இஸ்லாமிய இயக்கத்தில் இணைவது கடமையா?
நிஃமத்துல்லாஹ்
ஒவ்வொரு முஸ்லிமும் ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பை சார்ந்திருப்பது கடமை என்ற கூற்று உண்மையா? அப்படியெனில் ஒரு நாட்டில் பல இஸ்லாமிய அமைப்புகள் இருந்து ஒரு நடுநிலைவாதிக்கு நேர்வழியிலுண்டான அமைப்பை தேர்ந்தெடுத்து, அதில் சேர்வது என்பது மிகக் கடினமான செயலாயிற்றே?
இதன் நிலைகளை காண்போம். பல தெளிவான ஹதீஸ்கள் எந்த ஒரு முஸ்லிமும், அவன் வாழும் பகுதியிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தை விட்டும் பிரிந்து வாழக்கூடாது என்பதை அறிவிக்கின்றன. மேலும் சமுதாயத்தை விட்டு பிரிந்து வாழ்வதை வன்மையாக கண்டிக்கவும் செய்கின்றன. ஓவ்வொரு முஸ்லிமும், முஸ்லிம் சமுதாயத்தின் ஒரு அங்கத்தவராகவே இருக்கிறார். அவர் அதனுடைய வளர்ச்சிக்கு பாடுபடுபவர்களுள் ஒருவராக எப்பொழுதுமே திகழ வேண்டும்.
சில ஹதீஸ்களின் நேரடிமொழி பெயர்ப்பு ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பை சார்ந்திருப்பது கடமை என்ற உணர்வை தோற்றுவிக்கிறது. இது தவறு. ஏனெனில் பரவலான கருத்துக்கள் அடங்கிய ஒரு வாக்கை (சொல்லை) ஒரு குறிப்பிட்ட வரையறுக்குள் உட்படுத்துவது கூடாது. சரியானதொரு ஆதாரம் இல்லாமல் அவ்வாறு செய்ய முடியாது.
நாம் அனைவரும் முஸ்லிம் சமுதாயத்தில், உம்மத்தில் ஓர் அங்கத்தவராக திகழ இஸ்லாம் வேண்டுகிறது. அங்ஙனம் ஒரு அங்கத்தவராக திகழ்வதனால் ஏற்படும் பயன் நாம் அனைவரும் தயாராக முழு முஸ்லிம் சமுதாயத்திற்கும் எல்லா காரியங்களிலும் எல்லா நிலைகளிலும் உதவியாக இருக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அது அமைதி மற்றும் உடன்படிக்கை நேரங்களானாலும் அல்லது போர் நேரங்களானாலும் அல்லது சுகமான மற்றும் செழுமையான நேரங்களானாலும் அல்லது கடினமான மற்றும் தாங்க முடியாத கஷ்ட நேரங்களானாலும் சரியே!
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் சமுதாயம் எதிரிகளால் அச்சுறுத்தப்படும் பொழுது, நாம் அனைவரும் அவசியம் நம்முடைய உதவியை நல்க தயாராக இருக்க வேண்டும். இது முஸ்லிம்கள் அனைவரும் ஒர் அணியில் (ஒரு குடையின்) கீழ் மற்றும் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதை காணும் வாய்ப்பை ஏற்படுத்தும். இவ்வாறு செய்வதன் மூலம், அனைவருடைய பலத்தையும் திரட்டுவதால், முஸ்லிம் சமுதாயத்தின் புனிதத் தன்மையை பாதுகாக்கும் வாய்ப்பு ஏற்பட வழி வகுக்கும்.
இதைக் கூறும் பொழுது ஒரு உதாரணம் நம்முடைய மனதில் உடன் தோன்றவது, சமீபத்தில் குஐராத்தில் நடந்தது. அவ்விடத்தில் இருந்த முழு முஸ்லிம் சமுதாயமும் ஒரு வலிமை மிக்க பகைவர்களால் ஆக்ரமிக்கப்பட்ட பொழுது தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான உதவிகளை, தற்காப்பு ஆயதங்களை முஸ்லிம்களுக்கு கிடைக்க விடாமல் தடை விதித்து, எதிர் மறையான ஒரு செயலை அதிகாரப+ர்வமாக ஆட்சிஅதிகாரத்தில் உள்ளவர்கள்; செய்து காட்டினார்கள்.
நம் நாட்டில் உள்ள மொத்த முஸ்லிம் சமுதாயமும் கஷ்டப்படும் தங்களுடைய குஜராத் சகோதர சகோதரிககளுக்கு உதவி செய்ய தயாராகி தக்க சமயத்தில் அவர்களை காக்க சென்றிருப்பார்களேயானால், பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் அபலைகள் கற்பிழந்ததிலிருந்தும், விரட்டப்படுவதிலிருந்தும் தவிர்ந்திருக்க முடியும். அதற்கு மாறாக தற்சமயம் முஸ்லிம்கள் அனைவரும் தங்களுடைய குஜராத் சகோதர சகோதரிகளை நினைத்து (எல்லாம் முடிந்ததற்கு பின்) இரக்கமும், அனுதாபமும் கொள்கிறார்கள். ஆனால் ஆக்கிரமிப்புகாரர்களை ஒன்று சேர்ந்து எதிர் கொண்டு துரத்தும் செயலுக்கு முன் இந்த அனுதாபமும் இரக்கமும் மதிப்பிழந்து விடுகிறது.
மேலும், சில வருடங்களுக்கு முன் போஸ்னியாவில் நடந்த நிகழ்ச்சி இன்னும் கூட நம் மனத்திரை முன் ஊசலாடுகிறது உலக முழுமையிலும் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்தால் செர்பியரின் ஊடுருவலையும், ஆக்ரமிப்பையும் தடுத்திருக்க போதுமானது. இந்த அளவுக்கு பலம் பொருந்தியவர்களாக நாம் உள்ளோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இதே போல அநேகமான பல உதாரணங்களை காணலாம். அதாவது தக்கதொரு தருணத்தில் முஸ்லிம்களுக்கு தன் சகோதர முஸ்லிம்களுடைய உதவிகள் கிடைக்காமல் போன நிலையை, இந்த ஒரு உதவிகள் மட்டும் தக்க சமயத்தில் கிட்டுமாயின், முஸ்லிம் சமுதாயம் அதனுடைய இலக்கை வெகு சுலபமாக எட்டியிருக்க முடியும்.
ஓவ்வொரு முஸ்லிமும் தங்களுடைய மார்க்க மற்றும் சமூக வழிகாட்டித் தலைவருக்கு கட்டுப்பட்டவராகவே இருக்க வேண்டும். அப்படி கட்டுப்பட்டு நடப்பதால் அவன் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவனாக கருதப்படுவான். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் எந்த ஒரு முஸ்லிமும், அவர்களுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாதவனாயின் அவன் இஸ்லாத்திற்கு மாற்றமானவர்களுடன் சேர்ந்தவனாக கருதப்படுவான். சில மனிதர்கள் தங்களை முஸ்லிம்கள் எனக் காட்டிக் கொண்டார்கள். ஆனால் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உத்தரவுகளை வெறுப்புடனே (இஷ்டமில்லாமல்) ஏற்றுக் கொண்டார்கள். இவர்கள்தான் நயவஞ்சகர்கள். உண்மையில் இவர்கள் முஸ்லிம்களே அல்லர்.
எப்பொழுது ஒரு உண்மையான இஸ்லாமிய அரசாங்க ஆட்சி ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடக்கிறது என்று நாம் அறிவோமோ, அப்பொழுது அந்த நாட்டில் வாழும் எல்லா குடிமக்களும் அரசாங்கத்திற்கு (அமீருக்கு) கீழ்ப்படிந்து நடப்பது அவர்கள் மீது கடமையாகிறது. அப்படி கீழ்ப்படிந்து நடப்பதுதான் அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தில் நின்றும் உள்ளார்கள் என்பதை பறை சாற்றும்.
மேலும் கூறுவதென்றால், அப்படியொரு இஸ்லாமிய அரசாங்கம் தவறான ஒரு முடிவை சில சந்தர்ப்பங்களில் எடுத்தால் கூட அதற்கு கீழ்ப்படிவது கடமை. கீழ்படிவதோடு மட்டுமல்லாமல் உடனே நாம் அவர்களின் தவறான முடிவை சுட்டிக்காட்டி, அதற்கு மாற்றமான நல்லதொரு ஆலோசனையை உடன் வழங்கவேண்டும். அப்படி நம்முடைய ஆலோசனை, அவர்கள் முன்பு எடுத்த தவறான முடிவை மாற்றுவதாக அமைந்தால் அந்த ஆலோசனையை வழங்கியவர்கள் நிச்சயமாக முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்தவர்களாக, தங்களுடைய கடமையை செய்தவர்களாக இருப்பர்.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அவர்களுடைய தோழர்கள் எப்பொழுதுமே ஆலோசனைகளை வழங்க தயாராகவே இருப்பார்கள். எப்பொழுது எனில் அவர்கள் தங்களுடைய சொந்த அபிப்ராயத்தின் பேரில் ஒரு தீர்ப்பு வழங்குவதாக இருந்தால்.
பத்ரு யுத்தத்தின் போது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு சில போர் வீரர்களை குறிப்பிட்ட இடத்திற்க்கு போகுமாறு பணித்தார்கள். அதைக்கேட்ட அவர்களுடைய தோழர் ஒருவர் யா ரசூலுல்லாஹ்! அந்த இடத்திற்கு தாங்கள் சில வீரர்களை செல்லுமாறு பணித்தது இறைவனுடைய கட்டளையா? அப்படியென்றால் நாங்கள் கீழ்ப்படிந்துதான் ஆகவேண்டும் என்றார். உடனே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இல்லை! இது என்னுடைய முடிவே! என்று மறுமொழி கூறினார்கள்.
உடனே அத்தோழர் ஒரு ஆலோசனை வழங்கினார்கள். அதாவது அப்போர் வீரர்கள் இன்னும் சிறிது தூரம் முன்னேறிச்சென்றால் அங்கிருக்கும் நீர்ச்சுனைகளை (தண்ணீர் உள்ள இடம்) எல்லாம் நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிலை ஏற்படுவதால் மிகவும் வசதியாக இருக்கும் என்றார். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆலோசனையின் நன்மையை உடன் உணர்ந்தவர்களாக அதன்படி நடந்தார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த ஆலோசனையை வழங்கியவர் நிச்சயமாக முஸ்லிம் சமுதாயத்தில் நின்றும் உள்ளவராக அதனுடைய வெற்றிக்கு, வளர்ச்சிக்கு உறுதுணையாக தன் பங்கை செவ்வனே நிறைவேற்றியவராவார்.
இந்த ஒரு செயலை, நன்மைகளை கருத்தில் கொண்டு நாம் வாழும் நாட்டில் உள்ள ஏதாவது ஒரு இஸ்லாமிய இயக்கத்தில் சார்ந்திருப்பது கடமை என்ற நிலையை தோற்றுவிப்போமானால் நிச்சயமாக நாம் எல்லையை விட்டு தாண்டியவர்களாவோம்.
நம் பகுதியில் உள்ள ஏதாவது ஒரு இஸ்லாமிய இயக்கம் உண்மையாகவே முஸ்லிம்களுடைய மேம்பாட்டிற்காக உழைக்குமேயானால் அதற்கு, அந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்குவது அவசியம். ஆனால் இக்காரணத்தை முன்னிட்டு அந்த இஸ்லாமிய இயக்கத்தில் சேர்வது மார்க்க கடமையோ? என்ற ஐயப்பாட்டிற்கு இடமேயில்லை. ஏனெனில் நம்முடைய வழிமுறைகள் (இஸ்லாத்திற்க்கு உட்பட்ட முஸ்லிம்களின் மேம்பாட்டிற்காக செயல்படுவது) குறிப்பிட்ட இயக்கத்தின் வழிமுறைகளை விட வேறுபட்டதாக இருக்க முடியும் என்பதும் ஒரு காரணமாகும்.
ஒரு தனி மனிதனுடைய விவேகம், மனக்கிளர்ச்சி அல்லது உணர்ச்சிகள் காரணமாக அமையும் விஷேச குணம் அல்லது மனோபாவம் ஏதாவது ஒரு இஸ்லாமிய இயக்கத்தில் உறுப்பினராவது நடைமுறைக்கு சாத்தியமில்லாததாக இருக்கலாம். அம்மனிதரை எந்நிலையிலும் வற்புறுத்த முடியாது. அதே சமயம் எப்பொழுது ஒரு இஸ்லாமிய இயக்கம் சரியானதொரு காரியத்தில் முஸ்லிம்களின் மேம்பாட்டிற்காக உண்மையாக உழைப்பதாக கருதினால் அம்மனிதன் தன்னுடைய உதவிகளையும், ஒத்துழைப்புகளையும் எல்லாச் சூழ்நிலைகளிலும் வழங்குவதற்கு தயாராக இருப்பது விரும்பத்தக்கது.
உண்மையாக எந்த ஒரு இஸ்லாமிய இயக்கத்தை சார்ந்த பரந்த நோக்கு ஸ்தாபகரோ அல்லது தலைவரோ நாங்கள் தான் முழு முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதி என்றோ அல்லது எங்களுடைய இயக்கத்தில் உறுப்பினராக இருப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்றோ என்றுமே குறிப்பிட்டது கிடையாது.
சில இயக்கங்கள் ஒருபடி மேலே போய் மேற் சொன்னதற்கு மாற்றமாக நடந்து கொண்டன. ஆனால் அவைகளெல்லாம் வெளிப்பார்வைக்கு இணக்கமில்லாதவைகளாகவும், தவறான அணுகுமுறைகளை கொண்டதாகவும் தங்களை ஆட்படுத்திக் கொண்டன.
இமாம் ஹஸனுள் பன்னா, இஹ்வானும் முஸ்லிமின் அமைப்பின் ஸ்தாபகர் எல்லா இஸ்லாமிய அடிப்படையை கொண்ட மக்களிடம் அவ்வப்பொழுது பின்வருமாறு கூறுவதுண்டு.
வாருங்கள்! நாம் எந்தெந்த விஷயங்களில் ஒருமித்த கருத்துக்களை கொண்டிருக்கிறோமோ அதை செயல்படுத்துவதில் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம். இன்னும் எந்த காரியங்களில் நாம் கருத்தொருமித்த முடிவை காணமுடியவில்லையோ அந்நிலையில் ஒருவருக்கொருவர் சமாதானமாக போய்விடுவோம்.
இது ஒரு சரியான அணுகுமுறை. மேலும் அவர் எங்களுடைய இயக்கத்தை சாராதவர்கள் தவறான பாதையில் இருக்கிறார்கள் என்று எந்நிலையிலும் கூறவில்லை.
இமாம் ஹஸனுள் பன்னாவின் மேற்கண்ட அணுகுமுறையை பெருவாரியான இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் எதிரொலிக்கிறார்கள்.
குறுகிய மனப்பான்மை இஸ்லாமிய இயற்கைக்கு மாறுபட்டது. அதனில் ஒரு குறிப்பிட்ட விதிமுறைகளை கொண்ட ஒரு இயக்கம் செயல்படும் முறை மட்டும்தான் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படும் என்று கூறுவது மிகப்பெரிய தவறு.
ஏனெனில் அணுகுமுறைகள் (இஸ்லாமிய வழிக்கு உட்பட்டவை) பலவாறாக இருக்கலாம். அதினின்றும் தேர்ந்தெடுப்பது ஆகுமானதே!
அல்லாஹ் மிக அறிந்தவன்.
(ஆங்கில கட்டுரையை தழுவியது)