Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

முஹர்ரம் பத்தும் மூடப் பழக்கங்களும் (2)

Posted on December 27, 2009 by admin

மீன் சாப்பிடத் தடை

இந்த முஹர்ரம் பத்து நாட்களும் மீன் சாப்பிடக் கூடாது என்று ஒரு விதியை இவர்களாக தங்கள் இஷ்டத்திற்கு ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இதன் விளைவாக பஞ்சா எடுக்கப்படும் ஊர்களில் இந்தப் பத்து நாட்களும் மீன் மிகவும் மலிவு விலையில் விற்கப்படும்.

தாம்பத்தியத்திற்குத் தடை

அது போல் முஹர்ரம் 10 நாட்களும் கணவன், மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்று தடையையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இந்தத் தடை இதற்கு மட்டுமல்ல! முக்கியமான மூன்று மவ்லிதுகளான சுப்ஹான மவ்லிது, முஹய்யித்தீன் மவ்லிது, ஷாகுல் ஹமீது மவ்லிது போன்ற மவ்லிதுகள் ஓதும் நாட்களிலும் இந்தத் தடை அமுலில் இருக்கும்.

இந்தத் தடைகளை மீறி யாரேனும் மீன் சாப்பிட்டு விட்டால் அல்லது தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விட்டால் அதற்குப் பரிகாரமாக பஞ்சா எடுக்கும் பக்கீர்களுக்கு ஆடு, கோழி போன்றவற்றை காணிக்கை செலுத்த வேண்டும். எவ்வளவு திமிர் இருந்தால் இந்தத் தடைச் சட்டத்தை முஸ்லிம்கள் மீது திணித்திருப்பார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

பத்தாம் பஞ்சா

முஹர்ரம் பத்தாம் நாளை அரசாங்கம் முஹர்ரம் பண்டிகை என்று அறிவித்து அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மூஸா அலைஹிஸ்ஸாலாம் அவர்களுக்குக் கிடைத்த அந்த வெற்றி நாள் மறக்கடிக்கப்பட்டு, தொலைக் காட்சிகளில் மாரடிக்கும் காட்சிகள் வெளியாகி இஸ்லாத்தின் தூய தோற்றத்தைச் சிதைத்து நாறடித்துக் கொண்டிருக்கின்றது.

பத்தாம் நாள் கிளைமாக்ஸ்!

நாஸாவிலிருந்து ஏவுகணை கிளம்புவது போன்று பத்தாம் நாள் தான் பஞ்சா என்ற பைத்தியக் காரத்தனத்தின் சின்னம் கிளம்பும் கவுண்ட் டவுன்’ நாள்! மாலையானதும் அதன் மையத்திலிருந்து பக்கீர்கள் தோள் பட்டையில், அல்லது வண்டியில் ஏறியதும் அதன் ஊர்வலம் துவங்கி விடும்.

பேண்டுக்கு மேல் ஜட்டி

பஞ்சாவுக்கு முன்னால் சிலம்பாட்டப் படைகள் சிலம்பாட்டம் ஆடும். இவர்கள் வித்தியாசமாக பேண்டுக்கு மேல் ஜட்டி அணிந்து கொண்டு, பெண்கள் அணியும் நகைகளை அணிந்து கொண்டு சிலம்பாட்டம் ஆடுவார்கள். இந்த சிலம்புச் செல்வர்கள் பஞ்சாவின் முன்னால் வருவதற்கு முன், மேள தாளத்துடன் தெருத் தெருவாக சென்று தங்கள் வீரத்தை அரங்கேற்றுவர். அதன் பின் பஞ்சாவுக்கு முன்னர் வந்து ஆட்டம் போடுவர். தீப்பந்தம் சுழற்றுதல், பட்டை சுழற்றுதல், வாயில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு எரியும் தீக்குச்சியில் ஊதி தீப்பந்து உருவாக்குதல் போன்ற சாகசங்களைச் செய்து மக்களை பரவசத்தில் ஆழ்த்துவார்கள்.

புலி வேஷம் போடுதல்

இந்தப் பஞ்சாவில் நேர்ச்சை செய்த சிலர் உடல் முழுவதும் சந்தனம் பூசிக் கொண்டு, கோயிலில் சாமி வந்தவர்கள் போல் சுற்றிக் கொண்டிருப்பர். சிலர் புலி வேஷம் போட்டு வந்து மக்களைப் புல்லரிக்கச் செய்வர்.

ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் போர்க்கள நினைவாக தங்களுடன் வாள்கள், ஈட்டிகள் போன்றவற்றை எடுத்துச் செல்கின்றனர். ஃபக்கீர்கள் ஒரு விதப் பொடியைத் தூவி பக்தர்களை மகிழ்ச்சியூட்டுவர்.

உப்பு மிளகு போடுதல்

புரதச் சத்து குறைவாக இருந்தால் உடலில் உண்ணிகள் தோன்றி துருத்திக் கொண்டிருக்கும். இதற்கு வைத்தியம் எல்லாம் பார்க்கத் தேவையில்லை. இந்த உண்ணி போக வேண்டும் என்று நேர்ந்து கொண்டு, பஞ்சா அலுவலகத்தில் கொண்டு போய், உப்பையும் மிளகையும் படைத்து விட்டு வந்தால் போதும். மின்னிக் கொண்டிருக்கும் உடல் உண்ணிகள் பறந்து போய் விடும். அப்படி ஒரு நம்பிக்கை!

குழந்தைகள் வேண்டி கொழுக்கட்டை லிங்கம்

ஆண் குழந்தை வேண்டுமா? ஆணுறுப்பு வடிவத்தில் கொழுக்கட்டை செய்து பத்தாம் நாளன்று இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் மக்களிடம் விநியோகித்தால் போதும். ஆண் குழந்தை பிறந்து விடும். (பெண் குழந்தைகளை யாரும் வேண்டுவ தில்லை) யார் இந்த மாவு லிங்கத்தைப் பெறுகின்றாரோ அவர் பாக்கியம் பெற்றவராவார். இது தவிர ஹஸன், ஹுசைனின் வாள், வேல் போன்ற வடிவத்திலும் கொழுக்கட்டைகள் செய்து வீசப்படும்.

தீமிதியும், தீக்குளிப்பும்

தனக்கு நல்ல கணவன் அமைந்தால் முஹர்ரம் பத்தாம் நாள் வந்து தீக்குளிப்பதாக பருவ வயதுப் பெண் நேர்ச்சை செய்வாள். நல்ல மாப்பிள்ளை வாய்த்த பின்னர் அந்தப் பெண்ணும், அவளது தாயாரும் பஞ்சாவுக்கு வந்து தங்களது தலைகளில் நெருப்பை அள்ளிக் கொட்டி நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.

கோயில் திருவிழாக்களில் தீமிதி நடப்பது போன்று தங்கள் பாவங்கள் தீர, நாட்டம் நிறைவேற தீமிதியும் நடத்துகின்றனர்.

ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு அருந்திய நஞ்சு பானம்

ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நஞ்சுண்டதன் நினைவாக மக்களும் புளி கலந்த ஒரு பானகரம் என்ற பெயரில் அருந்திக் கொள்கின்றனர். உண்மையில் இவர்களின் நம்பிக்கைப் படி ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு மீது அவர்களுக்குப் பற்று இருக்குமானால் இவர்கள் நஞ்சை அருந்த வேண்டும். அவ்வாறு நஞ்சை அருந்தினால் இது போன்ற பஞ்சாக்கள் எல்லாம் பஞ்சாகப் பறந்து போகும்.

காதலர் தினம்

இந்தப் பஞ்சாவில் நடைபெறும் ஆனந்தக் கூத்துக்களைக் கண்டு களிக்க காளையரும், கன்னியரும் ஜனத் திரளில் சங்கமித்துக் கொள்வார்கள். ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு உயிர் நீத்த அந்த நாளைக் காளையர்கள், கன்னியர்களைப் பார்த்துப் பார்த்து ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நினைத்து உருகுவார்கள். பதிலுக்குக் கன்னியரும் திரும்பப் பார்த்து ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நினைவு கூர்வார்கள். இவ்வாறாக வீரர் ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நினைவாக இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் சமுதாய வீர உணர்வுகளை ஈரப்படுத்திக் கொள்கின்றனர்.

மாரடித்தல்

ஒரு கூட்டம் இப்படி கொட்டு மேள, தாளத்துடன் ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நினைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு கூட்டம் தங்கள் மார்களில் அடித்துக் கொண்டு ஹுசைன் (ரலி)யை நினைவு கூர்ந்து கொள்கின்றனர். அவர்கள் மாரடித்து அழுது புலம்பி கர்பலா நாளுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

வெள்ளத்தில் மிதந்து வரும் வி.போல்..

வி. சதுர்த்தியன்று சிலையைத் தூக்கி வருவது போன்று பக்கீர்கள் தங்கள் தோள் புஜங்களில் இந்தப் பஞ்சாவைத் தூக்கி வருவர். அது வீதியில் உலா வரும்போது அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்கும். மாலை மறைந்து இரவு வேளை ஆரம்பிக்கும்.

வெள்ளிக்கைச் சின்னத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் மஞ்சள் ஜரிகையில் பெட்ரோமாக்ஸ் விளக்கின் மஞ்சள் ஒளி பட்டவுடன் அது ஒரு தங்க ஆறு ஓடுவது போன்று காட்சியளிக்கும்.

இத்தகைய ஒளி வெள்ளத்திலும் அதனைச் சுற்றி மேக மூட்டத்தைப் போன்று மண்டிக் கிளம்பி மணம் பரப்பும் சாம்பிராணி புகை ஓட்டத்திலும் பக்தர்கள் தங்கள் மனதைப் பறி கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

பச்சைத் தலைப்பாகையுடன் பக்கீர்கள் மயில் இறகைக் கொண்டு ஆண், பெண் பேதமில்லாமல் தடவி வருடி விடுவார்கள். இதில் பக்தர்களின் மலைகள் போன்ற பாவங்கள் மழையாகக் கரைந்து போய் விடுமாம். தாய்மார்கள் மனமுருக நின்று அதைப் பார்த்து பிரார்த்தனை புரிந்து கொண்டிருப்பார்கள்.

இவ்வாறாக இறுதியில் அதை ஆற்றில் கொண்டு போய் கரைத்து விட்டு வருவார்கள். அவ்வாறு கரைத்து விட்டு வரும் போது அந்தப் பஞ்சாவை வெள்ளைத் துணியால் மூடி விட்டு, ஒப்பாரி வைத்து ஓலமிட்டவாறே கலைந்த அந்தப் பஞ்சாவுடன் வீடு திரும்புவார்கள்.

இதன் பிறகு அது வரை தடுக்கப்பட்ட காரியங்கள் அனைத்தும் இவர்களுக்கு ஹலாலாகி விடுகின்றன.

இது வரை நாம் கண்டது பஞ்சா பற்றி ஒரு நேர்முகத் தொகுப்பு என்று கூட கூறலாம். இதில் நீங்கள் கண்ட காட்சிகளைக் கீழ்க்கண்ட பாவங்களாகப் பிரித்துக் கூறலாம்.

1. அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்

2. அல்லாஹ்வின் அதிகாரத்தைக் கையில் எடுத்தல்

3. மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுதல்

4. புதுப்புது வணக்கங்களை மார்க்கத்தில் புகுத்தும் பித்அத்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அலீ, பாத்திமா, ஹஸன், ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹும் ஆகியோரின் நினைவாக ஐந்து விரல்களை உருவாக்கி அவற்றுக்கு தெய்வீக அந்தஸ்து வழங்குவது, இறந்த பிறகும் அவர்களுக்கு ஆற்றல் இருக்கின்றது என்று நம்புவது கடைந்தெடுத்த ஷிர்க் ஆகும்.

குதிரையின் குளம்புகளிலும், குதிரையின் மீதிருக்கும் இளைஞனின் கால்களிலும் அருள் கொப்பளிக்கின்றது என்று நினைத்து அவர்களின் கால்களில் தண்ணீரைக் கொட்டுவதும் கொடிய இணை வைத்தலாகும். இறந்து விட்ட அந்த ஐவரிடமிருந்தும் இவருக்கு ஆற்றல் கிடைக்கின்றது என்று நம்புவது தான் இந்தச் செயல்களுக்கு அடிப்படை!

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! அவர்களுக்கு நடக்கிற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கிற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கிற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கிற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கு எதிராக சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 7:194,195)

அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 16:21)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உட்பட இறந்து விட்ட யாராக இருந்தாலும் அவர்கள் பார்க்கவோ, செவியுறவோ மாட்டார்கள் என்பதை இந்த வசனங்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

குழந்தை பாக்கியம்

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண் களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றல் உடையவன். (அல்குர்ஆன் 42:49,50)

குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது என்பதை இந்த வசனங்கள் உணர்த்துகின்றன. அதை அடியார்களிடம் கேட்பது பைத்தியக் காரத்தனமும் பகிரங்க இணை வைப்பும் ஆகும். படைத்தல் என்ற இந்தப் பேராற்றல் வல்ல நாயனின் ஆட்சிக்குரிய தனி வலிமை! அந்த வலிமையை உணர்த்தி வார்க்கப்பட்ட சமுதாயதம் தான் இஸ்லாமியச் சமுதாயம்! அப்படிப்பட்ட இஸ்லாமிய சமுதாயம் குதிரையின் குளம்படியில் வந்து கும்பிட்டுக் குப்புற வீழ்ந்து கிடப்பது வேதனையிலும் வேதனை.

குழந்தை பாக்கியத்தை நாடி லிங்கத்தின் வடிவில் கொழுக்கட்டை செய்து கூட்டத்தில் விநியோகிப்பது இணை வைத்தல் மட்டுமில்லாமல் கேலிக் கூத்துமாகும்.

நேர்ச்சை ஒரு வணக்கமே!

அனு தினமும் தொழுகையின் போது, அல்ஃபாத்திஹா அத்தியாத்தில், உன்னையே நாங்கள் வணங்கு கின்றோம். உன்னிடமே உதவி தேடுகின்றோம் என்று தொழுபவர்கள் அல்லாஹ்விடம் உறுதி மொழி கொடுக்கின்றார்கள். இதில் இடம்பெறும் வணக்கம் என்ற வார்த்தையில் நேர்ச்சை செய்தலும் அடங்கும்.

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! (அல்குர்ஆன் 22:29)

இந்த வசனத்தின் படி நேர்ச்சையை அல்லாஹ்வுக்கு மட்டும் நிறைவேற்ற வேண்டும் என்றிருக்க இறந்து விட்ட அடியார்களுக்காக நேர்ச்சை செய்யும் அநியாயமும் அலங்கோலமும் இங்கே நடந்தேறுகின்றது.

அதுவும் தீக்கங்குகளைத் தலையில் போட்டுக் கொண்டு இந்தத் தீ(ய) நேர்ச்சையெல்லாம் உடலுக்கு ஊறு விளைவிக்கின்ற, உயிருக்கு உலை வைக்கின்ற நேர்ச்சைகள். இவை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவையாகும்.

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய் வோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன் 2:195)

ஒருவன் தன் கையாலேயே தனக்கு நாசத்தை ஏற்படுத்திக் கொள்ள அல்லாஹ் தடை விதிக்கின்றான்.

ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்களிடையே தொங்கிய படி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்தார். அதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். ”(கஅபாவுக்கு) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கின்றார்” என்று கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”இவர் இவ்விதம் வேதனைப் படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது” என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1865)

அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் கூட, இது போன்று தம்மை வருத்திக் கொள்ளும் நேர்ச்சைகளைச் செய்யக் கூடாது எனும் போது அதை மற்றவர்களுக்காகச் செய்வது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளங்கலாம். அப்படியே பாவமான காரியத்தில் நேர்ச்சை செய்தாலும் அதை நிறைவேற்றக் கூடாது என்ற சட்டமும் இந்த மக்களுக்குத் தெரியவில்லை.

அல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால் (அதை நிறைவேற்றி) அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 6696)

இது வரை பஞ்சாவின் மூலம் இறைவனுக்கு இணை வைக்கும் மாபாதகம் நடப்பதைப் பற்றி பார்த்தோம்.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ் வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (அல்குர்ஆன் 4:48)

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார். (அல்குர்ஆன் 4:116)

இந்த வசனங்களின் அடிப் படையில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது அவனால் மன்னிக்கப்படாத பாவமாகும். சுவனத்திற்குச் செல்வதைத் தடுத்து நரகத்தில் நுழைத்து விடும் பாவமாகும்.

தொடர்ச்சிக்கு ‘Next’ ஐ ‘க்ளிக்’ செய்யவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

18 − = 9

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb