குர்ஆன் ஷரீஃபை புரிந்து கொள்ளுதல்
[ குர்ஆன் ஷரீஃபுக்கு குர்ஆன் ஷரீஃபே விளக்கம் கொடுத்துள்ளதை நாம் புரிந்து கொள்ள முற்பட வேண்டும்.]
முதலாவது
முஸ்லீம்கள் இறைவனை யாராலும் எதுவாலும் படைக்கப்படாத யாருடனும் எதுவுடனும் பங்குபோடாத கற்பனைக்கு எட்டாத வார்த்தைகளில் அடங்காத அனுபவித்து தெரிந்து கொள்ளக்கூடியதாக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் மேலும், முஹம்மது நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை இறைவனின் இறுதி தூதர் எனவும் தங்கள் வாழ்க்கையின் அழகிய முன்மாதிரியாகவும் அகிலத்தின் அருட்கொடையாகவும் பார்க்கிறார்கள். அதே போல், குர்ஆன் ஷரீஃபையும் இறைவனின் பேச்சாகவும், முஹம்மது நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு அருளப்பட்டதாகவும் நம்புகிறார்கள்.
இப்படி நம்பும் முஸ்லீம்களாகிய நாங்கள் அல்லது முஸ்லீமாகிய நான், அதில் உள்ள வசனங்களை ஆராய்ந்து பார்க்கிறேன் என்றால் அதை சந்தேகப்பட்டு அது சரியானது தானா என்று ஆறுதல் அடையும் பொருட்டாக இருக்க முடியாது.
ஆனால் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இஸ்லாத்தின் அடிப்படையே நம்பிக்கையில் தான் பிறக்கிறது. இதை நம்புங்கள் என்று கட்டாயப்படுத்துவது சரியில்லை என்ற காரணத்தினால் தான் ‘மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை’ என குர்ஆன் ஷரீஃபே சொல்கிறது.
ஆனால், குர்ஆன் ஷரீஃபை ஆராய்வதற்காகவோ அல்லது இஸ்லாத்தின் மீது தாம் கொண்டுள்ள வெறுப்பின் காரணமாகவோ அல்லது குர்ஆன் ஷரீஃப் இறைவனின் வேதமே அல்ல என்று எப்பாடுபட்டாவது நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவோ அது நல்லதோ கெட்டதோ குர்ஆன் ஷரீஃபுடைய பல வசனங்களை எடுத்து கொண்டு ‘இது அறிவியல் பூர்வமானதா?’ என்ற கேள்விக் கனைகளை தொடுத்து வருகிறார்கள்.
இரண்டாவது
அத்தகைய கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதற்கு முன்னர் அவர்கள் குர்ஆன் ஷரீஃபை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு குர்ஆன் ஷரீஃப் எப்படி அதன் முதன்மையான பெறுநர்களை (இங்கே முதன்மையான பெறுநர்கள் என்று நான் குறிப்பிடுவது அந்த கால அரேபிய மக்களை) அணுகியது என்பதை புரிந்து கொள்வது அவசியமாகிறது.
குர்ஆன் ஷரீஃப் கொஞ்சம் கொஞ்சமாக அந்தந்த காலகட்டத்தின் தேவைக்கேற்ப அருளப்பட்டது. சில வாசகங்களை கவனித்தீர்கள் என்றால், ‘அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்..’ என்று ஆரம்பிப்பதை கவனித்திருக்கலாம்.
குர்ஆன் ஷரீஃபானது அந்த கால அரேபியர்களுக்கு விஞ்ஞானத்தை போதித்து கொண்டிருக்கவில்லை, அது விஞ்ஞான புத்தகமுமன்று. ஆனால் அந்த கால அரேபியர்களின் கேள்விகளுக்கோ அல்லது அவர்களின் வாதங்களுக்கோ பதிலளிக்குமுகமாக சில வசனங்களை சொல்லும் போது விஞ்ஞான செய்திகள் கலந்திருக்கலாம்.
ஆனால் அந்த வசனங்களில் விஞ்ஞானம் பிரதானமாக இருக்கவில்லை என்பது தான் உண்மை.
அடுத்து, அப்படி கூறப்படும் விஞ்ஞான செய்திகளில் தற்போதைய கண்டுபிடிப்புகளை வைத்து ஒப்பிட்டு பார்க்கும் போது தவறுதலாக இருப்பது போல் ஒரு தோற்றத்தை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.
அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், குர்ஆன் ஷரீஃப் இறங்கிய காலகட்டத்தில் அரேபியர்கள் இலக்கியத்தை பெரிதாக மதித்தார்கள். அரேபிய மொழியை பேசாதவர்களை ‘வாயே இல்லாதவர்கள்’ என்று ஏளனமாக பார்த்தார்கள். அவர்களின் குர்ஆனின் சொல்நயம் பொருள்நயத்தையும் பார்த்து விட்டு ‘இது மனிதனின் சொல்லன்று’ என்று சரண்டர் ஆகுமளவுக்கு அதன் இலக்கிய இலக்கண தன்மை அமையப் பெற்றிருந்தது என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது.
மூன்றாவது
மேலே நான் சொன்ன கருத்தை ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.
குர்ஆன் ஷரீஃபின் ‘ஸூரத்துத் தாரிக் (விடிவெள்ளி)’ என்ற 86 வது அத்தியாயத்தின் 5, 6, 7, 8 வசனங்களை பார்ப்போம்
86:5 – மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்
86:6 – குதித்து வெளிப்படும் நீரினால் படைக்கப்பட்டான்
86:7 – முதுகுத் தண்டிற்கும், விலா எலும்பிற்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது
86:8 – இறைவன் மீட்டும் (restore) சக்தியுடையவன்
மேலே காணப்படும் வசனத்தில் விஞ்ஞான செய்திகள் அதாவது மனிதன் எதிலிருந்து உருவாகிறான் என்பது இருந்தாலும் இங்கே அதன் முதன்மையான பெறுநர்களுக்கு சொல்ல நினைப்பது விஞ்ஞானத்தை பற்றிய உண்மையை அல்ல. மாறாக, இறைவன் கூற நினைப்பது இறந்து மண்ணோடு மண்ணாகி போன மனிதனை இறைவன் மீண்டும் படைக்க சக்தியுடையவன் என்பதை தான்.
நான்காவது
அந்த கால அரேபியர்களிடம் முஹம்மது நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சொல்கிறார்கள், ‘நியாய தீர்ப்பு நாள் ஒன்று இருக்கிறது, அது வந்தே தீரும், அப்போது இறைவன் முன்னே மக்கள் அனைவரும் மீண்டும் உயிர்பிக்கப்பட்டு கொண்டு வரப்படுவார்கள், அவர்கள் செய்த நல்லவை தீயவை யாவும் நேரான நீதியான தராசில் அளக்கப் பட்டு அவர்கள் செய்ததற்குறிய பிரதிபலனை பெற்று கொள்வார்கள் என்று சொல்கிறார்கள். அதற்கு அந்த கால அரேபியர்கள், ‘அதெப்படி, நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகி மக்கி போன பிறகு எங்களை இறைவன் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும்..?’ என்று கேட்கிறார்கள்.
அதற்கு இறைவன் பதிலளிக்கும் போது தான், ”மனிதன் எங்கிருந்து வருகிறான் என்பதை அவன் கவனிக்கட்டும், அப்படி கவனித்தான் என்றால் அவன் ஒண்ணுமே இல்லாமல் முதுகு தண்டிற்கும் விலா எலும்பிற்கும் நடுவிலிருந்து குதித்து வெளிப்படும் நீரிலிருந்து தான் அவன் படைக்கப்பட்டிருக்கிறான், அப்படியிருக்க மண்ணோடு மண்ணாகி போனவனை உயிர்ப்பிக்க இறைவனால முடியாதா..? அவ்வாறு மீட்டெடுக்க இறைவன் சக்தியுடையவன் தான்” என்பது போல் அமைகிறது அந்த இறை வாக்கியம்.
ஐந்தாவது
ஆக, இந்த வசனத்தில் நாம் கவனிக்க வேண்டிய பல அம்சங்கள் உள்ளன
1. அந்த கால அரேபியர்களுக்கு ‘இறந்த பிறகு மீண்டும் படைக்க முடியுமா?’ என்ற கேள்விக்கு பதிலாக அமைந்தது தான் அந்த வசனம்.
2. விஞ்ஞான உண்மையை அதாவது விந்து எங்கிருந்து உருவாகிறது என்ற விபரத்தை அந்த முதன்மையான பெறுநர்களுக்கு எடுத்து கூற அல்ல
3. அதுமட்டுமல்லாமல், அந்த கால அரேபியர்களின் சந்தேகமான ‘இறைவனால் இது சாத்தியமாகுமா..?’ என்ற சந்தேகத்துக்கு பதிலளிக்கும் விதமாக தான், ‘மனிதர்கள் அவர்களை பற்றி என்ன நினைத்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் என்ன வெறும் அற்பமான குதித்து வெளியாகும் தண்ணீரிலிருந்து வெளிப்பட்டவர்கள் தானே, ஒண்ணுமே இல்லாமல் இருந்த நிலையிலிருந்து அவர்களை உருவாக்கிய இறைவனுக்கு மனிதனை மறுபடியும் உருவாக்குவதில் என்ன சிரமம் வந்து விடப் போகிறது.’ என்று அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது கூடவே தாம் எவ்வாறு படைக்கப்பட்டோம் என்பதை மறந்த மனிதர்களின் திமிரான வாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே இவ்விதம் கூறுகிறான்.
4. அப்போது இறைவன் குறிப்பிடுகையில் முதுகுத் தண்டிற்கும் விலா எலும்பிற்கும் இடையில் என்று ஏன் குறிப்பிட வேண்டும், குழப்பமாக இருக்கிறதே, நேரடியாக ‘இங்கிருந்து’ வெளியாகும் ‘விந்து’ என்று கூறியிருக்கலாமே என்ற கேள்வி எழலாம், இங்கே நீங்கள் அரேபிய இலக்கியத்தை பத்தி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
o. உதாரணமாக, குமரி முதல் இமயம் வரை என எழுதுகிறார்கள் என்று வையுங்கள், ‘ஏன் அது என்னா குமரி முதல் இமயம் வரை – இந்தியான்னு சொல்ல வேண்டியது தானே’ என்று நீங்கள் கேக்க கூடாது? –
o.அதுவும் தவிர, குமரியிலிருந்து இமயத்திற்கு ஹைவேல நேர்கோடு ஒன்றை வரைந்து இந்த பகுதியை மட்டும் தான் குறிக்கும், இந்த கோட்டில் அடங்காத ஊர்களெல்லாம் அடங்காது என்று சொல்லக் கூடாது.
முதலாவது ‘குமரி முதல் இமயம் வரை’ என்பது இந்தியா முழுவதையுமே குறிக்கும்
இரண்டாவது குமரியிலிருந்து நேர் கோட்டில் எந்த ஊர்கள் வருகிறதோ அந்த ஊரை மட்டும் அது குறிக்காது
ஆக, இங்கே இறைவன் குறிப்பிட விரும்புவது முதுகுத் தண்டிற்கும் விலா எலும்பிற்கும் இடையே என்று குறிப்பிடுவது அந்த இரண்டிற்கும் நேர் கோடு ஒன்றை வரைந்து அங்கிருந்தா விந்து வெளியாகிறது என்ற கேள்வி அர்த்தமற்றதாகி விடுகிறது, ஏனெனில் அது (பேர் சொல்லகூட அருகதையில்லாத) உடலிலிருந்து குதித்து வெளியாகும் தண்ணீரிலிருந்து மனிதன் படைக்கப்பட்டதை குறிக்கிறது.
5. அதுவும் தவிர, ‘இந்த இடத்திற்கும் இந்த இடத்திற்கும் நடுவில்’ என்பதை அப்படியே நேராக நீங்கள் பார்க்க கூடாது. அதற்கு காரணம் இன்னொரு குரான் ஷரீஃபின் வசனத்தையே நீங்கள் கவனிக்கலாம்.
குரான் ஷரீஃபின் 60வது அத்தியாயம்:
‘அல்-மும்தஹினா’ வின் 12வது வசனத்தில் ”… தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் அவர்கள் எதனை கற்பனை செய்கிறார்களோ..” என்று வரும் வாக்கியத்தில் கைகளுக்கும் கால்களுக்கும் நடுவே உள்ள உறுப்பை பற்றி குறிப்பிடவில்லை என்பது அந்த வசனத்தை நன்கு உணர்ந்து படிப்பவர்களுக்கு விளங்கும்.
குர்ஆன் ஷரீஃபுக்கு குர்ஆன் ஷரீஃபே விளக்கம் கொடுத்துள்ளதை நாம் புரிந்து கொள்ள முற்பட வேண்டும்.
கடைசியாக குர்ஆன் ஷரீஃப் மனித குலம் முழுமைக்குமான் வேதம் தான் என்றாலும் அது பயபக்தியுடையவர்களுக்கு நேர்வழி காட்டும்.
”Jazaakallaahu khairan” நாஹூர் இஸ்மாயீல்
nagoreismail786.blogspot.com