[ ”There is probably in the world no other book which has remained twelve centuries with so pure a text” (பன்னிரு நூற்றாண்டுகளாகப் பாருலகில் இத்துணைத் தூய்மையுடன் நின்றிலங்கும். இன்னொரு நூலே கிடையாது) என்பார் பாதிரியார் வில்லியம் மூர்
அற்புதங்கள் பலவற்றை விளைவித்துக் காலத்தின் கோலத்தால் கவர்ச்சியை இழந்து விடாமல் பூத்துக் குலுங்கும் அறிவு வளர்ச்சியினால் புதுமை மாறிவிடாமல், இன்றளவும் இணையற்ற நூலாய் விளங்கி வருகின்றதுஅல்குர்ஆன். இத்தகைய அற்புதங்களை ஆறறிவு படைத்த அற்புத மனிதன் ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?.]
வையகத்து மக்கள் வாய்பிளந்து வியக்கின்ற அற்புதங்கள் பலவற்றை ஏடுகள் எடுத்துக் காட்டுகின்றன.
எகிப்து நாட்டில் ஏற்றத்துடன் மிளிர்கின்ற பிரமிடுகள் எனப்படும் பட்டைக் கோபுரங்கள். அவற்றின் அருகாமையில் 66 அடி உயரத்திலும் 175 அடி நீளத்திலும் ஒற்றைக் கல்லில் உருவாக்கப்பட்டுள்ள ஸஃபிங்கஸ் எனப்படும் சிங்க வடிவச் சிலை.
இராக் நாட்டில் புராத் நதிக்கரையில் திகழ்ந்த பண்டைய பாபிலோனியாவின் தொங்குதோட்டம்.
கிரேக்க நாட்டில் 127 சலவைக் கற்களின் மீது நிறுவப்பட்டிருக்கும் 60 அடி உயரமுடைய ஆர்ட்டிமிஸ் ஆலயம்.
ஹெலிகார்னஸஸ் என்னுமிடத்தில் எழில்மிகு தோற்றத்துடன் எழுப்பப்பட்ட மெளஸலஸ் மண்ணறை.
ரோட்ஸ் நகரத்தில் கிரேக்கர்களின் கதிர்க்கடவுளுக்காக 109 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட வெண்கலச் சிலை.
அலெக்சாந்திரியாவில் 600 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட கலங்கரை விளக்கம்.
சீன நாட்டின் வட எல்லையில் 2550 மைல் நீளத்தில் நிருமாணிக்கப்பட்ட உயரமான நெடுஞ்சுவர்.
பைசா நகரத்தில் 116 அடி உயரத்தில் சாய்ந்து நிற்கின்ற கோபுரம்.
பேரரசர் ஷாஜஹான் துணைவியார் மீது கொண்ட காதற் சின்னம் கண்ணீர்த்துளியாக உறைந்துவிட்ட தாஜ் மஹால். இவைகளெல்லாம் பாருலகம் கண்ட பேரற்புதங்களாகப் போற்றப்படுகின்றன. இவற்றினும் மேலான சில அற்புதங்களைப் பற்றி மனிதன் சிந்திப்பதே இல்லை.
மலைகளைப் போன்று உயரமாக எழுந்த அலைகளின் நடுவே மரத்தாலும் ஆணிகளாலும் அமைக்கப்பட்ட ஒரு கலத்தில் நபி நூஹ் அலைஹிஸ்ஸாலாம் அவர்களும் குழுவினரும் எத்தகைய இடையூறுமின்றிக் காப்பாற்றப்படுகின்றனர்.
கொடியோன் நம்ரூதின் ஆணைப்படிக் கோபுரமாகக் கொழுந்து விட்டெரியும் நெருப்புக் குண்டத்தில் இறைநேயர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸாலாம் அவர்கள் தூக்கி எறியப்பட்டபோது நெருப்புக் குண்டம் குளிர்ச்சிமிக்க தண்ணீர்க் குளம் போன்று மாறிவிடுகின்றது.
அட்டதிசை போற்றும் சுலைமான் நபி அலைஹிஸ்ஸாலாம் அவர்களின் அரசவையில் ஸபா நாட்டரசி பல்கீஸின் அரியணை நாடியவுடன் கொணரப்படுகிறது. முன்னவன் தூதர் மூஸா அலைஹிஸ்ஸாலாம் அவர்களின் ஆஸாக் கோல் பாம்பாக மாறுகின்றது. பாறையில் அடித்தவுடன் நீரூற்றுக்கள் தோன்றுகின்றன.
இறைத்தூதர் ஈஸா அலைஹிஸ்ஸாலாம் அவர்கள் தந்தையின்றியே பிறக்கின்றார்கள். தொட்டிற் பருவத்திலேயே தெளிவாக உரையாடுகின்றார்கள். இறை யாணைப்படி இறந்தோரை எழுப்புகின்றார்கள். பிறவிக் குருடர்களையும், பெரு நோயாளிகளையும் குணப்படுத்து கின்றார்கள்.
பாலைவன நாட்டின் பாரான் பள்ளத்தாக்கில் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னர் தன்னந்தனியாகக் கிடந்த புனிதக் குழவியொன்றன் பூவடிகள் பட்டுப் பொங்கியெழுந்த நீரூற்றொன்று, இற்றைநாள் வரையில் வற்றாமலிருந்து வையகத்து மக்களுக்கெல்லாம் வாய்கமழ, மனங்குளிர ஜம்ஜம்மென்று நீரூட்டி வருகின்றது. அந்த ஜம்ஜம் ஊற்றின் கரையிலேயே எழுந்த மக்கமா நகரத்தில் அனாதையாகப் பிறந்து எழுதப் படிக்கத் தெரியாதிருந்த ஒருவரால் தோற்றுவிக்கப்பட்ட இஸ்லாமிய நாகரீகம் இன்று உலகளாவி நிலைத்து நிற்கின்றது.
இஸ்லாம் நெறியின் அடிப்படை யாகவும், ஆதாரமாகவும் அமைந்துள்ள அல்- குர்- ஆன் என்னும் அருள்மறை அவனியிலுள்ள நூல்கள் அனைத் திற்கும் அன்னையாகத் திகழ்ந்து அற்புதங்கள் பலவற்றை விளைவித்துக் காலத்தின் கோலத்தால் கவர்ச்சியை இழந்து விடாமல் பூத்துக் குலுங்கும் அறிவு வளர்ச்சியினால் புதுமை மாறிவிடாமல், இன்றளவும் இணையற்ற நூலாய் விளங்கி வருகின்றது. இத்தகைய அற்புதங்களை ஆறறிவு படைத்த அற்புத மனிதன் ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?
இறைத் தூதர்களாக இவ்வுலகில் வாழ்ந்த நபிமார்களெல்லாம் அவர்கள் வாழ்ந்த சூழ்நிலைக் கேற்ற அற்புதங்களைக் காட்டிச் சென்றார்கள்.
இசை இன்பத்தில் இதயத்தைப் பறிகொடுத்து வாழ்ந்த மக்களிடையே தோன்றிய ஹலரத் தாவூத் அலைஹிஸ்ஸாலாம்அவர்கள் நாத வேதமாகிய சபூர் மறையை ஓதிக் காட்டினார்கள்.
மந்திரவாதிகளின் மாயத் தந்திரங்களெல்லாம் மேலோங்கி நின்ற காலத்தில் வாழ்ந்த ஹலரத் மூஸா அலைஹிஸ்ஸாலாம்ஆஸாக் கோலால் அற்புதம் செய்தார்கள். மருத்துவத் துறையில் மனத்தைச் செலுத்திய மக்களிடையே வாழ்ந்த ஹலரத் ஈஸா அலைஹிஸ்ஸாலாம் அவர்கள் தீராப் பிணிகளைத் தீர்த்து வைத்தார்கள்.
மொழி வெறியிலும், இலக்கிய இன்பத் திலும், கவிதைச் சுவையிலும் மெய்ம்மறந்து திளைத்திருந்த மக்களுக்கு அண்ணல் பெருமானார் நபிகள் நாயகம் அலைஹிஸ்ஸாலாம் அவர்கள் இறையருள் இலக்கியமாகிய திருக்குர்ஆனை வழங்கினார்கள். பிற நபிமார் காட்டிய அற்புதங்களெல்லாம் ஏடு கமழும் பேருண்மைகளாக விளங்க அண்ணலார் காட்டிய அற்புதம் என்றும் எல்லோரும் நேரிற் காணும் பாருண்மையாக நிலைத்து விட்டது.
”அற்புதங்கள் யாவினையும் அவைமிகைத்து நிற்பனவாம் நிற்கவில்லை முந்தைநபி நிகழ்த்துமற்றை அற்புதமே”
என்பது காலமெல்லாம் கமழும் கஸீதத்துல் புர்தா என்னும் கவிதைச் செல்வம் வழங்கியுள்ள இமாம் பூஸ்ரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ”தாமத்ல தைனா” எனத் தொடங்கும் பாவடிகளில் பதித்துள்ள கருத்தாகும். பெற்றெடுத்த குழவிகளையே உயிருடன் குழிதோண்டிப் புதைத்துக் கொடுமையின் கொடு முடியிலேறிக் கொக்கரித்து நின்ற கொடியவர்களின் கன் னெஞ்சங்களைத் தண்ணீர் போல மாற்றிய அற்புதத்தை மாநிலத்தில் வேறெங்கே காண முடியும்?
பளிச்செனத் தோன்றிய வான்மறையின் வெளிச்சத்திற்கு முன்னால் இலக்கிய அரக்கர்களெல்லாம் கண்ணைத் திறக்க முடியாமல் வாயை மூடி மெளனிகளாயினர். நானில நாயனின் மறை நாதத்தைச் செவிமடுத்த மாத்திரத்தில் ஆடிய அவர்களின் நாடிகளெல்லாம் அடங்கியொடுங்கி இதயங்களெல்லாம் இளகியோடின. வானின்று இறங்கிய பேரமுதம் அவர்களுக்குத் தேனினும் பாலினும் தெவிட்டாக் கனியிலும் தித்தித்தது.
வள்ளல் நாயகம் ஸல்லல்லாஹு லைஹி வஸல்லம் அவர்களின் தலையைக் கொய்வதற்காக வஞ்சினங் கூறி வாளேந்திப் புறப்பட்டுச் சென்ற மாவீரர் உமறு, திருமறை வசனங்கள் சிலவற்றைக் கேட்டதும் மனந்திருந்தி மாநபியின் தாளடைந்து மறை நெறியைத் தழுவுகின்றார். திருநபியைத் திருத்துவதற்காகத் திட்டமிட்டு வந்த தீரர் உத்பா, திருமறை ஓதக் கேட்டதும் ஊமையைப் போல் ஒன்றும் பேசாமல், சிங்கஅத்தைக் கண்ட வரையாடு போன்று அசையாமல் நிற்கின்றார். உத்தமத் திருநபிக்குப் புத்தி கூற வந்த வலீதிப்னு முகைரா, ”தேனீ” என்னும் அத்தியாயத்தைக் கேட்டு மறைமலர் நுகரும் தேனீயாக மாறிவிடுகிறார்.
பிரசித்தி பெற்ற மந்திரவாதி லம்மாதிப்னு ஸஃலத்துல் அஜ்தீ, துமாமத் இப்னு உதால், அபூ தர்ருல் கப்பார் முதலிய ஆயிரக்கணக்கானோரின் திசைமாறிய வாழ்க்கையில் திருமறையே ஒரு திருப்பு மையமாக அமைந்தது.
கவிதைச் செருக்கு மண்டையிலேறி யிருந்த அண்டாக்கவிஞன் இன்பத் திருமறையில் ஈரைந்து சொற்களைக் கொண்டிலங்கும் ”அல் கவ்தர்” அத்தியாயத்தைச் செவி மடுத்ததும் ”மானிடர் மொழி யீதன்று” (மா ஹாதா கவ்லுல் பஷர்) என்பதாக வியந்து மொழிந்து தலைகுனிந்த நிகழ்ச்சியை அறிகின்றோம்.
அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமறை வெளிப்பாடெனக் கூறுவதெல்லாம் கற்பனையின் களியாட்டே யென்றும், பித்தரின் பிதற்றலென்றும் சூனியக்காரரின் சூழ்ச்சி யென்றும் குறை கூறிக் கொண்டிருந்த மக்கத்து மக்களுக்கு மாபெரியோன் விடுத்த அறைகூவல் உலையாத இறை மறையில் நிலையாக இடம்பெற்றுள்ளது.
”நாம் நம் அடியாருக்கு அருளியதில் நீங்கள் ஐயம் கொண்டு நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் அல்லாஹ்வைத் தவிர – உங்கள் உதவியாளர்களையும் நீங்கள் துணைக் கழைத்துக் கொண்டு இதைப் போன்றதோர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்” (2:23)
இவ்வறை கூவலை ஏற்கும் வகையில் தொடக்கத்திலே தோன்றிய ஓரிரு சலசலப்புகள் மக்கள் மன்றத்திலே நகைப்பிற் கிடமாகி அழிந்தொழிந்தன. பிற்காலத்தில் திரு மறையின் அறைகூவலை ஏற்கும் வகையில் வரிந்து கட்டிக் கொண்டு வந்த வில்லியம் மூர் போன்ற பாதிரிமார்களும் வித்தகர்களும் படுதோல்வி கண்டதோடு மட்டுமன்றி வான் மறையை வாய்விட்டுப் பாராட்டவும் தொடங்கினர்.
”There is probably in the world no other book which has remained twelve centuries with so pure a text” (பன்னிரு நூற்றாண்டுகளாகப் பாருலகில் இத்துணைத் தூய்மையுடன் நின்றிலங்கும். இன்னொரு நூலே கிடையாது) என்பார் பாதிரியார் வில்லியம் மூர்.
”That the best of Arab writers has never succeded in producing anything equal in merit to the Holy Quran itself is not surprising’‘ (”மிகச்சிறந்த அரபி எழுத்தாளர் ஒருவர் கூடப் புனிதக் குர்ஆனின் ஆற்றலுக்கு ஈடானதொன்றை ஆக்கியளிப்பதில் என்றுமே வெற்றி கண்ட தில்லை என்பது வியப்பிற்குரியதல்ல”) என்பதாக பால்மர் என்பார் திருக்குர்ஆன் முன்னுரையில் குறிப்பிடுகின்றார்.
”மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து இதைப் போன்ற ஒரு குர்ஆனை உண்டாக்க முயன்றாலும் அவ்வாறு உண்டாக்கவே முடியாது அவர்களில் சிலர் சிலருக்கு உதவி செய்த போதிலும் சரியே” (17:88) என்னும் இறை தீர்ப்பு எக்காலமும் நிலைத்திருப்பதல்லவா?
மனித குலத்தின் மனப் பக்குவத்திற் கேற்பக் காலத்திற் கேற்ற முறையில் தூதர்கள் வாயிலாக வழிகாட்டி வந்த இறைவன், நிறைவான அறவுரைகள் அனைத்தையும் பெறு வதற்கு மனிதகுலம் தகுதியைப் பெற்றுவிட்ட தருணத்தில் இறுதித் தூதராகிய அண்ணல் நாயகமவர்கள் வாயிலாக வளமும் வனப்பும் செறிந்த உயர்தனிச் செம்மொழியாகிய அரபியில் நிறைவு பெற்ற இறுதி மறையை இறக்கினான். ஆகவே உலகின் இறுதி வரையிலே மனித குலத்திற்குத் தேவையான அறவுரைகள் அனைத்தும் அதில் இடம் பெற்றன. அதனை மாசுபடாமல், மாறுபடாமல் இறைவன் ஏற்றெடுத்தான்.
”அறிவுவகை யெத்தனையென் றறியவகை யில்லை
அத்தனையும் அவனுரைத்த அருள்மறையி லடக்கம்
எத்தனையோ கோடிமறை இறையுரைத்த தெல்லாம்
எடுத்தொடுக்கிக் குர்ஆனை இறையிறக்கிக் கொடுத்தான்
முத்தான குர்ஆனுக் குயர்ந்தமறை யில்லை”
என்பது ஞானமேதை பீரப்பா அவர்களின் சத்தான பாடல். அறிஞர்களால் ஆக்கப்படும் நூல்கள், யாதேனும் ஓரிரு பொருட்கள் பற்றிப் பேசுவதைப் பொதுவாகக் காணலாம்.
அனைத்துலகுக்கும் உலக முடிவு வரையில் வழிகாட்டும் ஆற்றல் பெற்றிருக்கும் ”நூல்களின் தாய்” (உம்முல் கிதாப்) என நுவலப்படும் இறைவனின் அருள்மறை தொட்டுக் காட்டாத பொருட்களே உலகத்திலில்லை.
அறிவியல், அரசியல், அருளியல், பொருளியல், உயிரியல்,ஒழுக்கவியல், சட்டவியல், சமூகவியல் முதலிய எல்லாப் பொருட்களையும் தன்னகத்தே தாங்கியுள்ளது ஏகநாயகனின் எழில்மறை, ஒருவன் யார் யாரைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்பதை விரிவாக எடுத்துக் கூறுவதிலிருந்து தன்னுடையதல்லாத இல்லத்தில் நுழைகின்றபோது எத்தகைய ஒழுக்கத்துடன் நுழையவேண்டு மென்பது வரையில் எல்லாப் பொருள் பற்றியும் நுட்பமாக நுவல்லது அல்லாஹ்வின் அருள்மறை.
மனிதகுல ஒருமைப்பாடு, சமத்துவம், சகோதரத் துவம், உயிர்களின் உற்பத்தி, வான்வெளிப் பயணம், வானுக்கும் மண்ணுக்கு மிடையே உயிரினங்கள், அனைத்துயிர்களிலும் ஆண், பெண் அமைப்பு, அன்னையின் வயிற்றில் குழந்தையின் வளர்ச்சி, உலோகங்களின் பயன், பொறியின் செயற்பாட்டால் விளையும் வீரியம் – போன்ற பல்வேறு பொருள்பற்றி இன்று விஞ்ஞானிகள் வெளியிடும் கருத்துக்களுக்குரிய கருவனைத்தையும் திருமறையில் காணலாம் நூஹ் நபியின் கப்பல், உரோமர்கள்மீது வெற்றி ஃபிர்அவ்வின் சடலம் ஆகியவை பற்றிய தீர்க்கதரிசனங்கள் காலப் போக்கிலே வெளிப்பட்டுள்ளன.
தொடர்ச்சிக்கு ”Next” ஐ ‘‘கிளிக்” செய்யவும்.