உமர் இப்னுல் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”இறைவழியில் பயன்படும் குதிரை ஒன்றை (ஒருவருக்கு) அன்பளிப்பாக வழங்கினேன். தன்னிடம் அதை வைத்திருந்தவர் அதை வீணாக்கி விட்டார். எனவே, அதை நான் விலைக்கு வாங்க விரும்பினேன். அதை அவர் குறைவான விலைக்கு விற்பார் என எண்ணினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (இதுபற்றி) கேட்டேன். ”அதை நீ விலைக்கு வாங்காதே! அதை உனக்கு அவர் ஒரு திர்ஹமிற்கு கொடுத்தாலும் உன் தர்மத்தை திரும்பப் பெறாதே! தன் தர்மத்தை திரும்பப் பெறுபவன், தன் வாந்தியை திரும்ப உண்பவன் போலாவான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்: ”மறுமை நாளில் மனிதர்கள் காலில் செருப்பு அணியாதவர்களாக, ஆடை இல்லாதவர்களாக, ‘கத்னா‘ செய்யப்படாதவர்களாக ஒன்று சேர்க்கப்படுவார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிட, நான் கேட்டேன். ”இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமாகவா?) ஆண்கள், பெண்கள் அனைவரும் அவர்களில் சிலர் சிலரைப் பார்ப்பார்களே” என்று நான் கூறினேன். ”ஆயிஷாவே! அன்றைய நாளின் விஷயம், அவர்களை (இதுமாதிரி) ஈடுபடச் செய்யும் ஒன்றை விட மிகக் கடுமையானது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)அதீ இப்னு ஹாதம் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”உங்கள் எவரிடமும் தன் இறைவன் (மறுமையில்) பேசாமல் இருக்கமாட்டான். அவனுக்கும் அவருக்குமிடையே மொழி பெயர்ப்பாளர் இருக்கமாட்டார். தனது வலது புறம் பார்ப்பான். அங்கே தான் முன்பு அனுப்பி வைத்த (செயல்களை)த் தவிர வேறொன்றையும் பார்க்கமாட்டான். பின்பு இடது புறம் பார்ப்பான். தான் முன்பு செய்திட்டவற்றைத் தவிர (வேறொன்றையும்) பார்க்கமாட்டான். தனக்கு முன்னே பார்ப்பான். அங்கே முகத்துக்கு நேராக நரகத்தைத் தவிர (மற்றதைப்) பார்க்கமாட்டான். எனவே பேரீத்தம் பழத்(தின் பாதியை தர்மம் செய்)தேனும் நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”உங்களில் ஒருவர், ஒரு அந்நியப் பெண்ணிடம் (அவளுடன்) அவளுடைய (தந்தை, சகோதரர், மகன் போன்ற) உறவினர்கள் உடன் இல்லாமல் தனித்திருக்க வேண்டாம்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”ஒருவர், ஒரு செருப்பில் நடக்க வேண்டாம். இரண்டையும் சேர்த்தே அணியட்டும்! அல்லது இரண்டையும் சேர்த்தே கழட்டி விடட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.(புகாரி, முஸ்லிம்)
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”ஒருவரின் செருப்பு வார் அறுந்துவிட்டால், அதை சரி செய்யும்வரை, ஒரு செருப்புடன் நடக்க வேண்டாம்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூற நான் கேட்டேன். (முஸ்லிம்)
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”உங்களில் ஒருவர் தனது இடது கையால் சாப்பிடவேண்டாம். குடிக்க வேண்டாம். நிச்சயமாக ஷைத்தான்தான், தனது இடது கையால் சாப்பிடுவான். குடிப்பான் ”. என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்)
அபூஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”பாதைகளில் உட்காருவதை உங்களிடம் எச்சரிக்கிறேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே! எங்களின் பேச்சுக்களை நாங்கள் அங்கே பேசிடும் அவசியம் எங்களுக்கு ஏற்படுகிறேதே? என்று கேட்டார்கள். அந்த இடத்தில் நீங்கள் உட்கார வேண்டியது ஏற்பட்டால், பாதைக்குரிய உரிமையை கொடுங்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே! பாதையின் உரிமை என்ன?” என்று கேட்டார்கள். ”பார்வையைத் தாழ்த்துவது, நோவினையை கைவிடுவது, பதில் ஸலாம் கூறுவது, நல்லதை ஏவுவது, தீயதைத் தடுப்பது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அபூபர்ஸா என்ற நழ்லா இப்னு உபைத் அஸ்லமீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”ஓர் அடியான் தன் வயதை எப்படிக் கழித்தான்? தன் கல்வியை எதற்குப் பயன்படுத்தினான்? தன் சொத்தை எப்படி சம்பாதித்து, எதில் செலவழித்தான்? தன் உடலை எதில் ஈடுபடுத்தினான்? என்று கேள்வி கேட்கப்படும் வரை அந்த அடியானின் இரு கால்களும் (மறுமையில்) நகராது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)