ஷைத்தான்! அவனைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். அவன் ஒவ்வொரு நிமிடமும் நம்மை அழிவின் பக்கம் அழைத்துச் செல்வதில் குறியாகவே இருந்து கொண்டிருக்கின்றான். நிச்சயமாக, நாம் அவனுடன் போர் செய்த வண்ணமே இருந்து கொண்டிருக்கின்றோம்.
நீங்கள் காலையில் கண் விழித்துப் பார்க்கும் பொழுது, உங்களது குடும்பமே அழிவின் விழிம்பில் நின்று கொண்டிருக்கின்றது. உங்களைச் சுற்றிலும் எதிரிகள் தாக்குவதற்குச் சமயம் பார்த்து நின்று கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடம் கடுமையான, கொடூரமாக ஆயுதங்களும் இருக்கின்றன. முற்றுகையிட்ட வண்ணம் உங்களைத் தாக்கும் நிமிடத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களது துப்பாக்கிகளும், டாங்குகளும் உங்களது வீட்டுக் கதவை நோக்கி திருப்பப்படுகின்றன. துப்பாக்கிகளின் விசையின் மீது விரல்கள், கட்டளைக்காகக் காத்திருக்கின்றன. அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? யாரை உதவிக்கு அழைப்பீர்கள்?
நிச்சயமாக, முஸ்லிம்களாகிய நம்மைக் குறிபார்த்தபடி எதிரிகளின் தோட்டாக்கள் 24 மணி நேரம் இருக்கின்றன, வாரம் முழுவதும், மாதம் முழுவதும் ஏன் நம் வாழ் நாள் முழுவதும், அந்த எதிரியின் கணைகள் நம்மைத் தொடர்ந்த வண்ணம் தானே இருக்கின்றது.
அந்த எதிரியைப் பற்றிய பயமே இல்லாமல் இருக்கின்றோம். அவனைப் பற்றி மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏனென்றால், அவனையோ, சகல ஆயத்தங்களுடன் போர்க் கருவிகளுடனும் நம்மை சுற்றி நின்று கொண்டிருக்கும் இந்த எதிரியை நம் கண்ணால் காணாததால், அவனைப் பற்றியும் அவனது போர்ப் பிரகடனத்தைப் பற்றியும் நாம் அச்சமற்றிருக்கின்றோம்.
அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே இந்த மனித குல எதிரியைப் பற்றி இவ்வாறு எச்சரிக்கின்றான் :
”(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக”” என அவன் (இப்லீஸ்) வேண்டினான். (அதற்கு அல்லாஹ்) ”நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்”” என்று கூறினான். (அதற்கு இப்லீஸ்) ”நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்”” என்று கூறினான். ”பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்”” (என்றும் கூறினான்).(7:14-17)
”என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!”” என்று இப்லீஸ் கூறினான். ”நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவானாவாய்;””. ”குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில்”” என்று அல்லாஹ் கூறினான். (அதற்கு இப்லீஸ்,) ”என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். (15:36-39)
மேலே உள்ள வசனம் நமக்கு உணர்த்துவதென்வென்றால், அல்லாஹ்வினுடைய நேரான பாதையைத் தேர்ந்தெடுத்து நடப்பவர்களை வழி கெடுப்பது குறித்த, ஷைத்தானுடைய நோக்கத்தை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. இறைவனுடைய நேரான வழியைப் பின்பற்றுவர்கள் மீது நான் போர்ப் பிரகடனம் செய்வேன், அவர்களை அவர்கள் செல்லும் நேரான வழியைப் பின்பற்றாது தடுப்பேன், இன்னும் அவர்களை வழிகேட்டின் பால் அழைத்துச் செல்வேன் என்றும் அவன் தனது போர்ப் பிரகடனத்தில் அறிவிக்கின்றான். இந்த வழிகேட்டிற்கு நம்மை அழைத்துச் செல்வதற்காக அவன் பல ஆயுதங்களைத் தயார் செய்து வைத்திருப்பதோடு, இன்னும் அவற்றைப் பயன்படுத்துவதில் அவன் மிகத் தேர்ச்சி பெற்றவனாகவும் இருக்கின்றான் எனில், இத்தகைய தாக்குதல்களிலிருந்து நேர்வழியைப் பின்பற்றக் கூடியவர்கள் எவ்வாறு தப்பிப் பிழைப்பது என்பது குறித்து எந்த வழிகாட்டுதல்களையும் ஏற்படுத்தாமல், இறைநம்பிக்கையாளர்களை கைசேதத்திற்குரியவர்களாக இறைவன் விட்டு விடவில்லை.
ஷைத்தானைப் பற்றியும், அவனது படைகளைப் பற்றியும், அவன் பிரயோகிக்கும் ஆயுதங்கள் பற்றியும், அவனது தாக்குதல்கள் எவ்வாறு இருக்கும் என்பதையும் நாமறிந்தே வைத்திருக்கின்றோம். அவனது தாக்குதல்கள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி நாம் அறிந்து கொண்டு விட்டால், அதிலிருந்து நாம் எப்படித் தப்பிப் பிழைப்பது என்பது பற்றியும், இன்னும் அவனுடைய தந்திரங்களை தவிடு பொடியாக்கி நாம் வெற்றி பெறுவது எப்படி என்பதையும் அறிந்து கொள்ளலாம். அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :
ஷைத்தானுடைய வழிமுறைகளைப் பேணாதீர்கள், நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான பகைவனாக இருக்கின்றான் என்று திருமறை வழியாக இறைவன் நம்மை எச்சரிக்கை செய்கின்றான் :
”ஷைத்தானின் அடிச்சவடுகளை பின்பற்றாதீர்கள் – நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.” (2:168)
அவன் உங்களை மறதியில் ஆழ்த்தி விடுவான். உங்களது இதயங்கள் பலவீனத்தை அடையும் பொழுது, பலவீனமான இதயத்தில் இறைநம்பிக்கை சற்று குறைய ஆரம்பிக்கும், அந்த நிலையில் தான் ஷைத்தான் தன்னுடைய பிடியை உங்களது ஆத்மாக்களில் ஊடறுவ விட்டு விடுவான். ஷைத்தானின் ஊடுறுவல் நிகழ ஆரம்பிப்பதை நீங்கள் உணர்ந்து விட்டால், மீண்டும் உங்களது இறைநம்பிக்கையைப் பலப்படுத்தக் கூடிய காரியங்களில் நீங்கள் ஈடுபடுவதன் மூலம், அவனது அந்த தந்திரத்தை முறியடித்து விடலாம். மீண்டும் உங்களது இறைநம்பிக்கையைப் பலப்படுத்திக் கொள்ளலாம்.
(இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம். (6:68)
இறைவனுக்கு மாறு செய்வதை அழகாகவும் இன்னும் கீழ்ப்படிதலை வெறுக்கத்தக்கதாகவும் உங்களுக்கு மாற்றிக் காண்பிப்பதில் அவன் வல்லவன்.
அவனைப் பற்றியும், அவனது சகாக்கள் பற்றியும் உங்களது மனதில் பயத்தை விதைப்பதில் வல்லவன். இதனைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகின்றான் :
”ஷைத்தான்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான். ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள் – நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள்.” (3:175)
நம்மை பிரச்னைகளில் உழல விட்டு, அதன் மூலமாக நன்மையான காரியங்களைச் செய்வதனின்றும் நம்மை அப்புறப்படுத்தி விடுவான். இது தவிர அவனிடம் பல்வேறு ஆயுதங்கள் இருக்கின்றன, இறைநம்பிக்கையாளர்களுக்கு எதிராக அந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தருணத்தை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றான், அதாவது,
அல்லாஹ்வைப் பற்றிய அறிவில்லாமல், விளக்கங்கள் அளிப்பதும் விவாதங்கள் புரிவதும், இதனைப் பற்றி அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :
”எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்.” (22:3)
o முஸ்லிம்களுக்கிடையே பிரிவினையை உண்டு பண்ணுவது.
o பட்டப் பெயர்களைக் கொண்டு பிறரை அழைக்கத் தூண்டுவது
o நிர்வாணமாக இருப்பதற்கு மனிதர்களைத் தூண்டுவது
o இசை. இசை கேட்பதன் மூலம் அல்லாஹ்வின் ஞாபகத்தை விட்டும், அவனை நினைவு கூர்வதை விட்டும் மனிதர்களைத் தடை செய்வது, அதில் தன்னிலை மறந்து திரிய வைப்பது
o அல்லாஹ்வின் படைப்புகளில் மாற்றங்களைச் செய்யத் தூண்டுவது
இப்பொழுது நாம் அவனது ஆயுதங்கள் எதுவென்று தெளிவாக அறிந்து கொண்டோம். இப்பொழுது, அவனது அந்த ஆயுதங்களுக்கு எதிராக நாம் எத்தகைய ஆயுதங்களைப் பிரயோகிப்பது என்பது குறித்து நாம் தெளிவானதொரு முடிவெடுத்து, அந்த ஆயுதங்களை வலுவான முறையில் செயல்படுத்த முனைய வேண்டும். அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :
அப்பொழுது ”உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்”” என்று (இப்லீஸ்) கூறினான். ”(எனினும்) அவர்களில் அந்தரங்க சத்தியான உன் அடியார்களைத் தவிர” (என்றான்). (38:82-83)
இன்னும்
o ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். தனியாகச் செல்லும் ஆட்டைத் தான் ஓநாய் தனக்கு இரையாக்கிக் கொள்வது எளிது.
o ஷைத்தானின் ஊசலாட்டத்திலிருந்து பாதுகாப்புக் கோரி, இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்
o எந்தச் செயலை ஆரம்பித்தாலும், இறைவனின் திருநாமம் (பிஸ்மில்லாஹ்) கூறி ஆரம்பம் செய்யுங்கள்
o இறைவனது திருமறையை ஓதுங்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள் : உங்களது இல்லங்களை மண்ணறைகளாக மாற்றி விடாதீர்கள், அத்தியாம் பக்கறா ஓதப்படக் கூடிய இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகின்றான். (முஸ்லிம்)
o தொழுகையின் பொழுது உங்களது வரிசைகளை நேராக ஆக்கிக் கொள்ளுங்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கின்றார்கள் :
(தொழுகையின் பொழுது) ஒருவருடன் ஒருவர் நெருக்கமாக நில்லுங்கள், இடைவெளிகளை நிரப்புங்கள் மற்றம் உங்களது தோள்களை நேராக ஆக்கிக் கொள்ளுங்கள், ஏனென்றால், நிச்சயமாக எவன் கைவசம் என்னுடைய உயிர் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக! (உங்களது) வரிசைகளுக்கு இடையில் உள்ள இடைவெளிகளில் ஷைத்தான் நுழைகின்றான், ஏவுகணைகளைப் போல. (அபூதாவூது)
தொழுகையில்; (அத்தஹிய்யாத்து இருப்பு நிலையின்) பொழுது, நீங்கள் உங்களது விரலைக் கொண்டு சுட்டுக் காட்டுவது, ஒரு துண்டு இரும்புத் துண்டைக் காட்டிலும் அது அவனுக்கு மிக கடினமாக இருக்கின்றது. (அஹ்மது)
அறிந்து கொள்ளுங்கள்..! ஷைத்தான் நம்முடைய பரம எதிரி. அவனை எதிரியாகவே நாம் கருத வேண்டும். அவன் நம்முடன் எவ்வாறு போர் தொடுத்துள்ளானோ அது போலவே நாமும் அவன் மீது போர் தொடுக்க வேண்டும். அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கின்ற அனைத்து வழிகாட்டுதல்களையும் பிரயோகித்து அவனை நாம் வெல்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். நேரமும், இன்னும் சூழ்ச்சிகளும் அவனுடையது, உண்மையான இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவனாக இருக்கின்றான், வெற்றி அவனிடமிருந்தே இரு;ககின்றது.
”எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்¢ ‘எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!” ஸூரத்துல் ஆல இம்றான் 193,
”Jazaakallaahu khairan” இக்கட்டுரையாசிரியருக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
Alavudeen, Security Forces Hospital, Riyadh, KSA