இந்நாளை புண்ணியம் பொழியும் புனித நாளாளக் கருதி பல்வேறு செயல்களிலும்,சம்பிரதாயங்களிலும், கொண்டாட்டங்களிலும் முஸ்லிம்கள் ஈடுபடுவது வேதனைக்குரியதாகும். அன்று தான் ”நற்செயல்கள் செய்வதற்குரிய நாள்” என்றும் ”குளிப்பதற்கும் சுர்மா இடுவதற்கு ஏற்ற நாள்” என்றும் கருதுகின்றனர்.
ஏழைகளுக்கு தர்மம் செய்வதும், நகம் வெட்டுவதும், அனாதைகளின் தலையை வருடி விடுவதும், மார்க்க அறிஞர்களை சென்று காண்பதும், நஃபில் என்னும் அதிகப்படியான தொழுகைகளைத் தொழுவதும், ”குல்ஹுவல்லாஹ் சூராவை ஆயிரம் முறை ஓதுவது முஸ்தஹப்” என்றும் நம்புகின்றனர்.அது மட்டுமல்ல ”அந்நாளில் தம் குடும்பத்தினருக்குச் செலவு செய்தால் இறைவன் அவ்வாண்டு முழுவதும் அவருக்கு இரணம் அளிப்பான் என்றும், ”இதனை நாங்கள் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகள் சோதனை செய்து பார்த்து உண்மையெனக் கண்டோம்” என்று சுப்யான் இப்னு உயைனா ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறியிருக்கிறார்கள் என்றும் பிரச்சாரங்கள் செய்கின்றனர்.
இந்நாளின் மாண்புகளுக்கு கூறப்படும் காரணங்கள்
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் தூபான் பெருவெள்ளம் தணிய கப்பலிலிருந்து கீழே இறங்கியபோது கையில் உணவு ஏதும் இல்லாததால் தம் புனிதக்கையால் மண்ணை அள்ளினர். அள்ளிய மண் அனைத்தும் அக்கணமே மணிக்கோதுமையாக மாறியது. தம் கையிலிருந்ததை விதைத்தனர். மறுகணம் அவை வளர்ந்து பலன் வழங்கத்துவங்கின.அவர்களுடன் இறங்கிய மக்களிடம் இருந்த ஏழுவகை பயறுகளை வேகவைத்த போது அவை போதிய உணவாக மாறியது. மகப் பேறற்றிருந்த தம் புதல்வியன் வயிற்றில் தடவியபோது அவர் கருவுற்றார். இத்தனையும் நடைபெற்றது இந்த ஆஷூரா நாளில் தான். எனவே இந்நாளில் நன்றாக உணவு சமைத்து குடும்பத்தினர் அனைவரும் உண்டால் அது அபிவிருத்திக்கு வழி வகுக்கும் என்றும் கூறுகின்றனர்.
1. ”குன்” என்னும் ஒரே சொல்லில் விண்ணையும் மண்ணையும் படைத்தது இந்நாளில் தான். (அல்லாஹ் வானத்தையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் என்று திருக்குர்ஆன் (50:38) கூறும்போது ஒரே நாளில் படைத்தான் எனக்கூறுவது குர்ஆனுக்கு முரண்படுகிறது.)
2. ஆதிமனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப்படைத்ததும் இந்நாளில் தான். (ஆனால் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படைக்கப்பட்டது வெள்ளிக்கிழமை என்று ஆதாரபூர்வமான ஹதீஸில் காண முடிகிறத. முஹர்ரம் பத்தாம் நாளில் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.)
3. ஆதம் அலைஹிஸ்ஸலாம், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் சுவர்க்கம் சென்றதும், அவர்களின் பாவம் பொறுத்து மன்னிப்பு பெற்றதும் இந்நாளில்தான்.
4. சுவனம், நரகம் சுற்றிப்பார்க்க விழைந்த நபி இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானுலகிற்கு உயர்த்தப்பட்டது இந்நாளில் தான்.
5. மீனால் விழுங்பட்ட நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதன் வயிற்றிலிருந்து வெளிவந்ததும் இந்நாளில் தான்.
6. நபி தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாவமன்னிப்பு இறைவனால் ஏற்கப்பட்டதும் இந்நாளில் தான்.
7. அழகற்ற பெண் ஒருத்தியைப்பார்த்து ”இவளையும் ஒருவன் மணப்பானா?” என எண்ணியதற்காக அவர்களையே அழகற்ற உருவாக்கி , அவர்களையே அவளை மணக்கச்செய்து பிறகு பழைய உருவளித்து அரசாங்கத்தையும் இறைவன் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்ததும் இந்நாளில் தான்.
8. நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்ததும்,அவர்களுக்கு ”கலீல்” தோழர் என்னும் அழகுப்பெயரை இறைவன் சூட்டியதும் இந்நாளில் தான்.
9. ”நானே இறைவன்” எனக்கூறிய ”நம்ரூத்” என்னும் கொடிய அரசன் தூக்கியெறிந்த தீக் குண்டம் பூம்பொழிலாக மாற அதிலிருந்து நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எழில் முறுவலுடன் வெளிவந்ததும் இந்நாளில் தான்.
10. ”தன்னை மிக்பெரிய இறைவன்” எனப்பிரகடனப்படுத்திய பிர்அவ்னை செங்டலில் அழித்து நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை காத்தருளிய நாளும் இந்நாள் தான்.
இந்நாளில் இறைவன் பாவிகளை அழித்திருக்கிறான். புரிந்த பாவம் கூறி இறைஞ்சியவரை மன்னித்திக்கிறான். தன் அருள் இரந்தவருக்கு அதனை அள்ளிக்கொடுத்திருக்கிறான். என இதன் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகின்றனர்.
இவற்றுள் ”மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை காத்தருளிய நிகழ்ச்சி மட்டும் தான் இந்நாளில் நடைபெற்றது” என்பற்கு நபி மொழியில் ஆதாரம் உள்ளது. ஏனைய மற்ற எதற்கும் குர்ஆனிலோ, ஹதீஸிலோ எவ்வித ஆதாரமும் இல்லை.
”Jazaakallaahu khairan” suvanathendral.com