ரேஷன் அட்டைகள் 2011 ஜூன் வரை செல்லுபடியாகும்– தமிழக அரசு
சென்னை: தற்போது பொதுமக்கள் பயன்படுத்தி வரும் ரேஷன் அட்டைகள், ஜூன் 2011 வரை செல்லுபடியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் அட்டைகள் 2009 டிசம்பருடன் காலாவதியாகும் வகையில் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளன.
புதிய அட்டைகள் வழங்கவும், போலி அட்டைகளை கண்டுபிடித்து ஒழிக்கவும் வீடுவீடாக சென்று தணிக்கை செய்யும் பணிகள் இன்னும் முடிவு பெறாமல் தொடர்ந்து நடந்து வருகின்றன. இப்பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே புதிய அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
எனவே தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ரேஷன் அட்டைகளையே மேலும் ஒராண்டுக்கு நுகர்வோர் பயன்படுத்திக் கொள்ள தமிழகஅரசு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரேஷன் அட்டைகளின் செல்லுபடி காலத்தை ஜூன் 2011 வரை நீட்டித்து தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகரிவோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கப் பொருளாதாரம்….. ……. !
வாஷிடங்டன்: பொருளாதார மந்தத்திலிருந்து உலகம் மெல்ல மெல்ல மீண்டு வருவதாக செய்திகளும், வங்கிகளின் அறிக்கைகளும் சொன்னாலும், இதற்கெல்லாம் மூல காரணமான அமெரிக்கப் பொருளாதாரம் மட்டும் மீண்டு வர இன்னும் சில காலம் ஆகும் என்றே பல ஆய்வுகளும் கூறுகின்றன.
இந்த நிலையில், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்ளிட்ஸ், 2010-லும் அமெரிக்கா ஒரு பெரிய சரிவை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும், இந்த முறை இன்னும் அதிக ஊக்கச் சலுகை திட்டத்தை (Stimulus Package) அது அறிவிக்க வேண்டி வரும் என்று புதிய குண்டை வீசியுள்ளார்..ஒபாமா அரசு, தனது 787 பில்லியன் டாலர் முதல் சலுகைத் திட்டத்தால் நல்ல பலன் தெரிவதாகவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்க 157 பில்லியன் டாலர் கூடுதல் நிதிச் சலுகை கொடுத்தால் போதும் என்றும் கூறியுள்ள நிலையில், ”அரசு கொடுத்த நிதிச் சலுகைகள் எதிர்ப்பார்த்த பலனைக் கொடுக்காததால் வேலை இழப்புகள் அதிகறித்து வருகின்றன. இந்த நிலை இன்னும் ஆறு மாதங்களில் தீவிரமடையும் என்று தெரிகின்றது. அதற்கு இப்போதே தயார்படுத்திக் கொள்ளாவிட்டால், அமெரிக்காவின் நிலைமை மிக சிக்கலாகிவிடும்” என்கிறார் ஜோசப் ஸ்டிக்ளிட்ஸ்.
கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் அமெரிக்காவில் 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக அமெரிக்க தொழிலாளர் துறை அறிவித்துள்ளது. இப்போது மாதம் 10 சதவிகித அளவு வேலை இழப்புகள் தொடர்கின்றது. ஆனால் வேலை இழப்பின் அளவுக்கு புதிய வேலைகளை உருவாக்கும் ஒபாமா அரசின் முயற்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ள ஒபாமா, இதைச் சரிசெய்யவே கூடுதல் நிதிச் சலுகை தரத் திட்டமிட்டுள்ளார்.
ஆனால் பொருளியல் அறிஞர்களோ, அது போதாது என்றும், மேலும் ஒரு பெரிய ஊக்குவிப்புச் சலுகைத் திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்கள். அதே நேரம் கடந்த இரு ஆண்டுகளில் மைனஸில் இருந்த பொருளாதார வளர்ச்சி 2009ன் மூன்றாவது காலாண்டில்தான் 2.8 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள்.
எல்லா கடன்களையும் ஒரே தவணையில் செலுத்துகிறது துபாய் வேர்ல்ட்!
தபாய்: துபாய் வேர்ல்ட் நிறுவனத்தின் அனைத்துக் கடன்களையும் முழுவதுமாக ஒரு செட்டில்மெண்ட்டில் முடிக்க துபாய் அரசின் உயர்மட்ட நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக இன்று வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. துபாய் அரசு பெரும்பான்மைப் பங்குகளை வைத்துள்ள துபாய் வேல்ர்டு நிறுவனம், திடீரென தனது கடனாளர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்தது. இதனால் துபாய் ரியல் எஸ்டேட் மார்கெட் அடியோடு சரிந்தது. பங்குச் சந்தையிலும் பதட்டம் நிலவியது. ஏராளமானோர் வேலையிழந்தனர்.
இந்த நிலையில் துபாய் வேர்ல்ட் நிறுவனத்தின் அனைத்துக் கடன்களையும் முழுவதுமாக ஒரு செட்டில்மெண்ட்டில் முடிக்க துபாய் அரசின் உயர்மட்ட நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக இன்று வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. துபாய் வேர்ல்டின் துணை நிறுவனங்களுக்கு கடன் கொடுத்துள்ள அனைத்து முதலீட்டாளர்களையும் அழைத்து இதுகுறித்து அதிகாரிகள் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.
துபாய் ஆட்சியாளரின் உறவினரும் துபாய் நிதிக் குழுவின் தலைவருமான ஷேக் அஹ்மத் பின் சயீத் அல் மக்டோம் மற்றும் துணைத் தலைவர் மொஹம்மத் அல் ஷைபனிடோ ஆகியோர் லண்டனில் நடந்த முதலீட்டாளர் கூட்டத்தில் பங்கேற்று, துபாய் வேர்ல்டின் பிரச்சினை குறித்து விவாதித்துள்ளனர். விரைவில் அனைத்துப் பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் 40% அலுவலக இடங்கள் காலியாக உள்ளன
பொருளாதர நெருக்கடிக்கு பின் துபாயில் உள்ள அலுவலக கட்டிடங்களில் சுமார் 40 சதவிகிதம் இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் காலியாக உள்ளன என்று ஒரு வணிக முதலீட்டு நிறுவனமான ‘நைட் பிராங்‘ தெரிவித்துள்ளது.
துபாயில் மொத்தம் சுமார் 10 இலட்சம் சதுர மீட்டர் அளவு இடங்கள் காலியாக உள்ளன என்றும் சொன்ன அந்நிறுவனம் அபுதாபியில் வெறும் 6 சதவிகித அலுவலக இடங்களே காலியாக உள்ளன என்றும் தெரிவித்தது. மேலும் தற்போது சிறிய அலுவலங்களுக்கே தேவை உள்ளதாகவும் தெரிவித்தது.
துபாயில் காலியாக உள்ள அலுவலக இடங்கள் நிரப்பப்பட வேண்டுமானால் குறைந்தது 1,50,000 அலுவலக பணிகளும் அத்துடன் தொடர்புடைய பணிகளும் உருவாக்கப்பட வேண்டும் என்று துபாயை தளமாக கொண்டு இயங்கும் முதலீட்டு வங்கி தெரிவித்துள்ளது.
தஞ்சை மற்றும் நெல்லையில் புதிய பாஸ்போர்ட் சேவை அலுவலகங்கள்!
தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தலா ஒரு புதிய பாஸ்போர்ட் சேவை அலுவலகத்தைத் தொடங்க உத்தேசிக்கப்பட்டு இருப்பதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் சஷி தரூர் தெரிவித்துள்ளார். அத்துடன் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் 7 பாஸ்போர்ட் சேவை அலுவலகங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் மொத்தம் 68 பாஸ்போர்ட் சேவை அலுவலகங்கள் உள்ளன என்றும் பாஸ்போர்ட் அலுவலகங்களுடன் இணைந்த வகையில் நாட்டில் மொத்தம் 9 பாஸ்போர்ட் சேவை அலுவலகங்கள் உள்ளன என்றும் இந்த இரண்டையும் சேர்த்து இந்த அலுவலகங்களின் மொத்த எண்ணிகை 77 என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.