இஸ்லாத்தின் பெயரால் ஜாஹிலிய்யா (மடமை)
இன்றைய முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் மடமையில் வீழ்ந்து தாழ்வுமனப்பான்மையில் மூழ்கியிருப்பதை கண்கூடாகக் காண்கிறோம். முஸ்லிம்கள் தனது வேதமான குர்ஆனையும் தமக்கு வழிகாட்டியான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் பின்பற்றுவதைவிட அவரவருக்குப் பிடித்தமான அறிஞர்களைப் பின்பற்றுவதில் அதிக கவனம்செலுத்தியதால் அவ்வரிஞர்களின் மூலம் விதைக்கப்பட்ட மடமைகளையும் உண்மை என நம்பி அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அதற்கோர் உதாரணம், இன்றைய உலகின் முஸ்லிம்களின் பரிதாப நிலையையும், முஸ்லிம்களுக்கெதிராகத் தொடுக்கப்படும் சவால்களையும் எவரேனும் எடுத்துச்சொல்லி விட்டால் அல்லது எடுத்தெழுதிவிட்டால் பெரும்பான்மை முஸ்லிம்களின் கருத்து எவ்வாறாக இருக்கிறது? என்றால்
”முஸ்லிம்களாகிய நாம் மிகவும் பலவீனமானவர்களாக இருக்கிறோம். இத்தகைய சூழ்நிலைகள் நமக்கு ஏற்படத்தான் செய்யும் இவைகளை தவிர்க்கவே இயலாது. ஏனெனில் இவைகளையெல்லாம் நாம் சந்திக்க நேரிடுமென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னறிவிப்பு செய்துவிட்டார்கள்.” என்று தத்தமது அறிஞர்களின் கூற்றை முன்மொழிகிறார்கள்.
அவ்வரிஞர்கள் எனப்படுவோர் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராகத் தொடுக்கப்படும் சவால்களுக்கு குர்ஆன் சுன்னாவின் ஒளியில் தீர்வைச் சொல்லாமல் ஜாஹிலிய்யாவில் தாம் வீழ்ந்தது மட்டுமல்லாது மேற்குறிப்பிட்ட அவர்களின் கூற்றிற்கு சிறந்த ஆதாரம் எனக்கருதி கீழ்க்கானும் நபிமொழியை மக்கள் மன்றத்திலும் எடுத்துவைக்கிறார்கள்.
அந்த நபிமொழியின் சுருக்கமானது,
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ”ஒரு காலம் வரும் அப்போது நன்கு பசித்திருப்பவன் உணவைக் கண்டவுடன் அதைநோக்கி எவ்வாறு பாய்வானோ அவ்வாறு நம் முஸ்லிம் சமூகத்தை நோக்கி மற்றவர்கள் பாய்வார்கள்.””
அதற்கு நபித்தோழர்கள் வினவினார்கள்: ”அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது முஸ்லிம்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்களோ?”
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ”இல்லை மிக அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் ஆனால் வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடுவார்கள். அவர்கள் உள்ளத்தில் ‘வஹ்ன்” வந்துவிடும்.”
அதன்பின் நபித்தோழர்கள் வினவினார்கள்: ”அல்லாஹ்வின் தூதரே! ‘வஹ்ன்” என்றால் என்ன?.”
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் கூறினார்கள்: ”இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றும் மரணத்தை அஞ்சுவதும்.” என்பதாகும்.
மேற்கண்ட நபிமொழிக்கு நாம் எவ்வாறு பொருள் கொள்ளவேண்டும்? ‘வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடவேண்டும் மேலும் இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றும் வைத்து மரணத்தை வெறுக்கவும் வேண்டும் என்றா பொருள்?” இல்லையே. ”வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடுவார்கள்” என்றால் அவ்வாறு நீங்கள் ஆகிவிடக்கூடாது மாறாக ”வெள்ளத்தின் விசைபோல் ஆகிவிடுங்கள், வீரத்துடன் வாழுங்கள்” என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒரு எச்சரிக்கை பிரகடனமல்லவா அது.
அதைப்போல ”இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றுவைப்பார்கள் மரணத்தை அஞ்சுவார்கள்” என்றால் இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றுவைக்காதீர்கள் மேலும் இறைவன் விதித்த மரணத்திற்கும், இறைவனுடைய பாதையில் மரணமாவதற்கும் அஞ்சாதீர்கள் என்றல்லவா பொருள்.
எனவே மேற்கண்ட நபிமொழிக்கு உண்மைக்கு மாற்றமான தவறான பொருள் கொண்டால் மட்டும்தான் நாம் பலகீனமாகிவிட்டோம், வெள்ளத்தின் நுரைபோல இருக்கிறோம் எனவே நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக்கேட்க இயலாது என்ற தாழ்வுமனப்பான்மையான முடிவிற்கு வரஇயலும். சரியான முறையில் சிந்தித்தோமென்றால் வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடக்கூடாது, மறுமை வாழ்கையைவிட இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றுவைக்கக் கூடாது, வீர மரணத்திற்கு அஞ்சிடக் கூடாது என்ற நிலைபாட்டிற்கே நம்மால் வரஇயலுகிறது.மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் முன்னறிவிப்பு செய்துவிட்டார்கள் எனவேதான் அத்தகைய நிலையில் நாம் இருக்கிறோம் என்ற கருத்தை மீண்டும் உறுதியாக நம்புபவர்களை நோக்கி பலவகையான கேள்விகளும் எழுகிறது. உதாரணமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ஒரு விஷயத்தை மட்டும் முன்னறிவிப்பு செய்துவிட்டுப் போகவில்லை மாறாக பலவகையான நிகழ்வுகளைப்பற்றியும் முன்னறிவிப்பு செய்திருக்கிறார்கள்.
அவ்வரிசையில் மறுமையின் அடையாளங்களைப் பற்றிக் கூறியபோது ”அந்நாளில் விபச்சாரம் பெருகிவிடும். கொலை செய்வது மிக மலிந்து காணப்படும். தற்கொலைகள் அதிகமாகிவிடும்” என்றெல்லாம் முன்னறிவிப்பு செய்தார்கள்.
எனவே மேற்கண்ட முன்னறிவிப்பை நாம் எவ்வாறு எடுத்துக்கொள்ளவேன்டும்? விபச்சாரம் பெருகியும் கொலை செய்வது மலிந்தும் தற்கொலைகள் அதிகமாகவும் இருக்கும் நாட்களில் நாம் வாழ்ந்தால் நாமும் விபச்சாரங்கள் புரிந்து பல கொலைகளும் செய்து இறுதியில் நம்மைநாமே தற்கொலையும் செய்து கொள்ள வேண்டும் என்பதா பொருள்? இல்லைதானே. மேற்கண்ட நாட்களில் நாமும் வாழ்ந்தால் நம்மையும், நம் குடும்பத்தையும், நம் சமூகத்தையும் அத்தீமைகளிலிருந்து பாதுகாக்கவேண்டும் என்றுதானே நாம் பொருள் கொள்வோம். அதுபோலத்தான் ‘வெள்ளத்தின் நுரைபோல் ஆகிவிடுவார்கள்” என்ற முன்னறிவிப்பிலும் அதற்கு எதிர் மறையான பொருளிள் அமைந்த படிப்பினையைத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
”மேலும் ‘முஃமின்களே உங்களில் ஒருவரை ஒருவர் பலப்படுத்திக் கொள்ளுங்கள்” என்பன போன்ற ஏராளமான இறைவசனங்களிலிருந்தும், ‘ஒரு பலமான முஃமின் ஒரு பலம் குன்றிய முஃமினைவிட சிறந்தவனாவான்” என்பன போன்ற நபிமொழிகளை வைத்தும் நாம் வெள்ளத்தின் நுரைபோல் பலகீனமாக ஆகிவிடக்கூடாது என்ற முடிவிற்கே வரமுடிகிறது.
இதை போல முஸ்லிம்களை ஆட்டிப்படைக்கும் மற்றுமோர் ஜாஹிலிய்யா ‘முஸ்லிம்கள் 73 கூட்டத்தினராக பிரிவார்கள்” என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்னறிவிப்பை பிரிவினைவாதத்திற்காக பயன்படுத்தி ஒற்றுமைக்கும் முஸ்லிம்களுக்கும் சம்மந்தமே இல்லை என்பதாக சித்தரிப்பதும் முஸ்லிம்களுக்கிடையே ஒற்றுமை என்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட மாபெரும் இழிசெயல் என்பதுபோல கருதுவதுமாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்தார்கள் : ”என்னுடைய உம்மத்தினர் 73 கூட்டத்தினராக பிரிவர். அதில் ஓரேயொரு கூட்டத்தைத் தவிர மற்ற அனைத்து பிரிவினரும் நரகத்துக்குச் செல்வார்கள்.”
இதை செவியுற்ற நபித்தோழர்கள் வினவினார்கள்: ”அல்லாஹ்வின் தூதரே! சுவனத்திற்;கு செல்லும் அந்த ஒரு கூட்டம் எது?.
அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள்: ”அந்த கூட்டம் நானும் எனது தோழர்களும் உள்ளடங்கிய கூட்டம்.” (திர்மிதி)மேற்கண்ட ஹதீஸை பொருத்தவரையில் உலக அளவில் மார்க்க அறிஞர்களுக்கிடையே பல்வேரு கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன.
மேற்கண்ட ஹதீஸ் நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியான செய்தியாகும் எனவே முஸ்லிம் உம்மத்தினர் 73 கூட்டத்தினராக பிரியத்தான் செய்வார்கள்” என்று ஒரு சாராரும்
”முஸ்லிம் உம்மத்தில் ஒற்றுமையின் அவசியத்தை மிகஆழமாக பறைசாற்றிடும் திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்களுக்கும் மேற்படி ஹதீஸ் நேர் எதிராக முரண்படுவதால் அந்த ஹதீஸை அக்குர்ஆன் வசனங்களுக்கு முரண்படாத வண்ணம் நாம் புரியும்வரை கருத்தில் கொள்ளாமல் தவறுகள் நிகழ வாய்ப்பே இல்லாத அல்லாஹ்வின் வார்த்தையை (குர்ஆனை) நடைமுறையில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று மற்றொரு சாராரும்,
மேற்கண்ட தகவல் முஸ்லிம் உம்மத்தைப் பிரிப்பதற்காக யூதர்களால் கட்டிவிடப்பட்ட ஒரு பொய் செய்தியேயன்றி அதற்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்பதாக பிரிதொரு சாராரும் வாதிடுகின்றனர்.
மேற்குறிப்பிட்டுள்ள அந்த ஹதீஸில் யார் எத்தகைய கருத்தில் இருந்தாலும் முஸ்லிம்களுக்குள் இருக்கும் பிரிவினைக்கு அதில் எந்த ஆதாரமும் இருப்பதாக நமக்கு தெரியவில்லை. மாறாக முஸ்லிம்களுக்குள் பிரிவினை கூடாது என்றும் திருமறை குர்ஆன் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் வழிகாட்டுதல்களை விட்டுப் பிரிந்து செல்பவர்களுத்கு நரகமே காத்திருக்கின்றது என்ற அழுத்தமான செய்தியைத்தான் நாம் நேரடியாக அறியமுடிகிறது.
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்த முன்னறிவிப்பிலிருந்து பிரிவினையின் பக்கம் முஸ்லிம்களை இழுத்து செல்லக் கூடாது ஒருவேளை முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினைகள் இருந்தால் அப்பிரிவுகளை தூக்கி எறிந்துவிட்டு ‘ஓரேயொரு கூட்டம்தான் சுவனம் செல்லும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் நன்மாராயம் கூறப்பட்ட அந்த ஒரு கூட்டமாக அனைத்து முஸ்லிம்களும் மாறிவிடவேண்டும் என்ற பாடத்தைப் பெறவதுதான் சரியான கருத்தாகவும் தெரிகிறது. இக்கருத்தை பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களும் உறுதிபடுத்துகின்றன.
”இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் – நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் – நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.” (திருக்குர்ஆன் 8:46)
”நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது – அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.” (திருக்குர்ஆன் 6:159)
”உங்களுக்குமிடையே ”எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மிகிழ்வடைகிறார்கள்”. (திருக்குர்ஆன் 30:32)
”இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் – உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் – நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை – வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்”. (திருக்குர்ஆன் 3:103)
”நூஹு அலைஹிஸ்ஸலாமுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; ”நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே – (திருக்குர்ஆன் 42:13)
”(நபியே! அவர்களிடம்) ”வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்;. அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்””எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ”நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள். (திருக்குர்ஆன் 3:64)
ஆகவே வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிட்டோமே என்ற தாழ்வு மனப்பான்மையில் அநீதியை தட்டிக்கேட்காமல் நாம் கோழைகளாக இருந்துவிடவும் கூடாது மேலும் 73 கூட்டமாகப் பிரிந்துவிடுவோம் என்று எண்ணி இஸ்லாமிய சமூகத்தில் பிரிவினைக்கு வழியேற்படுத்திவிடவும் கூடாது. மாறாக முஸ்லிம்கள் யாவரும் தங்கள் அறிவு, ஒழுக்கம், உள்ளம், உடல் போன்றவைகளில் இஸ்லாமிய அடிப்டையில் ஒருவரையொருவர் பலப்படுத்திக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களின் அன்புத்தோழர்களும் எத்தகைய வரலாறுகளை படைத்திட்டார்களோ அத்தகைய வீரமிக்க, எழுச்சிமிக்க சரித்திரங்களை மீண்டும் இவ்வுலகில் நிகழ்த்திட வேண்டும் என்ற முடிவிற்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் முன்வரவேண்டும்.
இறைவன் புறத்திலிருந்து வரும் சிறு சிறு சோதனைகளில் நாம் துவண்டுவிடாமலும், நம்மை எதிர்நோக்கும் சாவால்களையும், நிந்தனைகளையும் கண்டு கவலையுராமலும் பொறுமையை கடைபிடித்து ‘முஸ்லிம்கள் வெள்ளத்தின் நுரைபோலவுமல்ல – 73 பிரிவுகளாகவுமில்லை” என்பதை நிரூபித்து இறைவன் வாக்களித்துள்ள உன்னதமான வெற்றியை பெருவதற்கு முயல்வோமாக!
”முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (திருக்குர்ஆன் 3:200)
”எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (திருக்குர்ஆன் 3:139)
”Jazaakallaahu khairan”
ஒற்றுமை.காம் (இக்கட்டுரையை எழுதிய அறிஞருக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக.)