கதிரவனை மறைக்கும் கர்பலா காரிருள்
நபி மூஸா அலைஹிஸ்ஸாலாம் அவர்களை நம்பிய முஸ்லிம்களுக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்குவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிறைவேறிய அந்த நாள் கர்பலாவால் மறைக்கப்பட்டு விட்டது.
ஃபிர்அவ்னைக் கடலில் மூழ்கடித்து, மூஸா அலைஹிஸ்ஸாலாம் அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றி, அவர்களுக்கு எகிப்தின் ஆட்சிப் பொறுப்பையும் வழங்கிய நாள் தான் ஆஷுரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாள்.
கதிரவனை மறைக்கும் கிரகணத்தைப் போல ஆஷுரா தினத்தை, கர்பலாவும், அதையொட்டி ஷியாக்கள் கிளப்பி விட்ட மூடப் பழக்கங்களும் மறைத்து விட்டன. ஆஷூரா தினத்தை மையமாக வைத்து நடக்கும் பைத்தியக்காரத்தனமான செயல்பாடுகளையும், இஸ்லாத்திற்கு எதிரான காரியங்களையும், மாற்று மத அனுஷ்டானங்களையும் இப்போது பார்ப்போம்.
துக்க நாளாகி விட்ட ஆஷுரா
ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு கொல்லப்பட்ட சோக சம்பவம் முஹர்ரம் பத்தாம் நாளில் நடந்ததால் அந்த நாள் துக்க நாளாக ஒரு போதும் ஆகி விடாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் திங்கள் கிழமை நோன்பு நோற்பது பற்றி வினவப்பட்ட போது, ”அது நான் பிறந்த நாளாகும். அந்த நாளில் தான் நான் இறைத்தூதராக அனுப்பப் பட்டேன்” என்று பதிலளித்தார்கள். (ஹதீஸ் சுருக்கம்) (அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1387)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திங்கட்கிழமை மரணித் தார்கள். (நூல்: புகாரி 1387)
உலக வரலாற்றில் மிக மிக அருளுக்கும் ஆசிக்கும் உரிய நாள் அல்லாஹ்வின் வேதம் இறங்கிய நாளாகும். அந்த நாளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணம் மறைத்து விடவில்லை. உலகில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட சிறந்தவர் யாரும் கிடையாது. அப்படிப்பட்ட அவர்களின் மரண நாள் நினைவு கூரப்படுவதற்கு மிகவும் பொருத்தமான நாளாகும்.
ஆனால் அந்த நாளையே நினைவு நாளாக, சோக நாளாக அனுஷ்டிக்க அனுமதியில்லாத போது மற்ற நாளை எப்படி சோக நாளாக அனுஷ்டிக்க முடியும்? இப்படியே இஸ்லாத்திற்காக உயிரை விட்ட நல்லவர்களின் மரண நாட்களைப் பார்த்தோம் எனில் நம் வாழ்நாளில் ஒரு நாள் கூட சந்தோஷ நாளாக இருக்காது. ஒவ்வொரு நாளும் துக்க நாளாகவே இருக்கும். அதனால் இஸ்லாத்தில் நினைவு நாளோ, பிறந்த நாளோ கிடையாது.
ஆண்டு தோறும் துக்கம் அனுஷ்டித்தல்
இஸ்லாமிய மார்க்கம் உளவியல் ரீதியாக மக்களின் மனதைப் பக்குவப்படுத்தும் மார்க்கமாகும். அதனால் இரவுத் தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற வணக்கங்களுக்கு ஓர் உச்சவரம்பை நிர்ணயித்தது போல் ஒரு குடும்பத்தில் ஓர் உறவினர் இறந்து விட்டால் அதற்காக சோகம் அனுஷ்டிக்கும் நாட்களுக்கும் ஓர் உச்சவரம்பை விதித்துள்ளது.
இல்லையேல் அந்தச் சோகம் மனிதனின் உள்ளத்தில் ஆதிக்கம் செலுத்தி மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தி விடும். அதனால் அவன் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவான்.
இதையெல்லாம் உடைத்தெறியும் விதமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதற்கு ஓர் உச்சவரம்பை நிர்ணயிக்கின்றார்கள்.
இறந்து போனவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்த நாங்கள் தடுக்கப் பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின் அவனது மனைவி, நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். (அதாவது) இந்த நாட்களில் நாங்கள் சுர்மா இடவோ, நறுமணப் பொருட் களைப் பூசவோ, சாயமிடப்பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கு வதற்காகக் குளிக்கும் போது மணப் பொருட்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வதை விட்டும் நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம். (அறிவிப்பவர்: உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 313)
ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு கொல்லப்பட்ட பின் மூன்று நாட்களுடன் அந்தச் சோகம் முடிந்து விடுகின்றது. இதை அவர்களது குடும்பத்தார் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டு, இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்லி தங்களுடைய வாழ்நாளில் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டனர். ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பத்தார் ஒவ்வோர் ஆண்டும் முஹர்ரம் பத்தாம் நாளை சோக தினமாக அனுஷ்டிக்கவில்லை.
ஆனால் ஷியாக்கள் இதற்கு ஒவ்வொரு ஆண்டும் புத்துயிர் கொடுத்து, இஸ்லாத்தின் உண்மையான சித்திரத்தைச் சிதைத்து வருகின்றனர்
ஷியாக்கள் மட்டுமல்லாமல் சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைக் கூறிக் கொள்வோரும் இந்தக் காரியங்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் செய்யும் கூத்துக்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
இவர்கள் செய்யும் அனாச்சாரங்கள், அட்டூழியங்கள், கேலிக் கூத்துக்கள் ஆகியவற்றை முதலில் வரிசையாகப் பார்த்து விட்டு, மார்க்க அடிப்படையில் அவற்றின் விளக்கத்தைப் பார்ப்போம்.
பஞ்சா எடுத்தல்
முஹர்ரம் மாதத்தின் முதல் பிறையிலிருந்து, பஞ்சா மையம் கொண்டிருக்கும் அலுவலம் களை கட்ட ஆரம்பித்து விடும். ஒரே ஊரில் தலைமை அலுவலகமும் இருக்கும், கிளை அலுவலகமும் இருக்கும். முஹர்ரம் 1ல் இதன் நடைவாசல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக பஞ்சா கொலு வீற்றிருக்கும். பஞ்சா அலுவலகத்தில் பிரமாண்ட பந்தல். அதில் எப்போதும் மக்கள் வெள்ளம் தான்.
பலூன் வியாபாரிகள், மிட்டாய் வண்டிகள், பொம்மை வியாபாரிகள், ஐஸ் வண்டிகள் என இந்தப் பகுதி நிரம்பி வழியும். இந்தக் காட்சிகள் அனைத்தும் வேளாங்கண்ணி, திருப்பதி கோயில்களைத் தோற்கடித்து விடும்.
தெருமுனையில் திருக்கோயில்
பொதுவாக தெரு முனைகளில் உள்ள நுழைவு வாயிலில் அரசாங்கமோ, அல்லது தனி நபர்களோ கட்டடம் எதுவும் கட்ட முடியாது. அப்படி யாராவது கட்டினால் அந்தத் தெருவே பொங்கி எழுந்து, அதனைப் பொசுக்கி விடுவர்.
ஆனால் சந்திப் பிள்ளையார் சன்னதி போல் இந்தப் பஞ்சா அலுவலகத்தை மட்டும் ஃபக்கீர்கள் பரிபாலணக் கமிட்டி, தெருவின் மத்தியில் கட்டி பராமரிக்கும் போது அதை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொள்வர். அது தெய்வீக அருளை அன்றாடம் அள்ளித் தரும் ஆனந்த பவன் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். அதனால் தான் முச்சந்தியில் நிற்கும் இந்த மணி மண்டபத்தை எதிர்த்து யாரும் ஒரு வார்த்தை கூட முணுமுணுப்பதில்லை.
பஞ்சாவின் உடல் கட்டமைப்பு
பஞ்சா என்றால் ஐந்து என்று பொருள். ஐந்து ஆறுகள் ஓடுவதால் ஒரு மாநிலத்திற்கு பஞ்சாப் என்று பெயர். கிராமத்தில் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு அமைக்கப்படும் ஐந்து பேர் கொண்ட கமிட்டி பஞ்சாயத் என்று அழைக்கப்டுகின்றது.
அது போன்று தான் முஹர்ரம் பத்தாம் நாள் ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு நினைவாக எடுக்கப்படும் பஞ்சாவில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்பட்டிருக்கும். இந்த ஐந்து விரல்களும் சிம்பாலிக்காக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அலீ, பாத்திமா, ஹஸன், ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹும் ஆகியோரைக் குறிக்கும். சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்த ஐந்து பேர்களும் கடவுளாக உருவகப்படுத்தப் பட்டுள்ளனர்.
அதனால் தான் ஒரு கவிஞன், ”எனக்கு ஐந்து பேர்கள் இருக்கின்றார்கள், அவர்கள் என்னை நரகிலிருந்து காப்பார்கள். அவர்கள் தாம் முஸ்தபா, முர்தளா (அலீ), பாத்திமா, அவர்களின் பிள்ளைகள் ஹசன், ஹுசைன்” என்று பாடியுள்ளான்.
பஞ்சா என்று சொல்லப்படும் ஐந்து விரல்கள் கொண்ட வெள்ளி கைச் சின்னம் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சட்டத்தினுள் ஜரிகைத் தாளைப் பின்னணியாகக் கொண்டு குடி கொண்டிருக்கும். இதைச் சுற்றிலும் மல்லிகைப் பூக்கள் வளைத்து நிற்கும். இது தான் பஞ்சா என்ற ஏவுகணையின் உடல் கட்டமைப்பாகும். அப்படியே இந்துக்கள் எடுக்கும் சப்பரத்திற்கு ஒப்பாக இந்தப் பஞ்சா அமைந்திருக்கும்.
ஏழாம் பஞ்சா
பஞ்சா என்ற சப்பரம் பத்தாம் நாள் தான் தன்னுடைய தளத்திலிருந்து கிளம்பும். அதற்கு முன்னால் பக்த கோடிகள் இதனை விட்டு எங்கும் வெளியூர் போய் விடக் கூடாது என்பதால் ஏழாம் பஞ்சா என்று ஒன்று கிளம்புகின்றது. இந்த ஏழாம் பஞ்சாவில் ஹஸன், ஹுசைன் நினைவாக இரண்டு குதிரைகள் தயாராக நிற்கும். அதில் இரண்டு இளைஞர்கள் ஏறி அமர்வார்கள். இவர்கள் மீது அவ்லியாக்களுக்கு மிகவும் பிடித்த நிறமான(?) பச்சை நிறத் துணி போர்த்தப்பட்டிருக்கும்.
இந்த வீரர்களைத் தாங்கி வரும் குதிரைகளுக்கு பக்தர்கள், பக்தைகளின் கூட்டம் வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கும். குடம் குடமாக வந்து தண்ணீரைக் கொண்டு வந்து குமரி மற்றும் குடும்பத்துப் பெண்கள் குதிரையின் கால்களில் கொட்டுவார்கள். இவ்வாறு கொட்டினால் அவர்களின் தேவைகள் நிறைவேறும் என்ற குருட்டு நம்பிக்கையில்!
இரு குதிரைகளிலும் சவாரி செய்யும் இந்த வீரர்கள் யார் தெரியுமா? தங்களுக்கு ஆண் குழந்தைகள் பிறந்தால், அல்லது தன் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் நோய் தீர்ந்து விட்டால் அவனை முஹர்ரம் ஏழாம் நாளில் ஹஸனாகவும், ஹுசைனாகவும் கொண்டு வந்து குதிரையில் ஏற்றுவேன் என்று பெற்றோர்களால் நேர்ச்சை செய்யப்பட்டவர்கள்.
கர்பலாவின் ‘லைவ்‘ காட்சி
பச்சைப் போர்வை போர்த்தப்பட்டு பவனி வரும் இவர்களின் பாதடிகளில் தண்ணீராலும் பன்னீராலும் மக்கள் கழுவிக் கொண்டிருப்பார்கள். இதனால் பற்பல பாக்கியங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்!
குதிரையில் தங்கள் குழந்தைகளை ஏற்றுவதற்கும் போட்டா போட்டி நடக்கும். இதற்கென காசை வாரி இறைப்பர். அதிகமான பணம் கொடுத்து முன் பதிவு செய்பவர்களுக்கு எந்த ஆண்டு குதிரை சவாரி செய்ய வேண்டும் என்பதற்கான நாளை பக்கீர்கள் குறித்துக் கொடுப்பர்.
இவ்வாறு விசா கிடைத்து, குதிரையில் ஏறக் கொடுத்து வைத்த இவர்கள் முஹர்ரம் 10 நாளும் நோன்பு நோற்க வேண்டும். ஆஷூரா 9, 10 நோன்புகளைக் கூட ஹஸன், ஹுசைன் நினைவாகத் தான் பிடிப்பதாக இந்த மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இந்தக் குதிரை வீரர்கள் போருக்குப் புறப்படுகின்றார்களா? என்று பார்த்தால் அவ்வாறு செய்வதில்லை. குதிரையில் ஆற்றுக்குச் சென்று குளிக்கின்றனர். இவ்வாறு செய்தால் ஷஹாதத் எனும் அந்தஸ்து (?) கிடைத்து விடுகின்றது.
பக்தர்களின் வீட்டு வாசல்களுக்கு இந்தக் குதிரை வரும் போது, மக்கள் தாங்கள் நேர்ச்சை செய்திருந்த ஆடு, கோழிகளை இந்தக் கஞ்சா பக்கீர்களிடம் சமர்ப்பிப்பார்கள்.
பச்சைத் துணியால் மூடப்பட்ட இந்த இளைஞர்கள் அணிந்திருக்கும் கருப்புக் கண்ணாடியில் கர்பலாவின் காட்சி நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அது எப்படி? என்று யாராவது அந்த இளைஞரிடம் பேட்டி கேட்கும் போது, அவர் தான் கருப்புக் கண்ணாடியில் பார்த்ததைச் சொன்னால் தலை வெடித்து விடுமாம். பக்கீர்களின் பகுத்தறிவு சாம்ராஜ்யம் எப்படி கொடி கட்டிப் பறக்கின்றது என்று பாருங்கள்.
ஒரேயடியாக பத்தாம் நாள் மட்டும் பஞ்சா என்றால் அது பக்தர்களைத் தக்க வைத்துக் கொள்ள உதவாது என்பதால் எட்டாம் பஞ்சா, ஒன்பதாம் பஞ்சா என்று வகை வகையாக பஞ்சா எடுத்து பக்தர்களை மூளைச் சலவை செய்கின்றார்கள்.
தொடர்ச்சிக்கு ‘Next’ ஐ ‘க்ளிக்‘ செய்யவும்