அன்பான சகோதர சகோதரிகளே, இன்றைய சூழ்நிலையில் நமது முஸ்லிம் சமுதாயம் எந்த நிலையில் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்கவேண்டியது நம் மீது அவசியமாகிறது.
இந்த சமுதாயத்தில் உள்ள அனைவரும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டு வந்த இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதையே பின்பற்றுவதாகவும் கூறுகிறார்கள். அப்படியிருக்கும் போது இந்த இஸ்லாமிய சமுதாயத்தில் ஏன் இத்தனை வேறுபாடுகள் மற்றும் பிரிவுகள்?
உண்மையில் இவர்கள் அனைவரும் தம்மை ”முஸ்லிம்கள்’ என்றே கூறிக் கொள்கின்றனர். மேலும் இவர்கள் ”வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை எனவும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் இறுதி தூதர்” எனவும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
அல்லாஹ் தன் திருமறையில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கட்டுப்பட்டு அவர்களை பின்பற்றுமாறு முஃமின்களுக்கு கட்டளையிட்டுள்ளான். எனவே தம்மை முஃமின் என கூறிக்கொள்ளும் ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தமது வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் பின்பற்றி நடப்பது அவர் மீது கடமையாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: –
”(நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு தூதராகவே அனுப்பியுள்ளோம் – (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான். எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்; யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 4:79-80)
”(நபியே!) நீர் கூறும்: ”நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (நபியே! இன்னும்) நீர் கூறும்: ”அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் – நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 3:31-32)
அனைத்து முஸ்லிம்களும் உண்மையில் அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடந்தால், நிச்சயமாக அவர்களின் வாழ்வு நெறிகளில் இத்தனை வேறுபாடுகள் ஏற்பட்டிருக்காது. ஆனால், முஸ்லிம்களுக்கிடையே இத்தனை வேறுபாடுகள் நிறைந்திருப்பதற்ககான ஒரே காரணம் என்னவெனில்: –
தம்மை முஸ்லிம்கள் எனக் கூறிக்கொள்வோர், அல்லாஹ்வின் கட்டளைகளையும், அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல்களையும் விட்டு விட்டு தாமாகவே பல பிரிவுகளையும், நம்பிக்கைகளையும், கோட்பாடுகளையும் உருவாக்கி அவற்றைப் பின்பற்றி நடப்பது தான்.
இவ்வாறாக சிலர் ஷியா, இஸ்மாயில், போஹ்ரா, இத்னா அஸ்ஹரிஸ் போன்ற பல பெயர்களில் தம்மை அழைக்கின்றனர். இந்தப் பெயர்களில் எதுவும் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படாததாகும். ஆனால் இவைகள் அனைத்தும் மனிதனின் கண்டு பிடிப்புகளே தவிர வேறில்லை. அல்லாஹ் ஸுபுஹானத்தஆலா, திருமறையையும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் பின்பற்றி வாழும் இறை நம்பிக்கையாளர்களக்கு சூட்டிய பெயர் ”முஸ்லிம்கள்” ஆகும். எனவே அல்லாஹ்வையும், அவனது திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் பின்பற்றி வாழும் ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் தமக்கு அல்லாஹ் சூட்டிய பெயரான ”முஸ்லிம்” என்பதில் திருப்திக்கொண்டு, அந்தப் பெயரில் தம்மை அழைப்பதையே அவர் விருப்பமானதாகக் கருத வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: –
”ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்;
மேலும்: நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள்.
இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்;
அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை;
இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்;
அவன் தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது);
இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்;
இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள்
எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.” (அல்குர்ஆன் 22:77-78)
அல்லாஹ் திருக்குர்ஆனில், இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒரே உம்மத்து எனவும், ஒரே சகோதரர்கள் எனவும் வழிகாட்டுகிறான். மேலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும் கூட இறை நம்மிக்கையாளர்கள் அனைவரும் ஒரே உம்மத்தாக ஒற்றுமையாக இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகே சில அறிவிலிகள் அல்லாஹ் மற்றும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல்களையும், சீரிய போதனைகளையும் விட்டு விட்டு இஸ்லாத்தின் பெயரால் புதிய புதிய கொள்கைகளையும், வழிமுறைகளையும் உருவாக்கி மற்ற முஸ்லிம்களிடமிருந்து வேறுபட்டனர்.
இவர்கள் தாங்களாகவே பல பிரிவுகளையும், சட்ட திட்ங்களையும்,புதிய நம்பிக்கைகளையும், கொள்கை கோட்பாடுகளையும் உருவாக்கி, இஸ்லாத்தை விட்டு வெகு தூரம் சென்று விட்டனர். இவ்வாறு இவர்கள் அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் வழிகாட்டுதல்களை விட்டுவிட்டு தாங்களாகவே உருவாக்கிய கொள்கை கோட்பாடுகளைப் பின்பற்றுவதன் மூலம் இஸ்லாம் மார்க்கம் காட்டும் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டில் செல்கின்றனர்.
அல்லாஹ் கூறுகிறான்: –
”அவர்களுக்கு (மார்க்க விஷயத்தில்) தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்தபின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்.” (அல்குர்ஆன் 45:17)
”இன்னும், நிச்யமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்” (என்றும் கூறினோம்)
ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்.
”எனவே, அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டுவிடும். ”(அல்குர்ஆன் 23:52-54)
நேர்வழி காட்டும் புத்தகமாகிய அல்குர்ஆன் இன்று நம்மிடையே அல்லாஹ், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளியவாறே இருக்கிறது. மேலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல் மற்றும் அங்கீகரிப்பான, அவர்களின் வழிகாட்டுதல்களான சுன்னத்தும் (ஹதீஸ்களும்) பத்திரமாக பாதுகாக்கப்பட்டு இன்று நம்மிடையே இருக்கிறது. உண்மையில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள், அல்லாஹ் இறக்கியருளிய வேதத்தை உண்மையிலேயே பின்பற்றி, அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல்களான சுன்னத்தையும் பின்பற்றி நடப்பார்களேயானால் முஸ்லிம்களுக்கிடையே இன்று காணப்படும் இத்தனை வேறுபாடுகள் நிச்சயம் இருக்காது.
ஆனால் ஒருவர் அல்லாஹ்வின் வேதத்திற்குப் பதிலாக வேறு புத்தகங்களையோ அல்லது அவனது தூதரின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிகாட்டுதலுக்கு (சுன்னத்திற்குப்) பதிலாக வேறு ஒருவருடைய வழிகாட்டுதல்களையோ பின்பற்றுவதற்கு முயன்றால் நிச்சயமாக அவரின் வழிமுறை உண்மையான முஸ்லிமின் வழிமுறையை விட்டும் வேறுபட்டிருக்கும்.
1). அல்லாஹ்வுடைய வேதம் மற்றும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறை ஆகியவற்றை பின்பற்றுவது அல்லது
2). மனிதர்களால் உருவாக்கப்பட்ட நூல்களை, நம்பிக்கைகள் மற்றும் கொள்கை கோட்பாடுகளைப் பின்பற்றுவது என்பது நம் ஒவ்வொருவருடைய விருப்பத்தைப் பொறுத்தது.
முதலாவது பாதையைப் பின்பற்றினால், அல்லாஹ்வின் கருணையும், அவனது மன்னிப்பும் கிட்டும். இரண்டாவது பாதையைப் பின்பற்றினால், அது தவறான வழிக்கு இழுத்துச் சென்று அல்லாஹ்வின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாக நேரிடும்.
முதலாவது பாதையைப் பின்பற்றினால், நேர்வழி கிடைக்கும். இரண்டாவது பாதையைப் பின்பற்றினால், அது வழிகேட்டிற்கு அழைத்துச் செல்லும்.
முதலாவது பாதையைப் பின்பற்றினால், அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்ட சுவர்க்கம் கிட்டும். முதலாவது அல்லாத மற்ற எந்த பாதையைப் பின்பற்றினாலும் நரக நெருப்பைத் தவிர வேறு எதுவும் கிட்டாது.
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும். மேற்கூறிய விளைவுகளைக் கருத்தில் கொண்டு எந்தப் பாதையைப் தேர்ந்தெடுப்பது என்பது ஒவ்வெரு தனி மனிதனின் விருப்பத்தைப் பொறுத்தது.
அல்லாஹ் கூறுகிறான்: –
”(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: ”இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்(வந்)துள்ளது; ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர(அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.” (அல்குர்ஆன் 18:29)
அல்லாஹ்வே மிக்க ஞானம் உடையவனாகவும், வல்லமை மிக்கோனாவும் இருக்கிறான்.
”Jazaakallaahu khairan”
இக்கட்டுரையாசிரியருக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக
– உண்மை