மனைவி கணவனுடைய பெயரை சொல்லலாமா?
கணவன் மனைவி இருவருக்கு மத்தியில் உள்ள தொடர்பு வெறும் உடல் ரீதியானது மட்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. அதற்கு மேலாக உள்ளத்தோடு தொடர்பு கொண்டவையாகும்.
”நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்காக உங்கள் மனைவியை உங்களிலிருந்தே படைத்தான்…” (அல்-குர்ஆன் 30 : 21)
கணவன் மனைவிக்குள் ஆறுதல் கிடைக்கும் எல்லா விஷயங்களையும் இந்த வசனம் அனுமதிக்கிறது.
சொற்கள், செயல்கள், விளையாட்டு இவை கணவன் மனைவிக்குள் ஆறுதலையும் நெருக்கத்தையும் கொடுக்கும். மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ஒரு மனைவி தன் கணவனை பெயர் சொல்லியும் அழைக்கலாம். ”… வாடா …. போடா….” என்றும் செல்லமாகவும் கூறலாம். இஸ்லாம் இதையும் தடுக்கவில்லை.
”மனைவி மீது கணவனுக்கு இருக்கும் உரிமைப்போன்று மனைவிக்கும் உரிமை இருக்கிறது” என்று கூறுகிறது இஸ்லாம். (அல் குர்ஆன்: 2: 228)
பெயர் சொல்லி அழைக்கும் உரிமை உட்பட எல்லா உரிமைகளும் இதில் அடங்கும்.
”ஆயிஷாவே! நீ என்மீது சந்தோஷமாக இருக்கிறாயா..? அல்லது கோபமாக இருக்கிறாயா..? என்பதை நான் சாதாரணமாக அறிந்துகொள்வேன் என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்கூறினார்கள். எப்படி? என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாகேட்க,
”முஹம்மத் உடைய இறைவன்மீது சத்தியமாக” என்று நீ கூறினால், சந்தோஷமான இதயத்துடன் நீ இருக்கிறாய் என்பதை உணர்வேன்.”
”இப்ராஹீம் உடைய இறைவன் மீது சத்தியமாக” என்று நீ கூறினால் உன் உள்ளம் கோபத்தில் இருக்கிறது என்பதையும் நான் அறிவேன்” என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆய்ஷாரளியல்லாஹு அன்ஹா, புகாரி, முஸ்லிம்)
தம் கணவரை ”முஹம்மத்” என்ற பெயரால் அழைப்பதை நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்சந்தோஷத்தோடு அனுமதிக்கிறார்கள்.
எனவே கணவனின் பெயரை மனைவி தாராளமாகச் சொல்லலாம்.
இன்று கூட, அரபு நாடு செல்பவர்கள் சாதாரணமாக இந்நிலையை காண்பார்கள்.
கணவன் பெயரை மனைவி சொல்லக்கூடாது என்பதெல்லாம் நமது நாட்டு-மாற்று சமூகத்தவரின் பழக்கமாகும். அந்த பழக்கத்தின் தாக்கத்தினால் நம் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பெரும்பாலோர் கணவன் பெயரை மனைவி சொல்வது மரியாதைக் குறைவு என்று நினைக்கின்றனர். இது தவறு. இது சுன்னத்துக்கு மாற்றான கருத்து என்று கூட சொல்லலாம்.
”இணை வைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள்” என்பது நபிமொழி(புகாரி) இந்த நபிமொழியையும் கருத்தில் கொண்டால் மனைவி தம் கணவனின் பெயர் சொல்லி அழைப்பது மிகவும் நியாயமானதே என்பதை விளங்கலாம்.
”Jazaakallaahu khairan” www.tamilmuslim.com