அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுதல்
பஞ்சாவில் ஏற்படும் அடுத்த பாவம் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாகும்.
மார்க்கத்தில் சட்டம் இயற்றல் என்பது அவனுடைய தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளதாகும். அதை ஷியாக்களின் வாரிசுகளான இந்த ஃபக்கீர் சாஹிபுகள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்கின்றனர்.நாம் தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் உண்ணுதல், பருகுதல், பேசுதல் போன்ற அனுமதிக்கப்பட்ட காரியங்களை அல்லாஹ் தடுத்து விடுகின்றான். தொழுகையில் முதல் தக்பீரின் போது இந்தத் தடை அமுலுக்கு வந்து விடுவதால் இது தக்பீர் தஹ்ரீமா எனப்படுகின்றது.அது போல் ஹஜ்ஜுக்குச் செல்லும் போது இஹ்ராமை மனதில் எண்ணி அதற்குரிய ஆடை அணிந்து விட்டால் அது வரை நமக்கு ஹலாலாக இருந்த தாம்பத்தியம், வேட்டையாடுதல், திருமணம் போன்ற காரியங்கள் ஹராமாகி விடுகின்றன. இது போன்று சில குறிப்பிட்ட வணக்ககங்களில் அல்லாஹ் நமக்குச் சில தடைகளை விதித்துள்ளான். இந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமான தனி அதிகாரமாகும்.
ஹஜ்ஜின் போது இந்தத் தடையை மீறி விட்டால் நாம் ஓர் ஆடு அறுத்துப் பலி கொடுத்து பரிகாரம் தேட வேண்டும். இதுவும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது தான். இப்படி குறிப்பிட்ட வணக்கங்களின் போதும், பொதுவாகவும் ஹராமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே சொந்தமானது.
பாருங்கள்! இந்த அதிகாரத்தை, பஞ்சா எடுக்கும் பக்கீர் பண்டாரங்கள் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு முஹர்ரம் பத்து நாட்களிலும் மீன் சாப்பிடக் கூடாது என்று தடை! தாம்பத்தியத்திற்குத் தடை! இந்தத் தடைகளை மீறி விட்டால் அதற்கு ஆடு, கோழி போன்றவற்றைப் பலி கொடுத்து பரிகாரம் தேட வேண்டும் என்று வைத்துள்ளார்கள்.
இவர்களுக்கு எவ்வளவு துணிச்சலும் நெஞ்சழுத்தமும் இருந்தால், திமிர் இருந்தால் அல்லாஹ்வின் இந்த அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுப்பார்கள்?
அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது. (அல்குர்ஆன் 42:21)
இவர்களோ அல்லாஹ்வின் இந்தக் கேள்விக்கு, நாங்கள் இருக்கின்றோம் என்று பதில் கூறுவது போல் செயல்படுகின்றார்கள்.
நபியே! உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? (அல்குர்ஆன் 66:1)
என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி அல்லாஹ் கேட்கின்றான். ஆனால் இவர்களோ அல்லாஹ் அனுமதியளித்ததை தங்கள் இஷ்டத்திற்கு ஹராமாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இது அனுமதிக்கப்பட்டது; இது விலக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 16:116)
நிச்சயமாக இதையெல்லாம் மார்க்கம் என்ற பெயரில் இட்டுக் கட்டியதால் அல்லாஹ்வின் மீதே பொய்யை இட்டுக் கட்டிய மாபெரும் துரோகத்தைச் செய்தவர்களாகின்றனர். அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதை அல்லாஹ் மிக வன்மையாகக் கண்டிக்கின்றான்.
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 6:21)
அறிவின்றி மக்களை வழி கெடுப்பதற்காக அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக் கட்டுவோரை விட மிகப் பெரிய அநீதி இழைத்தோர் யார்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 6:144)
மாற்று மதக் கலாச்சாரம்
பஞ்சா எனும் சப்பரத்தை உருவாக்குதல், லிங்க வடிவில் கொழுக்கட்டை செய்தல், மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டித்தல், நினைவு நாள் கொண்டாடுதல் போன்றவை மாற்றுமதக் கலாச்சாரங்களில் உள்ளவையாகும்.
ஆண் குழந்தை வேண்டுமென்று ஆணுறுப்பு வடிவத்தில் கொழுக்கட்டை செய்து விளம்புவது ஆபாசம் இல்லையா? என்று கேட்டால், இது எங்கள் பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது என்று கூறுகின்றார்கள். இதை அப்படியே அல்லாஹ் தனது திருமறையில் படம் பிடித்துக் காட்டுகின்றான்.
அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது ”எங்கள் முன்னோர்களை இப்படித் தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்” என்று கூறுகின்றனர். ”அல்லாஹ் வெட்கக் கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?” என்று (நபியே) கேட்பீராக! (அல்குர்ஆன் 7: 27)
லிங்கத்தை உருவாக்கி அதற்கு வழிபாடு நடத்துவது, அதைப் புனிதமாகக் கருதுவதெல்லாம் அவர்களது கலாச்சாரமாகும். இந்தக் கலாச்சாரத்தை அப்படியே இவர்கள் இந்தப் பஞ்சாவில் செயல்படுத்தித் தங்களின் வந்தவழி பாரம்பரியத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவம் நமக்குச் சரியான பாடத்தைப் புகட்டி, மாற்றுக் கலாச்சாரத்தை நம்மவர்கள் காப்பியடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது. நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். தாத்து அன்வாத்” என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதரே.. அவர்களுக்கு தாத்து அன்வாத்து” என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள் என்று கூறினோம்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்.! .இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும் என்று சொல்லி, என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக நீங்கள் நபி மூஸா அலைஹிஸ்ஸாலாம் அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா அலைஹிஸ்ஸாலாம் அவர்களிடத்தில், மூஸாவே அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா அலைஹிஸ்ஸாலாம் அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாக பின்பற்றுவீர்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூவாக்கிதுல்லைசி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 2106, அஹ்மத் 20892)
இத்தகைய மாற்றுக் கலாச்சாரத்தில் உள்ளதுதான் புலி வேஷம் போடுதல். அல்லாஹ் மனிதனை அழகிய தோற்றத்தில் படைத்துள்ளான்.
மனிதனை அழகிய வடிவில் படைத்தோம். (அல்குர்ஆன் 95:4)
ஆனால் இந்த அற்புதப் படைப்போ புலி வேஷம் போட்டுக் கொண்டு மிருக நிலைக்கு மாறி விடுகின்றான்.
அல்லாஹ் படைத்த தோற்றத்தை மாற்றுவது ஷைத்தானின் செயல் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப் பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் ஷைத்தான் கூறினான்) அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். (அல்குர்ஆன் 4:119)
புதுப் புது வணக்கங்கள்
பஞ்சாவும் அதையொட்டிய அனைத்துக் காரியங்களும் வணக்கம் என்ற பெயரால் மக்களிடம் திணிக்கப் பட்டு விட்ட புதுக் காரியங்களாகும். இவை நிச்சயமாக வழிகேடுகள். இந்த வழிகேடுகள் நரகத்தில் கொண்டு போய் சேர்த்து விடும். நரகத்திற்குக் கொண்டு செல்லும் இந்தக் காரியங்களைத் தான் இவர்கள் அரங்கேற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸயீ 1560)
இதில் வேடிக்கை என்னவென்றால் ஹஸன், ஹுசைன் பெயரில் இந்தப் பத்து நாட்களும் ஓதும் மவ்லிதில், ஒளி வீசும் ஹுசைனின் கைகளை வரைந்தவர்களின் கைகள் நாசமாகட்டும் என்ற கவிதை வரிகளையும் ஒரு பக்கம் ஓதிக் கொள்வது தான். இந்த ஹஸன், ஹுசைன் மவ்லிதும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் கருத்துக்களைத் தாங்கியதாகும். இதுவும் ஒரு பித்அத் ஆகும்.
ஃபக்கீர்கள் ஒரு பார்வை!
ஃபக்கீர் என்றால் ஏழை! செல்வந்தர்களைத் தவிர மற்றவர்கள் ஏழை தான். ஆனால் இவர்களோ யாசகத்தைத் தங்கள் குலத் தொழிலாக்கிக் கொண்டு, தங்களைத் தனி ஜாதியாகக் காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இஸ்லாத்தில் யாசகம் என்பது தடுக்கப்பட்டது மட்டுமன்றி, சபிக்கப்பட்டதும் கூட! இதை இவர்கள் குலத் தொழிலாகக் காட்டுவதுடன் நின்றால் பரவாயில்லை. இவர்கள் யாசகத்திற்கு வரும் போது, கையில் ஒரு கொட்டு! கழுத்தில் உத்திராச்சக் கொட்டை! தலையில் பச்சைத் தலைப்பாகை! காதில் சுருமா கம்பி! குறிப்பாக முஹர்ரம் பத்து நாட்களில் கையில் மயில் தோகை!
இப்படி ஒரு கோலத்தில் வந்து தங்களை ஒரு தெய்வீகப் பிறவியாகக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் இவர்களிடம் யாசகம் கொடுப்பது மட்டுமின்றி ஈமானையும் சேர்த்தே பறி கொடுத்து விடுகின்றார்கள். இதல்லாமல் கப்ருகள் தோண்டுவதையும் இந்தப் பக்கீர்கள் தங்கள் குலத் தொழிலாகப் பாவித்து வருகின்றார்கள்.
இவர்கள் தான் பஞ்சா எடுத்துக் கொண்டு தலைமுறை தலைமுறையாக மக்களை நரகத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். அன்றாட வாழ்க்கையில் மது, கஞ்சா அருந்துவது இவர்களுக்கு சகஜமான ஒன்று!
ஆலிம்களின் பங்கு
ஆலிம்கள் எனப்படுவோர் இந்தப் பஞ்சா எனும் வழிகேட்டைப் பற்றி ஜும்ஆ மேடைகளில் மக்களுக்கு எடுத்துச் சொல்லி மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதற்கு இவர்கள் தயாரில்லை. அது போன்ற கருத்துக்களை இவர்கள் முன் வைப்பதுமில்லை.
முஹர்ரம் மாதத்தில் ஜும்ஆ மேடைகளில் பஞ்சா எனும் வழிகேட்டைக் கண்டித்துப் பேசாமல், மூஸா அலைஹிஸ்ஸாலாம் அவர்களின் உண்மை வரலாற்றைக் கூறாமல், கர்பலாவின் கதைகளை அள்ளித் தெளித்து விட்டுச் சென்று விடுகின்றனர். அது பஞ்சாவுக்கு உரமாகி விடுகின்றது.
கடுகளவு முயற்சியைக் கூட இந்தப் பஞ்சாவிற்கு எதிராக இவர்கள் எடுக்கவில்லை. இவ்வாறு இவர்கள் முயற்சி எடுக்காமல் இருப்பதற்குக் காரணமும் இருக்கின்றது.
இந்தப் பஞ்சா என்பது ஷியாக்களின் நடைமுறை என்று சுன்னத் வல் ஜமாஅத்தினர் சொல்லிக் கொண்டாலும் இவர்களிடம் குடி கொண்டிருப்பதும் ஷியாக் கொள்கைதான். இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்ற நாசகார நம்பிக்கை இருந்தால் போதும். அங்கு ஷியாயிஸம் நிச்சயமாகக் குடி கொண்டிருக்கும். அந்தக் கொள்கையில் இந்தப் ஃபக்கீர்களும், ஆலிம் படைகளும் ஒன்றுபட்டே இருக்கின்றார்கள். இந்த நிலையில் இருந்து கொண்டு இவர்களால் ஒரு போதும் பஞ்சாவை ஒழிக்க முடியாது. அதனால் தான் அது இவ்வளவு நாளும் ஒழியாமல், ஓயாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
”Jazaakallaahu khairan” H. Hasan Akram.