டாக்டர் டி.பி.மகேந்திரன்
”பல் போனால் சொல் போகும்” என்ற பழமொழியே நமது பல்லின் முக்கியத்துவத்தை உணர்த்தும். அப்படிப்-பட்ட பற்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே முறையாகப் பராமரிக்கத்தான் வேண்டும். இதோ, பல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்ற வழி சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவ நிபுணர், டாக்டர் டி.பி.மகேந்திரன்.
”குழந்தை பிறந்தவுடன் ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் பால் பற்கள் எனப்படும் தற்காலிக பற்கள் (milk tooth or temporary tooth) வளர ஆரம்பிக்கும். இரண்டரையிலிருந்து மூன்று வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும். அந்த வயதில்தான் அம்மாக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பொதுவாக இந்தப் பருவத்தில் புட்டிப் பால் கொடுக்க ஆரம்பிக்கும் அம்மாக்கள், பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்து விடுவார்கள். இதனால் குழந்தைகளின் பற்களில் அந்தப் பால் படிந்துவிடும். எப்போதும் நம் வாயில் நிரந்தரமாக இருக்கும் ஸ்டிரெப்டோ காகஸ் (strepto coccus) எனப்படும் பாக்டீரியாக்கள், பற்களில் படிந்திருக்கும் அந்தப் பாலோடு வினை புரிந்து, கேரிஸ் (caries) எனப்படும் பற்சொத்தையை ஏற்படுத்தும். இதனை ‘நர்ஸிங் பாட்டில் கேரீஸ்’ (nursing bottle caries) என்று அழைக்கிறோம்.
குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட தொந்தரவு ஏற்படாமல் இருக்க பால் குடித்த உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்க வைக்க வேண்டும்.
பால் பற்கள் விழுந்து குழந்தைக்கு நிரந்தரமான பற்கள் வளர ஆரம்பிக்கும் பருவத்திலும் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். சில பால் பற்கள் விழாமல் இருக்கும்போதே அதே இடத்தில் நிரந்தரமான பல் சற்று சாய்வாக முளைக்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட தருணத்தில் இடையூறா£க இருக்கும் பால் பற்களை டாக்டரிடம் சென்று நீக்கி விட வேண்டும். நீக்கா விட்டால், பற்களில் அழுக்கு சேர்வது, நாக்குக்கு இடையூறாக பற்கள் வளர்ந்து அதனால் பேச்சுக்கு இடையூறு ஏற்படுவது போன்றவை நிகழும்.
சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் சிலருக்கு முக அமைப்பே மாறி அவலட்சணமாக தோற்றமளிக்கும்.. பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்குக் காரணம். பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் (permanent tooth) வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடையூறாக இருப்பதால் பற்கள் தன் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பிக்கும்.
எனவே, மூன்றில் இருந்து நான்கு வயது வரை குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது. என்ன முயன்றும் விரல் சூப்புவதை விட முடியாத குழந்தைகளுக்கு சில தடுப்பு முறைகள் உள்ளன. கிளிப் ட்ரீட்மென்ட் (clip treatment) எனும் சிகிச்சை உள்ளது. இந்த சிகிச்சையில் துருப்பிடிக்காத சின்ன கிளிப்புகளை மேல் தாடையில் பொருந்தி விடுவதால் அவர்களால் விரல் சூப்ப முடியாது. ஆனால், இந்த கிளிப்புகளை மாட்டிய பிறகு கடினமான பொருட்களை சாப்பிட்டால் அவை உடைந்து போய் விடக் கூடும்.
பற்களைத் துலக்குகிற விஷயத்தில் எல்லோரும் செய்கிற தவறு பற்களை மட்டும் துலக்குவதுதான். பல் எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு ஈறுகளும் முக்கியம். ஈறுகளுக்கும் பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளியில் நாம் சாப்பிடும் பொருட்கள் தங்குவதுதான் ஈறு தொடர்பான பிரச்னைக்கு முதல் படி. எனவே, குழந்தைகள் பல் துலக்கப் பழகும்போதே பல்லுக்கும் ஈறுகளுக்கும் உள்ள இடைவெளியை சுத்தம் செய்ய சொல்லிக் கொடுக்க வேண்டும்.”
பல் போனால் இதயமே போகுமாம்!!!
”பல் போனால் சொல் போகும்” என்று கேட்டிருக்கிறோம். அதென்ன இதயம் போகும் என்ற கதை… என்று நீங்கள் கேட்டபது புரிகிறது. என்னங்க செய்வது, விஞ்ஞானிகள் புதுசு புதுசா பல விசயங்களைப் பற்றி ஆய்ந்தறிந்து அதனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்தத் தகவல்கள் இன்றளவில் மனிதனின் வாழ்க்கை முறை பற்றி அதிகம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தை உண்டு பண்ணியுள்ளதெனலாம்.
பல்லே சொற்களை உச்சரிக்க மிகவும் துணை நிற்பதாகும். ஆனால் அவை இழந்து போக நாம் சொற்களை தெளிவாக உச்சரிக்க முடியாமல் தவிக்க நேரிடும்.
குருதிக்குழாய்களான நாடி மற்றும் நாளம் ஆகியவற்றில் தடை ஏற்பட்டுள்ள நோயாளிகள் பலருக்கும், பல் சீமெந்து தொடர்பான தாக்கங்கள் இருப்பதாக அண்மையில் வைத்திய குழுவொன்று ஆய்ந்தறிந்துள்ளது.
இதனால், பற்களை நன்றாக பற்தூரிகை கொண்டு சுத்தப்படுத்தல் எம்மை இதய நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வழியேற்படுத்தும் என ஆய்வில் ஈடுபட்டவர்கள் பரிந்துரைக்கின்றார்கள்.
பற்கள் தொடர்பான நோய்கள் குறுகிய காலத்திலும், நீண்ட காலத்திலும் வரக்கூடியனவாகும். இந்த நோய்கள் இதயம் தொடர்பான நோய்களுடன் நேரடியாகவே தொடர்புற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பற்களிடையே கழிவுகள் மற்றும் உணவுக்கூறுகள் எஞ்சி தேங்குவதால் அவை பற்களையும், அதன் சீமெந்தையும் சிதைவடையச் செய்யும் வல்லமை உடையன. இதனால் நீண்ட கால பல் சீமெந்து தொடர்பான Periodontitis எனும் நோயேற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இதனால் பற்களை அன்றாடம் சுத்தம் செய்தல் இவ்வாறான நோய்கள் நம்மை தாக்காமலிருக்க வழியை ஏற்படுத்தும்.
பற்களை சுத்தம் செய்யாமல் இருந்தால், அவை தனது வலிமையை இழந்து கழன்று விழுந்து விடக்கூடிய நிலைகளையும் நீங்கள் நன்றாகவே அறிந்திருப்பீர்கள்.
ஆனாலும், பற்கள் தொடர்பான நோய்கள், இதயத்தை தாக்கி நோய்கள் ஏற்படுத்துவதற்கான தெளிவான காரணங்கள் உணரப்படாமல் இருக்கின்றது. இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டு சிதைவடைந்த பற்களிலிருந்து விடுவிக்கப்படும் பக்றீரியாக்களாகிய நுண்ணங்கிகள் இதய நோய் உண்டாக்குவதற்கு மூலமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
எது எவ்வாறிருந்த போதும் பற்களை அன்றாடம் மறக்காமல் தீட்டிக் கொள்தல் எல்லாவற்றிற்கும் நல்லதே! என்பதுதான் இப்போதைய Medical Advice.
நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை தடவை பல்துலக்க வேண்டுமென சிபாரிசு செய்கிறீர்கள் என்பதை மறுமொழியில் சொல்லலாமே!
பற்களை பாதுகாக்க சில யோசனைகள்:
சரிவிகித சத்துணவை சாப்பிட வேண்டும்.
சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் கலந்த உணவை உண்ணும் ஒவ்வொரு முறையும் இருபது நிமிடங்களுக்குப் பிறகு அமிலங்கள் உற்பத்தியாகி பற்களை தாக்குகின்றன. எனவே தினந்தோறும் உண்ணும் நொறுக்குத்தீனீயின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
பழங்கள், பச்சைக்காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட் உணவையும் புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் உண்ணலாம். சாப்பிட்டு முடித்தவுடன் பற்களை சுத்தம் செய்துவிடுங்கள். இது பற்கள் பாதுகாப்புக்கு மிக அவசியம்.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப்பொருட்களை உண்பது நல்லது. இதனால் பற்கள் சுத்தமாவதுடன் ஈறுகளுக்கும் இதமாக இருக்கும்.
உணவு வேளையில் நீங்கள் உண்ணவேண்டிய கடைசிப்பொருள் நறுக்கப்பட்ட பச்சைக்காய்கறிகளாகவோ அல்லது பழங்களாகவோ இருக்கட்டும். மறந்தும்கூட இனிப்பு பொருட்களை சாப்பிட வேண்டாம்.
காலையில் மட்டும் பல்துலக்கினால் போதாது. காலை, மாலை இரண்டு வெளையும் பல் துலக்க வேண்டும்.
சாப்பிடும் போது ருசியாக இருக்கும் உணவு, வாயில் சிறிது நேரம் தங்கி விட்டால், துர்நாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. அதனால் சாப்பிட்டவுடன் பல் தேய்ப்பது நல்லது. இது பல் இடுக்குகளில் உள்ள உணவுப் பொருட்களை சுத்தம் செய்யும்.
காலை எழுந்தவுடன் பல் தேய்ப்பதைப் போல், இரவு படுக்கும் முன் பல் தேய்ப்பதும் முக்கியம்.
பல் தேய்க்கும் போது பல்லில் மட்டும் கவனம் செலுத்தினால் பத்தாது. ஈறுகள், நாக்கு இவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும். பல்லை விட இவை மிருதுவானவை என்பதால் பல்லில் காட்டும் வேகத்தை சற்றே குறைத்துக் கொள்வது நல்லது.
ஃபிளாஸ் (குடடிளள) செய்வதால் பற்களின் இடையே உள்ள பொருட்களையும் சுத்தம் செய்யலாம். இதை செய்வதால் வாய் துர்நாற்றத்தை போக்க முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை என்றால், உபயோகித்து முடித்தவுடன் ஃபிளாஸை முகர்ந்து பார்க்கவும்!!! அதன்பிறகு ஒரு நாளும் ஃபிளாஸை மறக்க மாட்டீர்கள்.
பல் தேய்த்த பிறகு மவுத்வாஷால் வாயை கொப்பளிப்பதால் நீண்ட நேரத்திற்கு துர்நாற்றம் வராமல் தடுக்கலாம்.
அஜீரணம், பசி, இவற்றாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படலாம். அதனால் சாப்பாட்டில் கவனம் செலுத்தவும், ஒரே நேரத்தில் முடிந்த வரை சாப்பிடாமல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிய அளவில் சாப்பிடுவது சிறந்தது. சாப்பிட முடியவில்லை என்றால் தண்ணீராவது குடிக்கவும். இது அஜீரணமும் பசியும் ஏற்படாமல் தடுக்கும்.
மூக்கடைப்பு, சளி இவற்றாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படலாம். நறுமண மென்த்தால் மாத்திரைகள் இதற்கு உதவும்.
இவற்றை எல்லாம் செய்த பிறகும் வாயில் துர்நாற்றம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும். சில நேரங்களில் கல்லீரல், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களாலும் இந்நிலை உருவாகலாம்.
நன்றி: உதய தாரகை