குப் பதில் எழுதினார். ”அல்லாஹ்வின் தூதரே! உங்களது கடிதத்தை பஹ்ரைன் நாட்டு மக்களுக்கு முன் நான் படித்துக் காட்டினேன். அவர்களில் சிலர் இஸ்லாமால் கவரப்பட்டு அதை விரும்பி ஏற்றுக் கொண்டனர். எனது நாட்டில் மஜுஸிகளும் யூதர்களும் இருக்கின்றனர். எனவே, நான் என்ன செய்ய வேண்டும்? எவ்வாறு நடக்க வேண்டும்? என எனக்குக் கட்டளை பிறப்பியுங்கள்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பின்வரும் பதில் எழுதியனுப்பினார்கள். ”அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, முன்திர் இப்னு ஸாவிக்கு எழுதிக் கொள்வது. உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! உங்களுக்கு முன் நான் அல்லாஹ்வைப் புகழ்கிறேன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. முஹம்மது அவனது அடிமையும் அவனது தூதருமாயிருக்கின்றார் என்று நான் சாட்சி கூறுகிறேன். இதற்குப் பின் உங்களுக்கு நான் அல்லாஹ்வை நினைவூட்டுகிறேன்.
யாரொருவர் நன்மையை நாடுகிறாரோ அந்த நன்மையின் கூலி அவரையே சாரும். யார் நான் அனுப்பும் தூதர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்து, அவர்கள் கூறும் விஷயங்களைப் பின்பற்றுகிறாரோ அவர் எனக்குக் கீழ்ப்படிந்து நடந்தவராவார். யார் அவர்களுக்கு நன்மை செய்கிறாரோ அவர் எனக்கு நன்மை செய்தவராவார். நான் அனுப்பிய தூதர்கள் உங்களைப் பற்றி நல்லதையே கூறினார்கள். நீங்கள் உங்களது கூட்டத்தினருக்குச் செய்த பரிந்துரையை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களுக்கு அவர்கள் முஸ்லிமாக மாறும் போது அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும் அப்படியே கொடுத்து விடுங்கள். அவர்களில் குற்றமிழைத்திருந்தவர்களை நான் மன்னித்து விட்டேன். எனவே, நீங்களும் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் சீர்திருத்தம் செய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் நாம் உங்களை உங்களது பதவியிலிருந்து அகற்ற மாட்டோம். யார் தனது யூத அல்லது மஜூஸி மதத்தில் நிலையாக இருந்து விடுகிறாரோ அவர் ஜிஸ்யா (வரி) செலுத்த வேண்டும்.” இவ்வாறு அதில் குறிப்பிட்டார்கள்.
6. யமாமா நாட்டு அரசருக்குக் கடிதம்
இவர் பெயர் ‘ஹவ்தா இப்னு அலீ’ ஆகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவருக்கு எழுதிய கடிதத்தின் வாசகமாவது:
”அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹவ்தா இப்னு அலீக்கு எழுதிக் கொள்வது. நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்.”
இக்கடிதத்தை அனுப்புவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸலீத் இப்னு அம்ர் அல் ஆமி ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஸலீத் ரளியல்லாஹு அன்ஹு இந்த முத்திரையிட்ட கடிதத்தை எடுத்துக் கொண்டு ஹவ்தாவிடம் வந்தபோது, அவர் ஸலீதை வரவேற்று தனது விருந்தினராகத் தங்க வைத்தார். ஸலீத் ரளியல்லாஹு அன்ஹு அவருக்கு அக்கடிதத்தைப் படித்துக் காட்டினார்.
அவர் அதற்குச் சிறிய அளவில் மறுப்பு தெரிவித்து விட்டு பதில் ஒன்றை எழுதினார். அதில், ”நீர் அழைக்கும் விஷயம் எவ்வளவு அழகானது, அற்புதமானது – பொதுவாக அரபிகள் எனக்குப் பயந்து நடக்கிறார்கள். உமது அதிகாரத்தில் எனக்கும் சில பங்கைக் கொடுத்தால் நான் உம்மைப் பின்பற்றுகிறேன்” என்று கூறினார்.
இக்கடிதத்துடன் ஸலீத்துக்கு வெகுமதிகளையும் அன்பளிப்புகளையும் கொடுத்து ‘ஹஜர்’ என்ற இடத்தில் நெய்யப்பட்ட உயர்ந்த ஆடைகளையும் அவருக்கு அணிவித்தார்.
இவையனைத்தையும் எடுத்துக் கொண்டு ஸலீத் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நடந்த செய்தியைக் கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அக்கடிதத்தைப் படித்துப் பார்த்துவிட்டு ”அவன் பூமியில் சிறுபகுதியைக் கேட்டாலும் கொடுக்க மாட்டேன். அவனும் நாசமாகி விட்டான். அவனது அதிகாரத்திற்கு உட்பட்டதும் நாசமாகி விட்டது” என்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை வெற்றி கொண்டு திரும்பிய போது ‘ஹவ்தா’ இறந்துவிட்ட செய்தியை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸாலாம் கூறினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ”நிச்சயமாக யமாமாவில் தன்னை நபி என்று கூறும் ஒருவன் உருவாகுவான். அவன் எனது மரணத்துக்குப் பின் கொல்லப்படுவான்” என்றார்கள். ஒருவர் ”அல்லாஹ்வின் தூதரே! அவனை யார் கொல்வார்? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் ”நீரும் உமது தோழர்களும்” என்றார்கள். பின்னாளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியவாறே நடந்தது.
7. சிரியா நாட்டு மன்னருக்குக் கடிதம்
இவர் பெயர் ‘ஹாரிஸ் இப்னு அபூ ஷமீர் அல்கஸ்ஸானி’ ஆகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவருக்கு எழுதிய கடிதமாவது:
”அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.”
அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு ”என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்” என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை. கடுங்கோபம் கொண்ட அவன் கைஸர் மன்னரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது போர் தொடுக்க அனுமதி கேட்டான். ஆனால், கைஸர் அவனைத் தடுத்து விட்டார். இதற்குப் பின் கடிதம் கொண்டு வந்த ஷுஜாஃ இப்னு வஹபுக்கு அன்பளிப்பாக ஆடைகளையும் வழிசெலவுகளையும் கொடுத்து அழகிய முறையில் ஹாரிஸ் அனுப்பி வைத்தான்.
”Jazaakallaahu khairan”
நூல்: ரஹீக்